உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

சாக்கிய மதம், ஜைன மதம் முதலிய சமய நூல்களையும் தர்க்க சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தாள். ஆகவே, பத்திரையின் புகழ் நாடெங்கும் பரவிற்று.

படிக்கவேண்டிய நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, கல்விக் கடலைக் கரைகண்ட குண்டலகேசியார், பல ஆண்டுகள் மடத்தி லேயே தங்கியிருந்தார் கடைசியாகச் சமயவாதம் செய்ய எண்ணங் கொண்டு, மடத்தைவிட்டுப் புறப்பட்டு நாடுகள் தோறும் சுற்றித் திரிந்தார். ஊர்ஊராகச் சென்று சமயவாதம் செய்தார். செல்லும் ஊர்களில் நாவல் (நாக மரம்) மரக்கிளையை நட்டு, படித்தவர் இருந்தால், வாதுக்கு வரலாம் என்று அழைப்பார். யாரேனும் வந்தால், அவ்வூரார் முன்னிலையில் வாதப்போர் செய்து வந்தவரைத் தோல்விப் படுத்துவார். இவரோடு வாதப்போர் செய்து தோற்றவர் பலர். ஆகவே, பத்திரை குண்டலகேசி யாரின் புகழ் நாடெங்கும் பரவியது. செல்லும் இடங்களிலெல்லாம் நாவல் கிளைகளைத் தம்முடன் கொண்டு போவார். அந்தக் கிளை உலர்ந்துவிட்டால், அதை எறிந்துவிட்டுப் பசுமையான வேறு கிளையை எடுத்துக் கொள்வார்.

6

பல நாடுகளையும் நகரங்களையும் சுற்றிக்கொண்டு பத்திரை குண்டலகேசியார், சிராவத்தி நகரம் வந்தார். வந்து அந்நகரத்து நடுவில் மணலைக் குவித்து நாவல் கிளையை நட்டு, என்னுடன் வாதுக்கு வருகிறவர் இந்தக் கிளையைப் பிடுங்கி ஏறியலாம் என்று அறை கூவினார். பிறகு, வீடுகள் தோறும் சென்று ஐயம் ஏற்ற உணவு அருந்தி ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்.

அதே காலத்தில் பகவன் புத்தர் தம் சீடகோடிகளுடன் சிராவத்தி நகரத்திற்கு வந்து அருகிலிருந்த ஒரு வனத்திலே தங்கியிருந்தார். பகவருடைய சீடர்களில் ஒருவராகிய சாரிபுத்திர தேரர், ஐயம் ஏற்க அந்நகரத்திற்குள் வந்தார். வந்தவர், தெரு நடுவில் மணலில் நாவல் கிளை நடப்பட்டிருப்பதைக் கண்டு, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார். அவர்கள் குண்டலகேசியார் அறைகூவி நாவல் நட்டிருப்பதைக் கூறினார்கள். சாரிபுத்திர மகா தேரர், நாவல் கிளையைப் பிடுங்கி எறியும்படி அவர்களுக்குக் கூறினார். அவர்கள் அதைச் செய்ய அஞ்சினார்கள். சாரிபுத்திரர் தாம் வாது செய்யப் போவதாகவும் கிளையைப் பிடுங்கி எறியும் படியும் சொன்னார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.