உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

காதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் திருமணஞ் செய்துகொள்ள விரும்பினார்கள்.

தன்னுடைய பக்தனான புரூரவசு, ஊர்வசியின் மேல் காதல் கொண்டதை பகவான் விஷ்ணு அறிந்தார். அவனுக்கு அவளைத் திருமணஞ் செய்துவைக்க அவர் கருதினார். ஊர்வசி, தேவலோகத் திலே இந்திர சபையில் நடனமாடும் நாட்டியப் பெண்ணாகையால், இந்திரனுடைய சம்மதம் பெற்றுத் திருமணஞ் செய்ய வேண்டியதாக இருந்தது. ஆகவே விஷ்ணு, இந்திர சபையில் இசைப் புலவராக இருந்த நாரதர் மூலமாக இந்திரனுக்குச் செய்தி சொல்லி இந்திரனுடைய சம்மதம் பெற்று ஊர்வசியைப் புரூரவசுவுக்குத் திருமணஞ் செய்து வைத்தார். திருமணம் ஆன பிறகு ஊர்வசி தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்து புரூரவசுவின் அரண்மனையில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அரண்மனையில் ஊர்வசி இனிது பாடியும் நடனம் ஆடியும் அரசனை மகிழ்வித்தாள்.

அந்தக் காலத்தில் மாயாதரன் என்னும் அசுரனுக்கும் தேவேந் திரனுக்கும் பகை ஏற்பட்டுப் போர்மூண்டது. இருவருடைய சேனை களும் போர்க்களத்திலே சந்தித்தன. அந்தப் போரிலே புரூரவசு அரசன் இந்திரனுக்கு உதவியாக இருந்து மாயாதரனுடன் போர் செய்து போர்க்களத்தில் அரக்கனைக் கொன்றான். அதனால், இந்திரனுக்கு வெற்றி கிடைத்தது. இந்திரன் வெற்றி விழாவைத் தேவலோகத்திலே கொண்டாடினான். நன்றாக அலங்காரஞ் செய்யப்பட்டிருந்த இந்திர சபையிலே வெற்றி விழா கோலாகலமாக நடந்தது.

தேவர்கள் எல்லோரும் வந்து விழாவைச் சிறப்புறச் செய்தார்கள். இந்திரனுடைய அழைப்பின் மேல் புரூரவசு அரசனும் மண்ணுலகத்திலிருந்து இந்திரலோகஞ்சென்று இந்திர சபையில் இந்திரனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

அப்போது அந்தச் சபையிலே அரம்பை என்னும் தெய்வ மகள் நடனம் ஆடினாள். இசையாசிரியராகிய தும்புரு நடனத்தை நடத்தினார். யாழுங் குழலும் முழவும் இசைந்து முழங்கின. தும்புரு இசை பாடினார். எல்லோரும் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால், புரூரவசு அரசன் ரசித்து மகிழவில்லை. அவன் நடனத்தை மெச்சாமல் இகழ்ந்து பேசினான். தன்னுடைய மனைவியாகிய ஊர்வசிக்கு ஈடாக ஒருவரும் நடனமாட இயலாது என்று அவன் அரம்பையின் நடனத்தை இகழ்ந்து பேசினான்.