உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பெருமானடிகள், முத்தமிழ் வள்ளலாகத் திகழ்ந்து அம் முத்தமிழ் என்றென்றும் வளர்ந்தோங்கு வதற்கு வழி வகுத்துச் சென்றார்கள். இவ்வரும் பெருந்தொண்டுகளைச் செய்து மறைந்த அப்பெரியாரின் புகழ் உடம்பு என்றும் அழியாது அவர் தமிழகத்தில் அமரராக விளங்குகின்றார்.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்த மிழை, தொன்றுதொட்டு வளர்த்து வந்தனர் தமிழ்ப் பெரியோர். முத்தமிழை வளர்ப்பது தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்பதற்கொப்பாகும். ஏனென்றால், தமிழரின் கலை நாகரிகம் முதலிய பண்பாடுகள் இந்த முத்தமிழிலே ஊடுறுவியுள்ளன. அதனால்தான் பழங்காலத்திலிருந்த சேர சோழ பாண்டியர்களும் அவர்கள் காலத்துக்குப் பின்னர் ஆண்ட குறுநில மன்னர்களும் முத்தமிழ்க் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

பிற்காலத்திலே தமிழ் மன்னர்கள் மறைந்து குறுநில வேந்தரும் போய் தமிழகம் அயல் நாட்டவருக்கு அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலே, முத்தமிழ் போற்றுவார் இன்றி அல்லல்பட்ட நேரத்திலே, வாடிக்கிடக்கும் பயிருக்குக் கார்மேகம் மழை பெய்தது போல், முத்தமிழ் வள்ளல் அண்ணாமலைப் பெருமானடிகள் தோன்றி முத்தமிழ்க் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள்.

முத்தமிழ்க் கலைகளில் ஒன்றான இயற்றமிழ்க் கலை காலந் தோறும் வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பினையுடையது. ஆனால் அதைத் தகுந்த முறையில் போற்றுவாரின்றி இருந்த போது, நமது செட்டி நாட்டரசர் இக்கலை வளர்ந்தோங்குவதற்கு வழி கோலினார். அண்ணாமலைச் செட்டியாரவர்கள் அண்ணாமலை நகரிலே அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தைப் புதுமையாக நிறுவி இயற்றமிழ்க் கலைகள் வளர்வதற்கு ஆக்கம் அளித்துள்ளார்கள். அவர்கள் அமைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்னும் பெயருடன் விளங்குகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் நாட்டின் பல்கலைக் கழக மல்லவா என்று சிலர் கேட்கக்கூடும். சென்னைப் பல்கலைக் கழகம் பாரத நாட்டின் பழைய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தும், உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக இருந்தும் அது தமிழ்ப் பல்கலைக்கழகம் என்னும் பெயரைப் பெறவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒன்றே தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் சிறப்புப்