உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

37

திருவள்ளுவர் துறவிகளைத் தெய்வம் என்று கூறியதும், திருநாவுக்கரசர் துறவிகளைத் தெய்வம் என்று கூறியதும், உலகத்திலே உணவை உண்டு உயிர் வாழ்கிற முனிவர்களையேயாகும். இதனால், குடும்ப வாழ்க்கையில் இருக்கிற இல்லறத்தான், தன்னையும் தன் குடும்பத்தையும் விருந்தினரையும், துறவிகளையும் (உணவு கொடுத்துக்) காப்பாற்றவேண்டும் என்பது,

தென்புலத்தார் தெய்வம் விருந்துஓக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்னும் திருக்குறளின் கருத்து ஆகும்.

அப்படியானால், இத்திருக்குறளில் கூறப்படுகிற தென் புலத்தார் என்பவர் யாவர்? அவர்கள் இறந்து மறைந்துபோன பிதிர்கள் என்று பொருள் கூறுகிறார்களே, பிதிரர், மனிதர்களைப்போல சோறு உண்டு உயிர் வாழ்கிறவர் அல்லவே, அவர்களையும் இல்லறத்தான் காப்பாற்ற வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறாரே என்னும் கேள்வி எழுகிறது.

இக்கேள்வி நேர்மையான கேள்வியே. தென்புலத்தார் என்னும் சொல்லுக்குப் பிதிரர் என்று உரைகாரர்கள் உரை கூறுவது பொருந்தாது. தெய்வம் (துறவி), விருந்து, ஓக்கல், தான் (இல்லறத்தான்) என்னும் நால்வரும் உணவை உட்கொண்டு உயிர் வாழ வேண்டியவர்கள். அவர்களோடு தென்புலத்தாரையும் திருவள்ளுவர் கூறுகிறார். ஆகவே, தென்புலத்தார் மனிதர் உண்ணும் உணவை உட்கொண்டு உயிர் வாழ்கிறவர்களாக இருக்கவேண்டும். எனவே, தென்புலத்தார் என்னும் சொல்லுக்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும். அப்பொருள் இப்பொழுது வழக்கொழிந்து மறைந்துவிட்டிருக்கவேண்டும் தென்புலத்தார் என்றால், மண்ணுலகத்திலே உணவை உட்கொண்டு வாழ்கிற மனிதப் பிறவியாய்த்தான் இருக்க வேண்டும் என்பது ஐயமறத் தெரிகிறது. ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. முற்காலத்தில் வழங்கிய சில சொற்களுக்கு நேரான பொருள்கள் பிற்காலத்தில் மறைந்துவிட்டன. அவ்வாறு பொருள் மறைந்து போன சொற்களில் தென்புலத்தார் என்பதும் ஒன்று.