பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/ஓங்கி நிற்றல்
7. ஓங்கி நிற்றல்
நிறத்துக்குக் காரணமான ஜீன்கள் ஒரே மாதிரியான தன்மையோடு இருப்பதில்லை. அந்தி மல்லிகையில் நிறத்துக்கான ஜீன்கள் ஒரே அளவான சக்தியைப் பெற்றிருக்கின்றன. வெவ்வேறு நிறமுள்ள இரு ஜீன்கள் வந்து சேரும்போது அவை இரண்டின் அம்சங்களும் புதிய பூவில் சமமாக வெளிப்படுகின்றன. ஆனால் எலிகளின் விஷயத்தில் அவ்வாறு ஏற்படுவதில்லை. எலியிலே கருமை நிறம் ஓங்கி (Dominant) நிற்கிறது. அது வெண்மை நிறத்தை மறைத்துவிடும் சக்தி
படம் 4.
வாய்ந்ததாகக் காண்கிறது. அதனால்தான் கலப்பினச் சேர்க்கையில் காரெலிகளே தோன்றுகின்றன. காரெலியில் நிறத்துக்குரிய நிறக்கோல்களைக் கக என்று குறிப்பிடுவோம். அதேபோல வெள்ளெலியில் உள்ளவற்றை வெவெ என்று குறிப்பிடுவோம்.
கலப்பினச் சேர்க்கையால் உண்டான எலியின் நிறக்கோல்களில் கருமை, வெண்மை ஆகிய இரண்டுக்கும் உரிய ஜீன்கள் இருந்தாலும் (5-வது படம்) கருநிறம் ஓங்கி நிற்பதால் எலி கறுப்பாகவே இருக்கிறது.
ஆனால் வெள்ளை நிற ஜீன் அடியோடு மறைந்தே போய் விடுவதில்லை. முதல் கலப்பினச் சேர்க்கையில் பிறந்த எலிகள் கறுப்பாக இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஓரினச் சேர்க்கை செய்தால் அதனால் பிறந்த குட்டிகளில் சுமார் நான்கில் ஒரு பாகம் வெண்மையாக
படம் 5.
இருக்கின்றன. 6-வது படத்தைப் பார்த்தால் அது சுலபமாக விளங்கும்.
முதல் கலப்பினச் சேர்க்கையால் பிறந்த காரெலிகளின் அணுக்களில் கருமை வெண்மை ஆகிய இரு நிறத்துக்கான ஜீன்களும் இருக்கும். அப்படிப்பட்ட ஆண் அணுவையும் பெண் அணுவையும் எடுத்துக் கொள்ளுவோம். அவற்றில் கருமைக்கும் வெண்மைக்கும் காரணமான நிறக்கோல்களைக் கவெ என்று குறிப்பிடுவோம். இந்த அணுக்கள் முதிர்ச்சி அடையும் போது முன்பே கூறியபடி இரண்டிரண்டாகப் பிரிகின்றன. நிறக்கோல்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிவுபடாமல் பாதி ஓர் அணுவுக்கும் மற்றப் பாதி மற்றதற்கும் செல்கின்றன. இவ்வாறு உண்டான அணுக்கள் கலக்கக் கூடிய விதத்தைப் படம் காண்பிக்கிறது. இரண்டாம் கலப்பினச் சேர்க்கையால் பிறக்கும் நான்கு குட்டிகளில் ஒன்றின் நிறக்கோல்களில் கருமை நிறத்துக்குரிய ஜீன்களே (கக) உள்ளன. வேறு இரண்டில் கருமை. வெண்மை இரண்டுக்குமுரிய ஜீன்கள் (கவெ, கவெ) இருக்கின்றன. ஆனால் கருமை நிறம் ஓங்கி நிற்பதால் இந்த இரண்டு குட்டிகளும் முதல் குட்டி போலக் கறுப்பாகவே இருக்கும். நான்காவது குட்டியின் நிறக்கோல்களில் வெண்மை நிற ஜீன்களே (வெவெ) இருப்பதால் அதுமட்டும் வெள்ளையாக இருக்கும். இவ்விதமாக அந்த வெண்மை நிறம் இரண்டாவது கலப்பினச் சேர்க்கையின் போது தோன்றுகிறது.
நிறத்துக்குக் காரணமான ஜீன்களில் சில எப்படி ஓங்கி நிற்கின்றனவோ அதுபோலவே இன்னும் வேறுவேறான பல தன்மைகளுக்கான ஜீன்களிலும் ஓங்கி நிற்கும் சக்தி உடையவை உண்டு.