உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

என்னும் குறளுக்கு உரை வருமாறு:

66

“தன் மகனை வீரன் என்று பிறர் கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாக மகிழ்ச்சியடைவாள்” என்பது இக்குறளுக்குச் செம்பொருளாகும்.

வில்லிபுத்தூராரும் இக்குறளுக்கு இந்தப் பொருளைத் தான் கூறுகிறார். வில்லிபாரதம், விராட பர்வம், நிரை மீட்சிச் சருக்கச் செய்யுள் ஒன்றில் இந்தக் குறளை இந்தப் பொருளில் அமைத் திருக்கிறார் வில்லிபுத்தூரார்.

விராட நாட்டரசன் வேறு ஊருக்குப் போயிருந்த சமயத்தில், துரியோதனன் விராட நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டான். ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரர் அப்போது விராட நாட்டில் இலர். அச்சமயம் உத்தரன் என்னும் அரசகுமாரன் தான் போய் ஆனிரைகளை மீட்டு வருவதாக அரசியாகிய தன் தாயிடம் கூறினான். அவளும் அவனை அனுப்ப இசைந்தாள். ஆனால், தேரைச் செலுத்த தேர்ப்பாகர் ஒருவரும் இலர். இச்செய்தியை அறிந்து, அரண்மனையில் பேடி உருவத்துடன் அஞ்ஞாதவாசம் செய்திருந்த அர்ச்சுனன், தான் தேரைச் செலுத்துவதாகச் சொல்லி உத்தரகுமாரனை ஏற்றிக் கொண்டு தேரை ஓட்டிச் சென்றான்.

தேர் போர்க்களஞ் சென்றது. போர்வீரர்களைக் கண்டதும் உத்தரகுமாரன் அச்சமடைந்தான். கை கால்கள் நடுங்க, உடல் வியர்க்க, மனம் பதற, அச்சத்தினால் சோர்வடைந்து போர்க்களத்தை விட்டு ஓடினான். அதைக் கண்ட அர்ச்சுனன், உத்தரகுமாரனுக்குத் தைரியம் கூறி, ஓடாமல் இருக்கச் செய்து தான் ஓருவனாகவே நின்று போர் செய்து பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டான். பிறகு, பேடிக் கோலத்துடன் இருக்கும் அர்ச்சுனன், தூதுவரை விராட நாட்டிற்கு அனுப்பி, உத்தரகுமாரன் போர் செய்து ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வெற்றியுடன் வருகிறான் என்று செய்தி தெரிவித்தான். விராட நாட்டினரும், உத்தரகுமாரனுடைய தாயாகிய சுதேட்டிணை என்னும் அரசியும் இச்செய்தி கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதற்குள், வெளிநாடு சென்றிருந்த விராட நாட்டரசனும் திரும்பி வந்து விட்டான்.