உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

359


கொல்லிக்கு இறைவனை 'வல்விள் ஒரி' எனவும் சொல்வர். பறவை – அறுகாற் பறவை; வண்டு. பாவை – கொல்லிப் பாவை. கொலை சூழ்தல் –கொல்லுவதற்குச் சதி புரிதல்.

விளக்கம் : 'கொல்லிப் பாவை' என்பது, தேவத்தச்சனால் சிறப்பாக நிறுமிக்கப் பெற்றது; அம்மலையிடத்து வாழ்வோரை வருத்துதற்கு முயலும் அவுணர் முதலியோரைத் தன் நகையாலும் அழகாலும் மயக்கிக் கொல்லக் கூடியது அது என்பர். நகைத்துக் கொல்லும் பாவை அதுவென்பதைப் பிற்காலத்துச் சான்றோரும், 'திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்க' என்று கூறுவர் (சித்திர மடல்). இதனாற் குறுநகை தோற்றுவித்துத் தலைவியும் தலைவனைக் கொலை செய்யச் சூழ்ந்தனள் என்று தலைவன் உரைக்கின்றதாகக் கொள்க.

இறைச்சிகள் : (1) 'பாணரின் பரிசிற்பொருளான குதிரைகளின் குளம்படித் தடங்களாற் செப்பமான சிறுநெறியில், இரவலர் மெலியாது ஏறிச் செல்வதைப் போல, நின்னால் இசைவித்துக் கூட்டப் பெறும் தலைவியுடன் யானும் உள்ளம் மெலியாது நெடிது கூடி இன்புறுவேன்' என்பதாம்.

(2) 'காந்தளின் தேனை ஈட்டிக் கொண்டுபோய்க் கொல்லிப் பாவையிருக்கும் வரையிடத்தே இறாலிழைத்திருக்கும் வண்டுகளைப்போல, அழகையெல்லாம் ஒருங்கே கூட்டிச்சமைத்த அவளது நலமும் எனக்கு எட்டாதான ஓர் இடத்தே இருக்கின்றது' என்பதாம்; தலைவியின் அழகுச் செவ்வியும் குடியுயர்வும் இதனால் நன்கு விளங்கும்.

மேற்கோள் : களவியலுள், 'பரிவுற்று மெலியினும். தலைவனுக்கு கூற்று நிகழுதற்கு' இச்செய்யுளைக் காட்டி. 'இது பகற்குறியிற் பரிவுற்றது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். களவு 12 ஆம் சூத்திர உரை).

186. அவர் சென்ற வழி!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனின் பிரிவினாலே தலைவி நலிவாளெனத் தோழி நினைத்துத் தானும் சோர்வடைகின்றனள். அவளுக்குத் தலைவன் மீண்டும் வருவதற்கான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/360&oldid=1706395" இலிருந்து மீள்விக்கப்பட்டது