உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

129

நாட்கள் நோன்பிருந்து கடவுளை வேண்டினேன். மழை பெய்ய வில்லை. நான் என்னசெய்யட்டும்?” இதைக்கேட்ட ஜனங்கள் இதைக் கூறினார்கள்: “தங்களால் மழை பெய்விக்க முடியாமற்போனால், ஜேதுத்தர நகரத்தில், சஞ்சய மன்னன் மகன் வெசந்தரகுமாரன், வரையாது கொடுக்கும் வள்ளலாக வாழ்கிறார். அவரிடம் பெருமை வாய்ந்த வெள்ளை யானை ஒன்று உண்டு. அந்த யானை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் நிறைய மழை பெய்கிறது. அந்தக் குமரனிடம் பிராமணர்களை அனுப்பி அந்த யானையை நமது நாட்டிற்குக் கொண்டுவரச் செய்யுங்கள். அந்த யானை இங்கு வந்தால் நமது நாட்டில் மழை பெய்யும்” என்று சொன்னார்கள்.

அவர்கள் கூறிய யோசனையைக் கங்க நாட்டரசன் ஏற்றுக் கொண்டார். அவர், பிராமணர்களை அழைத்து அவர்களில் எண்மரைத் தேர்ந்தெடுத்து யாத்திரைக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து. "நீங்கள் போய் வெசந்தர குமாரனிடத்தில் உள்ள வெள்ளை யானையைக் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

பிராமணர் புறப்பட்டுச் சென்றார்கள். உரிய காலத்தில் ஜேதுத்தர நகரத்தையடைந்து அங்கு ஒரு இடத்தில் தங்கினார்கள். வெள்ளுவா நாளில், வெசந்தர குமாரன் அறச்சாலைக்கு வரும்போது, அவரிடம் வெள்ளை யானையைத் தானம் பெறுவதற்காகக் கிழக்கு வாயில் அறச்சாலைக்கு வந்தார்கள். வெசந்தர குமாரன் காலையில் பதினாறு குடம் பனிநீரில் குளித்து முழுகி முத்தாழம் உண்டபிறகு, அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை யானைமேல் அமர்ந்து கிழக்குத் திசை அறச்சாலைக்குச் சென்றார். அவ்விடத்தில் தானம் பெறுவதற்குப் பிராமணர் களுக்குச் சமயம் வாய்க்கவில்லை. ஆகவே, அவர்கள் தெற்கு வாயில் அறச்சாலைக்குச் சென்று அங்கு உயரமான ஓரிடத்தில் நின்று காத்திருந்தனர். வெசந்தர குமாரன் வெள்ளை யானைமேல் அமர்ந்து அவ்விடம் வந்தார். அப்போது பிராமணர்கள், “வள்ளல் வாழ்க! வெசந்தர குமரன் வாழ்க!” என்று வாழ்த்தினார் கள். இளவரசன் பிராமணர்களைக் கண்டு, அவர்கள் இருந்த இடத்திற்கு யானையைச் செலுத்தி அருகில் போய், “பிராமணர்களே! ஏன் கையை நீட்டிக் கொண்டு ஆரவாரம் செய்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.