உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இரண்டு மரமும் ஒரே மரம் என்றும் இரண்டு மகளிரும் ஒருவரே என்றும் கூறுவது சிறிதும் பொருந்தாது.

திருமாவுண்ணி குறிஞ்சி நிலத்தில் குறுவர் குலத்தில் பிறந்து வாழ்ந்த ஏழைப் பெண். கண்ணகியோ காவிரிப்பூம்பட்டினத்தில், சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்பட்ட செல்வம் படைத்த குடியில் பிறந்து செல்வமாக வளர்ந்து, தன்னைப்போல் செல்வக் குடும்பத்தில் பிறந்த கோவலனை மணஞ்செய்த திருவமர் செல்வி. திருமாவுண்ணி, மணவயதுள்ள, ஆனால் மணம் ஆகாத மங்கை. கண்ணகியோ மணம் ஆன இருபத்தைந்து வயது கடந்த நடுத்தர வயதுள்ள பெண்மணி. இவ்வாறு பல வகையிலும் வேறுபட்டவர்கள் இவ்விரு பெண்மணிகளும். இவர்கள் இருவரையும் ஒருவரே என்று கூறுவது எவ்வளவு தவறானது பொருத்தம் அற்றது!

சங்ககாலத்தில், அதாவது கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மக்களிடையே காதல் மணம் நிகழ்ந்தது. வாலிப வயதுள்ள ஆணும் பெண்ணும் காதல் மணம் செய்துவந்த காலம் அது. அக்காதல் மணம் பெரும்பாலும் நன்றாக அமைந்து இன்ப வாழ்க்கையாக அமையும். சிறு பான்மைக் காதல் மணம்; திருமாவுண்ணியது போன்று தீதாக அமைந்து துன்பமாக முடிவதும் உண்டு. ஆனால், அது மிக மிகக் குறைவு. சங்க காலத்தில் பெரிதும் காதல் மணம் நிகழ்ந்தாலும், ஓரளவு திருமணங்கள் பெற்றோரால் செய்துவைக்கப்பட்டனவும் உண்டு. முக்கியமாகச் சல்வம் படைத்த பெருங்குடியிற் சேர்ந்தவர் திருமணங்கள், பெற்றோரால் செய்து வைக்கப்பட்டவையே. சங்க காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெருங்குடி மக்கள் என்றும் சிறுகுடி மக்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதைச் சங்க நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் அறிவார்கள். பழங்காலத்து உரோம நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் பெருங்குடி, சிறுகுடி என்னும் பிரிவு இருந்திரு க்கிறது. பெருங்குடி மக்களான பிரபுக்களை Patricians என்றும் சிறுகுடி மக்களை Plebeians என்றும் அந்நாட்டில் பெயர் வழங்கி வந்தனர். இத்தகைய பிரிவு தமிழ்நாட்டிலும் சங்க காலத்தில் இருந்ததைச் சங்க நூல்களில் காண்கிறோம். பெருங்குடி மக்களிடத்தில் பெரும்பாலும் காதல் மணம் நிகழ்வதில்லை; பெற்றோரே மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அந்த முறையில்தான் பெருங்குடி வகுப்பைச் சேர்ந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நிகழ்ந்தது.