உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அமரச்செய்து, மணப்பெண் தன் மனதுக்குப் பிடித்த குமரனுக்கு மாலை சூட்டி மணஞ்செய்து கொள்கிற திருமணம் என்று நினைக்கிறீர்களா?

அஃதன்று இது. வில்வித்தையில் பேர்போன காளைகளான நம்பியரைக் கூட்டி, கம்பத்தின் உச்சியில் இயந்திரப் பொறியினால் சுழன்று கொண்டிருக்கிற பன்றியைக் குறி தவறாமல் அம்பு எய்து மணஞ்செய்து கொள்கிற திரிபன்றி எய்யும் சுயம்வரம் என்று கருதுகிறீர்களா?

அதுவும் அன்று. தோள் வலிமிக்க நம்பியர், கட்டுக் கடங்காத முரட்டுக் காளை மாடுகளைத் தமது ஆண்மையினால் அடக்கி ஒடுக்கி வசப்படுத்தி மணமகளை மணந்துகொள்ளும் ‘ஏறு தழுவுதல்' என்னும் சுயம் வரம் என்று நினைக்கிறீர்களா? அன்று, அன்று. காந்தருவ தத்தையின் இந்தச் சுயம்வரம் இசை வெற்றித் திருமணம். காந்தருவதத்தையை யார் இசைப் பாட்டில் வெல்கிறாரோ அவருக்கு மாலை சூட்டி மணஞ் செய்கிற இசைப் பாட்டுத் திருமணம்.

கிறீதத்தச் சீமானுடைய வளர்ப்புப் புதல்வியாகிய காந்தருவ தத்தை, இசைக்கலையை நன்றாகக் கற்றவள். இசைக் கலை இவளிடத்தில் தாண்டவமாடுகிறது. இவளுடைய மெல்லிய விரல்பட்டவுடன் யாழும் வீணையும் கொஞ்சி விளையாடுகின்றன. தாளமும் மத்தளமும் இவளிடத்தில் தாம்தீம் என்று தாண்டவம் ஆடுகின்றன. இசையரசி யாகிய காந்தருவதத்தையின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. இவளுடைய இசையிலும் அழகிலும் ஈடுபட்டு அரசகுமாரர்களும் நம்பியர்களும் இவளைத் திருமணஞ் செய்துகொள்ள விரும்பினார்கள்.

தத்தையின் தந்தைக்கு இவளை யாருக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று தோன்றவில்லை. இதுபற்றித் தன்னுடைய மகளின் கருத்து யாதென்று அறிய இவளை அழைத்துக் கேட்டார். "இசை பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் யார் என்னை வெல்கிறாரோ அவரையே நான் திருமணஞ் செய்து கொள்வேன்” என்று தன்னுடைய கருத்தை அவள் உறுதியாகக் கூறிவிட்டாள். அதனால் தான் கிறீதத்த சீமான் அவளுடைய விருப்பப்படி இசைப் போட்டி நடத்துகிறார்.

காந்தருவதத்தைக்கு இசைப்பாட்டுத் திருமணம் நடக்கப் போகிற செய்தி நாடெங்கும் பரவியது. இராசமாபுரத்திலும், வெளியூர் களிலும் இருக்கும் குமரர்கள், அவளை இசைக் கலையில் வென்று