உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

305

நடைவாவியை யடைகிறார். நடைவாவி மண்டபத்தில் தங்கியிருந்த பிறகு, குளத்தைச் சுற்று வலம் வந்து, வெட்டவெளியிலே அமைந்துள்ள மேடையில் சென்று அமர்கிறார். சித்திரா பௌர்ணமி உற்சவம் தொடங்கிவிட்டது. கிராமத்து மக்கள் ஆண்கள் பெண்கள், சிறுவர், சிறுமியர் கூட்டங் கூட்டமாக விழாவில் பங்கு கொள்கிறார்கள். வேனிற் காலத்தின் இனிய தென்றற் காற்று கொள்ளை கொள்ளையாக வீசுகிறது. மல்லிகைப் பூவின் மணம் எங்கும் கமழ்கிறது. குளிர்ந்த இரவும் நிலா வெளிச்சமும் தென்றற் காற்றும் மலர் மணமும் உற்சவச் சந்தடியும் ஆகிய சூழ்நிலைகள் இந்த இடத்தைத் தெய்வ லோகம் போல மாற்றி விடுகின்றன. மக்களின் மனம் உவகைக் கடலில் திளைக்கிறது.

“மாசில வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்கை இணையடி நீழலே”

சித்திரா பௌர்ணமி இருக்கட்டும். முழு நிலாவின் பால் நிலவு இருக்கட்டும். இளவேனிலின் தென்றற் காற்று இருக்கட்டும். இவை தமிழ் நாட்டில் எங்கும் உள்ளவைதானே! இந்த வெட்ட வெளியான பொட்டற் காட்டிலே, தரை மட்டத்தின் கீழே சுற்று மண்டபத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் சிறுகுளத்தையும் அழகாக அமைத்துக் கொடுத்தானே, அந்தச் சிற்பியின் கலைத்திறனை என்னென்று கூறுவது. மலையுச்சியிலும் கடற்கரை ஓரத்திலும் ஆற்றங் கரையிலும், காட்டின் நடுவிலும் கோயில்களையும் மண்டபங்களையும் அமைத்து அழகுப்படுத்திய சிற்பிகள், தரை மட்டத்தின் கீழும் மண்டபத்தையும் குளத்தையும் அமைத்துக் கொடுத்த திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.