உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

219

பௌத்த-சமணர் புதிய செய்யுட்பாக்களை உருவாக்கிய வரலாற்றை இதுவரையில் ஒருவரும் வரன் முறையாக ஆராய வில்லை. இந்த வரலாற்றை ஆராய வேண்டுவது. தமிழ் இலக்கிய வரலாற்றை அறிவதற்கு அவசியமானதாகும். பல்கலைக் கழகங்கள் இனியேனும் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.

புதிய விருத்தப்பாக்களை அமைத்த பௌத்த-சமண சமயத்தார் அப் புதிய செய்யுள்களில் தங்கள் மத நூல்களையும் காவியங் களையும் எழுதினார்கள்.

தமிழில் காவிய நூல்களைப் புதிதாக அமைத்தவரும் பௌத்த- சமணர்களே. சிலப்பதிகாரத் காவியத்தைப் புதிதாக அமைத்தவர் சமண சமயத்தைச் சார்ந்தவரான இளங்கோ அடிகள் என்னும் தமிழர். மணிமேகலைக் காவியத்தை அமைத்தவர் சீத்தலைச் சாத்தனார் என்னும் பௌத்தத் தமிழர். இவர்கள் இந்தக் காவியங்களைப் பழைய பாவகைகளினால் இயற்றினார்கள். பெருங்கதை என்னும் காவியத்தை இயற்றியவரும் கொங்குவேள் என்னும் சமணப் பெரியோரே. சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காவிய நூல்களையும் சமண சமயத்தார் செய்து தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினார்கள்.

சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டு நூல்களையும், யாப்பருங்கலம், யாப்பருங் கலக் காரிகை, நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் சமண சமயத்தவர் உண்டாக்கி னார்கள். வீரசோழியம் என்னும் இலக்கண நூலைப் பெருந்தேவனார் என்னும் பௌத்தர் இயற்றினார். பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் பலவும் மறைந்து போயின.

இடைக்காலத்தில் சமயவாதம் பற்றிச் சில சமய நூல்கள் தோன்றின. அவை கேசி நூல்கள் என்று பெயர் பெற்றன. குண்டல கேவி, நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி முதலியன கேசி நூல்கள். கேசி நூல்கள் மற்றச் சமயங்களின் குறைபாடுகளை எடுத்துக் காட்டித் தங்கள் மதத்தின் சிறப்புகளைப் போற்றும் முறையில் எழுதப்பட்டவை. குண்டலகேசி என்பது நாதகுப்தனார் என்னும் பௌத்தர் இயற்றியது. இது, சமணம், சைவம், வைணவம் முதலிய மதங்களைக் கண்டித்துப் பௌத்த மதத்தின் சிறப்பைக் கூறுகிறது. இந்நூல் அண்மைக் காலத்தில் மறைந்துவிட்டது. இந்த நூல் முழுவதும் கிடைத்திருந்தால், அக்காலத்து சமயங்களைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.