உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/அதிதி தேவோ பவ

விக்கிமூலம் இலிருந்து

14





அதிதி தேவோ பவ


திராவிட மக்களாகிய நாம், பாவிகளல்லாவிடிலும் புண்ணியம் செய்தவர்களன்று. ஆம், நாம் புண்ணியம் செய்திருந்தால் நமக்கு ஆதி சங்கராச்சாரி இன்னும் மேலான நல்ல தெய்வங்களைக் கொடுத்திருப்பார் திராவிட மக்கள் இவ்வாறு மொழி பேதம், சாதிபேதம், சாமிபேதம், கொள்கைபேதம், செல்வபேதம், கல்விபேதம் போன்ற பிரிவுகளால் சில்லாந்தட்டிப் போய் இந்த அளவு பலவீனராய் இருக்க மாட்டோம்.

தம்முடைய இனமக்களுக்கென மறைந்து வைத்துக் கொண்ட தெய்வம்தான் உண்மையான தெய்வம். அது பிறப்பில்லாதது. பிராணன்களிடையில் விஞ்ஞானமயமாயிருப்பது. இருதய ஆகாசத்தில் உறைவது, அனைத்தையும் தன் வசம் கொண்டது. அனைத்தையும் ஆள்வது அனைத்துக்கும் அதிபதி அந்தத் தெய்வமே சர்வேசுவரன்.


'அதையறிந்தவன் பாவச் செயலால் தொடப்படுவதில்லை. ஆகையால் அமைதியுடையவனாகவும், பொறுமையுடையவனாகவும், ஆத்ம நிஷ்டனாகவும் ஆகித் தன்னிடத்திலேயே அவன் தெய்வத்தைக் காண்கிறான். இவனைப் பாவம் தீண்டுவதில்லை அவனே எல்லாப் பாவங்களையும் தாண்டுகிறான். எனவே பாவமற்றவனாயும், அழுக்கற்றவனாயும், சந்தேகமற்றவனாயும், பிராமணனாயும் ஆகிறான்.

அருமை நண்பனே! சற்று சிந்தித்துப்பார்! மனிதனை பிராமணனாக்கும் தெய்வம் அவர்களுடையது. அந்த ஆற்றல் வாய்ந்த தெய்வத்தை அவர் நமக்குக் காட்டிக் கொடுக்காமல் வேறு தெய்வங்களை பலவீனமான தெய்வங்களையே நம் பங்குக்கு ஒதுக்கித் தந்துள்ளார். அவர் நமக்குக்கொடுத்த விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன்களெல்லாம் நம்மை, பொங்கலிடு, பூசை செய், கும்பிடு போடு, கூடவே காணிக்கையும் போடு, மொட்டையடித்துக் கொண்டுசெல், அடுத்தவருடமும் வரத் தவறாதே என்று உத்தரவுகளை போட்டு மக்களைச் சாறாகப் பிழிந்து கொண்டு சக்கைகளாக்கி திருப்பி அனுப்பிவிடுகின்றன. என்னதான் செய்வது? மனம் சோர்ந்து நாம் இந்தத் தெய்வங்களைக் கைவிட்டாலும், இவைகள் நம்மை விடுமாறில்லை. அடிகளார்களும், ஆச்சாரிமார்களும், இடையன் பிரிந்து செல்லும் மாட்டை விரட்டி மந்தைக்குள் சேர்ப்பிப்பதுபோல் மிரட்டி ஒன்று கூட்டி விடுகிறார்கள். தலைவிதியே என்று நொந்துகொண்டு மதம் எனும் பட்டியில் நாம் அடைபட வேண்டியுள்ளது.

அந்தக் காலத்து கிராமந்துத் தெருக்கூத்தில் அல்லியரசி புலம்புகிறாள். அருச்சுனன் அல்லி தூங்கும்போது திருட்டுத்தாலி கட்டிவிட்டதை கண்டு, 'கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை; காரிகையே இது யார் சூதோ' என்று பாடிப் புலம்புவதுபோல் நம்மால் இந்த ஐந்து தெய்வங்களிடமிருந்து, என்ன செய்தும் கழற்றிக்கொள்ள முடியாத நிலையில் இன்னுமொருதளை நம் காலை இருக்கிக் கொண்டு விடுகிறது.

'குதிரை கீழே தள்ளியதுமன்றிக் குழியும் பறித்தது' என்கிற பழமொழி, அந்த சாணக்ய சந்ததிகளுடைய இந்தச் செயலுக்கு வெகு பொருத்தமானது என்று சொல்லலாம். அவர்கள் நமக்குக்கருணை கூர்ந்தளித்த இதோ இந்த ஒரு உபதேசத்தை ஊன்றிப் பார்த்தால் வயிறு எரியவும் செய்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் இந்நால்வரையும் நாம் உயிருள்ளவரை மறக்காமல் சதா உள்ளத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதுதான் அந்த உபதேசம்.

முதலில் இது என் செவியில் விழுந்தபோது எனக்கு வயது ஐந்தும் கூட முடிந்திருக்காது. மிகச் சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களிலிருந்து, இன்று தமிழ் நாட்டில் மிகமிக மேன்மையான நிலையில் உள்ள பிரபுக்கள், புலவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கியக் கர்த்தாக்கள் வரை இந்த உபதேசம்பெறாதவர்கள், பெற்று நம்பாதவர்கள் ஒரே ஒரு ஒற்றைப் பிராணி கூட இருக்கமுடியாது என்று நான் சொன்னால் இந்து மதத்தினராயுள்ள ஒருவரும் மறுக்கவேமாட்டார்கள்.

ஆனால், இந்த மாதா, பிதா, குரு, தெய்வ உபதேசத்தில், உண்மை எத்தனை சதவிகிதம்? புனைகருட்டு, நய வஞ்சகம் எத்தனை சதவீகிதம்? என்று தெரிந்துகொள்ள எனக்கு முக்கால் நூறு வருடங்கள் வாழ்ந்து முடிந்த பின்தான் சமயம் கிடைத்தது என்றும் சொல்லிவிடுகிறேன்.

மாதாவைப் போற்ற வேண்டும்; பிதாவைப் போற்ற வேண்டும்; குருவைப் போற்ற வேண்டும்; தெய்வத்தைப் போற்ற வேண்டும் எனக் கனமான அர்த்தம், நயமான சொற்றொடர்கள். கேட்டவர் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய சாதுர்யமான உபதேசம் இது.

உபநிசத்திலிருந்து நமக்கு கிடைத்த ஒரே ஒரு உபதேசம் இதுதான் என்று என்னால் அறிய முடிகிறது. ஆனால், தலையில்லா முண்டத்துக்கு வேறு பிராணியின் தலையைப் பொருத்தி வீதியில் நடமாட விட்ட தோற்றம்தான் இந்த மாதா, பிதா, குரு, தெய்வமெனும் சொற்றொடர்களின் தோற்றமும்.

இந்த மாதா, பிதா, குரு, தெய்வத்தின் பூர்வீகர், தைத்திரியோ உபநிசத்தில் காணப்படும். விதம் “மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ” என்று. இவற்றின் பொருள் உபநிசத்தில் உள்ளபடி தாயைத் தெய்வமாகக் கொண்டிரு தகப்பனைத் தெய்வமாகக் கொண்டிரு குருவைத் தெய்வமாகக் கொண்டிரு எதிர்பாராதவாறு நம் வீட்டிற்குப்புதியதாய் வரும் விருந்தினர் அதிதியைத் தெய்வமாகக் கொண்டிரு என்பதே.

இருந்ததை இருந்தபடி இந்த ஒரு கருத்தையும் கூட முழுமையாகத் தமிழ் மக்களுக்குத் தர மனமில்லாத, மனிதாபிமானம் அறவே அற்ற இந்த ஆச்சாரியர்களின் உள்ளம் எவ்வளவு வஞ்சகமானது, சுயநலமுள்ளது என்று இது வெளிப்படுத்தவில்லையா?

ஆரியக் கலப்படத்துக்கு முன் இருந்த ஒவ்வொரு திராவிடக் குடிமகனின் உள்ளமும் விருந்தோம்பலிலும், வீரத்திலுமன்றோ முகிழ்த்து மலர்ந்து முழுமை பெற்றிருந்தது.

'இல் விருந்து ஒம்பி வாழ்வ' தெதற்காக எனில் அது விருந்தோம்புதலாகிய வேளாண்மையைச் செய்தல் பொருட்டே தான் என்று தெளிவு படுத்துகிற தமிழ்வேதமாகிய திருக்குறள்.

'கூடியுண்ணும் குணத்தவர் கிளைபோல் நீடி’ என்கிறது கல்லாடம்.

புறநானூறின் புனிதத் தமிழ்மகள் செயல் இன்னும் ஒருபடி மேலுக்குப்போகிறது.

“அது ஒரு சிறிய ஊர். அந்தச் சிறிய ஊரில் இருந்தது ஒரே ஒரு சிறிய நீரூற்று. நீரூற்றைச் சுற்றிக் கழற்சிக் காய்செடிப் புதராய் மண்டிச் சூழ்ந்திருந்தது. முறைப்படி அந்த ஊரிலிலுள்ள மக்களனைவரும் விகல்பமின்றி வேற்றுமை பாராட்டாமல் வரிசைக் கிரமமாகச் சென்று அந்த நீரூற்றிலிருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து பாங்கும் பரிவுமாக எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. இரவு நேரங்களில் காட்டு யானைகள் எப்போதாவது வந்து நீர்பருகுவதன் நிமித்தம் போராடிக் கொள்வதும் உண்டு. சுனைநீர் சகதியாக மாறிப் போவதும் உண்டு. உடனே ஆவனசெய்து சண்டை சச்சரவின்றி வாழும் அம்மக்களின் தலைவனாக ஒரு ஆற்றல் பெருமகன் இருந்தான். அவன் ஒரு மாபெரும் வீரன். அஞ்சாநெஞ்சன் நீதிவழுவா நெறிமுறையினன். ஊரில் அவனே தலைவனாகவும் இருந்தான்.

தலைவனுக்கு ஒரு தலைவியும் உண்டு. அவளும் ஒரு வீராங்கனை. அவள் புகுந்த குடி மாண்புமிக்க அறம் வழுவாப் பெருங்குடியென்பதறிந்து அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தாள். குறையெனக் கூற எதுவொன்றுமில்லா குடும்பத் தலைவியான அவளுக்கு உள்ளத்தில் இரண்டொரு குறைகள் குடியிருந்து கொண்டிருந்தன.

அந்த குறைகள் வியப்புக்குரிய குறைகள். ஆம் இலக்கிய வாழ்வுக்குரியவை அவை. மற்றவர்கள் அறிந்து பின்பற்ற வேண்டிய குறைகள் எனின் மிகைபடக் கூறியதாகாது.

அதே குடியில் பிறந்து முன்தலைமுறையில் வாழ்ந்த வீரன் ஒருவன் பகைவருடன் போரிட்டு இறந்து நடுகல்லாகி அவ்வூரார் நினைவில் நிலைத்திருந்தான். அந்நடுகல்லுக்கு நாள் தவறாது அவ்வீரமகள் ஒரு சுரைக்குடுக்கை நீர்பெய்து கழுவி, சந்தனக் கட்டையெரித்து நறுமணப் புகைகாட்டித்தன் குறை நீக்கக் கோளிப் பிரார்த்திக்கிறாள்.

முதல் குறை இதுதான். “விருந்தெதிர் பெறுவதில்லம்மயானே!" என்பது ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு விருந்தினர் வரப் பெறுவேனாக, என்கிறாள் விருந்தோடு உண்ணுதல்தானே உண்டிக்கு அழகு! விருந்தில்லாது உண்ணும் உணவு சுவையாயினும் அழகற்றதுதானே.

சரி அடுத்து என்ன? என்கிறீர்களா அவள் வாய் மூலமாகவே அதுவும் உரைக்கப்படுகிறது. என்னையும், ஒருவன் பொருள் நசை வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக எனவே!

அப்போது அந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த குறுநில மன்னன் நீங்காத பொருளாசையுடையவன். அவனால் மக்களுக்கு அமைதி கிடையாது. எனவே தன் கணவனுக்கு அந்தப் அரசனோடு ஒரு போர் வரவேண்டுமாம். அப்போரில் அவ்வரசன் இறந்து பட்டு, நல்ல அரசன் ஆட்சிக்கு வரவேண்டுமாம். சிந்தித்துப் பார்க்க வேண்டிய சிறந்த இலக்கியப்படைப்பு இது. விருந்தெதிர் பார்த்து நீதிநெறியறிந்து வாழ்ந்தனர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்கள். இந்த மக்களுக்கு உபநிஷத்திலிருந்து கிடைத்த இந்த ஒரே ஒரு உபதேசமாவது முழுமையாகத் தர மறையவர் மனங்கொள்ளவில்லை.

'அதிதி தேவோ பவ' என்ற சாரம் மிகுந்த அந்தபகுதியை வெட்டிய அளவில், மற்ற மாதா, பிதா குருவோடு நிறுத்திக் கொள்ளாமல் எதற்காகத் 'தெய்வம்' என்ற சொல்லை அங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும்? இது உருவ வணக்கத்திற்கு உபயோகமாயிருக்கட்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

"தெய்வம் மனோமயமானது. உயிரும் உடலுமாக உள்ள மனித உருவமே தெய்வத்தின் உருவம், சத்தியமே அது சங்கல்பமாயுள்ளது. அதுவே ஆத்மா! அதுவே பிரம்மம். அது ஆகாசம் போன்றது - அதாவது ஒளிமயமானது என்று உபநிசத்துகளில் உள்ளதை ஏன் கல் உருவத்தில் இருப்பதாக மக்களுக்குக் காட்டி வஞ்சிக்க வேண்டும், ஏற்கனவே மக்களிடம் தொன்று தொட்டிருந்து வரும் வீரமும் விருந்தோம்பலும் ஏன் மறக்கடிக்க வேண்டும்? உபநிசத்தில் கோயில் கட்டிக் கும்பிடக் கூறும் தெய்வம் என ஒன்று உள்ளதா? அட பாவிகளே! இது உண்ணும் சோற்றில் நஞ்சுகலந்தது போன்ற செயல் தானே.

இன்று தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது? தினத்தாள்களைப் பார்த்தால் நாடு நாடாக உள்ளதா? சாவுச் செய்திகள், சண்டைச் செய்திகள், மழை மாரியின்றி, ஆறு, குளம் அனைத்தும் வற்றி வறண்டு, எங்கு பார்த்தாலும் முட்செடிகளும், பார்த்தீனியச் செடிகளுமாய் மாறிவரும் பயங்கரமான இந்தக் காலகட்டத்திலாவது, “அகம்பிரம்மாஸ்மி', 'அயம் ஆத்மா பிரம்மம்', ‘தத்வமசி', பிரஜ் ஞானம் பிரம்மம்' என்பன போன்ற மகா வாக்கியங்களைத் தெரிய எடுத்துக்காட்டி மக்களுக்கு நன்மை செய்ய கூடாதா?

எதிர்காலம் அவர்களின் தவறுகளை மன்னிக்காது. தவறு செய்தவன் தண்டனைக்குரியவன். எனவே எந்த நீதியை அவர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளார்களோ அதே நீதியைத்தான் அவர்கள் பெற உரிமையுள்ளவர்கள் ஆகிறார்கள்.

காலம் கடந்து விடுமுன் உண்மையே தெய்வம், உருவங்களன்று என இப்போதே சொல்லிவிடுவார்களெனில் அப்போது, ஒருசமயம் மன்னிக்கவும் மக்களுக்குத் தோன்றலாம்.