பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 4
4 ஆம் அதிகாரம்
பிரதாப முதலியாரின் தாயார் கன்னிப்
பருவமாயிருக்கும்போது நடந்த வர்த்தமானம்
நல்ல மருமகள்
ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பாட்டியார் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே, ஞானாம்பாள் அவ்விடத்திலே கிடந்த பிரம்பை எடுத்து ஒளிப்பது போல் ஜாலம் செய்தாள். "என்னைக் கண்டவுடனே ஏனம்மா பிரம்பை எடுத்து ஒளிக்கிறாய்?" என்று என் பாட்டியார் கேட்க, ஞானாம்பாள் "உங்களுடைய பேரனுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்னை அடிப்பீர்களென்று பயந்து, பிரம்பை ஒளித்தேன். அடி படுவதற்குக் கனக சபை அண்ணனும் இங்கே இல்லையே!" என்றாள். உடனே என் பாட்டியார் ஞானாம்பாளைக் கட்டிப் பிடித்து "என் புத்தியுள்ள செல்வமே!" என்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் பிறகு என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.
"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது போல ஞானாம்பாள் இவ்வளவு சிறு பிராயத்தில் நடக்கிற கிரமத்தையும் ஒழுங்கையும் யோசிக்குமிடத்தில், அவள் அறிவிலும் நற்குணங்களிலும், உன் தாயாருக்குச் சமானம் ஆவாளென்று நினைக்கின்றேன்; உன் தாயாருக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் நடந்த ஒரு அதிசயத்தைத் தெரிவிக்கிறேன் கேள்!" என்று என் பாட்டியார் சொல்லத் தொடங்கினார்கள். "உன் தாயார் கன்னிகையா யிருக்கும்போது, அவளுடைய குண அழகையும் ரூபலாவண்ணியத்தையும் கேள்வியுற்று, அவளை மணஞ் செய்வதற்கு நம்முடைய பந்துக்களில் அநேகர் விரும்பியும், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல, அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. நமக்கு நெருங்கிய பந்துத்வம் உடைய பேராவூர் நீலகண்ட முதலியும் உன் தாயாரைக் கொள்ள, பகீரதப் பிரயத்தனஞ் செய்தான்; அந்தப் பிரயத்தனம் பலிக்காமற் போய்விட்டதால், தாயாரை எவ்வகையிலாவது சிறை எடுத்துக் கொண்டுபோய், பலவந்தமாய் விவாகஞ் செய்துகொள்ளுகிறதென்று தீர்மானித்துக் கொண்டு அதற்குத் தகுந்த சமயமும் தேடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு சமயமும் வாய்த்தது. எப்படியென்றால், உன்னுடைய மாதாமகர் முதலான புருஷர்களெல்லாரும் இருகாதவழி தூரமான மங்கனூருக்குப் போயிருந்தார்கள்; வீட்டில் உன் தாயார் முதலான சில ஸ்திரீகளும், சில வேலைக்காரர்களும் மட்டும் இருந்தார்கள்; அந்தச் சமயத்தில் மேற்கண்ட நீலகண்ட முதலி, அவனுடைய இரண்டு குதிரைகள் பூட்டின நாலு சக்கர ரதத்தையும், சாரதியையும் சத்தியபுரிக்கு அனுப்பி, மங்கனூருக்குப்போயிருந்த உன் மாதாவின் தகப்பனாருக்குத் திடீரென்று மார்பு அடைத்துப் பேச்சு மூச்சு இல்லாமல், அத்தியாவஸ்தையாக இருப்பதாகவும், அதற்காக உன் தாயார் உடனே வரும்படி பண்டி அனுப்பியிருப்பதாகவும், அபாண்டமாய்த் தெரிவிக்கும்படி திட்டஞ் செய்தான்; அந்தப் பிரகாரம் சாரதி வந்து தெரிவித்தவுடனே, உன் தாயார் நிஜமென்று நம்பி, உடனே அவளும் அவளுடைய தோழியும் அந்த பண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள். அந்த பண்டி நீலகண்ட முதலியினுடைய பண்டி என்பது, உன் தாயாருக்குத் தெரியாது; தன் தகப்பனாருடைய பண்டிகளில் ஒன்றென்று நினைத்தாள்; இரண்டு குதிரைகள் கட்டின பண்டியைத் தொடர்ந்து கொண்டு ஓடுவது அசாத்தியமாகையால், வேலைக்காரர்கள் ஒருவரும் பண்டியுடன் கூடப் போகவில்லை; அந்த பண்டியைச் சாரதி அதி வேகமாய் நடத்திக் கொண்டு, தெற்கு ரஸ்தா வழியாகப் போனான். தெற்கு ரஸ்தாவில் ஒரு காதவழி தூரம் போய்ப் பிறகு மங்கனூருக்கு, மேற்கு ரஸ்தா வழியாகத் திரும்ப வேண்டியதாயிருக்க, அந்தப்படி மேற்கு ரஸ்தாவில் திரும்பாமல், பேராவூருக்குப் போகிற கிழக்கு ரஸ்தா வழியாக பண்டியை நடத்திக் கொண்டு போனான்.
பண்டியின் பலகணிகள் மூடப் பட்டிருந்தமையாலும், தகப்பனார் வியாதியாயிருக்கிறாரென்கிற துயரத்தினாலும், வண்டி கிழக்கு ரஸ்தா வழியாகப் போகிறதை உன் தாயார் கவனிக்கவில்லை. அந்தச் சாரதி சாராயப் பெட்டியைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு, வழியிற் போகும்போதே சாராயத்தைக் குடித்துக் கொண்டு போனதால், அவன் அறிவு மயங்கி, அவனுடைய வெற்றிலைப் பாக்குப் பையைக் கை நழுவிக் கீழே விழும்படி விட்டு விட்டான்; அது விழுந்த வெகு நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்குத் தெரிந்து, அதைத் தேடிப் பார்ப்பதற்காக, அவன் பண்டியை நிறுத்திக் கீழே குதித்தான். பண்டி நின்றவுடனே, அது நிற்கவேண்டிய காரணம் என்ன என்று விசாரிப்பதற்காக உன் தாயார் ஜன்னலைத் திறந்தாள்; உடனே அந்தச் சாரதி குடிவெறியுடனே வந்து, "வெற்றிலை பாக்குப் பை கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிக்கொண்டு வருகிறேன் அம்மா" என்று சொல்லிவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போனான்; அவன் போன பிற்பாடு, கிழக்கு ரஸ்தா வழியாக வண்டி போகிற விவரம், உன் தாயாருக்குத் தெரிந்தது. உடனே வண்டியை விட்டுக் கீழே குதித்தாள். அந்த பண்டியில் ஒரு பக்கத்தில் "நீலகண்ட முதலி" என்று பெயர் வரையப்பட்டிருந்ததாலும், அந்தக் கிழக்கு ரஸ்தா அவனுடைய ஊருக்குப் போகிற மார்க்கமென்பது உன் தாயாருக்குத் தெரியுமானதாலும் சகலமும் அவனுடைய கபட நாடகமென்று உன் தாயார் ஒரு நிமிஷத்தில் கண்டுபிடித்துக் கொண்டாள். அவள் சிறு பருவ முதல், குதிரை கட்டின பண்டிகளில் ஏறி, சில சமயங்களில் சாரத்தியம் செய்வதும் அவளுக்குப் பழக்கமாயிருந்தபடியால், அவள் ஒரு நிமிஷத்தில் அந்த பண்டியில் சாரதி ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து குதிரைகளை மேற்கே திருப்பி, வாயு கதியாக வண்டியை நடத்த ஆரம்பித்தாள், பையைத் தேடிப் போன சாரதி, பண்டி திரும்பி வருவதைக் கண்டு குடி மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுந்துகொண்டு, வண்டியை மறிக்க ஓடிவந்தான். அவன் கிட்ட நெருங்காதபடி உன் தாயார் குதிரைச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடித்தாள்; அந்த அடியும் அவனுடைய குடியும் அவனைக் கீழே தள்ளி விட்டன; உன் தாயார் மனோகதியும் பிந்தும்படி மங்கனூர்ச் சாலை மார்க்கமாக பண்டியை நடத்திக் கொண்டு போகும்போது, நீலகண்ட முதலி, ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு பண்டியைத் தொடர்ந்து வந்து பண்டிக்கு முன்னாலே மறித்தான்; பண்டியிலே பூட்டிய இரண்டு பரிகளும் நிற்காமல், நீலகண்ட முதலி மேலே தாவிப் பாய்ந்து ஓடின படியால், அவன் ஏறிய குதிரை வெகுண்டு மார்க்கத்தை விட்டுத் தாண்டிக் குதித்து, அவனை ஒரு படு குழியில் வீழ்த்திவிட்டுப் பக்ஷிபோல் பறந்து போய்விட்டது. இவ்வண்ணமாக உன் தாயார் தெய்வானுகூலத்தால் தப்பி மங்கனூர் போய்ச் சேர்ந்தாள்; அவ்விடத்தில் அவளுடைய தகப்பனார், அவளைக் கண்டவுடனே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டு "அவள் ஊரை விட்டு இவ்வளவு சடுதியில் வந்ததற்குக் காரணம் என்ன" என்று கேட்க, அவள் நடந்த காரியங்களையெல்லாம் ஆதியந்தமாய்த் தெரிவித்தாள். அதைக் கேட்டவுடனே, அவள் தகப்பனாருக்கும் மற்றவர்களுக்கும் நீலகண்ட முதலி மீது பிரமாதமான கோபம் உண்டாகி, அவனைச் சிக்ஷிக்கத் தொடங்கினார்கள். எப்படி என்றால், தம்முடைய ஜாதியார் எல்லாரும் ஏகமாய்க் கூட்டங்கூடி, அவனைச் சாதிப் பிரஷ்டம் ஆக்கி, சுபாசுபங்கள் இல்லாமலும், நீர் நெருப்பு இல்லாமலும் விலக்கி விட்டார்கள். அவனுக்கு ஜாதியார் ஒருவரும் பெண் கொடாதபடியால், அவன் இன்னமும் பிரமசாரியாகவே இருக்கிறான். பிள்ளையாருடைய பிரமசாரித்துவம் நீங்கினாலும், அவனுடைய பிரமசாரித்துவம் நீங்காதென்பது நிச்சயம்.
மேற்படி சங்கதி நடந்த பிறகுதான் உன் தாயாரை, உன் தந்தையாகிய என் மைந்தனுக்கு விவாகம் செய்துவைத்தது. உன் தாயாரைப் போலச் சர்வ குணாலங்கிருத பூஷணிகள் உலகத்தில் இருப்பார்களா? அவள் எனக்குச் செய்யும் அன்பும், ஆதரவும், வணக்கமும், மரியாதையும் யாருக்காவது வருமா? எனக்கு நூறு புத்திரிகள் இருந்தாலும் இந்த விருத்தாம்பியக் காலத்தில் என் மருமகளைப் போல என்னை ஆதரிப்பார்களா? நான் வியாதியாய் இருக்கும் காலங்களில் எனக்குப் பத்திய பாகங்கள் செய்து கொடுத்து, உன் தாயாரே எனக்குச் சகல பணிவிடைகளையும் செய்து வருகிறாள். அவள் இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும். அவள் அன்னமில்லாதவர்களுக்கு அன்னமும், வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரமும் கொடுத்து எத்தனையோ ஏழைக் குடும்பங்களைக் காப்பாற்றி வருகிறாள். அவளுக்காகவே தான் மழை பெய்கிறது; அவளுக்காகவே வெயில் எரிகிறது. அவளுக்குக் கடவுள் நீடிய ஆயுசைக் கொடுத்து உனக்கும் எனக்கும் என்னுடைய மகனுக்கும் மற்ற ஏழைகளுக்கும் அவள் ஆதரவாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்பது என்னுடைய இடைவிடா பிரார்த்தனையா யிருக்கிறது" என்றார்கள். 'மாமியார் மெச்சிய மருமகள் இல்லை' என்கிற பழமொழிக்கு விரோதமாக என் தாயாருடைய சுகுணப் பிரபாவங்களை என் பாட்டியார் எடுத்துப் பிரஸ்தாபித்தவுடனே இப்படிப் பட்ட புண்ணியவதி வயிற்றிலே பிறந்தோமே என்கிற சந்தோஷத்தினால் நான் புளகாங்கிதமாகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன். என்னுடைய மாதாவை உலக மாதாவென்றே நினைத்து, நித்தியமும் நான் பக்தி பண்ணிக் கொண்டு வந்தேன்.