உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/சேமிப்பு

விக்கிமூலம் இலிருந்து

சேமிப்பு

10. குடும்ப வாழ்க்கையில் சேமிப்பு இன்றியமையாத ஒன்று. எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தாலும், அவ்வளவையும் செலவு செய்து வாழ்வது நல்லதல்ல. அதற்கு மேல், அதிகச் செலவு செய்து, கடன் வாங்கி வாழ்வது ஒரு கெட்ட பழக்கம். இது வாழ்க்கையைக் கெடுத்து விடும். ஆகவே வருவாயில் சிறிதளவேனும் மிச்சப்படுத்தி, வங்கிகளில் சேமித்தாக வேண்டும். இவ்வாறு சேமிப்பது 5, 10 ஆக இருப்பினும், பின்னால் அது ஒரு பெருந்தொகையாகக்

காட்சியளிக்கும். தேவைக்கு மேற்பட்ட சாமான்களை வீட்டில் அடைத்து வைக்கக் கூடாது அது வீட்டிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, மூளையிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, நாள் தோறும் துன்புறுத்தி வரும். தேவையான பொருள்களை மட்டும் வாங்கி வைத்து, வீடுகளில் அழகாக அடுக்கி வைத்து, காண்போர் மனம் மகிழும்படி சிக்கன வாழ்வு வாழ்வதே நல்வாழ்வுக்கு வழியாகும்.

உணவிலும், உடையிலும், பயணத்திலும், பொருளாதாரத்திலும், சேமிப்பிலும் மட்டுமல்ல, குழந்தை பெறுவதிலும் சிக்கனத்தைக் கையாண்டு தீர வேண்டும் பலர் அதிக சாமான்களை எடுத்துக் கொண்டு இரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செல்கிறார்கள். இவற்றைத் தாங்களும் தூக்க முடியாமல், தூக்குவதற்கு ஆளும் கிடைக்காமல், கிடைக்கும் இடங்களில் அதிகக் கூலியும் கொடுக்க நேர்ந்து, சாமான்களும் களவு போய், போக வேண்டிய இடங்களுக்குப் போக முடியாமல் தவித்துத் திண்டாடுவதைப் பார்க்கிறோம். இத்தகையோருடைய வழிப் பயணத்தையும், சுமையையும், தொல்லையையும், துன்பத்தையும், அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களும் அனுபவித்தாக வேண்டும். ஆகவே, எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்ற வாழ்க்கையை மணமக்கள் இன்று முதலே கையாளத் தொடங்குவது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணமக்களுக்கு/சேமிப்பு&oldid=1646409" இலிருந்து மீள்விக்கப்பட்டது