உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பியன் மொழிநூல்/உரிச்சொல்

விக்கிமூலம் இலிருந்து

உரிச்சொல்

உரிச்சொல் முன்னர்க் கூறப்பட்டது.

உடம் — (உட) — (உடி)— உரி. உரிமை = உடமை. உடனுள்ளது உடமை. உடல்—உடன். ஒ.நோ. தொலி —தோல் —தோறு— தோடு, தொலி — தொறு = கூட. தொறு+ உம்=தொரும். தோட=கூட உரி= தோல். உடு, உடீஅ என்பவற்றை நோக்குக

பல்கலைக்கழக் அகராதியின் பல்வகைக் குறைகள்

ஒரு வழங்கு மொழியின் சொற்கள் இயல்பாக நூல் வழக்கில் ஒரு தொகுதியும் உலக வழக்கில் ஒரு தொகுதியுமாக இரு கூற்றாகவேயிருக்கும். வடமொழி போன்ற வழக்கற்ற மொழியாயின், எல்லாச் சொற்களையும் நூல்வழக்கினின்றே அறிய முடியும். தமிழ் போன்ற வழங்கு மொழியாயின், எல்லாச் சொற்களையும் தொகுக்க வேண்டுவார் இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில், இதுபோது தமிழில் தலைமை தாங்குபவர் பெரும்பாலும் பார்ப்பனர். அவர் நாட்டுப்புறத்தாரோடும் தாழ்த்தப்பட்டாரோடும் அளவளாவு நிலையினரல்லர். தமிழ் வழக்கு இதுபோது பார்ப்பனத்தொடர்பு மிக மிக வடசொல் மிகுந்தும், அது குறையக்குறைய வடசொற் குறைந்தும் உள்ளது.

பல்கலைக்கழக அகராதி முடியும்வரை, சொல்லாராய்ச்சியுள்ளவர் ஒருவராவது அதன் தொகுப்புக்குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை.

மேலும், அத்தொகுப்புக்குழுவினர் பெரும்பாலும் மரயு ஊணினர். அதனால் ஊனுணவுபற்றிய பல சொற்கள் அவ்வகராதியிற் காணப்படவில்லை.

அவர் உலக வழக்கையாராயாதது மட்டுமன்று, நூல் வழக்கையும் சரியாய் ஆராய்ந்திலர். முதலாவது பல அகராதிகளினின்றே சொற்களைத் தொகுத்ததாகத் தெரிகின்றது. ஏனென்றால், கருமுக மந்தி, செம்பின் ஏற்றை, கருங்களமர், வாய்ச்சியாடல் முதலிய பல சொற்கள் அகராதியிற் காணப்படவில்லை.

அகராதித்தொகுப்பு 27 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றது; 4,10,000 உருபாக்களும் செலவாகியிருக்கின்றன. ஆகையால், காலம் போதாதென்றொரு காரணங்கூறி, அகராதியின் குறையைமறைக்க முடியாது. ஆராய்ச்சியாளனாயின், இதுவரை சென்றுள்ள செலவில் 1/8 பங்கிற்கு, இதினும் சிறந்த அகராதி ஒருவனே தொகுத்திருக்கக்கூடும் என்று கூறுவது மிகையாகாது.

இப்போது அனுபந்தம் முதற்பாகம் என்றொரு பகுதி வெளிவந்துளது. அதிலும் சில சொற்களைக் காணோம்.

பல்கலைக்கழக அகராதியின் குறைகள் பின்வருமாறு பல திறப்படும்.

(1) எல்லாச் சொற்களுமில்லாமை.
(3) உள்ள சொற்கட்கு எல்லாப்பொருளும் கூறப்படாமை.
(3) காட்டக்கூடிய சொற்கட்கெல்லாம் வேர் காட்டப்படாமை.

(4) காட்டிய வேர்ச்சொல் தவறாயிருத்தல்.

(5) பல தென்சொற்களை வடசொற்களாகவும் பிறசொற்களாகவும் காட்டியிருத்தல்.

தமிழ் நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பல தமிழ்க் கலைகளும் நூல்களும் அழிந்து போனதினாலும், பண்டைத் தமிழின் பல சொற்கள் மறைந்து போனமையால், இதுபோது எல்லாத் தமிழ்ச் சொற்கட்கும் வேர் காட்ட முடியாததுண்மையே. ஆயினும், சொல்லியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பின், பல சொற்கட்கு வேர் காட்டல் கூடும். இப்போதே இஃதாயின், தொல்காப்பியர் காலத்தில் எத்துணை எளிதாயிருந்திருக்கும்? ஆயினும், வேர் காண்டல் எல்லார்க்கும் எளிதன்று. இதனாலேயே,

“மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (உச். 98)

என்றார் தொல்காப்பியர்.

'விழிப்ப' என்பது விழித்தமட்டில் அல்லது பார்த்தமட்டில் என்று பொருள்படும். 'விழிப்பத் தோன்றா' என்பதற்கு ”beyond ascertainment” என்று, பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியராகிய உயர் திருவையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியிருப்பது தவறாகும்.

பல்கலைக்கழக அகராதியில், தென்சொற்கள் வடசொற்களாய்க் காட்டப்பட்டிருப்பதற்கு, இரு காட்டுத் தருகின்றேன்,

(i) மயில்<மயூர (வ.)

மை = கருப்பு. மயில் = கரியது. பச்சையானது. கருமை நீலம் பச்சையென்பன இருவகை வழக்கிலும் ஒன்றாகக் கூறப்படுவதுண்டு, பச்சை மயில் நீலக்கலாபம் என்னும் வழக்குகளை நோக்குக, காளி, நீலி என்பர் கொற்றவையின் பெயர்கள் - திருமாலின் நிறம் கருமை நீலம் பசுமை என முத்திறத்திற் கூறப்படும். நீலச்சேலைக் கருப்புச் சேலை யென்பது உலக வழக்கு சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் தென்னாட்டிற்குச் சிறப்பாயுரிய குறிஞ்சிப் பறவையாகும். மயில் என்னும் தமிழ்ச் சொல்லே மயூர என்று வடசொல்லில் வழங்குகின்றதென்க,

(ii) வடவை வடவா (வ.)

வடதுருவத்தில் சில சமையங்களில் தோன்றும் ஒளி வடவை யெனப்பட்டது. வடக்கிலிருந்து வரும் காற்றும் வடவை வடந்தை எனப்படும், வடவை ஒளி அல்லது தீ ஆங்கிலத்தில் Aurora Borealis என்றழைக்கப்படும்.

Aurora Borealis, the northern aurora or light; L. aurora, light; borealis, northerg - boreas, the north wind.

கிரேக்கர் வடகோடியில் வாழ்ந்த ஒரு வகுப்பாரை Hyperboreans என்றழைத்தனரென்றும், அப்பெயர் மலைக்கப்பாலர் என்று பொருள்படுமென்றும், Boreas என்பது வடகாற்றின் பெயரென்றும், அது முதலாவது மலைக்காற்று என்றே பொருள் பட்டதென்றும், Boros என்பதின் பொருள் மலையென்றும், மாக்ஸ் முல்லர் எழுதிய 'மொழி நூற் கட்டுரைகள்' என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில், 8 ஆம் 9 ஆம் பக்க அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

இதனால் boros அல்லது boress என்பது பொறை என்னும் தமிழ்ச்சொல்லே யென்றும், Hyperboacan என்பது உப்பர்ப் பொறையன் என்றலமயும் தமிழ்த்தொடர் என்றும் தெரிகின்றது.

வடவை வடமுகத்தில் தோன்றுவதால் வடவை முகம் என்றுங் கூறப்படும். ஒ. நோ. துறைமுகம்,

ஆல்ப்ரெட் ரசல் உவாலேஸ் என்பவர், மலேயத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த முக்க (Muka) த் தீவில், தாம் வடவைத் தீயைக் கண்டதாகக் கூறுவதால்[1] தமிழர் வடவைத்தீயைக் கண்டிருந்தார் என்பதில் எட்டுணையம் ஐயத்திற்கிடமின்று.

வடவை என்னும் தமிழ்ச்சொல்லைப் படபா என்றும். வடவைமுகம் என்பதைப் படபா முகம் என்றும் வடமொழியில் திரித்துக் கொண்டு, பெட்டைக் குதிரையின் வடிவானது என்று அதற்குப் பழைமையர் கூறிய பொருளை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கூறினால், மேனாட்டுக்கலை இந்நாவலந் தேயத்திற்கு வந்து என்னதான் பயன்?

ஒரு மொழியின் பெருமையை உணர்த்தும் நூல்களில் அகராதியும் ஒன்றாகும். தமிழகராதி இங்கனமிருப்பின், அம் மொழியின் பெருமை எங்ஙனம் புலனாகும்? அசுராதிக்கு வராது எத்துணையோ சொற்கள் நாட்டுப்புறங்களில் வழங்குகின்றன.

தமிழே திராவிடத்தாய்

தமிழே திராவிடத்தாய் என்று, இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில், வெள்ளிடைமலையாய் விளக்கப்படும்.

தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் ('Italian of the East') என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டுமன்று, இவ்வுலகிற்கே இலத்தீன் (Latin of the Universe) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழிகட்கெல்வம் பொதுச்செல்வம். ஆயினும், ஆரியத்தால் மயங்கிய பிற திராவிட மொழிகள் தமிழ்த் தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டன. ஆனால், தென் சொல் கலவாமல் ஏனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலாயினும் ஒரு விரிவான சொற்றொடரும் அமைக்க முடியாது.


  1. The Malay Archipelago, p. 402.