உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

காலையில் எழுந்ததும் கண்ணன்மேல் காதல் முறுகிவரும். காணவேண்டும் என்ற எண்ணம் கட்டினை எல்லாம் தாண்டிக் குதிக்கும். கண்ணனுடைய ஊர், அடுத்த ஊர்; நீர் வளம் சிறந்தது. அதனைத் தன் ஏழ்நிலை மாடத்தில் இருந்து பார்க்கின்றாள் நப்பின்னை. தண்ணீர், கதிரவன் ஒளியில் பளபள என மின்னுகிறது. கண்ணன் முகத்தில் கண்கள் மின்னுவதனைக் காண்பதுபோல் இவள் கண்டு மகிழ்கின்றாள். இவளுடைய ஐம்புலனும் ஒருமுகப்பட்டு அவனையே எண்ணுகின்றன. அந்தத் தண்ணீரைச் சுற்றி ஏதோ ஒன்று நகர்கின்றது. வலம்புரிச் சங்குதான் ஊர்கின்றது என்கிறாள் இவள். அதன் ஒலியும் இவளுக்குக் கேட்பதுபோலத் தோன்றுகின்றது. அவனோடு தொடர்புபட்டது எல்லாம் இவளுக்கும் இனிக்கும் அன்றோ? இந்தச் சங்கின் ஒலியும் மிகமிக இனிக்கின்றது. புதிய ஒலிதான்! இருந்தால் என்ன? புதிய பாணர்கள் புதிய புதிய பாடல்களைப் பாடவில்லையா?ஆம்! அந்தப் பாடல்கள்போலவே இந்தச் சங்கோசையும் இவள் உள்ளத்தே பேரிசைப் பாட்டாக வளர்ந்து பேரின்பம் ஊட்டுகிறது.

கண்ணன் வருகிறான்; ஒருவருக்கும் தெரியாமல் இவர்களது வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைகின்றான். நப்பின்னையும் கீழிறங்கி ஒருவருக்கும் தெரியாமல் எதிர்கொண்டழைக்கின்றாள். இருவரும் கொடி வீட்டினுள் புகுகின்றனர். மறைவான இடம் அன்றோ அது! காதலியைக் கண்டதும் காதலன் அணைக்கின்றான்; "கண்ணே" என்கின்றான். நப்பின்னை யாரோ தன்னைப் பார்த்துவிட்டதுபோலத் திடுக்கிடுகின்றாள்.

"இதோ எங்கள் அக்காள், அக்காள்!" என்று நடுங்கி நாணிக் கூறிக்கொண்டே தன்னை அவன் கையிலிருந்து

15