உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்

தொல்காப்பியர் காலத்தை ஆராய்கின்ற சமஸ்கிருத மொழிப் பக்தர்கள் சிலர், தகுந்த சான்றுகளையும் ஆதாரங்களையும் காட்டாமல், சமஸ்கிருதப் பண்டிதர்களுக்குப் பரம்பரையாக இருந்து வருகிற மூட நம்பிக்கையைமட்டும் ஆதாரமாகக்கொண்டு, தொல்காப்பியர் காலத்தைக் கணிக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் களாக இருக்கிற சமஸ்கிருத பக்தர்களுங்கூட சம்ஸ்கிருத மொழியைப் பற்றியவரையில், பழைய பண்டிதர்களின் மூடநம்பிக்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். சமஸ்கிருத பாஷைதான் பாரத நாட்டின் ஆதி பாஷை என்றும் அதிலிருந்துதான் தமிழ் உட்பட மற்றப் பாஷைகள் சொற்களையும் கருத்துக்களையும் கடனாகப் பெற்றன என்றும் இவர்கள் கண்மூடித்தனமாகக் கூறுகிறார்கள். வடநாட்டுப் பாஷைகளைப் பொறுத்தவரையில் இக்கருத்து உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், மிகப் பழைமையான தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் இக் கருத்து மிகமிகத் தவறானது. தமிழ் மொழி சமஸ்கிருத பாஷையைவிட மிகப் பழைமையானது என்பதை உலக அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் புதிதாக உண்டாக்கப்பட்ட பாஷை என்பதை அதன் பெயரே தெரிவிக்கின்றது. (சமம் - நன்றாக, கிருதம் செய்யப்பட்டது.) செம்மை செய்யப்பட்ட மொழி, அல்லது புதிதாக அமைக்கப்பட்ட மொழி என்பது இதன் பொருளாகும். (வேதகால மொழியாகிய ஆரிய மொழியையும் பிற்காலத்தில் உண்டான சமஸ்கிருத மொழியையும் இணைக்கக்கூடாது.)

பிற்காலத்திலே, தமிழ் முதலிய திராவிட மொழிகள் சமஸ்கிருதச் சொற்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டது போலவே, சமஸ்கிருத பாஷையும் தமிழ் முதலிய திராவிட மொழிச் சொற்களை ஏராளமாகக் கடன் வாங்கியிருக்கிறது. தமிழ் முதலிய திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத பாஷை பல நூற்றுக்கணக்கான சொற்களைக் கடன் பெற்றிருக்கிற உண்மையைச் சமஸ்கிருத பக்தர்கள் சொல்லுவதில்லை. ஆனால், நடுவு நிலையுள்ள நல்லவர்கள் சிலர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்திலுள்ள பூர்வ மீமாம்ஸை சூத்திரங்களுக்கு உரை எழுதிய சபர சுவாமியும் குமரில