உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/015-020

விக்கிமூலம் இலிருந்து




15. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி


ரிமை வாழ்வென்பது பொது வுலகில் ‘சுதந்திர வாழ்வு’ என்று வழங்கும். இந்த வாழ்வு பெறுவதற்கு நம் நாட்டவர் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே முயலத் தொடங்கி, இந்த நூற்றாண்டின் இந்த ஆண்டு வரையில் பெரிய போராட்டத்தைச் செய்து வெற்றி பெற்றனர். இத்தகைய வெற்றி, உரிமைப் போருடற்றி வெற்றி பெற்ற நாடுகள் எவற்றிலும் இதுகாறும் உண்டானதே கிடையாது. ஏனை நாட்டவரால் எய்துதற்கரியதாகிய இத்தகைய வெற்றிகொண்டு விளங்கும் நமக்கு வேறு எவருக்கும் இல்லாச் சிறப்பு உண்டாகிறது. மேலும், நம் நாட்டிலும், இறந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்களிலும், எதிர் காலத்தில் தோன்றுகின்றவர்களிலும் இன்றைய நாம் நல்ல பேறுடையவர்கள் என்பதையும் நினைவு கொள்ளவேண்டும். உரிமைப் போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து கண்டு, அஃது எதிர்பாராத வகையில் வெற்றி தரவும் கண்டு இன்புறு கின்றோமாகையால், நாம் பெற்ற பேறு தலைசிறந்த பேறு என்பதில் தடை ஏது?

உரிமை வாழ்வு எய்தப் பெற்று இன்புறுகின்ற நமக்கு இவ்வாழ்வு உரியது தானா? புதிது பெற்றதொரு வாழ்வா? என்று சிறிது எண்ணமிட்டுப் பார்க்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு காண்பவர்க்கு, ‘தமிழ் நாட்டவர்க்கு இது புதிதன்று; முந்நூறு நானூறு ஆண்டுகட்கு முன்பு வரையில் தமிழ் நாட்டவர் உரிமை வாழ்விலே உறைந்தவர்’ என்பது நன்கு விளங்கும். ‘தமிழராகிய நமக்கு இறந்த உரிமை வாழ்வு மீள உயிர் பெற்று வந்திருக்கிறது’ என்றே எண்ண வேண்டும்.

பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவு ஆகிய ஐந்தும் உரிமை வாழ்வுக்குச் சிறந்த உறுப்புக்களாகும். அவரவரும் தத்தமக்குரிய நெறியில் நின்று நெஞ்சால் நினைப்பவற்றைச் சொல்லுதற்குத் தடையில்லாமை பேச்சுரிமையாகும். நெறியில் நிற்கும் போது நில்லாதார் செய்யும் நீர்மை யற்ற செயல்களை எடுத்தோதித் திருத்துவதற்கும் நெறியிடையுண்டாகும் இடையூறுகளையும் இடையீடுகளையும் எடுத்தோதி விலக்குதற்கும், நலங்களை எடுத்தோதிப் பாராட்டுதற்கும் பேச்சு நிகழும். அவ்வாறு நிகழும் பேச்சுக்களை வழங்குதற்கு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமை யுண்டு. அப்பேச்சுரிமை யில்லாத வாழ்வு உரிமை வாழ்வாகாது.

கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை வழிபடுவது கடனென்றும் கருதி அவரவரும் வேறு வேறு சமய நெறிகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சமய நெறிகளும் பலதிறப்படுகின்றன. அவர்களுக்கு அந் நெறியில் வழிபட்டு வாழ வுரிமை யுண்டு. இது வழிபாட்டுரிமை. அவ் வுரிமையைக் கெடுத்து, யாவரும் ஒரு நெறியையே கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்தி நிறுத்துவது உரிமை வாழ்வுக்குப் புறம்பானதாகும். அவரவர்க்கும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் வழிபாட்டுச் சமய நெறியைப் பிறர்க்கு எடுத்தோத உரிமை யுண்டு. பிறரைத் தம் நெறியைக் கைவிடுமாறு வற்புறுத்துவது உரிமைப் பணியாகாது.

உடைமைக்கும் உடையவனுக்கும் உள்ள உரிமையால், உடைமையின் பயனை உடையவன் நுகர்தற்கண் அவனுக்கு அச்சமுண்டாதல் கூடாது. உழைப்பவனுக்குத் தன் உழைப்பால் விளையும் பயனை நுகர்தற் குரிமை யுண்டு; அந் நுகர்ச்சியில் அவனுக்குத் தடை யுண்டாகுமோ என அச்ச முண்டாதல் கூடாது. இவ் வகையால் அவரவர் உரிமையில் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் உரிமை வாழ்வுக்குத் தீதாகும். இம் முறையில் அரசியல் முறைகளும், அவற்றைச் செயற்படுத்தும் வினையாளர்களும் மக்கட்கு அச்சம் பிறவாத வகையில் அமைவதே அச்சம் இல்லாமை யாகும்.

உரிமை வாழ்வுடைய நாட்டில் வறுமை யுண்டாகுமானால், அஃது அவ் வுரிமையை யழித்து நாட்டைச் சீரழித்தவிடும். ‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு’ என்றதும் இக் கருத்தையே வற்புறுத்துகிறது. வறுமையறவே இல்லாத உரிமை வாழ்வில், ஒரு வேலையும் இன்றிச் சோம்பித் திரிபவர் இல்லையாவர்; அவரோடு, உழைப்பார் உழைக்க, அவர் உழைப்பின் பயனை உறிஞ்சி யுண்டு உயிர்வாழ விரும்புவோர் ஒழிந்துபோவர். ‘யான் வாழ ஏனோர் எனக்கு அடிமையாக எனும் ஊன அறிவு’ ஓரிடத்தும் ஒரு சிறிதும் இராது.

ஒப்புரவு என்பது உரிமை வாழ்வுக்கு அழகு தருவதாகும். நாடுகளுக்கிடையே நிலவும் ஒப்புரவு, வறுமையும் அச்சமும் போக்கி, உரிமை வாழ்வில் ஊறிப் பெருகும் இன்பத்தை நுகரப் பண்ணும், நாட்டு மக்களிடையே விளங்கும் ஒப்புரவு, மக்கட் சமுதாயத்தில், வேற்றுமைசெய்யும் பிளவுகளைப் போக்கி, ஒற்றுமை நிறுவும் மனப்பண்பினை, வளர்க்கும். ஒப்புரவு என்பது ஒருவருக்கொருவர் வேண்டுவன வுதவி யொழுகும் ஒழுக்கமுறை; ‘ஒப்புரவொழுகு’ என்பது ஆத்திசூடி மக்களை ஒருவர்க்கொருவர் ஒன்றாகப் பிணித்து ஒருமை யுறுவிப்பதும், நாடுகளை ஒன்றோ டொன்று நீங்கா வகையில் ஒன்றுபட்டு வாழ வைப்பதும் ஒப்புரவென்னும் ஒள்ளிய அறம் ஒன்றேயாகும்.

மேற்கூறிய பேச்சுரிமை முதலிய ஐவகை யுறுப்புக்களையும் கொண்டு, பிற நாட்டவரது ஆட்சியின் கீழன்றித் தன்னாட்டவராளும், ஆட்சியில் வாழும் வாழ்வு உரிமை வாழ்வுக்கு உருவாகும். இன்று நாம் எய்தி இருக்கும் உரிமை வாழ்வு இத்தகைய தாகும். இந்த உரிமை வாழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் தமிழகத்தில் இருந்ததென்பதைச் சங்க நூல்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தைத் தமிழரே ஆண்டனர்; அவரது தமிழ் மொழி அரசியல் மொழியாக விளங்கிற்று. தமிழர்கள் அத்தமிழ் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். அவர் வாழ்வில் இவ்வுறுப்புக்கள் ஐந்தும் குறைவின்றியே இருந்தன. அதனால் அவர்கள் காலத்து இலக்கியங்கள் இவ்வைந்தும் வளம் பெறத் தக்க கருத்துக்களை எடுத்துக் காட்டின.

முதற்கண் பேச்சுரிமையைக் காணலாம். தமிழகத்தில் சங்க இலக்கியக் காலத்தில் நிலவியது முடியாட்சியே யன்றிக் குடியாட்சி யன்று. ஆயினும், முடியாட்சி, தான்தோன்றி யாட்சியாய் இல்லாமல், குடிகளின் மனக்கருத்தைத் தழுவிச் செல்லும் இயல்பு பெற்றிருந்தது. இதனால், அரசியலில் உரிமை அறிவுடையவர்க்கே இருப்பதாயிற்று. பாண்டி வேந்தன் ஒருவன், ‘ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்றான். திருவள்ளுவரும், ‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன், அடிதழீஇ நிற்கும் உலகு’ என்றார். குடிகளாவார் கற்றாரும் கல்லாரும் என இரு திறப்படுவர். அவருள், கல்லாதவர் கற்றவர் வழி நிற்பவராகையால், அரசியலின் செம்மைக்குக் கற்றறிந்த அறிவுடையோர் பொறுப்புடைய ராயினர். அப்பொறுப்பு, அரசியலில் வேண்டுவன எடுத்தோதற்கு வாய்ப்பளித்தது. சான்றோர் பலரும் பொறுப்புணர்ந்து தமது பேச்சுரிமையை நெகிழ விடாது செய்வன செய்து சிறப்புற்றனர்.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், பாண்டி நாட்டை ஆண்டு வந்த காலத்தில், ஒருகால் நாட்டில் உணவுப் பொருள் விளைவு குறைந்தது. உணவில் வறுமை யுண்டாயிற்று. வேந்தன் துறக்க இன்பம் வேண்டி வேள்வி செய்வதிலும், பெருஞ் செல்வம் ஈட்டிப் பிற வேந்தரோடு போர் செய்வதிலும், வேறே நல்ல புகழ் பெறக் கருதி அதற்குரிய செயல்களிலும் பெரிதும் ஈடுபட்டிருந்தான். உணவு முட்டுப்பாட்டைச் சிறிதும் உணராது, அதனை எடுத்தோதுபவர்களை இகழ்ந்து நின்றான். உணவுப் பொருளை மிகுதிப் படுத்துவது குறித்து வேந்தன் கருத்துச் செலுத்தா திருப்பதைக் குடபுலவியனார் என்னும் சான்றோர் கண்டார். அவரோர் அறிவுடைய சான்றோர் என்பதும், அவர்க்கு அரசியலில் பொறுப்புண் டென்பதும் வேந்தன் முதலாயினார்க்குத் தெரியும். அவர் வந்து வேந்தனைக் கண்டபோது, வேந்தன் அவர் சொல்வது கேட்க இசைந்திருந்தான். அவர்,

மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே.
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே

என்று சொல்லி, நீர் கொண்டு நிலத்தை வளம் படுத்துவது உயிர்களைப் படைப்பதாகும் என்ற கருத்தை வேந்தன் மனத்தில் பதியவைத்தார். ‘ஏனை நாடுகளைப் போலப் பாண்டி நாடு பேராறுகளையுடைய தன்றே; இதனை நீர் வளமுடைய தாக்குவது எங்ஙனம்? என்று எண்ணாமை கருதி, நம் நாட்டில் உள்ளவை பெரிதும் புன்செய்க ளாகும்.

வித்திவா னோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட் குதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது, வல்லே
நிலன் நெளிமருங் கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளதோர் இவண் தள்ளா தோரே

என்றார். இதனால், புன்புலம் பயன்படாத, பள்ளப் பாங்கு நோக்கி நீர்நிலை யமைப்பின், அந்த நீர் நன்புலம் பெருகிப் பெரு நலம் விளைக்கும் என்று வற்புறுத்தினார். அன்று குடபுலவியனாரது பேச்சு நலம், இன்று பாண்டி நாடு நீர் நிலைகளால் மிகுந்து ஓரளவில் உணவுக் குறைவின்றி யமைதற்கு ஏது வாயிற்று.

சோழ நாட்டை உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கிள்ளி வளவன் என்பவன் ஒருவன். இவன் முடிவில் குளமுற்றத்து நடந்த போரில் வீழ்ந்து இறந்ததுபற்றிப் பிற்காலத்தார், இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று கூறுவர், இக் கிள்ளிவளவன் ஆட்சியில் “குடிதழீஇக் கோலோச்சும் இயல்பு” குறைவ தாயிற்று. பிற வேந்தருடன் போர் செய்து வென்றி பெறுவதால் உண்டாகும் விளக்கமே, வேந்தன் கருத்தை விழுங்கிக்கொண்டது. உழு படையினும் பொரு படையே வலி யுடையதெனச் சோழன் கருதிவிட்டான். இதனால் குடிகட்கு வருத்தம் மிகுந்தது. இதனை எடுத்துரைக்கும் உரிமையுடைய சான்றோர் கருத்தில் அச்சம் குடிகொண்டது. அக் காலத்தே வெள்ளைக்குடி யென்னும் ஊரினரான நாகனார் என்னும் சான்றோர் தோன்றி இக் கிள்ளிவளவனைக் கண்டார். “வேந்தே, பொருபடை தரும் வெற்றி குடிகளின் உழுபடையால் விளைவதாகும்; குடிகளின் மன வியல்பை நீ நன்கறிதல் வேண்டும் அவர்கள்,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்

வேந்தரையே பழிப்பர்.

அதுநன் கறிந்தனை யாயின் நீயும்,
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்,
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே

என்று அறிவுறுத்தினார். வளவன் அறிவு தெளிந்து செய்வன செய்தான். பிறகு நாடு நாடாயிற்று.

பாண்டி நாட்டை யாண்ட வேந்தருள் அறிவுடை நம்பியென்பவன் ஒருவன். இவன் பெயரளவில் அறிவுடைய நம்பியே தவிரச், செயலில் அறிவுடைந்த நம்பி யாவன். இவன் ஆட்சிக் காலத்தே, இவன் இன்பத் துறையில் மிக எளியனாய் ஒழுகினான். இவனைச் சூழ்ந்திருந்த அரசியற் குழுவினர் நீர்வழிக் கோரை போல இவன் எண்ணப்படியே ஒழுகினார்கள். நாடு வேந்தனுக்கேயுரியது; அதனால் அதன்கண் விளைவன அவனுக்கே உரியவை; அவற்றை அவன் விரும்புகிறபடியே செய்ய உரிமையுண்டென்று சொல்லிக் குடிகளைக் பலவகையிலும் அலைக்கத் தொடங்கினர். அதனால் நாட்டில் மக்களுக்கு மிக்க வருத்தமுண்டாயிற்று. அதனை யறிந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர், வேந்தனை யணுகி, “வேந்தே, நின் பட்டத்து யானைக் கெனத் தனியே நிலம் விடப்பட்டிருக்கிறது. அதன்கண் விளையும் நெல் அதற்குரியதே. அதனை விளைத்து நெல் லாக்கிக் குற்றி யரிசி யாக்கி, கவளம் கவளமாகத் தரின், அந்நெல்லுணவு அதற்குப் பன்னாளைக்கு உணவாகும். அந்நிலம் யானைக்குரியதே; அதனால் அவ் யானையை அந் நிலத்தே விட்டு மேய விடுக என்று சொல்லிவிட்டால் என்னாகும்? நூறு வேலி நிலமாயினும், அதன் வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும். அதுபோல, நீயே சென்று நில வருவாய் கொள்ளத் தொடங்கின் நாடு பாழ்படும்; அது செய்யற்க’ என்ற கருத்தமைய,

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகுவத னினும் கால்பெரிது கெடுக்கும்.
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானைபுக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

என்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேச்சுரிமையின் நயமறிந்து சான்றோர் அவ்வப்போது வேந்தர்க்குத் தகுவனவற்றை அறிவுறுத்தி வந்ததனால் தமிழகம் பல நூறாண்டு வரையில் தலைமை குன்றாதிருந்தது. கோவலன் கொலையுண்டதறிந்து, அறிவுபேதுற்று அலமரலுற்ற கண்ணகியார் மதுரை மூதூரில் பெருந்தெருவே செல்பவர், “அரசன்பால் தவறிருப்பவும் அதனை எடுத்துரைக்கும் பேச்சுரிமை பெற்ற சான்றோர் எடுத்துரையாது போயினரே, இம் மூதூரில் சான்றோர் இல்லையோ? என்பாராய்,

“சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல்,
ஈன்றகுழவி எடுத்து வளர்க்கு றூ.உம்,
சான்றோரு முண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்”

என்று கதறினார்.

இனி, இரண்டாவதாக வழிபாட்டுரிமையைக் காண்போம். கடவுள் வழிபாட்டில் தமிழகம் மக்கட்கு நெடுங் காலத்துக்கு முன்பே பேருரிமை வழங்கியிருந்தது. பல்வகையான தெய்வங்களை வழபடும் இயல்பு தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகிறது. குறிஞ்சி முதலிய நிலத்தவர் முருகன் முதலிய தெய்வங்களை வழிபட்டனர். வைதிகம், பெளத்தம், சைனம் முதலிய சமயங்கள் வந்து படர்ந்திருந்த காலத்தும், தமிழ் நாட்டில் வழிபாட்டுரிமைக்குத் தடை யுண்டான தில்லை. சங்க நூல்களில் பரிபாடல் என்பது முருகனையும் திருமாலையும் மக்கள் வழிபட்ட நலத்தை எடுத்தோதுகின்றது. பெயர் வகைகள் வேறுபட்டன வாயினும், கடவுட்டன்மை பொதுவாதலால், அவரவர் வழிபாடுகளும் இறைவனொருவனையே சுட்டும் என்பது பழந் தமிழர் கருத்து.

ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரேரய்
எவ்வயி னோயும் நீயே நின் ஆர்வலர்
தொழுதகை யமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவ லாளனும் நீயே
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே.

என்றும்,

பகைவர் இவர்இவர் நட்டோ ரென்னும்
வகையுமுண் டோநின் மரபுஅறி வோர்க்கே.”

என்றும் வருவன காண்க. இவ்வாறே முருகனை வழிபடுவோர் ‘நீயே வரம்பிற்றிவ் வுலகம்’ என முருகனையும், கொற்றவையைப் பரவுவோர் கொற்றவையையும், முழுமுதற் கடவுளாக வழிபட்டமையின், வழிபாட்டு வகையில் வேறுபட்டுக் காய்தலும் பொருடற்றலும் செய்திலர்.

இந் நிலை இச் சங்க காலத்தை யடுத்து வந்த இளங்கோவடிகள் காலத்திலும் தன்மை திரியாதே இருந்தது. சிலப்பதிகாரத்தில் இந்திர வழிபாடும், திருமால் வழிபாடும், முருகவேள் வழிபாடும், கொற்றவை வழிபாடும் நிகழ்வது காண்கின்றோம். சைனத்துறவி.பால் அருகனை வழிபடுந் திறமும் நன்கு காணப்படுகிறது.

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமமல்லது நவிலாது என்நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்.

என்ற இளங்கோவடிகள், சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே, ‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே’ என்றும், ‘பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே, நாராயணாவென்னா நாவென்ன நாவே’ என்றும் பாடுவது போதிய சான்றாகும்.

இனி, இதனை யடுத்து வந்த மணிமேகலை யாசிரியர் காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம், வைதிகம், பெளத்தம், ஆருகதம், நியாயம், சாங்கியம், வைசேடிகம், யோகம், மீமாஞ்சை முதலிய பல சமயங்கள் இருந்தன என்பது வெளிப்படை. இவ்வாறு சமயங்கள் பல இருந்தன வெனினும், அவை தம்முள் போரிட்டுக் கொண்டு ஒருவர் ஒருவர் வழிபாட்டுரிமைகளைப் பறித்துக் கொண்டதாக வரலாறு கிடையாது.

இனி, இதனை அடுத்துவந்த திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் காலத்தில் பல சமயங்களில் நிலவின. சமயப் பூசல் காணப்படவில்லை. இவற்றிடையேயும் ஒற்றுமை காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டுளது. திருமூலர்,

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனுமாமே

ஆன சமயம் அது.இது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி;
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே

என்பது காண்க.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமண் சமய முன்னேற்றத்தால் சமயப் பூசல் உண்டாயிற்று. வழிபாட் டுரிமைக்குத் தடை பிறந்தது. நடு நாட்டில் பல்லவ வேந்தனும் பாண்டி வேந்தனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமயப் பூசலில் தலையிடுகின்றனர். சமயப் போர் சமண் சமயம் ஒன்றோடுதான் நடந்திருக்கிறது. ஏனைச் சமயங்கள் எல்லாம் இருந்த வண்ணமே இருந்திருக்கின்றன. சமண் சமயத்தைத் தாக்கிப் பேசும் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களும் திருமங்கையாழ்வார் முதலியோர்களும் ஏனைச் சமயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதனையடுத்து வந்த நூற்றாண்டுகளில் சமய வேறுபாடுகள் நாட்டில் நிலவின வாயினும், தமிழ் நாட்டு அரசியலாளர் இச் சமயங்கட்கு இடுக்கண் விளைக்க வில்லை. அவ்வச் சமயத்தவர்க்கும் வேண்டும் உரிமைகளை வழங்கியிருக்கிறார்கள். முதல் இராஜராஜன் போனார்த் திருமலையி லிருக்கும் சமண் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், லெய்டன் கிரான்டு எனப்படும் சாசனங்களால் பெளத்தர் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், அவன் பின் வந்த சோழர்களுள் மூன்றாம் இராஜராஜன்.

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க

என்றும், மூன்றாம் இராஜேந்திரன், “சமஸ்தஜகதேக வீர” என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் ‘ராஜ பரம மாகேஸ்வர ராஜ நாராயண சகல சமய ஸ்தாபக” என்றும், பாண்டி வேந்தருள் மாறவன்மன் சுந்தர பாண்டியன், ஒரு குடை நீழலிரு நிலங் குளிர,

மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க,
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் இயலுடுன் பரவ

என்றும், சடையவன்மன் சுந்தரபாண்டியன்,

ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோர் ஐவேள்வி யாறங்க முடன்சிறப்ப
அருந்தமிழும் ஆரியமும் அறுசமயத் தறநெறியும்
திருந்துகின்ற மனுநெறியும் திறம்பாது தழைத்தோங்க

என்றும் கூறுவதும் பல்வகைச் சமயங்களும் தத்தம் உரிமை குன்றாது நிலவியிருந்தன என்பதற்குச் சிறந்த சான்று பகர்கின்றன.

இனி, அச்சம் என இழிவாகப் பேசப்படுவது, செய்தற்குரிய அறங்களைச் செய்தற் குண்டாகும் அச்சமே. பழி பாவங்கட்கு அஞ்சும் அச்சம் அற மெனவும், ஏனைய அறங்களைச் செய்தற்குஅஞ்சும் அச்சம் குற்றமெனவும் அறநூல்கள் கூறுகின்றன. குற்ற மான அச்சம் இருத்தல் கூடாது என்பது அறவோர் துணிபு. இதனால் தான், ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்றார் திருவள்ளுவர். பாரதியாரும் அச்சம் தவிர் என்றார்.

உரிமை வாழ்வில் அவரவர் உரிமைக்குக் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் இருத்தலாகாது. பெரும்பான்மையோர் கருத்து மேலோங்கும் வகையில் சிறுபான்மையோர் உரிமை பறிக்கப்படுமென்னும் அச்சம் அச்சிறுபான்மையோர்க்கு உண்டாகக் கூடாது. இவ்வாறே வலியோர் மெலியோரை நலிவதாலும், செல்வர்கள் வறியோர்களை வருத்துவதாலும், வலிமிக்க நாட்டவர் அது குறைந்த நாட்டவரை அடர்ப்பதாலும், இடஞ் சிறிதென்று பிறர் மண்ணைக் கவரும் பெருநசையாலும் உரிமை வாழ்வுக்கு ஊறுண்டாகும். அதுபற்றி மக்கட்கு அச்ச முண்டாதல் ஒருதலை. வலியோராலும் செல்வர்களாலும் உண்டாகும் அச்சம், அரசியலின் செவ்விய நேர்மையால் நீங்கும். பண்டைத் தமிழ் வேந்தர், செல்வரென்றும் வலிய ரென்றும் கருதி ஒரு சிலர்க்குச் சலுகை மிகத் தருதலும், வறியரென்றும் மெலியவ ரென்றும் கருதி ஒரு சிலரைப் புறக்கணித்தலும் இலர். இதனால் உண்டாகும் பொருள் வேந்தர்க்கு இம்மை மறுமை இருமையும் கெடுக்கும் என்பது அவர் கருத்து. ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவதறிதியோ’ (கலி. 14) என்றும், அல்லற் பட்டாற்றாதழுதகண்ணிரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றும் எடுத்தோதுவது காண்க. இதனால், எளியவர்கள் தமக்கு வலியவரால் துன்ப முண்டாயின், அவர்முன் அச்ச மின்றிக் கண்ணறப் பேசும் காட்சியுடையராய் இருந்தனர். சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் தாமப் பல்கண்ணனா ரென்னும் சான்றோரும் வட்டாடினர். அப்போது மாவளத்தான், தன் செல்வச் செருக்கால் சினங்கொண்டு தான் ஆடிய வட்டினால் பல்கண்ணனாரை எறிந்து வருத்தினான். அவர், அவன் செல்வச் சோழ வேந்தன் தம்பி யென்றும் பாராது, சிறிதும் அச்சமின்றி,

‘நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்,
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐய முடையேன்

செ.14

ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர். மற்றிது
நீர்த்தோ நினக்கு?’

என வெறுப்பக் கூறினார். ஒருகால், குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திரு மாவளவன், மதுரைக் குமரனார் தன்பால் வறுமை யுற்றுத் தாழ்ந்து இரக்கின்றா ரெனக் கொண்டு அவரை இகழ்ந்தான். அவ்விகழ்ச்சி பொறாத குமரனார், அரச னெனக் கருதி யஞ்சுவது சிறிது மின்றி,

“மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படுஉ மோரே
சீரூர் மன்ன ராயினும் எம்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னோரே’

என்று கூறித், தமது உரிமையை நிலை நாட்டினார்.

மண்ணசை குறித்தும், வலி மிகுதி குறித்தும், பண்டை வேந்தர் பிற வேந்தரொடு போர்தொடுத்தனர். அவருள், பாண்டி வேந்தரும், சேர வேந்தரும் பெரும்பாலும் போருடற்ற வேண்டியிருந்தது, இடஞ் சிறித்ென் றெழுந்த மண்ணசை குறித்தே யாகும்.

‘வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்,
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது,
இடஞ் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா வுள்ளத்து ஓம்பா ஈகை,
கடந்தடு தானைச் சேர லாதன்’

என்பதனால், சேரனும்,

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வவ்வலின்,
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்’

என்பதனால் பாண்டியனும் இடச் சிறுமை காரணமாகப் போருடற்றினமை துணியப்படும். படவே, கொடியும் முரசும் கொற்ற வெண்குண்டயும், பிறர் கொளப் பொறாது போருடற்றும் இயல்பு சோழருக்கே உண்டென்பது பெறப்படும். இவ்வகையால் மூவேந்தர்க்கும் அடிக்கடி போருண் டாயினவெனக் கொள்ளலாம். போர்த் துறையில் ஊர்களைச் சூறையாடுதலும் எரிபரந்தெடுத்தலும் உண்டு. இவ்வகையால் உயிர்க்கேடும் பொருட் கேடும் மிகுதல் முறை. இதனால் மக்கட்கு அச்சம் பெரிதாம். அரசியலில் உரிமைபெற்ற சான்றோர் வேந்தர் கருத்துக்கு இயைய வேண்டுவனவற்றைச் சூழ்ந்துரைப்பாராயினும், போரால் நேரும் கேடுகளை அவர்கள் உணராமல் இருந்ததில்லை. போர் முடிவில் வெற்றி பெற்ற வேந்தர்க்கு அப்போரால் நிகழ்ந்த கேடுகளை ஓவியம்போற். காட்டிப் போர்மேற் செல்லும் அவர்கள் உள்ளத்தை மாற்ற முயன்றதும் உண்டு.

‘பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
உள்ளம் அழிய ஊர்க்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர்ப் பனிக்கும் பாழா யினவே,’

என்றும்,

‘அழல்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன் றோர்காலை
நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே’

என்றும் எடுத்தோதியிருப்பது அவரது உரிமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

போரில் படையேந்தி நின்று வெற்றிபெற விரும்பும் மறவர் உயிர் கொடுத்தற்கு அஞ்சுவது கிடையாது. அஞ்சாமை யல்லது துணை பிறிதின்றி நின்று விளக்கமுறும் விரனொருவன் மனைவியைக் கண்ட பெருந்தலைச் சாத்தனார், நின் கணவன் போர் வீரரை ஏறட்டு நின்று வருக என அழைத்தான்; பாம்புமிழந்த மணிகண்டும் அதனை நெருங்குதற்கு மக்கள் அஞ்சுவதும் போலப் பகை வீரர் அனைவரும் அஞ்சினர் என்பார்,

‘தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப்
மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.’

என்று கூறுகின்றனர். பெற்ற தாயொருத்தி போருக்குச் சென்ற ஏனை வீரரெல்லாரும் வந்தும் தன் மகன் நெடிது வாராமை கண்டு, நெஞ்சில் அச்சமோ அவலமோ கொள்ளாமல்.

‘எல்லா மனையுங் கல்லென் றனவே
வேந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே.”

(புறம் - 296)

என்று கூறுகின்றாள். போரில் அணி வகுப்புற்று நிற்கும் வீரன் ஒருவன் வேந்தன் தன்னை முந்தச் செலுத்தாமைக்கு வருந்தி,

‘எமக்கே கலங்கல் தருமே, தானே
தேறல் உண்ணும் மன்னே, நன்றும்
இன்னான் மன்ற வேந்தன் இனியே,
நோரர் ஆரெயில் முற்றி
வாய் மடித்து உரறிநீ முந்துஎன்னானே.”

என்கின்றான். இவ்வாறு பண்டை உரிமை வாழ்வில் திளைத்த தமிழ் மக்கள் அச்சம் இலராய் வாழ்ந்த செய்திக்குச் சான்றுகள் பலவுண்டு. இல்லையானால் நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளி தொழிலாண்ட உரவோர் எனும் பெயரை எய்த முடியுமா?

உரிமை வாழ்வுக்கு அடுத்த உறுப்பாவது வறுமையின்மை; வறுமை நிலை ஒரு நாட்டின் உரிமை வாழ்வைக் கெடுத்துச் செல்வமுள்ள நாட்டுக்கு அதனை விரைவில் அடிமையாக்கிவிடும் ‘வறியார் இருமை அறியார்’ என்பர். வறுமையுள்ள நாடு அறிவு ஒழுக்கங்களில் நலம்பெறாது; செல்வத்தைப் பெருக்கும் துறைகளான கைத்தொழில் வாணிபம் உழவு முதலிய செயல் வகைகளில் சீர் பெற முடியாது. நாட்டில் செல்வர் சிலரும் வறியார் பலருமாக இருத்தற்குக் காரணங்காண வந்த திருவள்ளுவர் தவமுடையார் சிலரும் அஃது இல்லார் பலருமாதல் காரணம் எனக்கருதி, சிலர் பலராகிய காரணம் நோற்றார் சிலர்பலர் நோலாதவர்’ என்றார். எனினும் அதனை அவ்வாறே சொல்லி நெகிழவிட இக்காலநிலை. ஒருப்படாது. இக்காலம் உழைப்பில்லாமை வறுமைக்குக் காரணம்; உழைப்பில்லாதவர் ஒருவரும் இருத்தலாகாது. உழைப்பவர் உழைத்தற்கு நாடு வேலை தர வேண்டும். அவ்வேலையை நாட்டு மக்கள் நடத்தும் அரசியல் நேரிய முறையில் கண்டு அமைத்து உழைப்பாளிகட்டு உதவ வேண்டும் என்பது இன்று நிலவும் கொள்கையாகும்.

வறியவர் முன்னைத் தவம் இல்லாராயினும், இவ்வுலகில் வாழ்தற்கு உரிமையுடையவர். அதற்கு வேண்டும் பொருளை அவர் பெறாவாறு தவமில்லாமை இடைநின்று ஊழ்வினை வடிவாய் நின்று தடுக்குமாயின், முன்னைத் தவமுடைமையால் செல்வம் பெற்றவரும் பெறுதற்குரிய வலியும் ஆற்றலுமுடைய வரும், வறியவர் வேண்டுவன நல்கி வாழ்வித்தல் அறமெனக் கருதினர். திருவள்ளுவர் முதலிய சான்றோர் இக்கருத்துக்கு ஆதரவு தந்தனர். ‘சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்’ என்பது திருக்குறள். அதுவே, ‘வறியார்க் கொன்று ஈவதே ஈகை’ என்றும், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை யுயிர்க்கு’ என்றும் அறவுரை வழங்கிற்று. செல்வமும் அதனைச் செய்தற்கு வேண்டும் வலியும் பெற்ற திருவாளர், இரப்போர்க் கீதல் சிறப்பென்றும், ஈயாமைக் கேதுவாகிய வறுமை இழிவென்றும் கருதி வஞ்சினங் கூறும் போது, ‘புரப்போர் புன்கண்கூர, இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே’ என்றும், மெல்லிய லரிவை நின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவா குகயான் செலவுறு தகவே’ (குறுந், 137) என்றும் கூறுவது காணலாம்.

இவ்வண்ணம் வறியாரது வறுமை தீர்த்தற்கண் பேரார்வங் கொண்டு தம் முயிரையே யளித்த வள்ளல்கள் வரலாறு சங்க இலக்கியங்களில் மலிந்து கிடக்கிறது. வேள்பாரி உயிரிழந்ததும் குமுணன் தலையிழக்க நேர்ந்ததும் வறுமைக்கடலை ஈகையாற் கடக்கக் கருதியதனாலேயாம்.

கொங்கு நாட்டில் ஈரோட்டுக் கருகில் உள்ள ஈஞ்சூருக்குப் பண்டை நாளில் ஈர்ந்துர் என்பது பெயர். அந்த ஊர்க்குத் தலைவன் ஒருவன் கோயமான் என்னும் பெயருடன் விளங்கினான். அவன் தன்பால் வருவார்க்கு வேண்டும் பொருளை நிரம்பத் தரத்தக்க செல்வ முடையனல்லன். ஆயினும், இல்லையெனச் சொல்லி உள்ளது மறைத் தோதி மறுக்கும் சிறுமையும் அவனிடம் கிடையாது. அதனால் அவனை நாடி இரவலர் சென்ற வண்ணம் இருந்தனர்; அவனும் இயன்ற அளவு அவர்கட்கு உதவி வந்தான். அதற்குச் செல்வம் ஏது? அவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன். அவன் வாழ்ந்த நாட்டுக்குரிய முடிவேந்தன் சேரமான் குட்டுவன் கோதை யென்பவன். அவ்வேந்தன் பொருட்டு இக்கோயமான் படையேந்திப் போர் பல செய்து அதனால் பொருள் பெற்றான். அவ்வாறு பெற்ற பொருளே அவன் கொடைக்கு ஆக்கமாயிற்று. போர்க்குச் செல்வதும் வென்றியொடு பொருள் பெறுவதும் அவன் செயல்களாயின. அன்றியும், இரவலர் வறுமை காண அவன் பொறான். வறுமையில்லாமை நாட்டிற்கு அழகு என்றும், வறுமை தீர்த்தற்குப் பயன்படாத செல்வரது செல்வம் நிலத்துக்குப் பொறை யென்றும் கோயமான் எண்ணியிருந்தான். இவனைக் கோனாட்டு எறிச்சிலுர் மாட்லன் மதுரைக் குமரனார் ஒரு கால் சென்று கண்டார். அவனது மனப் பண்பைத் தெளிந்தார். ஈர்ந்துார் கிழானான கோயமான்,

‘நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே...
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ, முதுவாய் இரவல!
யாம் தன்இரக்குங் காலைத் தான்எம்
உண்ணா மருங்கு காட்டித்தன்னூர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்
திருந்திய நெடுவேல் வடித்திசின் எனவே.’

என்று பாடியுள்ளார். இதன் கண், ‘வறியார் வறுமை கண்டதும், கொல்லனையழைத்து, பார் இவர் வயிற்றை எடு அந்த வேலை; வடி அதன் வாயை கொடு அதைக் கையில்; செல்வேன்; செல்வரை வெல்வேன்; பொருள் மிகக் கொள்வேன்; இவர் வறுமையைக் கொல்வேன்’ என்பான், ‘எம் உண்ணாமருங்கு காட்டித் தன்னுரர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே என்பது கருதத்தக்கது.

இத்தகைய மனப்பான்மை வறுமை மிக்க வழித் தீநெறியில் மக்களைச் செலுத்தி உரிமை வாழ்வுக்கு ஊறுசெய்யும். ஆதலால் உரிமை வாழ்வு வறுமை யில்லாமைக்குரிய வழி பலவும் ஆக்கிக் கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்குவது இலக்கியங்கட்கு ஏற்ற பணியாகும்.

இனி, இறுதியாக ஒப்புரவாண்மையைக் காண்போம். உலகில் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் பெருஞ்செயல் இந்த ஒப்புரவேயாகும். ஆதலால்தான் திருவள்ளுவர், ஒப்புரவைக் காட்டிலும் சிறந்த செயல் விண்ணுலகினும் மண்ணுலகினும் பெறலரிது என்றார். ஒருவர்க்குத் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருளெல்லாவற்றையும் தாமே படைத்துக் கொள்வது இயலாது. தம்மிடத்து இல்லாதவை பிறரிடத்திருக்கும்; பிறரிடத்தில்லாதன தம்பால் இருக்கலாம். இருவரும் தம்பால் உள்ளவற்றைப் பகுத்தளித்து இல்லாதவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இச்செயலை வளம்படுத்துவது. ஒப்புரவாகும். ஒரு தனிக் குடும்பத்துக்கு இவ்வொப்புரவு இன்றியமையாதவாறு போல ஒரு நாட்டுக்கும் இது வேண்டப்படுவதாகும். இவ்வொப்புரவு வாணிகத்தின் பெயரால் நிலவுவதாகும்.

பண்டைநாளில் குறிஞ்சி நிலத்துப் பொருள் மருத நிலத்தவர்க்கும், நெய்தல் நிலத்துப் பொருள் முல்லை நிலத்தவர்க்கும் மாறிமாறி இயங்கியது ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டேயாகும். இவ்வாறு மாறுவது அவ்வந்நிலத்து மக்கள் தத்தம் தேவைக்குரிய பொருளைப் பெறுதற்கு வாயிலாதலால் திணை மயக்கம் என்ற பெயரால் தொல்காப்பிய முதலிய நூல்கள் அமைதி கூறின. பிற்காலத்துப் புலவர் தாம் பாடிய நூல்களில் திணை மயக்கம் கூறுவதைக் கடமையாகக் கொண்டனர்.

இத்திணை மயக்கத்தால் ஒரு நாட்டவர் பிற நாடுகட்குக் கலத்தினும் காலினும் சென்று மிக்கவற்றைத் தந்து இல்லாதவற்றைப் பெற்றுச் சிறந்தனர். பண்டைத் தமிழர் இதன் இன்றியாமையை யுணர்ந்தே பன்னூறாண்டுகட்கு முன்பே மேலை நாட்டவரோடும் கீழை நாட்டவரோடும் பண்டமாற்றிப் பெருஞ் செல்வம் தேடிக் கொண்டனர் என்பதை வரலாறு கூறுகிறது. இவ்வகையால் பிறநாட்டுப் பண்டங்களும் பிற நாட்டு மக்களும் காவிரிப்பூம் பட்டினத்தில் நிறைந்திருந்த காட்சியை, சிலப்பதிகாரம், எடுத்தோதுகின்றது. முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கந் தவா வளத்ததாகி, அரும்பொருள் தரூஉம் விருந்தின்தேயம், ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம், கலத்தினும் காலினும் தருவன ரீட்ட” நிறைந்திருக்கும் காட்சி இதனால் நன்கு புலனாதலைக் காணலாம்.

பட்டினப்பாலை யென்னும் நூல்,

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்.’

ஆகிய பொருள்கள் நிறைந்திருந்தன என்றும், இவ்வழியால், ‘மொழி பல பெருகிய பழிதீர் தேயத்து புலம் பெயர் மாக்கள் கலந்தினிது’ உறைந்தனரென்றும் கூறுகின்றது.

இங்ஙனம் ஒப்புரவு வாயிலாக வாணிகமும் வேற்று நாட்டவர் கூட்டுறவும் பெருக, நாடு செல்வமும் நாகரீகமும் சிறந்து மேன்மையெய்திற்று. இன்டக்காலத்தே அலைகடல் நடுவுள் பல கலம் செலுத்தி, தொடுகடல் முதலிய நாடுகளோடும் இராசேந்திரன் முதலிய சோழர்கட்கும், கலிங்கம் ஈழம் கடாரம் முதலிய நாடுகளுடன் பாண்டியர்கட்கும் தொடர்புண்டானது இந்த ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டெழுந்த சிறப்பேயாகும்.

இதுகாறும் கூறியவாற்றால், குடி தழுவிய முடியாட்சி நிலவிய பண்டை நாளில், உரிமை வாழ்வுக் குறுப்பாகிய பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவாண்மையாகிய ஐந்தும் சிறப்புற்றிருந்தமை இனிது விளக்கமாகும். இன்று நாம் எய்தியிருக்கும் உரிமை வாழ்வு முடியாட்சியின்றிக் குடியாட்சியில் நிலவும் உரிமைவாழ்வாகும். இவ்வாட்சியில் நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமையுண்டு. நாட்டில் உண்டாகும் நலந்தீங்குகட்கு நாட்டு மக்களே பொறுப்புடையராகின்றனர். அப்பொறுப் புணர்ச்சியை மக்கட்கு எழுப்பி நல் வாழ்வு வாழ்விக்கும் பண்பு இலக்கியங்களில் இடம் பெற வேண்டும்.

பேச்சுரிமை, அச்சமின்மை என்ற இரண்டையும் நம் தமிழிலக்கியங்கள் நன்கு வற்புறுத்துவதைச்சங்க இலக்கிய முதல் எல்லா இலக்கியங்களும் எடுத்துணர்த்துகின்றன. சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலிய இடைக் கால நூல்கள் அரசியற் பகுதிகளைக் கூறுமிடத்து விரியக் கூறியுள்ளன. ஒப்புரவாண்மையிலும் இடைக்கால நூல்கள் சிறிது கருத்துச் செலுத்தியிருக்கின்றன. கட்டியங்காரனோடு நட்புற்றான் போல ஒழுகலுற்ற விதைய நாட்டு வேந்தனான கோவிந்தன், நட்புக் கறிகுறியாக,

கட்டியங் காரனோடு காவலன் ஒருவனானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவகூறின்,
ஒட்டலன் இறைவன் சொன்னி நாதுமவல்ல என்னக்
கொட்டினான் தடங்கண் வள்வார்க் குளிறிடி முரசமன்றே

என்பது அதனைக் காட்டுகிறது. இவ்வொப்புரவுவகை மிகவும் பெருகிச் சாதி சமய சமுதாய வேறுபாடுகளையும் மக்களிடையே நிற வேற்றுமை முதலிய தீமைகளையும் போக்குதற்குத் துணை புரியுமாறு இலக்கியங்கள் பணிபுரிய வேண்டும்.

நாட்டில் வறுமையைப் போக்குதற்குரிய நெறியில் கருத்தைச் செலவு செய்த இலக்கியங்கள் இல்லையென்றே கூறலாம். செல்வ வாழ்வின் சிறப்புக்களையும் சீர் கேடுகளையும் எடுத்தோதிய இலக்கியங்கள் உண்டு. “எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே, இல்லாருமில்லை யுடையார்களு மில்லை மாதோ” என்றான் கம்பன். ஆனால், எல்லாரும் எல்லாச்செல்வமும் எய்தற்குரிய நெறிமுறைகளை வகுத்தும் விரித்தும் கூறவில்லை. ஓரளவு நாட்டில் நிலவியிருந்த ஓவியம், இசை கைத்தொழில் வாணிபம் காட்டினவே யன்றி, அவற்றை யமைக்கும் நூல் வகைகள், செயல்முறைகள் முதலியவற்றை யறிதற்குத் துணை செய்யாவாயின. இக்குறை முற்காலத்து இலக்கியங்களில் சிறிதும் பிற்காலத் திலக்கியங்களில் பெரிதுமாகக் காணப்படுகிறது. இனிவரும் இலக்கியங்கள் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’ எய்துதற்கு வேண்டும் கருத்துக்களை விரிவாக எடுத்து வழங்க வேண்டும்,

வழிபாட்டுரிமைக் கேதுவாகிய சமய வுரிமை குறித்துத் தமிழிலக்கியங்கள் பெரும் பணி புரிந்துள்ளன. ஊர்தோறும் பெருங் கோயில்களும் அக்கோயில்கட்குப் பெரும் பொருளும் உண்டானதற்குச் சமய இலக்கியங்களின் பணியே காரணமென்பது வெளிப்படை. கோயில்களைப் பெரும் பொருள் நிலையங்களாகவும் கலை நிலையங்களாகவும் செய்தது சமய இலக்கியமே. அரசரது அரசியற் பயன் கோயில்கட்குச் செய்யும் திருப்பணியிலே ஒன்றி நின்றது. சைவத் திருமுறைகளும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடவுட் கொள்கையை நிலை நாட்டிக் கடவுள் வழிபாட்டில் மக்கள் கருத்து மீதுர்ந்து செல்லுமாறு செய்தன. சமயச் சார்பாயெழுந்த புராணங்கள் மக்களது வழிபாட்டுரிமைக்குத் தீங்கு செய்தன. கோயில்களில் சாதி வேற்றுமை மொழி வேற்றுமைகளைப் புகுத்தின. ஆண்டு தோறும் நம் நாட்டுக் கோயில்கட்கு இரண்டு கோடி ரூபாய் வருமானமாகும். மக்கள் தரும் கொடையும் பிறவும் சேர்ந்து நான்கு கோடி ரூபாய் செலவாகிறது, இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் ஒரு சமுதாயத்தின் நலத்துக்குப் பயன்படுகிறது. எஞ்சிய தொகை வெளிநாட்டுப் பொருட்கும் பிறருக்கும் செலவாகிறது. கோயிலில் உள்ள ஆண்டவனை வழிபடுதற்கு எல்லார்க்கும் உரிமையுண்டு; எல்லாரும் ஆண்டவள் அருளுக்கு உரியவர் என வழிபாட்டுரிமையை வற்புறுத்தி, வேறுபாடில்லாத வழி பாட்டை உண்டு பண்ணுதற்கு இலக்கியங்கள் துணை செய்ய வில்லை. அரசியலாளர் முற் போந்து சட்டவகையில் பாதுகாப்பளித்த பின்பே வழிபாட்டுரிமை எல்லார்க்கும் வாய்ப்பதாயிற்றென்பது யாவரும் அறிந்தது. திருப்பாணாழ்வார் வரலாறும் திருநீலகண்ட யாழ்ப்பானர் வரலாறும் வழிபாட்டுரிமைக்கு வழிகாட்டியா யிருந்தும், இலக்கியங்கள் இவ்வுரிமையை உணர்ந்து நன்கு வற்புறுத்தா தொழிந்தது மறைக்க முடியாத உண்மையாகும்.

ஆகவே, இன்று நாம் எய்தி இன்புறும் உரிமை வாழ்வில் எழும் இலக்கியங்கள், இதுகாறும் கூறிப் போந்த பேச்சுரிமை, வழிபாட் டுரிமை, வறுமை யின்மை, அச்சமின்மை, ஒப்புரவாண்மை என்ற பொது வறங்களை வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்தும் பெரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணியைச் செம்மையாகவும வெற்றியுண்டாக்கு முறையிலும் செய்வதற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்ளத்தில் வேரூன்றியிருக்க வேண்டிய கொள்கையொன்று உளது. அஃதாவது தங்கள் மொழி நிலவும் நாட்டின்பால் அயரா அன்புடைமையாகும். அந்த அன்பு அவர்கள் நெஞ்சில் எழும் ஒவ்வொரு நினைவிலும், வாயில் எழும் ஒவ்வொரு சொல்லிலும், எழுதும் ஒவ்வொ ரெழுத்திலும் விளங்குதல் வேண்டும். கம்பன் கருத்து முற்றும், கோசல நாட்டையும் இலங்கை நாட்டையும் கவ்விக்கொண்டு கிடந்தது; கச்சியப்பர் கருத்து வேறுலகத்தில் உலாவிற்று. திருத்தக்க தேவர் கருத்து ஏமாங்கத நாட்டிலும் அதனைச் சூழ்ந்த நாடுகளிலும் திரிந்தது. கொங்கு வேளிர் கருத்து, தமிழகத்தைத் தொடவே இல்லை. இடைக்காலத் தெழுந்த திருத்தொண்டர் புராணம் தமிழ் நாட்டையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்த தெனினும், கயிலாயத்தையும் பிறவற்றையும் அது கைவிடவில்லை. சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாகிய இரண்டுமே தமிழகத்தை விடாது நின்றன. அதனால், தமிழகத்தின் பழங்கால நிலையினை ஓரளவிலேனும் நாம் உணர்ந்து கோடற்கு உதவியாயின. ஏனைய யாவும் யாம் மேலே கூறிய தாய்மொழி நிலவும் தாய் நாட்டன்பு விளங்கித் தோன்றும் வீறு நிறைந்த நினைவும் சொல்லும் எழுத்தும் உடைய வல்ல வாயின. இதன் விளைவு தமிழகம் உரிமை யிழந்து அடிமை யுற்று வருந்தும் நிலைமையைப் பயந்தது.

தாய் நாட்டன்பின் இன்றியமையா இயல்பினை, மேலை நாட்டவர் நன்குணர்ந் திருந்தமையால் ‘உரிமை வாழ்வே’ உயிர்வாகக் கருதுகின்றார்கள். எட்மாண்டு பர்க் (Edmund Burke) என்பவர், மக்கட்குத் தம் பெற்றோர்பால் உண்டாகும் அன்புக்கடுத்த நிலையில் உள்ளது அவரது தாய் நாட்டின்பால் உண்டாகும் அன்பே யாகும் என்றார். மாதா பிதா குரு தெய்வம் என்பது திருந்தி, மாதா பிதா நாடு குரு தெய்வம் என விளங்குதல் வேண்டும். இந்த அன்பு நம்மவரிடத்தே நன்கு வேரூன்றும் பொருட்டு இலக்கியம் செய்யக் கூடிய பணி இது வென்பாராய், நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரவர்கள் தாம் எழுதிய Essays in Constitution Making என்ற நூலில் கூறியதனை உங்கட்குக் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

Our literature and art must take up the land for the subject of their treatment. Not the laudation of this or that figure or incident of history or mythology - for history or mythology may divide and antogonize - but the praise of the land of India must fire the artistic ambition of the poets and Painters of modern India. When we remember what poets like Gray and Thomson and Wordsworth and Burns have done to make their Countries dear to their people, we have a right to look to our poets to do smilar work for our Country. Landscape painting did much to spread the love of the land among the peoples of Europe. What Corot did in France and Gainsborough in England to make the scenery of their Country a delightful memory, Indian painters are now expected to do for the Indian scene.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/015-020&oldid=1625138" இலிருந்து மீள்விக்கப்பட்டது