உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சிய வரலாறு/தூத்துக்குடி

விக்கிமூலம் இலிருந்து

தூத்துக்குடி

அவன் கரங்களிலே இரும்புச் சங்கிலி !

கால்களையும் இரும்புச் சங்கிலி கொண்டு, அசைக்க முடியாத பாறையிலே கட்டி விட்டனர்.

கண்களின் மீது கனமான ஓர் துணிக்கட்டு.

அவனைக் கண்டதும், 'அவன் ஓர் துர்ப்பாக்கியன், துயரத்துடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருக்கிறான்— அடிமைச் சங்கிலிகள் அவனைக் கொடுமைக்காளாக்குகின்றன' என்பது விளங்குகிறது.

அவனைச் சுற்றிலும், மனித சஞ்சாரம் அதிக மற்ற இடம். தொலைவிலே, அலைஓசை கேட்கிறது.

கடும் காற்று வீசுகிறது.

மழையும் பொழிகிறது.

அவன் நெளிகிறான்—

அவன் பொருட்டுப் பேசுவோர் இல்லை !

கட்டுகளை அவிழ்த்துவிடும் கண்ணியம் கொண்டவர் இல்லை.

ஏன் இந்நிலை பிறந்தது என்று கேட்கும் வீரன் இல்லை அவனோ நெளிகிறான்—தன் பலத்துக்கு மீறிய பலத்தால்

அழுத்தி வைக்கப்பட்ட அவனால் நெளியமட்டுமே முடிகிறது.

ஒரு உதவி ! ஒரு அபயக் குரல் கேட்குமா, என்று ஆவலுடன், உற்றுக் கேட்கிறான். தொலைவிலே, ஓர் காலடிச் சத்தம் கேட்குமா என்று காத்துக்கிடக்கிறான். ஒரு அன்புமொழி, இரக்கச்சொல், நம்பிக்கையூட்டும் வார்த்தை கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக் கிடக்கிறான்.

கண்களை மூடிக்கொண்டிருக்கும் துண்டுத் துணியையானது விலக்க ஒருவர் கிடைக்க மாட்டாரா என்று எண்ணுகிறான்— நெளிகிறான்— நெளிகிறான்--நெளியும் நிலையிலேயே யோசிக்கிறான், "இன்னும் சற்றுபலமாக மேலும் கொஞ்சம் உறுதியுடன்— சேர்வு அடையாமல்— நம்பிக்கையை இழக்காமல், பிணைப்பிலிருந்து விடுபட முயற்சி செய்—இரும்புச் சங்கிலிதான்; ஆனால் எஃகு உள்ளம் இருக்கிறது உனக்கு, அஞ்சாதே, இதோ தளை அறுபடும் நிலை ஏற்பட்டு விட்டது, வீரனே! விசாரம் கொள்ளாதே!" என்று யாராவது கூறமாட்டார்களா, ஆர்வம் தரமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறான். கடும் காற்றுத்தான் வீசுகிறது ! அலையின் ஒலிதான் கேட்கிறது ! அவன் எதிர்பார்க்கும் உதவிக்குரல் கிளம்பவில்லை. சிங்காரச் சிறுபடகுகளிலே ஏறிக்கொண்டு, வெகு தொலைவிலே, யாரோ செல்கிறார்கள்— அவர்கள் பாடும் சிந்து செவிக்கு வருகிறது.

வேறு எங்கிருந்தோ, குமுறல் சத்தம் கேட்கிறது. ஆனால் அவன் அருகே வருவார் யாருமில்லை ! அவன் நிலைமையை மாற்றத் துணிவு கொள்வார் யாரையும் காணோம். அவன் அடிமை ! அவன் அவதிக்காளானவன் ! அவனுக்கு உறுதுணையாக ஏதும் இல்லை !!

முப்பதாண்டுகளுக்கு முன்பு திராவிடன் இந்நிலையில் இருந்தான், ஜாதி மதம் எனும் தளைகளால் கட்டப்பட்டு ஆரியமெனும் கற்பாறையிலே பிணைக்கப்பட்டு, அஞ்ஞானமெனும் துண்டுத் துணி கொண்டு கண்கள் கட்டப்பட்டு, உலகம் மாறிக் கொண்டிருந்த நாட்களில், உரிமைப்போர் முழக்கம் எங்கெங்கோ கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் விடுபடும் வழிவகை அறியாது, உதவிக்கோர் துணைகிடைக்காது; தன் பலத்துக்கு மேற்பட்ட பலத்தால் தாக்குண்டு, தத்தளித்துக் கொண்டிருந்தான். அவன் கரத்திலும் காலிலும் இருந்த தளைகளைவிட, அதிக பயங்கரமானதோர் தளை, அவன் கருத்திலே! திடீரென்று பூட்டப்பட்ட தளையுமல்ல—அவனுடைய வெள்ளை உள்ளத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, மெள்ள மெள்ள, கள்ளக் கருத்துக் கொண்டோர், பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூட்டிய தளைகள், திக்குத் தெரியாத காட்டில், திரிந்து திகைக்கும். சிறு பறவைபோல, எந்தப் பக்கம் சென்றாலும் துறைமுகம் கிடைக்காது, கலங்கும் ஓடக்காரன்போல, தளைகளால் கட்டுண்டு தவித்துக் கொண்டிருந்தான்.

நெடு நாட்களாக இந்நிலை இருந்து வந்ததால் அவன், தன்னம்பிக்கையையும் இழந்து விட்டான்.

நெளிவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். தன்மேல் பூட்டப்பட்டுள்ளவை, தளைகள் என்று எண்ணுவதையும் நிறுத்த. முயற்சிக்கலானான், கண்களை மறைக்கும் துண்டுத் துணியையும் ஊடுருவித் தன் பார்வையைச் செலுத்த முயற்சித்துத் தோற்றதால், கண்ணுக்குப் பார்வை உண்டு என்ற எண்ணத்திலேயே சந்தேகம் கொண்டு விட்டான். நமக்கு விடுதலை இல்லை, விமோசனம் இல்லை—இவை அறுபடாத் தளைகள்—இது விடுபட முடியாத நிலைமை என்றே கூடத் தீர்மானித்து விட்டான்.

இந்நிலையை மாற்றலாம்—மாற்ற முடியும்—மாற்றிக் காட்டுகிறேன்—என்று கூற, இந்தத் தமிழகத்திலே, ஒருவர் மட்டும், துணிவு பெற்றார்—பணி புரியலானார்—படை ஒன்றைத் திரட்டினார்—கண்கள் மீதிருந்த துண்டுத் துணியைக் கிழித்தெறிந்தார்—தளைகளையும் நொறுக்கலானார்.

நம்பிக்கையை இழந்து போயிருந்தவனுக்கு, முதலில் மிரட்சியே உண்டாயிற்று ! "சாத்யமற்ற காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறாய் ! முன்பு, என் கண்கள் மூடிக்கிடந்தன ! தளைகள் உள்ளன என்ற நினைப்பு மட்டுமே இருந்தது—அவை, எப்படிப்பட்டவை என்பதை நான் அறியவில்லை—கண் திறக்கப்பட்டு விட்டது. இப்போது, தெரிகிறது. தளைகள் மிகமிகப் பலமானவை என்று—எப்படி, இவைகளை நொறுக்க முடியுமா ? உன்னிடமோ சம்மட்டி இல்லை ! கரத்தாலேயே நொறுக்குகிறாய், அதனால் வேதனைக்கு ஆளாகிறாய்; பாபம் ! உன்னால் முடியாத காரியம் ! முயற்சியை விட்டுவிடு ! ஏதோ கண் திறந்திருப்பது போதும், வானத்தைக் காண்கிறேன், விண்ணிலே பறக்கும் பட்சிகளைப் பார்க்கிறேன்—அலையைக் காண்கிறேன்,— மகிழ்கிறேன்— இதுபோதும். இந்தத் தளைகள் உன் தாக்குதலால் அறுபடாது" என்று கூறினான்.

"ஆமாம் — ஆமாம்—பலமான தளை என்றார் அவர்.

"பலமான தளைகள் மட்டுமல்ல—இன்று நேற்று, ஈராண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்ட தளைகளல்ல, பலப்பல காலமாக இருந்து வரும் தளைகள்" என்று, பிணைக்கப்பட்டிருந்தவன் கூறினான்.

அவர் புன்னகையுடன் சொன்னார், "இப்போதுதான் என் நம்பிக்கை அதிகமாகிறது. பன்னெடுங் காலத்துக்கு முன்பு பூட்டப்பட்டவைகள் இந்தத் தளைகள் ! நீ தளைகளின் பெருமை இது என்கிறாய். பைத்தியக்காரா ! சரியாக யோசித்துப் பார். இது பெருமைக்குரியதல்ல ! தளைகள் மிக மிகப் பழையன— எனவே வலிவற்றன ! பன்னெடுங்காலமாக உள்ளவை, எனவே காலத்தின் தாக்குதலால், கொஞ்சம் கொஞ்சமாக வலிவை இழந்துள்ளன. எனவே இவை, அறுபட முடியாதன. அல்ல, ஆற்றலுடன் நம்பிக்கையும் கொண்டு முயன்றால், தளைகளைப் பொடியுடச் செய்ய முடியும்" என்று உறுதியுடன் உரைத்தார். எங்கிருந்தோ, யாரோ, கேலிக் குரலில் சிரித்த சத்தம் கேட்டது. அதனைப் பொருட்படுத்தாது, தளையை நொறுக்கும் பணியினைத் தொடர்ந்து நடத்தலானார்— சலிக்காது வெற்றியுடன்— முப்பதாண்டுகளாக— கேலிச் சிரிப்பொலியை அடக்கும் அளவுக்கு வலுவடைகிறது, தளைகள் அறுபடும் சத்தம் !! நம்பிக்கை பலமாகிறது ! மங்கிக் கிடந்த கண்களிலிருந்து, புத்தொளி கிளம்புகிறது.

இந்த அரும்பணியினை ஆற்றலுடன் செய்து வரும் பெரியாருக்கு, விழிப்புற்று, நம்பிக்கையும் பெற்றுள்ள திராவிடம் தரும் அன்புக் காணிக்கைதான், சென்ற வருடம் தூத்துக்குடியில் நடைபெற்ற, திராவிடர் கழக மாகாண மாநாடு !

ஆடவரும், பெண்டிரும், கிழவரும், குழந்தைகளும், இலட்சம் பேருக்குமேல், திராவிடத்தின் தென் முனையிலே, கூடினர்— விழாக் கொண்டாடினர்.

மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் கொண்ட கட்சியினர், ஆள்தேடும் படலத்துக்கு வந்துள்ள நேரத்தில் இங்கு, ஆட்சிப் பீடத்தை நோக்கும் எண்ணமும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிய எடுத்துக் கூறிடும் திராவிடர் கழகத்துக்கு, ஒரு இலட்சம் மக்கள் கூடுகின்றனர் !— வெளிநாடு சென்று நெடுநாட்களுக்குப் பிறகு வீடு திரும்பும் மகன், வீட்டிற்குள் நுழையும் போது பெறும் உணர்ச்சி போன்றதோர் உள்ளக்கிளர்ச்சி பெறுகின்றனர்—தேடித் தேடிப் பிறகு கண்டெடுத்த கருவூலத்தைக் கண்டு களிப்பதுபோல் களிப்புறுகின்றனர். ஓர்வகைப் பாசம்—பற்று, அவர்களைப் பிணைக்கிறது—நடமாட வைக்கிறது.

"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசை ஓடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
"

என்ற கவிதை, காட்சியாகி, எழுச்சி நடமாடுகிறது. எண்ணத்திலே புதிய முறுக்கு ஏற்படுகிறது ! எப்படியும் தன் இலட்சியம் ஈடேறும் என்ற நம்பிக்கை ஊனில், உயிரில் கலந்து, அவர்களைப் புது மனிதராக்குகிறது. இது நடைபெறும் அது நடைபெறும் என்று எதிர்பார்த்து, அவை நடைபெறாது போயினுங்கூட, சஞ்சலத்துக்கு இடம் இருப்பதில்லை; சந்தோஷம் பிறக்கிறது!

'புல்லேத்தும் கையால் வாள் ஏந்துவோம் என்று பிதற்றிடும் பேதைகள், இந்த 'நிலைமை' எதன் அறிகுறி, எத்தகைய சின்னம், இது காட்டும் பாடம் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆணவத்தால் சிறுமதி கொண்ட, புல்லேந்திகள் இதனை உணராதிருக்கிறார்கள்—அவர்களை யோசிக்கச் சொல்கிறோம்—இந்த ஆர்வத்துக்குப் பொருள் என்ன? ஒரு இனம் விழிப்படைந்து விட்டது, என்பதாகும் ! புலி விழித்துக் கொண்டது என்பதாகும்! இந்நிலையில் புல்லேந்தும் கையிலே, வாளேந்திக் காணப்போவதென்ன ?

காலப்போக்கை, ஒரு இள மக்களின் கருத்திலே விளைந்துள்ள புதுமையை விளக்கமாக்கிடும் வகையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டினின்றும்கூட, அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஏதோ மகா புத்திசாலிகள் என்று கூறப்படும் பேச்சுங்கூட அபத்தம் என்றே கூறுவோம். மிக மிக மட்டரகமான மனப்பான்மையும், மிக மிகக் குறைந்த தரமான புத்தியும் இருக்கும் காரணத்தாலேதான், புல்லேந்தும் கரத்தால் வாளேந்துவோம் என்று கூறத்துணிவு பிறந்தது— இந்தத் "துணிவு" — அறியாமையும் ஆணவமும் கலந்த இந்த மனப்போக்கு எவ்வளவு கேலிக்குரியது என்பதை விளக்கும் எழில்மிகு சித்திரம், தூத்துக்குடி மாநாடு !

எனவே, மாநாட்டுச் சிறப்பு, கழகத்தவருக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல, தங்கள் மமதைக்கு நாடு இனியும் இடமளிக்கும் என்று எண்ணும் மந்த மதியினருக்கு, ஓர் அபாய அறிவிப்பாகும். அன்று அங்கு கூடிய மாபெரும் கூட்டம், வழக்கமாகக் கட்சிகள் எத்தகைய 'ஆசாபாசங்களில்' சிக்கிக் கொள்வது வாடிக்கையோ, அவ்விதமான 'ஆசாபாசங்களை' அதாவது, அரசியல் சூதாட்டம், பதவி வேட்டை எனும் தன்மைகளை விட்டொழித்த கூட்டம் என்பதை உணர்ந்தால்தான் வளர்ந்துள்ள சக்தி எத்தகையது, அதன் விளைவு யாதாக இருக்கும் என்பது புரியும். முப்புரியினர், வேதத்தின் உட் பொருளை எல்லாம் உணர்ந்தவர்கள், என்று பெருமை பேசுகின்றனர்— ஆனால், அவர்களுக்கு, இந்த உண்மை மட்டும் இன்னமும் புரிந்ததாகத் தெரியவில்லை. புரிந்திருக்குமானால் 'பாரத தேவி' 11-தேதி இதழில், பழைய பித்தத்தைக் கக்கியிருக்காது— மற்றோர் முப்புரி, புல்லேந்தும் கையால் வாளேந்துவோம் என்று பிதற்றியிருக்காது, நாடு இன்றுள்ள நிலையை அவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளாததாலேயே, இந்தப் பித்தம் அவர்களுக்குக் குறையவில்லை. தூத்துக்குடி மாநாடாவது அவர்களுக்குத் தெளிவை உண்டாக்கட்டும்.

ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால், அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு விட்டால், வளர்ந்து வரும் சக்தி சிதறும் சிதையும், என்ற சித்தாந்தம் சேலம் மாநாட்டிலே, நாம் பெற்ற பெரும் பாடம். கழகம் இனியும் அதே போக்கிலேதான் செல்லும் என்பதைத் தலைவர் தெளிவாக்கி விட்டார். எனவே, பச்சைப் பசேலெனக் கழகம் இருப்பது கண்டு, பறந்து வந்து தங்கும் அரசியல் பட்டுப்பூச்சிகளுக்கும், வெட்டுக்கிளிகளுக்கும் கழகம் பலியிடப்படமாட்டாது என்பது தெளிவாகி விட்டது.

ஆசாபாசத்தை அறுத்துவிட்டு, ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டு, கூட்டத்திலே ஆள்சேருவது ஏது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கூட்டம் ஒரு இலட்சம் இருக்கும், இரண்டு இலட்சம் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் மதிப்பிடும் அளவுக்கு நிலைமை முன்னேறி, இதெல்லாம் தேர்தலுக்காக, பதவிக்காக பட்டத்துக்காக, காண்டிராக்டுக்காக என்ற பழிச் சொல்லிலிருந்து விடுபட்டு இது சமுதாயத்தைப் புது உருவாக்க, அறிவுத் துறையிலே புரட்சியை உண்டாக்க, என்று கூறத்தக்க முறைக்கு முன்னேறியுள்ள இந்த மாபெரும் சக்தியை உதாசீனப்படுத்துபவர், உலுத்தராக இருக்க முடியுமே தவிர, உள்ளத்தின் போக்கை யூகித்துரைக்கக் கூடியவர்களாக இருக்க முடியாது. ஆகட்டும்; அடுத்த தேர்தலிலே, அரைகோடி ஒரு கோடி செலவிட்டாவது இதுகளைத் தொலைத்துவிடுகிறேன் என்று கூறவும் முடியாது. பதவி பிடிக்கும் சுயநலமிகள் இவர்கள், பாரீர் இன்னின்னார் இன்னின்ன பதவிக்குப் பல்லிளிக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டி, 'இதுகளை வெளியே தலைகாட்ட முடியாதபடி செய்து விடுகிறோம்' என்று வீம்பு பேசவும் இடமில்லை.

"உரத்த குரலிலே கூவிடுவோருக்கு உயர்ந்த பதவி கொடுத்துவிட்டு, செல்லப்பிள்ளையாக்கிக் கொள்வோம் " என்ற தந்திரம் புரியவும் இடமில்லை. ஏனெனில், திராவிடர் கழகம், இத்தகைய ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டது— சேலத்தில் புடம் போட்ட தங்கம், மாற்றுக் குறையாததாகி விட்டது. இந்த மகத்தான உண்மையை, "முகத்திலுதித்த" முத்தண்ணாக் கூட்டம், சற்று உணர வேண்டும்.

"இருக்கட்டும் இருக்கட்டும், இதுகளின் மீது காங்கிரசை மோதவிட்டு, இரு மண்டைகளிலிருந்தும் குருதி கொட்டக்கண்டு மகிழ்வோம்" என்ற நயவஞ்சக நினைப்புக்கும், இடமளிக்கவில்லை கழகம். ஏனெனில், காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலிலோ, பதவிகளிலோ போட்டியிடும் எண்ணத்தையும் அறவே நீக்கிவிட்ட நிலை பெற்றுவிட்டது.

எனவேதான், 'ஆசாபாசம், அறுபட்ட நிலையை நாம் மிக மிக ஜீவசக்தி தருவது' என்று கூறுகிறோம்

கழகத்தின் நோக்கமிருக்கட்டும், நிலை இருக்கட்டும், கழகத்துக்குள்ளே பிளவும் பேதமும், அதிசமாகி வருகிறதாமே-- என்று பேசுவதன் மூலம் திருப்தியைத் தருவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் விட்டுவிட வேண்டும்; முன்பு புல்லேந்தி இனி வில்லேந்தலாம் என்று எண்ணும் கூட்டத்தினர். பேதம் உண்டு. ஆனால், அந்தப் பேதம், பேதப்பட்டுள்ள இரு பிரிவினரும், இடையே உள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், தன்மையை உணர்ந்து கொள்ளவும், வசதி தருமே; ஒழிய, எதிரிக்கு இடந்தருவதற்கு எள்ளளவும் உபயோகப் படாது. சிற்சில சந்தர்ப்பங்களைச் சிலர்; எப்படி எப்படி உபயோகித்துக் கொள்வார்கள் என்பதைக் கண்டறியும் ஒரு போட்டிப் பந்தயம் போன்றதே, பேதம். இது எந்த வகையிலும், மாற்றார்க்கு இடந்தரும் மன நிலையை ஏற்படுத்தாது.

எனவே, தூத்துக்குடி மாநாடு தரும் பாடம், என்ன என்பதை நாட்டிலே நாலு ஜாதி வகுத்தவர்களும், நாடாள்வோரும் உணர வேண்டும். அங்கு கூடிய மக்களின் உள்ளத்திலே இருந்ததெல்லாம்,

ஜாதி பேதமற்ற—பொருளாதார பேதமற்ற—அறிவுத் தெளிவுபெற்ற அன்னியனின் சுரண்டலுக்கு ஆளாகாத ஓர் இனம்.— அதன் உரிமையுள்ள ஆட்சியை அமைத்துக் கொண்டு, உலக மன்றத்திலே வீற்றிருக்க வேண்டும்.

என்பதுதான். இந்த மூலக் கருத்தை இனி முறியடிக்க முடியாது— இதன் வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது. இக் கருத்து, கழகக் கோட்டத்தோடும் நின்றுவிடவில்லை-கதர்ச் சட்டையைத் துளைத்துக் கொண்டு, காங்கிரஸ் நண்பர்களின் உள்ளங்களிலே இடம்பெற்று வருகிறது. நாட்டிலே நல்லறிவாளர் பேசும் பேச்சிலே, இந்தக் கருத்து வெளிவருகிறது. புதிய கவிதைகள், புதிய நாடகங்கள், புதிய சினிமாக்கள், எதிலும் இந்த மூலக் கருத்து தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. எனவே, இந்தக் கருத்தைக் குலைத்துவிட முடியும் என்று கனவு காணும் நிலையை விட்டு விட்டு, காலத்தின் தாக்குதல் பலமாக விழா முன்பே, கருத்திலே தெளிவைக்கொண்டு நீதியை நிலைநாட்ட முற்பட வேண்டுகிறோம். கரங்களிலேயும் கருத்திலேயும் இரும்புச் சங்கிலி போட்டு விட்டிருக்கிறோமே எங்ஙனம் அந்த அடிமை விடுபட முடியும் என்று எண்ணியவர்கள் கண்முன்பு, இன்று, அறுபட்ட தளைகளைக் கழற்றி வீசிடாமலும்கூட, திராவிடன் ஏறு நடை நடந்து வந்து, எதிரே நின்று,


இது என் நாடு ! —இயற்கை, இதைப் பொன்னாடு ஆக்கும்—
         இங்கு ஜாதி கூடாது !— மதத்தின் கொடுமை கூடாது
         பொருளாதார பேதம் கூடாது !—வடநாட்டுச் சுரண்டல் கூடாது !
         உரிமை வேண்டும் புது வாழ்வுவேண்டும் !
என்று கூறுகிறான்.

காற்றையும், கடலலையையும் கேட்டுக் கலங்கிய திராவிடனின் செவியிலே, ஒரு இலட்சம் மக்களின் உணர்ச்சியும், சூளுரையும் விழுந்தது ! அவன் வெற்றிப் பாதையில் நடக்கிறான்— அந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது—வெற்றியைக் கெடுக்க இயலாது— அவன் விழிப்புற்றான், எழுச்சியுற்றான், கூட்டினை விட்டுக் கிளம்பிய சிங்கமெனக் காணப்படுகிறான். முப்புரியினருக்கு 'ஞானக்கண்' உண்டென்று வீம்பு பேசுபவர், அந்த ஞானக்கண் கொண்டுகூட அல்ல, சாதாரண ஊனக்கண்ணும், சராசரி மூளை பலமும் கொண்டு கண்டாலே போதும்; மறைக்க முடியாத உண்மையைக் காணலாம் !