உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

185

செல்வத்தை விரைவில் அழித்துவிட்டது. செல்வச் சீமானாக இருந்த கோவலன் மாதவியின் ஆடம்பர வாழ்க்கைக்காகத் தன்னுடைய பெருஞ் செல்வத்தைச் செலவு செய்து விரைவில் ஏழ்மை யடைந்து வறியவனானான்.

இந்த நிலையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து சென்றான். கோவலன் தன்னை விட்டுப் பிரிவானென்று மாதவி கனவிலும் கருதவில்லை. தற்செயலாகத் திடீரென்று ஏற்பட்ட இந்தப் பிரிவு தற்காலிகமான ஒரு நிகழ்ச்சி என்று அவள் கருதினாள். பிரிந்து சென்ற கோவலனுக்கு மாதவி, தன் காதலையும் அன்பையும் நினை வுறுத்தி உடனே வரும்படிக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலை மூலமாக அனுப்பினாள். கோவலன் அந்தக் கடிதத்தைக் கையில் வாங்காமலே திருப்பியனுப்பிவிட்ட போதுதான், கோவலன் உண்மை யாகவே தன்னை விட்டுப் பிரிந்து விட்டான் என்பதை உணர்ந்தாள். அவனுடைய பிரிவு அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கிற்று. குலமகள் ஒருத்தி தன் கணவன் தன்னைவிட்டுப் பிரிந்தால் எவ்வளவு துன்பமடைவாளோ, அவ்வளவு துன்பமும் மனவேதனையுமடைந்தாள் மாதவி, கோவலன் மாதவி பிரிவு ஊழ்வினையினால் ஏற்பட்ட பிரிவே. கோவலன்தான் இழந்த செல்வத்தை வாணிகத்தின் மூலம் ஈட்டும் பொருட்டு, உறவினர் ஒருவருக்குஞ் சொல்லாமல் கண்ணகியை மட்டும் அழைத்துக் கொண்டு மதுரைக்குப் போய்விட்டான்.

கோவலன் தன்னை மெய்யாகவே வெறுத்துவிட்டான் என்பதை அறிந்த மாதவி அவனுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதிக் கௌசிகன் என்னும் பார்ப்பனிடங் கொடுத்துக் கோவலனை எங்காகிலும் கண்டு கொடுக்கும்படி அனுப்பினாள். கௌசிகன் கோவலனைப் பல இடங் களில் தேடிக் கொண்டு போய்க் கடைசியாக மதுரைக்கு அருகிலே ஓரிடத்தில் கண்டு கடிதத்தைக் கொடுத்தான். கோவலன் அந்த முடங்கலைப் பிரித்துப் படித்தான். மாதவி எழுதியிருந்த வாசகம் இது: அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது

கையறும் நெஞ்சம் கடியல் வேண்டும்

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி!'

(சிலம்பு. 13:87-92)