உள்ளடக்கத்துக்குச் செல்

தேன்பாகு/கத்திரிக்காய் ஜூரம்

விக்கிமூலம் இலிருந்து

மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறைய கத்தரிச் செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக் கவனித்துப் பார்த்துப் பராமரித்து வந்தான். செடிகளெல்லாம் தளதளவென்று வளர்ந்து பூத்துக் காய்க்கத் தொடங்கின. நல்ல மண்ணாக இருந்தமையாலும், மட்டியப்பனுடைய கவனிப்பினாலும் ஒவ்வொரு செடியும் குலுங்கக் குலுங்கக் காய்த்தது.

மட்டியப்பன் பிறருக்கு மனமார ஒரு பொருளைத் தரமாட்டான். அந்தக் கத்தரிக் காயைப் பறித்து, வெளியூர்ச் சங்தைக்குப் போய் விற்றுக் காசு சம்பாதித்தான். தன்னுடைய வீட்டிற்குக் கூட அதை உபயோகிக்கவில்லை.

அந்த ஊர் வைத்தியர் எல்லாருக்கும் வேண்டியவர். அவர் பேசும் வார்த்தைகளிலேயே பாதி வியாதி தீர்ந்துவிடும். வைத்தியத்திலும் அவர் திறமை பெற்றவர். நல்ல அநுபவமும், புத்தி கூர்மையும் உடையவர். அவருடைய மகள் கர்ப்பமாக இருந்தமையால் பிரசவத்திற்காகப் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவள் வாய்க்கு வேண்டிய உணவுகளையும் தின்பண்டங்களையும் வைத்தியர் மனைவி செய்து கொடுத்தாள். ஒருநாள் அவள் கத்தரிக்காய் வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அவளுடைய தாய் வைத்தியரிடம் தெரிவித்தாள்.

"நம்ம ஊர் மட்டியப்பன் வீட்டில் கத்திரிச் செடி பயிர் பண்ணியிருக்கிறார்களாம். நன்றாகக் காய்க்கிறதாம். கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள்" என்று அவள் சொன்னாள்.

வைத்தியர் மட்டியப்பனிடம் போய்க் கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் வைத்தியர் கேட்பதைக் கொடுக்க மறுக்க மாட்டார்கள். மட்டியப்பனுக்கோ கொடுக்க இஷ்டம் இல்லை வைத்தியரிடம் விலை கேட்பதும் நன்றாக இராது.

அவன், "நேற்றுத்தான் ஒரு பிஞ்சு விடாமல் பறித்துக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று விட்டு வந்தேன்" என்று ஒரு பொய்யை எடுத்து விட்டான்.

"இருக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி வைத்தியர் போய்விட்டார்.

மட்டியப்பனுக்கு அப்போது ஒரு யோசனை உண்டாயிற்று; 'இப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அனுப்பிவிட்டோம். நாளைக்கு வந்தால் என்ன செய்வது?' என்று எண்ணி மிகவும் கவலைப்படலானான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வாரம் வைத்தியர் அவனிடம் வந்து கத்தரிக்காய் கேட்டார். மட்டியப்பன் ஒரு பதிலை முன்பே யோரித்து வைத்திருந்தான். அவன் தன் தலையைச் சொறிந்து கொண்டே, "நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அன்றைக்கே நான் விஷயத்தைச் சொல்லியிருப்பேன். எங்கள் வீட்டுக் கத்தரிக்காயை இந்த ஊராருக்குக் கொடுக்கக்கூடாது" என்றான்.

வைத்தியர் ஆச்சர்யம் அடைந்தவராய் "என்ன காரணம்?"என்று கேட்டார்.

"எங்கள் பாட்டி செத்துப் போகும் போது கத்தரிக்காய் கறி வேண்டும் என்று கேட்டாளாம். அப்போது இந்த ஊரில் இரண்டு மூன்று வீடுகளில் கத்தரிச்செடி பயிரிட்டிருந்தார்களாம். என். தகப்பனார் அவர்களைக் கத்தரிக்காய் கேட்ட போது ஒருவராவது கொடுக்கவில்லையாம். என் பாட்டி தன் ஆசை நிறைவேறாமலே செத்துப் போய் விட்டாள். என் தகப்பனார். 'இனிமேல் நானே வீட்டில் கத்தரிச் செடி பயிர் பண்ணப் போகிறேன்; இந்த ஊரில் யார் கேட்டாலும் கொடுக்கப் போகிறதில்லை' என்று சபதம் செய்து கொண்டார். என்னிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லித் 'தம் சபதத்தை நானும் காப்பாற்ற வேண்டும்' என்றார். அதனால்தான் நான் உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை" என்று சொல்வி வருத்தப்படுபவனைப் போலப் பாசாங்கு செய்தான்.

அவன் சொல்வதெல்லாம் பொய் என்பது வைத்தியருக்கா தெரியாது? அவர் பேசாமல் வந்த வழியே திரும்பி வீட்டுக்குப் போனார். போகும் போதே 'இந்த மடையன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்; பார்க்கலாம். எனக்கும் ஒரு காலம் வரும்' என்று எண்ணிக் கொண்டார்.

இரண்டு மாதங்கள் ஆயின. ஒரு நாள் மட்டியப்பன் அவசர அவசரமாக வைத்தியரிடம் ஓடி வந்தான். "ஐயா, ஐயா! என் மகளுக்குக் கடுமையான ஜூரம் அடிக்கிறது. எங்கள் வீட்டில்

கைப்பழக்கமான கஷாயமெல்லாம் போட்டுக் கொடுத்தோம். ஜூரம் நிற்கவில்லை. கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு. ஐயா, நீங்கள் வந்து பார்த்துக் காப்பாற்ற வேண்டும்" என்று அழாக் குறையாகச் சொன்னான்.

"அப்படியா நீ நல்ல மனிதனாயிற்றே! உனக்குக் கஷ்டம் வரக்கூடாதே, நீ பயப்படாதே, நான் எப்படியும் சொஸ்தம் செய்து விடுகிறேன், நான் கேட்கும் மருந்துச் சரக்குகளை மாத்திரம் விடாமல் வாங்கித் தா" என்று சொல்லி, அவன் வீட்டுக்குப் போனார். நோயாளியின் கையைப் பார்த்தார். பிறகு ஒரு மாத்திரையைத் தேனில் குழைத்துக் கொடுத்து விட்டு, "இந்த ஜூரம் மிகவும் பொல்லாதது. இதற்கு ஒரு கஷாயம் போட வேண்டும். கத்தரி வேரும் வேறு சரக்கும் காய்ச்சி அந்தக் கஷாயத்தைத் தயார் செய்ய வேண்டும்" என்றார்.

"கத்தரி வேர்தானா பிரமாதம்! நம் வீட்டுக் கொல்லையிலே இருக்கிறது" என்றான் மட்டியப்பன்.

"ஒரு மணங்கு வேர் வேண்டும். நான் வீட்டுக்குப் போய்க் கஷாயம் போட ஏற்பாடு செய்கிறேன். நீ வேர் அனுப்பு" என்று உத்தரவு செய்து விட்டு வைத்தியர் மிடுக்காகத் தம் , வீட்டுக்கு நடந்தார்.

மட்டியப்பன் அவசர அவசரமாகத் தன் வீட்டுப் புறக்கடைப்பக்கம் போனான். வேகமாக இருபது முப்பது கத்தரிச் செடிகளைப் பிடுங்கி வேரை வெட்டிக் கையில் எடுத்துக் கொண்டு வைத்தியர் வீட்டுக்கு ஓடினான். வைத்தியருக்கு முன் அந்த வேரைப் போட்டபோது அவர், "இது எந்த மூலைக்கப்பா போதும்? இதைப் போல இன்னும் பத்துப் பங்கு வேணுமே. இந்த வியாதிக்கு வழுதுணை வெப்பு என்று பேர். சரியானபடி கஷாயம் செய்து கொடுக்கா விட்டால் கேட்காதே. பாவம்! உனக்கு ஒரு மகள். அவளுக்கு இப்படியா வர வேண்டும்!" என்றார்.

"எங்கள் வீட்டுக் கொல்லையிலுள்ள செடியெல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து விடுகிறேன். எப்படியாவது என் மகள் பிழைத்தால் போதும். நீங்கள்தான் தெய்வமாக இருந்து காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லி மட்டியப்பன் தன் வீட்டிற்கு ஓடினான்.

தன் வீட்டில் உள்ளவர்களையும் கூப்பிட்டு எல்லாக் கத்தரிச் செடிகளையும் பிடுங்கினான். வேரை நறுக்கிக் கட்டி வைத்தியரிடம் கொண்டு போய்ப் போட்டான்.

"நல்ல வேளை! அகப்படக் கூடிய சரக்காக இருக்கிறதே. அது உன் அதிர்ஷ்டம்தான், மலைச் சரக்கு ஏதாவது வேண்டுமென்றால் நாம் என்ன

செய்வது? சரி இனிமேல் நீ பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் உன் மகள் செளக்கியம் அடைவாள்' என்றார்.

வைத்தியர் ஒரு கஷாயத்தை ஒவ்வொரு வேளையும் நோயாளிக்குக் கொடுத்து வந்தார். ஆனால், அந்தக் கஷாயத்திற்கும் கத்தரி வேருக்கும் சம்பந்தமே இல்லை. 'வழு துணை வெப்பு' என்பதற்குக் கத்தரிக்காய்ஜுரம் என்று அர்த்தம். வைத்தியர் தாமாகச் சிருஷ்டித்த அந்தப் பெயரை மறை பொருளாகச் சொன்னார். மட்டியப்பன் அதைத் தெரிந்து கொள்ளவில்லை.

அவன் மகள் செளக்கியம் அடைந்தாள். அவன் மனைவி அவனைப் பார்த்து “அன்றைக்கு வைத்தியர் நாலு கத்தரிக்காய் கேட்டார்; கொடுக்க மாட்டேன் என்று சொன்னோமே, இப்போது வேரோடு கத்தரிச்செடி எல்லாவற்றையும் நாமே பிடுங்கினோமே!” என்றாள்,

"அப்போது புத்தி இல்லை!" என்று வருத்தப் பட்டான் மட்டியப்பன். . 

வினாக்கள்

1. கோபாலன் தேன்பாகு சாப்பிடுவதற்காக என்ன செய்தான்?

2. புன்செய் நிலத்தில் குமரன் கடலைக்காய்களைத் தேடியது எப்படி?

3. வேலை தேடிய குப்பன் இட்டிலிக் குப்பன் ஆனது எப்படி?

4. முனிவர் செய்த வேள்வியின் சிறப்பு என்ன? அரசன் செய்த வேள்வி என்ன ஆயிற்று?

5. மிளகாய்ப் பொடி காக்கைக்கு எவ்வாறு உதவிற்று?

6. கங்கை நீரில் மூழ்கியவரை மீட்பதற்குத் தன் பாவம் போக்க என்ன செய்தார்?

7. புத்த சன்யாசி கண்ணாடியில் பார்த்து என்ன சொன்னார்?

8. பாட்டுப் பாட காக்கை என்ன செய்த து?

9. ஆட்டிற்கு மாட்டின் வாலினால் வந்த தொந்தரவு என்ன?

10. அரசன் செய்த சோதனை என்ன? முடிவு என்ன?

11. கிண்டியாய நமஹ என்று பிராமணர் ஏன் சொன்னார்?

12. சுப்பன் கனவல்லியிடம் கூறியது என்ன?

13. 'அத்திரிமாக்கு' என்று சொன்னது யார்?

14. மருத்துவர் கத்திரிக்காய் ஜுரத்தின் கஷாயத்துக்கு என்ன வேண்டுமென்று கேட்டார்?

----------------------

ஜப்போனிகா ☎ 865331