உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

மலையில் அமைக்கப்பட்ட ஒரு குகையில் இவனுடைய சாசனம் ஒன்று உள்ளது. (இந்த ஹாதிகும்பா மலை, ஒரிசா தேசத்து பூரி மாவட்டத்து உதயகிரியில் உள்ள புவனேஸ்வரம் என்னும் இடத்திலிருந்து 3 மைலுக்கப்பால் இருக்கிறது.) பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தச் சாசனத்தில், இவ்வரசனுடைய மெய்க்கீர்த்திகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, அவராஜர்களால் அமைக்கப்பட்ட பிதுண்டம் என்னும் நகரத்தை அழித்து அதனைக் கத்தபம் (கழுதை) பூட்டிய ஏரினால் காரவேலன் உழுதான் என்று கூறுகிறது. (Epigraphia Indica Vol. XX Page 71-89).

அன்றியும், ஜைந சமய நூல்களாகிய ஆவஸ்யாக விருத்தி, வீர சரித்திரம் என்னும் நூல்களிலும் இச்செய்தி கூறப்பட்டிருக்கிறது. கோணிகன் என்னும் பெயருடைய மகதநாட்டு அரசன், வைசாலி நாட்டைவென்று கழுதை பூட்டிய ஏரினால் உழுதான் என்று அந்நூல்களில் கூறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும், வடநாட்டிலும், இலக்கியச் சான்றும் சாசனச் சான்றும் உடைய கழுதை ஏர் உழுதல் செய்தி, பண்டைக் காலத்திலே இந்திய நாடு முழுவதும் இவ்வழக்கம் இருந்ததைத் தெரிவிக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களிலே இச் செய்தி கூறப்படுவதுதான். இதுபோன்ற பல செய்திகள், இந்தியா முழுவதும் பரவியிருந்த பழக்க வழக்கங்கள், பிற்காலத்தில் மறைந்துவிட்டன என்றாலும், அப்பழக்க வழக்கங்கள் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலே பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த உண்மையை வரலாற்று ஆசிரியர்கள் இன்னும் உணரவில்லை. உணர்வார்களாயின், பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்து அவைகளில் பொதிந்துள்ள பழைய கருத்துக்கள் இந்திய வரலாற்று நூல் எழுதுவதற்குத் துணையாக இருப்பதைக் காண்பார்கள். வடநாடு, தென்னாடு என்னும இரண்டு பிரிவினைக்கொண்ட இந்தியா தேசம் முழுவதும் பண்டைக் காலத்திலே வழக்காற்றிலிருந்து, இப்போது முழுவதும் மறைந்துபோன பல பழக்க வழக்கங்கள் நம்முடைய சங்க இலக்கியங்களிலே காணப் படுகின்றன. இவை பழைய இந்திய நாகரிகங்களைக் காண்பதற்கு உதவிசெய்கின்றன. வரலாற்று ஆராய்ச்சிக் கண்கொண்டு இந் நூல்களைக் காண்போமானால் பல செய்திகளைக் காணலாம்.