உள்ளடக்கத்துக்குச் செல்

தேன்பாகு/அத்திரி மாக்கு

விக்கிமூலம் இலிருந்து



அசட்டு அனந்தன் தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு அன்று பண்ணியிருந்த கொழுக்கட்டையைத் தந்தார்கள். அதைச் சுவைத்து உண்டான். தன் மனைவியைக் கொழுக்கட்டை பண்ணச் சொல்லிச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்தான், அங்கிருந்து புறப்பட்டவன் கொழுக்கட்டையையே நினைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.

போகும் வழியில் ஒருவன் ஓரிடத்தைத் தாண்டும்போது, "அத்திரிமாக்கு" என்று சொன்னபடி தாண்டினான். அதைக் கேட்ட அனந்தனுக்குக் கொழுக்கட்டை என்றது மறந்து போய் 'அத்திரிமாக்கு' என்றதைப் பிடித்துக் கொண்டான் "அத்திரிமாக்கு, அத்திரிமாக்கு" என்று ஜபித்துக் கொண்டே வீட்டிற்குப் போனான்.

போனவன், தன் மனைவியைப் பார்த்து, "இன்றைக்கு அத்திரிமாக்குப் பண்ணிக்கொடு" என்று கேட்டான். “அவர்கள் வீட்டில் பண்ணிப் போட்டார்கள். எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா? நீயும் அத்திரிமாக்குப் பண்ணு" என்றான்.

“உங்களுக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. அத்திரிமாக்காவது! கத்திரி மாக்காவது: அப்படி ஒன்றும் கிடையாது" என்றாள் அவள்.

அனந்தனுக்குக் கோபம் வந்துவிட்டது. "நான் சொல்கிறேன், நீ பண்ண முடியாது என்கிறாயே!" என்றுசொல்லி அவளை நையப்புடைத் தான். அவள் கைகளிலும், தோள்களிலும் வீக்கம் உண்டாகிவிட்டது.

அப்போது பக்கத்து வீட்டு அம்மாள் அங்கே வந்தாள். "என்னடி இது? உன் உடம்பில் கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கிறது?" என்று கேட்டாள். அப்போது அனந்தன் காதில் அது விழுந்தது. கொழுக்கட்டை என்றதைக் கேட்ட

தும் அவனுக்குத் தான் உண்டது கொழுக்கட்டை என்று நினைவு வந்தது. உடனே, "ஆமாண்டி, அந்தக் கொழுக்கட்டையைத்தான் சொல்ல வங்தேன். அது மறந்து போய், யாரோ ஒருவன் வழியில் சொன்ன அ த் தி ரி ம க் கு என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டேன். தெரியாமல் அடித்துவிட்டேன்" என்று அவளைத் தடவிக்கொடுத்தான். அன்று அவனுக்குக் கொழுக்கட்டை கிடைத்தது. ஆனால் அவள் உடலில் ஏற்பட்ட கொழுக்கட்டை போன்ற வீக்கம் ஆற சில நாள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்பாகு/அத்திரி_மாக்கு&oldid=1637324" இலிருந்து மீள்விக்கப்பட்டது