உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனான போது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்துவைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே, அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

வயது முதிர்ந்த “தொண்டு” கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக்காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய் விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காணநேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவறவாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப்பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தி னால் சூழப் பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டுபிடித்த உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்பசுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

முதலில், ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியென்று கண்டு, அவர்களைவிட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமை ல யினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன் பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும்,