பக்கம்:இருட்டு ராஜா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106இருட்டு ராஜா

 “அப்படி நடக்கணும்னு இருந்தா நடந்திட்டுப் போகுது! யாரு என்ன பண்ண முடியும்? எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் அடிக்கடி சொல்லுவாரு—புருசனோடு வாழ முடியாம தன் வீட்டோடு வந்துவிட்ட மகளைப் பத்திப் பேசையிலே தான் சொல்லுவாரு . வீட்டிலே இருந்துட்டுப்போறா. சாப்பாட்டுக்கு தயக்கமில்லே. நிலம் விளைஞ்சு நெல்லு வரும். குடியிருக்க வீடு இருக்கு. செலவுக்குப் போதுமானபடி பணமும் இருக்கு. பின்னே என்ன? ஏன் வீணாக் கவலைப்படனும்? குமரி என்கிற குறை இல்லாதபடி கல்யாணம் நடந்தாச்சு. மலடு என்கிற வசை ஏற்படாதபடி பிள்ளைக பிறந்தாச்சு. அது போதும்னு சொல்லுவாரு திரிபுரத்துக்கும் இது பொருந்துமே” என்றான் தங்கராசு.

முத்துமாலை பெருமூச்செறிந்தான். “ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எப்படி எப்படியோ கழியுது!இதெல்லாம் ஏன் இப்படியிருக்குன்னு புரிஞ்சுக்கிடவும் முடியலே...”

சிறிது நேரம் ரெண்டு பேரும் மவுனமாகவே நின்றார்கள்.

தங்கராசுதான் பேசினான்: “முத்துமாலை, இன்னும் ரெண்டு நாளிலே நான் திரும்பவும் வேலைக்குப் போயிருவேன்.பிறகு இந்த ஊருக்கு எப்போ வருவேனோ எனக்கே தெரியாது. வருஷக் கணக்கிலே ஆனாலும் ஆகலாம்!”

“அடுத்த தடவெ நீ இங்கே வாற போது நான் இருக்கேனோ என்னவோ! உன்னை நான் திரும்பவும் பார்க்க முடியாமலே போயிரலாம்!” இதை முத்துமாலை விளையாட்டாகப் பேசவில்லை என்பதை அவனுடைய குரலே அறிவித்தது.

“ஏன், வேறே எந்த ஊருக்காவது போய்விடத் திட்ட மிட்டிருக்கியா?” என்று நண்பன் கேட்டு வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/108&oldid=1139573" இலிருந்து மீள்விக்கப்பட்டது