பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/அண்டமும் விந்தணுவும்
4. அண்டமும் விந்தணுவும்
ஆணும் பெண்ணும் கூடுவதாலே மனிதக் கரு உண்டாகிறது. அவ்வாறு கரு உண்டாவதற்குக் காரணமாக உள்ளவை பெண்ணிடத்துத் தோன்றும் அண்டமும் (Ovum) ஆணிடத்து உண்டாகும் விந்தணுவும் (Sperm) ஆகும். அண்டம் சாதாரணமாக மாதத்திற்கு ஒன்றுதான் வெளிப்படுகிறது. அது கருப்பையை (Ovary) நோக்கி வந்து கொண்டிருக்கிற காலத்தில் விந்தணுவோடு கலக்க நேரிட்டால் உடனே பூரித்துக் கருவாக மாறி விடுகிறது. பூரித்த அண்டமே முதல் அணு. அது பிரிந்துபிரிந்து பல உறுப்புக்களாக உருவடைகிறது.
அண்டத்தையும் விந்தணுவையும் பன்மடங்கு பெரிதாககிக் காட்டும் சாதனங்களை உபயோகித்துப் பார்த்தபோது அவற்றிலே நிறக்கோல்கள் (Chromosomes) என்று சொல்லும்படியான நுண்ணிய பொருள்கள் இருப்பதை உணர்ந்தார்கள்.
விந்தணு பருவமடைந்த ஆண் இடத்து உண்டாவது; அண்டம் பருவம் அடைந்த பெண்ணிடத்து உண்டாவது. புணர்ச்சியின்போது வெளியாகும் விந்துவில் லட்சக் கணக்கான விந்தணுக்கள் இருக்கின்றன. இவைகள் முன்னோக்கி மெதுவாகச் செல்லும். விந்தணுவுக்கு ஒரு நீண்ட வால் உண்டு.
அந்த வாலைச் சுழற்றுவதால் அதற்கு முன்னால் நகர முடிகிறது. இப்படி நகரும்போது வழியிலேயே பல நசித்துப்போகின்றன. ஒரு சிலதான் கருமூலக் குழாய் வரை செல்லும். அவற்றிலும் சாதாரணமாக ஒன்று தான் அண்டத்தோடு கலந்து கருவுண்டாகக் காரணமாகிறது. கருமூலக்குழாயை அடைந்த விந்தணுக்களுக்குச் சுமார் ஒரு வாரம் வரையிலும் இந்தச் சக்தி இருக்கிறது. அதற்குள் கருமூலத்துடன் கலக்க முடியாவிட்டால் அவை பயனற்றுப் போய்விடுகின்றன.
அண்டம் சூல் பைகளில் உண்டாகிறது. இரண்டு சூல்பைகள் பெண்களின் உடம்பில் இருக்கின்றன. ஒரு மாதத்தில் ஒரு சூல் பையிலும் அடுத்த மாதத்தில் மற்றொரு சூல் பையிலுமாக மாறிமாறி மாதம் ஒன்று வெளிப்படுகிறது. அது கருமூலக்குழாயில் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் ஒரு விந்தணுவைச் சந்தித்தால் கருவாகிறது. இல்லாவிடில் நசித்துக் கருப்பை வழியாக வெளியே வந்துவிடுகிறது. அண்டம் சிறியதாயினும் கண்ணுக்குத் தெரியக்கூடிய அளவுள்ளது; ஆனால் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியா. அவை அண்டத்தைத் தேடி வருகின்றன. அவைகளில் ஏதாவதொன்று அண்டத்தை அணுகினால் உடனே அதற்குள் பாய்கிறது. அப்போது அதனுடைய வால் அறுபட்டுத் தலைப்பாகம் மட்டும் உட்செல்லுகிறது. இவ்வாறு விந்தணு உள்ளே சென்ற அண்டத்தைப் பூரித்த அண்டம் என்கிறோம். பூரித்தவுடன் அது பல வகையான மாறுதல்களை அடைய ஆரம்பிக்கிறது.
கருவடைந்த அண்டம் சுமார் ஏழெட்டு நாட்கள் வரை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைகிறது. ஆனால் அதற்குள்ளே அது பிரிய ஆரம்பித்துக் கருப்பையைச் சேர்வதற்குள் நூற்றுக்கணக்கான அணுக்களாகி அவையெல்லாம் திரண்ட ஒரு பிழம்பு என்று சொல்லும்படியாய் மாறிவிடுகின்றன.
பூரித்த அண்டம் முதலில் இரண்டாகவும் பின்பு நான்காகவும் நான்கு எட்டாகவும் இவ்வாறு பிரிவதோடு ஓர் ஒழுங்காக அமைந்து பந்துபோலத் திரண்டு கருப்பையை அடைகிறது. அங்கே அது ஓர் இடத்தில் ஒட்டிக்கொண்டு, பின்பு தாயின் இரத்தத்தைக் கொண்டு வளர ஆரம்பிக்கிறது.