உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 17

விக்கிமூலம் இலிருந்து


னோகர் வெளியுலகைப் பார்க்க விரும்பாதவன் போல், உள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

முட்டிக் கால்களை வயிற்றுக்குள் முட்டிக் கொண்டு, போர்வைக்குள் முடங்கிக் கிடந்தான். அந்த வெயிலிலும், உடல் முழுவதையும் கம்பளிப் போர்வை மறைத்து இருந்தது. கட்டிலில் மூட்டை, முடிச்சு கிடப்பது போலவே கிடந்தான். எல்லாம் செத்து, தான் மட்டுமே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடப்பது போன்ற விரக்தி… முந்தா நாள் வரை, தன்னுள் புகுந்த கிருமிகள், உடனடியாய் தன்னை எய்ட்ஸ் நோயாளியாக்கி, பூமிக்கு கீழேயோ அல்லது நெருப்பு மூலமாகவோ கணக்கு தீர்க்க வேண்டும் என்று துடியாய் துடித்தவன், இப்போது தவியாய்த் தவித்தான். அந்தக் கிருமிகள், இந்நேரம் எய்ட்ஸ் அவதாரம் எடுத்திருக்கலாம் என்ற பீதி. அதற்கு ஏற்றாற் போல், கையில் ஒரு சின்னக் கட்டி… உடலெங்கும் அரிப்பு… எழ முடியாத உடல் வலி. உமிழ் நீரே விக்கிக் கொள்வது மாதிரியான வாயடைப்பு… தொண்டையில் கதவடைப்பு…

வீட்டைக் கூட்டிப் பெருக்கி விட்டு, தரையை ஈரத் துணியால் துடைத்து விட்டு, வேலைக்காரச் சிறுமி மீனாட்சி, கீழே சுவர் மூலையில் உட்கார்ந்தபடி, அந்தக் கட்டிலையே ஏறிட்டுப் பார்த்தாள். நேற்றிரவு, அவனுக்காக வாங்கி வந்த இட்லி பொட்டலம், காகிதச் சணல் கட்டில் இருந்து விடுதலையாகாமல் கிடந்தது. நான்கைந்து நாட்களாக, அவள் வாங்கி வந்து கொடுப்பதை, அவன் அரைகுறையாய் தின்பதும், பின்னர் அப்படியே முடங்கிக் கொள்வதுமாய் கிடக்கிறான். வாழ்க்கையில் ஒரு பகுதியான தூக்கத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டவனை, சாப்பிடும்படி ஒரு 156 பாலைப்புறா

அதட்டல் போடலாமா என்று மீனாட்சி யோசித்தபோது, ஒரு காலடிச் சத்தம்...

தவசிமுத்து, ஒரு தூக்குப் பையோடு உள்ளே வந்தார். கட்டிலில், போர்வைக்குள் காணாமல் போனவனை, பாம்பை, கீரி பார்ப்பது போல் முகத்தை நீட்டி நீட்டிப் பார்த்தார். பிறகு ‘எப்பா... எப்பா' என்றார். போர்வைக்குள் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. ஒப்பா வந்திருக்கேண்டா, ஒப்பாடா என்றார். அதற்குள் அசைவு இல்லை... இதனால், அந்த வேலைக்காரச் சிறுமிக்கு ஆணையிட்டார்.

‘அவனை எழுப்பும்மா... ஒன்னத்தான்... ஏன் பித்து பிடிச்சுகிடக்கே. போர்வையை எடு. அவனை எழுப்பு’.

மீனாட்சி, வெறுமனே கைகளைப் பிசைந்தபோது, மனோகர் போர்வையை ஆவேசமாக வீசிக்கடாசிவிட்டு, எழுந்து உட்கார்ந்தான். எரிச்சலோடு கேட்டான்.

"என்ன விஷயம்?”

‘அறு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிற பெத்த அப்பனப் பார்த்து கேட்கிற கேள்வியாடா இது..?’

மனோகர், தந்தையின் பார்வையை தவிர்த்து, தனக்குள்ளேயே, பொருமினான். அப்பா வருவார் என்று ஆவலோடு காத்திருந்தவன்தான். அம்மாவைக்கூட்டி வந்தால் செலவாகும் என்பதாலும், அதோடு அவள் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பாள் என்பதாலும், அப்பா, அவளைக் கூட்டி வரமாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், எதிர்பார்த்ததுபோல் வந்த அப்பா, எதிர்பாராதது போல் நடந்ததுதான் அவனுக்கு புரியவில்லை; இந்தப்பா, தன்னைக் கட்டிபிடித்துக் கலங்கவில்லை. அய்யோ என் மகனே என்று அலறவில்லை. எப்படிடா இருக்கே என்று கட்டிலில் வந்து அமரவில்லை. மீனாட்சியை விட்டு எழுப்பச் சொல்கிறார். அந்தக் குரலில் கூட ஒரு நெகிழ்ச்சி இல்லை. கடன்காரனிடம் வட்டி கேட்கும் போது, எந்தக் குரல் மேலோங்குமோ அந்தக் குரல்... எந்தக் கைகள், தன்னைத் தொட்டுத் தூக்கி தோளில் வைத்திருக்குமோ, அந்தக் கைகள், அவனைத் தொடக் கூட வேண்டாம்... அவன்போர்வையைக் கூடத் தொடமறுக்கின்றன.

தவசிமுத்துதான் வலியப் பேசினார்.

‘எப்படிடா... இருக்கே? எல்லாம் தலையெழுத்து. வீட்டுல எல்லோருமே கதிகலங்கிட்டோம்' சு. சமுத்திரம் 157

மனோகர், நெகிழ்ந்து போனான். ஆயிரம் இருந்தாலும், அவர் அவனுடைய அப்பா. தான் ஆடவில்லையானாலும், சதையாடிப் போகும் அப்பா... இப்படி கடுமையாய் பேசியிருக்கப்படாது.

‘உக்காருங்க அப்பா... மீனாட்சி. தாத்தாவுக்கு வெந்நீர் போடும்மா.’

மீனாட்சி எழுந்தாள். தகப்பனையும், மகனையும் அதிசயமாய் பார்த்தபடி. அதே சமயம் கலைவாணியையும் நினைத்துப் பார்த்தபடி எழுந்தாள். அந்தக் கிழவன், முன்னால், ஒரு தடவை வந்திருக்கும் போது, அக்கா, இதோட கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். ‘இனிமேல் நீங்க வருவதை முன் கூட்டியே லட்டர்லே தெரிவியுங்க... நானும், இவரும் ஸ்டேஷனுக்கு வந்திடுவோம். ஆட்டோவிலே வர வேண்டியதுதானே மாமா... இப்படியா கஷ்டப்பட்டு பஸ்ல வர்ரது...’ என்று சொன்ன அக்கா, கஷ்டப்பட்டுப் போய்விட்டாள். அப்போக்கூட இந்த பெரிய மனுஷன், வேணுமுன்னா... அதுக்குள்ள பணத்தைக் கொடுத்துடேனு டமாஷ் செய்தது. டமாஷா இல்ல. கொடுத்தால் வாங்கி, ஜேப்பில போட்டுக்கும். பொல்லாதது”.

மீனாட்சி, சிந்தனையை உதறியபடி, சமையலறைக்குள் போகப் போனபோது, தவசிமுத்து அவளைக் கையமர்த்தி தடுத்துவிட்டு, ஆறுதல் தேடிப் பார்த்த மகனிடம் சால்ஜாப்பாய் பேசினார்.

"ஊர்ல இருந்து ராமசுப்போட வந்தேன். அவன் மகன் வண்ணாரப் பேட்டையில சீயக்காய் வியாபாரம் பார்க்கான் பாரு, அவனப் பார்க்க சுப்பு என்னோட வந்தான். அப்பன ஸ்டேஷன்லே பார்க்க வந்த மகன், இன்னிக்கி ஒரு நாளாவது அவன் வீட்டுல நான் இருக்கணுமுன்னு வம்பு பண்ணிட்டான். நான் கையோட கொண்டு வந்த டிரங்க் பெட்டியையும் பலவந்தமாய் பிடுங்கிக்கிட்டான். நான்தான் ஒன்னை ஒரு எட்டு பார்த்துட்டு வாறேன்னு கெஞ்சுனேன்...”

மனோகருக்கு, ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அது தட்டுப்பட தட்டுப்பட, தவசிமுத்து ஒரு சூரிய நாராயணனாக, ஒரு நாராயணசாமியாக உருமாறிக் கொண்டு இருந்தார். அவர்களைப் போல், இவருக்கும் மரண பயம்; அது வந்துவிட்டால், மனிதன் குழந்தையாவான், அல்லது மிருகமாவான். மரணத்திற்குப் பயப்படலாம்... ஆனால், மரண விளிம்பில் நிற்கும் ஒரு மனிதனிடமா பயப்பட வேண்டும்? அதுவும் அந்த மனிதன் மகனாக இருந்தாலும். இவரிடம் பேசிப்பயனில்லைதான்.

தவசிமுத்து, மெளனம் கலைத்தார். 158 பாலைப்புறா

‘அந்த மூதேவி... வெறுங்கையோட போனாளா... இல்ல நகை நட்டுக்களை தூக்கிட்டுப் போனாளா...’

"எந்த மூதேவி...?”

‘அதான் ஒனக்குன்னு வந்தாளே அவள்...’ ‘சீதேவியாய் இருந்த அவளை, மூதேவியாக்குனது நான்தான்’.

‘விதி யாரை விட்டுது... ஒன்னை, இப்படிதவிக்க விட்டுட்டு, ஊருக்கு வந்திருக்காள்... அவள் வீட்டுக்கும், நம்ம வீட்டுக்கும் ஒரே சண்டை... அடிதடி... ஒனக்கும் ஒரே ஏச்சு... பயமகள், அப்பனையோஅம்மாவையோ ஒரு வார்த்தை தட்டிக் கேட்கல... போகட்டும் விடு... அவரவர் புத்தி அவரோர்க்கு. நகைநட்டு என்னடாஆச்சு? பிடுங்கிட்டு துரத்தவேண்டியதுதானே'.

‘தாலியக் கழட்டிவச்சிட்டுப் போயிட்டாள்’.

‘சரி என்கிட்ட கொடு. நல்லதாப் போச்சு’. ‘தாலியையும், நகை இருக்கிற பேங்க் லாக்கரிலே வச்சிட்டேன்’.

‘லாக்கர் எதுக்குடா லாக்கரு... அவளோட நகை நட்டு இங்கே இருந்தால், அவள் அண்ணன் தம்பிமாரு... இங்க வந்து ஒன்னை மிரட்டி நகைய வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால் எல்லா நகையையும் என்கிட்ட கொடுத்துடு. பத்திரமாய் வச்சிக்குவேன். ஏன்னாஅவள் பிடிநம்ம கிட்ட இருக்கணும் பாரு’.

மனோகர், கோபமாக குறுக்கிட்டான்.

"இன்னொரு... விஷயத்தையும் சொல்றேன் கேளுங்க. கம்பெனியில இருந்து வேலை போயிட்டு. ஆனாலும் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தாங்க. நானும் வாழணும் பாருங்க. ரூபாய் இங்கதான் இருக்கு... அவள் பேர்லயும், என்பேர்லயும், பேங்க்லே டிபாசிட் போடப் போறேன்.”

"என்னடா இது...? வம்பன் சொத்து, வீணன்கிட்டே போனது மாதிரி..”

‘நான் வம்பன்தான்; இந்தப்பணத்தை ஒங்ககிட்ட கொடுத்தால் நீங்க சொன்ன பழமொழி முழுசாயிடும்... கலைவாணி என்னை விட்டுப் போனாலும், அவள் கால்தூசிக்கு நீங்க பெறமாட்டிங்க. என்னை அடமானமாய் வச்சி, வேலை வாங்கித் தருவதா ஆயிரம் ஆயிரமாய் கமிஷன் அடிச்சிங்க... அந்தப் பாவம்தான் என்னை பிடிச்சிட்டு. இப்படிமுடக்கிப் போட்டுட்டு..’

‘நல்லா இருக்கே நியாயம். நீ கண்டபடி ஊர் மேயணும், அதுக்கு நான் பொறுப்பேற்கணுமா...' சு. சமுத்திரம் 159

"யோவ். பெரிய மனுஷனாச்சேன்னு பார்க்கேன். இல்லாட்டி நடக்கிற கதையே வேற... மரியாதையா வெளியிலே போய்யா... எங்கண்ணாவ, எனக்கு பார்த்துக்கத் தெரியும்”.

தவசிமுத்து, மீனாட்சியை நோக்கி நடந்தார். அவர் பார்த்த பார்வையில் சுவரோடு ஒடுங்கி நின்றவளின் காதைத் திருக, கையைக் கொண்டு போனார். கையை கூன் போட வைத்தபடியே நின்றார். பிறகு அவள் திருப்பி அடிக்கமாட்டாள் என்கிற அனுமானத்தில், அவளது வலது காதைப் பிடித்து திருகியபடியே கத்தினார். -

"அப்பனுக்கும், மகனுக்கும் இடையிலே நீ யாருடி? அவனை கவனிக்கிற சாக்குல, அவன்கிட்ட இருக்கறதைப் பறிக்கிறதுக்கு... ஒன்னை, ஒப்பன் அனுப்பி வச்சானா, ஒம்மாவா...?”

தவசிமுத்து, இப்போது மீனாட்சியின் காதை விட்டுவிட்டு, அவளது வலது கையைப் பிடித்து முறுக்கினார். அவள் வலி பொறுக்க முடியாமல் கலைவாணியைப் போல் அவர் கையைக் கடிக்கக் குறிவைத்தாள். இதற்குள், மனோகர், கட்டிலில் இருந்து குதித்தான். அதற்குள் ஒரு எச்சரிக்கைக் குரல் கேட்டது.

‘ஏய்... கெய்வா... விடுய்யா அவளை... விடுறியா, இல்ல நாலு சாத்து சாத்தணுமா...? கம்னாட்டி... புறம்போக்கு, கஸ்மாலம்... சின்னப் பொண்ணுக்கிட்டயா ஒன் வீரத்தைக் காட்டுறே... என் ஆம்புடையான கூட்டிவாறேன். அதுக்கிட்ட காட்டு’

தவசிமுத்து, மீனாட்சியை விட்டுவிட்டு, அவள் அம்மா குப்பம்மாவை பயந்து பார்த்தார். ஆனாலும் வீறாப்பு குறையாமலே பேசினார்.

"இப்பத்தான் புரியுது... தாயும் மகளுமாய் நல்லாத்தான் பிளான் போட்டு இருக்கிங்க. இவனுக்கு வந்திருக்கிற தீராத நோயை சாக்கா வச்சி, எல்லாத்தையும் உரியறதுக்கு திட்டம் போட்டே. ஒன் மகள பழக விட்டிருக்கே... நான் விடுவனா.. இல்லாட்டால் ஒட்டுவாரொட்டி நோயாளியோட, ஒன்மகளை பழக விடுவியா?”

முப்பத்தைந்து வயது, இருபத்தெட்டைக்காட்டும்படி, வயிறு பெருக்காமல், இடைச்சதை தெரியாமல், காக்காபொன்நிறத்தில் சுடர்விட்ட குப்பம்மா, மகள் மீனாட்சியையும், மனோகரையும், வெறித்துப் பார்த்தாள். நண்டும் சிண்டுமான பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக, தாயோடு மகளாய், இந்த மீனாட்சியைப் பத்துப்பாத்திரம் தேய்க்க வைத்தவள் இவள்தான். இதனால் தான் பெற்ற பெண்ணுக்கு பள்ளிக் கூடத்தில் மத்தியானச்சாப்பாடு கூட கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும், இந்தப் 160 பாலைப்புறா

பிள்ளையாண்டானும், கலைவாணியும் இவளைக் கிட்டத்தட்ட வீட்டோடு வைத்துக் கொண்டார்கள். ஐந்தாறு வீட்டுக்காரர்கள் பார்ட் டைமாய் கொடுக்கும் பணத்தை, இவர்கள், ஒட்டுமொத்தமாகக் கொடுத்தார்கள். இதே மனோகர், டில்லிக்கோ, பம்பாய்க்கோ போனபோது, மீனாட்சிக்கு சல்வார் கமிஸ் வாங்கிட்டு வந்தது. அப்படிப்பட்ட பிள்ளையாண்டான்கிட்ட அடுக்குமாடி அம்மாக்கள், மீனாட்சியை அனுப்பக்கூடாது என்றார்கள். இப்போது கூட லேசாய் தயங்கியவளை, எட்வர்ட் சாமுவேல் அம்மாவும், மோனியோ கூனியோ, அந்த பொம்மனாட்டியும், முதுகைப் பிடித்து இந்தப் பக்கமாய்த் தள்ளிவிட்டார்கள். ஆளுக்கு ஆள் ‘மனோகர்கிட்டே இருக்கிறது மீனாட்சிக்கும், அவள்கிட்ட இருக்கிறது உனக்கும், அப்புறம் எங்களுக்கும் வரும். அதுக்குள்ளே நீயா நின்னுடு... இல்லன்னா நாங்களே நிறுத்திருவோம்’ என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள் இவளும், நேற்றே மீனாட்சியிடம், இந்த பக்கம் தலைகாட்டக் கூடாது என்று ஆணையிட்டாள். குப்பம்மா, மனோகரை கோபமாகப் பார்த்தாள். "என் பொண்ண ஏய்யா அனுப்பி வைக்கல” என்று கேட்கப் போனாள். ஆனால், அந்த முகத்தைப் பார்த்ததும், வார்த்தைகள் வாய்க்குள்ளேயே சத்தியாக்கிரகம் செய்தன. இதனால், அவள் கோபம் முழுவதும், மகள் மீனாட்சி மீது திரும்பியது; தவசிமுத்து வேறு உசுப்பி விட்டார்.

‘ஏன் பேசமாட்டக்கே... திருடனுக்கு தேள் கொட்டுனது மாதிரி இருக்குதோ'..

குப்பம்மா பார்த்த பார்வையில், மீனாட்சி புரிந்து கொண்டாள். எவர் தனது காதைப் பிடித்து, கையை முறுக்கி இம்சித்தாரோ, அந்த தவசிமுத்துவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். ஆனாலும், குப்பம்மா கைகளை வளைத்து வைத்துக் கொண்டு, மீனாட்சியை கெளவப் போன போது, தவசிமுத்துவே இந்தா ஒன் மகள் என்று மீனாட்சியை, தாய்க்காரி பக்கமாய்த் தள்ளிவிட்டார்.

குப்பம்மா, மகளின் இரண்டு காதுகளையும் பிடித்து, மேலே தூக்கி கீழே போட்டாள். அவள் தலைமுடியை சுருட்டிப் பிடித்து, தரையில் இருந்து அலாக்காய் தாக்கி பிடித்து, மகளின், கால்களில், தன் கால்களால் ஒரு இடறு இடறிக் கேட்டாள்.

"இனிமேல்... வர்வியா... சொல்லு வர்வியா?”

‘வர்வேன்... வர்வேன்’.

‘அவ்வளவு திமிரா... ஒனக்கு... வரமாட்டேன்னு சொல்லு... இல்லாட்டி ஒரு கையாவது முறியாமப் போகாது... சொல்லுமே... வர்வியா...' சு. சமுத்திரம் 161

"வர்வேன்... அண்ணாவுக்கு யாருமில்லை... வர்வேன்”. "மவளே... இன்னிக்கி... ஒனக்கு சாவடி கொடுக்கேன் பாரு...”

தாயும் மகளும், அடையாளம் தெரியாமல் ஒன்றானார்கள். கீழே விழுந்த மகளை மேலே மேலே தூக்குவதும், மேலே எழும் மகளை, கீழே தள்ளுவதுமா, குப்பம்மா இயங்கினாள். மீனாட்சியைக் கீழே கிடத்தி,அவள் முடியை காலால் அழுத்திக்கேட்டாள்.

“இங்கே வர்வியா?”.

சிறிது மெளனம்... பேசமுடியாத வலி.. பிறகு, 'வர்வேன், வர்வேன்...’ என்ற சப்தம்.

குப்பம்மாவுக்கு, இப்போது, தான் பெரிசா அல்லது மகள் பெரிசா என்று நிரூபிக்க வேண்டும் போலிருந்தது. அதோட, பெத்த நாய்னாவே மகனுக்கு வந்திருப்பது ஒட்டுவோர் ஒட்டி நோயின்னு சொல்லிட்டார். இதற்கு மேலேயும், மீனாட்சியை இங்கே விட்டுவைப்பது யாருக்குமே நல்லதுல்ல...

மகளின் தலைமுடியில் வைத்த கால் பிடியை தளரவிட்ட குப்பம்மா, மீண்டும் குனிந்து, அந்த முடிக்கற்றையை கைப்பிடியால் இறுக்கிப் பிடித்தாள். மீண்டும் மீனாட்சியை சுழல் ராட்டினமாய் ஆக்கப் போனாள். இதற்குள் மனோகர், இருவருக்கும் இடையே வந்தான். கேவிக் கேவி அழுதான். தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். ‘என்னை அடி’ என்பதுபோல், குப்பம்மாவின் கையைத்துக்கி, தன்தலையிலேயே அடித்துக் கொண்டான். ஆடிப் போன குப்பம்மா, மகளை விட்டுட்டு, அவனையே பச்சாதாபமாகப் பார்த்தாள். ஆனால், மனோகரோ, மீனாட்சியை தன் பக்கமாகத் திருப்பி விட்டுக் கொண்டு மன்றாடினான்...

‘அம்மா. சொல்றதைக் கேளும்மா... மீனுக்குட்டி, இந்த அண்ணன் யாருக்குமே பிரயோசனமில்லாமல், போனவம்மா...நீ நல்லா இருக்கணும்... அடம் பிடிக்காமல், அம்மா பின்னால போம்மா... இந்த அண்ணன் சாகிறது வரைக்கும், ஒன்னை நெனைச்சிட்டுக்கிட்டுத்தான் சாவேம்மா...’

மனோகர், மீனாட்சியின் கையைப் பிடித்து, குப்பம்மாவிடம் ஒப்படைத்தான். முரண்டு பிடித்த மீனாட்சியை, குப்பம்மா பக்கமாக செல்லமாய்த் தள்ளிவிட்டான். பிறகு, அப்பனைப் பார்த்தபடியே சூட்கேஸை திறந்தான். நம்பர் பூட்டு கொண்ட சூட்கேஸ் பெட்டியைத் திறந்து, நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக் குப்பம்மாவிடம் நீட்டினான்;

‘மீனாட்சி பேருக்கு, இந்த ஐயாயிரம் ரூபாயையும் பேங்கில் டிபாசிட்டாய் போடுங்கம்மா... அவள் கல்யாணத்துக்கு ரொம்ப உதவியாய் இருக்கும்’. 162 பாலைப்புறா

குப்பம்மா, எதேச்சையாக நீண்ட கரங்களை மடக்கிக் கொண்டாள். இந்தப் பணத்தை வாங்குவது, இந்த ‘பெரிசு' சொன்னதை நிரூபிப்பதாகிவிடும். அவளும், மனதைப் பொருத்த அளவில் பணக்காரிதான்; குப்பம்மா அந்த பணக்கட்டை மனோகரிடம் திணித்தபடியே விடை பெற்றாள்.

‘ஒன்மனசே போதும் தம்பி. நீ நல்லா இருக்கணும்’ ‘மீனாட்சிய அடிக்காதம்மா' ‘அடிக்க மாட்டேம்பா.. அடிக்கவே மாட்டேன்’ ‘எப்போதாவது... அவள தொலைவுல நின்னு காட்டும்மா...’

‘ஆகட்டும்பா... ஆகட்டும்பா...’ ‘மீனுக் குட்டி...நானும் கலைவாணியும், சித்ரவதை படாம சீக்கிரமா போக வேண்டிய இடத்திற்கு போகணுமுன்னு சாமி கும்புடம்மா... நீ... கும்பிட்டா பலிக்கும்மா...’

‘கும்புடுவாப்பா... கும்புடுவாள்...’ குப்பம்மா, முந்தானையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். அங்கே நின்றால், அழுகை, கூட்டத்தைக் கூட்டிவிடும் என்று நினைத்தவள் போல், மான்குட்டியாய் மருண்ட மீனாட்சியை உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டு, வாசலைத் தாண்டி ஒரே ஒட்டமாய் ஒடினாள். அவனுக்கு கையாட்டியபடியே திரும்பித் திரும்பிப் பார்த்த மீனாட்சிக்கு, பதிலுக்கு கையாட்டியபடியே, மனோகர் உடலாட நின்றான். கண்ணின் வேர்வை உடம்பின் ஒவ்வொரு அணுவும் சிந்திய கண்ணிரில் கலந்தது. உதவிக்கு இருந்த ஒரே ஜீவனும் போய்விட்டது. இனிமேல் சொந்த ஜீவன் போக வேண்டியதுதான் பாக்கி, ஒவ்வொருவரிடமும் மரணம் தனித்தனியாய் வரலாம். அதற்காக அந்த ஒருத்தரை, தனிப்படுத்தலாமா...

மனோகர், எதுவுமே நடக்காததுபோல் நாற்காலியில், மோவாயில் கை வைத்து உட்கார்ந்த தகப்பனிடம் சீறிப் பேசினான்.

‘எனக்கு வேண்டியவங்களே போனபிறகு... இந்த வீட்ல யாரும் இருக்க வேண்டியதில்லை’

தவசிமுத்து, பதில் பேசவில்லை. கால்களைத், தரையில் தேய்த்தார். மடியில் இருந்த வெற்றிலை பாக்கை எடுத்துப் போட்டார். கைகளைக் கோர்த்தார். கண்களைச் சிமிட்டினார். இதற்கு மேல் நின்றால், கழுத்தைப் பிடித்து தள்ளினாலும் தள்ளலாம். தள்ளினாலும் போக முடியாதே... லாக்கர் நகையை வாங்கணும். கம்பெனி கொடுத்த பணத்தையும் கறக்கணும். மீராவையும் கரையேற்றிவிடலாம். பக்கத்து வயலையும் வாங்கிடலாம். சு. சமுத்திரம் 163

அந்த பெட்டிக்கு என்ன நம்பர் பூட்டு... புத்தியை கடன் கொடுத்துட்டேனே...

மனோகர் கத்தினான். 'யாரும் இங்கே நிற்கப்படாது'. ‘இதுக்குப் பேர்தான் பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு என்கிறது... சரி சரி... நான்...வண்ணாரப்பேட்டைக்குப் போயிட்டு...சாயங்காலமாய் வாறேன். எங்கேயும் போயிடாதே.'

தவசிமுத்து போய்விட்டார். பொறுத்தவர் பூமியாள்வார் என்று, தனக்குத்தானே எப்போதோ கேட்டதை, அப்போதும் நினைத்துக் கொண்டு போய்விட்டார். மனோகரும், கல்லுக்குள் தேரைபோல் போர்வைக்குள் முடங்கிக் கொண்டான். சென்னை மீனாட்சி, மீண்டும் மதுரைக்குப் போய்விட்டாள். இந்தக் கிருமிகள், வெள்ளை அணுக்களை மட்டுமா அழிக்கின்றன. பாசம், பந்தம், பணம், உறவு, எல்லாவற்றையுமே அழிக்கின்றன. உள்ளே அணு அணுவாய் அழிக்கின்றன என்றால், வெளியே ஒரேயடியாய் அழிக்கின்றன.

மனோகர் அழவில்லை... சிரிப்பாய் சிரித்தான். வெடிச்சிரிப்பாய்... வெறுஞ் சிரிப்பாய்... வெறுமை சிரிப்பாய்... சிரித்தான். சிரிக்கச் சிரிக்க அழுகை. அழ அழசிரிப்பு. கண்ணதாசா, ஒன்வாயில் சர்க்கரை போடணும் சாமி.

மனோகர், கட்டிலோடு கட்டிலாய் ஒடுங்கினான். போர்வையை இழுத்து, உச்சி முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டான். ஒரே இருட்டு... அவனுக்குப் பிடித்தமான இருள்.

மனோகர், தான் எடுக்காமலே கீழே விழுந்த போர்வையைப் பார்க்க கண்ணைத் திறந்தான். அவனுக்கு முன்னால், நான்கைந்து பேர்கள்... அவர்களில் ஒருத்தி பெண். இருபது வயதிருக்கலாம். நீல நிறப் பேண்ட்..., முழங்கைவரை மடிக்கப்பட்ட ஊதாநிற முழுக்கைச்சட்டை... ஆச்சர்யமாய் பார்த்த மனோகர், எழுந்து உட்கார்ந்தான். அதற்குள், அவன் பக்கத்தில் உட்கார்ந்த உயரமான இளைஞன், எடுத்த எடுப்பிலேயே இப்படி பேசினான்.

"கவலைப்படாதடா... மனோகர்... நாங்க அந்நியர்கள் இல்ல. அன்னியோன்யமானவர்கள். ஒன்னை மாதிரியே எய்ட்ஸ் கிராக்கிகள்; ஒன்னொட நண்பர்கள். அதனாலதான் ஒன்னை ‘டா’ போட்டு கூப்பிட்டேன்டா... நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எங்களுக்குத் தெரியும்... இனிமேல் நீ பிள்ளைப்பூச்சி இல்லே. தேள். விஷம் பிடிச்சி கொட்டுற தேள். வாழ்வது வரைக்கும் சந்தோஷமா வாழப்போற சராசரிக்கும் மேலான மனிதன். கவலைய விடுடா மச்சி. இனிமேல் நீதான் நாங்க, நாங்கதான் நீ."

மனோகர், அவர்களை ஆறுதலோடு பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_17&oldid=1639237" இலிருந்து மீள்விக்கப்பட்டது