உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

167

அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், கோவிந்த ராசனார் ஆகிய மூவரும் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு குன்று களைக் காட்டுகிறார்கள். இவர்கள் காட்டுகிற நெடுவேள் குன்றங்கள் தவறான இடங்கள். இவர்கள் காட்டுகிற இடங்களில் கண்ணகியார் உயிர் விட்டிருக்க முடியாது. அது வேறு இடமாக இருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்தில் உள்ள சில குறிப்புகளினால் தெரிகிறது. இளங்கோவடிகள், கண்ணகியார் உயிர்விட்ட நெடுவேள் குன்றத்தைச் சில இடங்களில் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறுகிற நுட்பமான குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், அவர் சுட்டுகிற நெடுவேள்குன்று இவர்கள் காட்டுகிற நெடுவேள் குன்றுகள் அல்ல என்பது தெரிகிறது.

இளங்கோ அடிகள் கூறுவது

கண்ணகியார் உயிர்விட்ட இடத்தைப் பற்றி இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்தில் மூன்று குறிப்புகளை நுட்பமாகக் கூறுகிறார். அந்த நுட்பமான குறிப்புகள் எவை என்பதைப் பார்ப்போம். சேர மன்னன் செங்குட்டுவன் தன்னுடைய அரசியை நோக்கி, 'பாண்டிமாதேவி, கண்ணகி என்னும் இரண்டு பெண்மணிகளில் நீ நீ போற்றுகிறவர் யார்?' என்று வினவினபோது அரசியார், 'பாண்டிமா தேவியார் விண்ணுலகத்திலே பெருந்திருவுறுக, நம்முடைய நாட்டுக்கு வந்த பத்தினியை (கண்ணகியை)ச் சிறப்பிக்கவேண்டும்' என்று விடையிறுத்தார். “நம் அகநாடடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்" (சிலம்பு, காட்சிக்காதை, 113-114) இதனால் கண்ணகியார் முடிவாகச் சென்றது சேரர் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பது தெரிகிறது.

கண்ணகியார் இறுதியாகச் சேரநாட்டுக்குச் சென்றதை இளங்கோ வடிகள் இன்னொரு இடத்திலுங் கூறுகிறார். சேரன் செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்று கல் எடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து கங்கைக் கரைமேல் பாசறையில் தங்கியிருந்தான். அப்போது சோழ நாட்டவனான மாடலன் என்னும் மறையவன் (இவன் மதுரையில் கோவலன் கண்ணகி கவுந்தி அடிகள் ஆகிய மூவரையும் சந்தித்தவன், மதுரையில் கோவலன் இறந்தபோதும் கண்ணகி வழக்காடினபிறகு மதுரையை எரித்தபோதும் அங்கிருந்து நேரில் கண்டவன்) கங்கை யாற்றுக்குத் தீர்த்த யாத்திரை சென்றவன் தற்செயலாகச் செங்குட்டு வனைப் பாசறையில் கண்டான். கண்டு அரசனோடு உரையாடின போது,