உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

155

மேகலை என்பது, பெண்மணிகள் அறையில் உடுத்த ஆடையின் மேல் அணியும் ஆபரணம். இது 32 முத்து வடங்களினால் பட்டையாக அமைக்கப்பட்ட அழகான அணிகலன். பிற்காலத்தில் இது தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்டு ஒட்டியாணம் என்னும் பெயர் பெற்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் பெயர்பெற்ற நாட்டிய மடந்தையாகிய மாதவி, அரையில் நீலப்பட்டாடை உடுத்தி, அதன்மேல் முப்பத்திரண்டு முத்து வடத்தினால் செய்யப் பட்ட மேகலையை அணிந்தாள் என்று சிலப்பதிகாரக் காவியம் கூறுகிறது. "பிறங்கிய முத்தரை முப்பத் திருசரத் திற்றிகழ் பூந்துகில் நீர்மையின் உடீஇ

66

(சிலம்பு., கடலாடு காதை, அடி 87-88)

ருமுத்தக் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை என்னும் கலையை நீலநிறங் கிளரும் பூந்தொழிலையுடைய நீலச்சாதருடையின்மீதே உடுத்தென்க”.

அடியார்க்கு நல்லார் உரை.

பெண்கள் காலில் அணிந்த காலணிகளில் முக்கியமானது சிலம்பு. இதற்குக் குடைச்சூல் என்றும் நூபுரம் என்றும் பெயர் உண்டு. இதன் உள்ளே பரற்கற்கள் இடப்பட்டிருந்தால், காலில் அணிந்து நடக்கும்போது ஓசையுண்டாகும். இது சாதாரணமாக வெள்ளியினால் செய்யப்பட்டது. செல்வந்தர்களும் அரசர்களும் சிலம்பைப் பொன்னால் செய்து, அதனுள்ளே மாணிக்கத்தையும் முத்தையும் பரற் கற்களாக இடுவார்கள். பாண்டியன் இராணியாகிய பாண்டிமாதேவி யின் காற்சிலம்பில் முத்துக்கள் பரற்கற்களாக இடப்பட்டிருந்தன என்றும், கோவலன் மனைவி கண்ணகியாரின் காற்சிலம்பில் மாணிக்கக் கற்கள் பரற்கற்களாக இடப் பட்டிருந்தன என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைக் காலத்தில் பெண்களுக்குத் திருமணம் ஆனவுடனே சிலம்பு கழி நோன்பு என்னும் ஒரு சடங்கு நடைபெற்றது. சிலம்பு அணிகிற வழக்கம் மறைந்து போன இந்தக் காலத்திலும் அந்தச் சடங்கு மறைந்து போகாமல் வழக்கத்தில் இருந்துவருகிறது. திருமணம் ஆனவுடனே மணமகனும் மணமகளும் முதன்முதலில் வீட்டுக்கு வரும்போது, அவர்களை வீட்டு வாயிலில் நிறுத்தி ஆலத்தி சுற்றி, நீரை மணமகள் காலில் ஊற்றுகிற வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இது, பழைய 'சிலம்பு கழி நோன்பைக் குறிக்கிறது போலும்.