உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நாகநீள்நகர் - சுவர்க்கம். நாகநாடு - பவண்ணலோகம். மாகவான் விசும்பின் மேகம். மாநாய்கன் - மாநாவிகன் (சிறப்புப் பெயர்) ஈகை – பொன்.

மாசாத்துவான்

கோவலனுடைய தந்தை மாசாத்துவான் என்று பெயர் பெற்றிருந்தான். மாசாத்துவான் என்பது சொந்தப் பெயர் அன்று; குடிப்பெயர். சாத்து என்றால் வணிகச் சாத்து, தரை வாணிகர். தரை வழியே பல நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்யும் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்துவன் - சாத்தின் தலைவன் மாசாத்துவான் என்பது பெரிய சாத்தின் தலைவன் மாசாத்துவான் தன்னுடைய செல்வச் சிறப்பினாலே காவிரிப்பூம்பட்டினத்துப் பெருமக்களில் முதல் மகனாக விளங்கினான். சோழ அரசனுக்கு அடுத்தபடியாக இவன் முதல்வனாகக் கருதப்பட்டான். இவனுடைய ஒரே மகன் கோவலன். இதனைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

"பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்.

99

(சிலம்பு: மங்கல வாழ்த்துப் பாடல்)

பெருநிலம் முழுதாளும் பெருமகன் - சோழ அரசன். பிறர்க்கு ஆர்த்தும் - பொருளில்லார்க்கு நிறைவிக்கும் (கொடுக்கும்) இருநிதிக் கிழவன் குபேரன். (குபேரன் போன்ற மாசாத்துவான்) மகன் கோவலன்.

கோவலனுடைய மூதாதையர், தரை வாணிகம் மட்டும் அல்லாமல் கடல் வாணிகமும் செய்தனர் என்பது தெரிகின்றது. கோவலனுடைய பாட்டன் ஒருவன் கிழக்குக் கடலில் (வங்காளக் குடாக்கடலில்) நா வாயில் சென்றபோது நாவாய் உடைந்து அல்லற்பட்டுக் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, கடல் தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் அருளால் கரையேறி உயிர் பிழைத்தான் என்றும், அதன் காரண மாகவே, கோவலனுக்கு மாதவியிடத்தில் பிறந்த குழந்தைக்கு மணி மேகலை என்று பெயர் இட்டான் என்றும் சிலப்பதிகாரங் கூறுகிறது.