உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

நற்றிணை தெளிவுரை


நம்புமாறு ஏமமற்றியதாக அமைந்த நயமுடையது 55ஆம் செய்யுள். தலைவன்பாற் போய நெஞ்சம் மீண்டுவந்தவிடத்து, அதற்குள் தலைவியின் உடலெழில் வேறுபட்டமையினால் அவளை வேற்றவள் எனக் கருதி அகன்று போயினதாகப் புனைந்துரைக்கும் திறமும் (56) பெரிதும் இன்புறுதற்கு உரியதாகும். புறநானூற்று 182 ஆம் செய்யுளைச் செய்தவரும் இவரே யாவர்.

பேராலவாயர் 51

மதுரைப் பேராலவாயர் எனவும் கூறப்படுவார். அகநானூற்றுள் 87, 296 செய்யுட்களையும் புறநானூற்றுள் 247, 262ஆம் செய்யுட்களையும், இந் நற்றிணையுள் 361ஆம் செய்யுளையும் செய்தவர் இவரே. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப்பாய்வாள் நிலைகண்டு பாடியவராதலின் அக்காலத்தவராகலாம். அன்னை வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்வதுகண்ட தலைவி தோழியிடத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

பேரிசாத்தனார் 25, 37, 67, 104, 199

வட வண்ணக்கண் பேரிசாத்தன், வடமவண்ணக்கண் பேரிசாத்தன் எனக் குறிக்கப்பெறுபவரும் இவரே. இவர் நற்றிணையுள் எட்டுச் செய்யுட்களையும், குறுந்தொகையுள் நான்கு செய்யுட்களையும், அகத்தில் ஐந்து செய்யுட்களையும், புறத்தில் இரண்டு செய்யுட்களையும், செய்துள்ளனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய பலரையும் பாடியவர். 'நீலங் கண்ணென மலர்ந்த சுனை' என உவமை கூறியுள்ளவர் இவர் (அகம். 38). 'நிலவும் இருளும்போலப் புலவுத்திரைக் கடலும் கானலும் தோன்றும்—(குறு. 81) எனவும், 'மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்து ஓருயிர் மாக்கள்'—(அகம் 305) எனவும், 'கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலை — (குறு. 278) எனவும், 'நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்' (நற். 125) எனவும் இனிதாகச் செய்கிகளைக் கூறும் திறனுடையவர் இவர். மலையமானின் பேராற்றலை இவரது புறப்பாட்டால் நன்கு காணலாம் (125). விரிவாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/423&oldid=1731080" இலிருந்து மீள்விக்கப்பட்டது