உள்ளடக்கத்துக்குச் செல்

இதன் விலை - ரூபாய் மூவாயிரம்/வெள்ளி முளைக்க 8 ஆண்டுகள் !

விக்கிமூலம் இலிருந்து

வெள்ளி முளைக்க
8
ஆண்டுகள்!


மேடையில் பேசும் போது. எல்லோரும் சரியாகத்தான் பேசுகிறார்கள். ஆனால் தனியே சந்தித்துப் பேசுகையில் வகுப்பு வாதம் அவர்களைப் பிடித்துக் கொள்கிறது.

இந்த நிலைமை நீடிக்குமானால், இந்தியா முன்னேற முடியாது என்று முதலமைச்சர் ஓமந்தூரார், சென்னையில் கடந்த ஆண்டில் பேசியிருக்கிறார்.

வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் நீர் என்று நம்புபவர், ஓமந்தூரார் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர், 'ரஜதந்திரத்துக்காக' இதுபோல் பேசியிருக்க முடியாது. உண்மையாகவே, உள்ளத்திலிருந்தே இந்தக் கருத்து வெளிவந்திருக்க வேண்டும், வெறும் உதட்டசைவாக இருக்க முடியாது.

முதலமைச்சரின் இந்தப் பேச்சிலே, சலிப்பும் திகைப்பும் தோய்ந்திருக்கிறது. வகுப்பு வாதம் கூடாது என்பது முதலமைச்சரின் ஆவல். அந்த ஆவலின் காரணமாக அவர் வகுப்பு வாதம் எங்காவது தலைகாட்டுகிறதா என்று தேடிப்பார்க்கிறார்—யார் வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்று பார்க்கிறார். மேடை ஏறிப் பேசுபவர்களைக் கவனிக்கிறார். அவர்கள் யாரும், வகுப்பு வாதம் பேசுவதில்லை—ஆனால் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது, வகுப்புவாதம் அவர் எதிரே தெரிகிறது—எப்படி வந்தது? -அவர் திகைக்கிறார்

மேடை ஏறி, இந்தியர், பாரத புத்ரர் என்று பேசிய சிலர், முதலமைச்சர் முன்போ, அல்லது அவர் கவனிக்கிறார் என்பதறியாமல் வேறு யாரிடமோ, வகுப்புவாதியாகப் பேசியிருக்க வேண்டும்—அதனாலேதான் சலிப்பும் திகைப்பும் தோய்ந்த குரலில், முதலமைச்சர் கூறுகிறார்: மேடை ஏறிப்பேசும்போது சரியாகத்தான் பேசுகிறார்கள், தனிப்பட்ட முறையிலேயோ வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்று.

"வாங்க! சௌக்கியந்தானே! கதர் விற்பனை எப்படி? அரிஜன சங்கம் சரியாக வேலை செய்கிறதா?"—என்று முதலமைச்சர், ஏதோ ஓர் ஊரிலிருந்து வந்த, காங்கிரஸ் தோழரை விசாரிக்கிறார். அவர், "சௌக்கியந்தான் ! கதர் விற்பனை பரவாயில்லை!" என்று பதில் கூறிவிட்டு, "இது கிடக்கட்டும், ஏன் இப்படி ஒரே பார்ப்பன ராஜ்யமாகி வருகிறது—" என்று ஒருவெடிகுண்டு வீசுகிறார். முதலமைச்சர் அருவெறுப்படைந்து, "என்ன சொல்லுகிறீர்?" என்று கேட்க, குறை கூறியவர். "எங்கள் ஊரிலே கலெக்டர் பார்ப்பனர், டிப்டியாவது ஒரு தமிழனாக இருக்க வேண்டுமென்று நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோலச் சொன்னேன்—சட்டையே செய்யாமல், டிப்டியும் ஒரு ஐயராகவே கொண்டு வந்து போட்டீர்கள். இது என்ன நியாயம்? இப்படி, பெரிய உத்தியோகஸ்தரெல்லாம், ஐயர்மார்களாக இருந்தால், நாங்கள் என்ன செய்வது?" என்று கூறுகிறார். முதலமைச்சர் திகைக்கிறார். "அடடா, எப்படிப் பட்ட தேசபக்தர் இவர். அலிசபுரம் சிறையிலே ஆறு வருஷம் இருந்தார்-அப்பழுக்கற்ற தியாகி. இப்படிப்பட்டவர், வகுப்பு வாதம் பேசுகிறாரே! என்னென்பது இந்தப்போக்கை? சென்ற மாதம், வகுப்புவாதம் ஒரு கொடிய நோய் என்று பேசினார், என்று பத்திரிகையில் படித்தேனே—என் எதிரே இப்போது வகுப்புவாதம் பேசுகிறாரே !" என்று எண்ணித் திகைக்கிறார்.

இவ்விதமான பல சம்பவங்களைக் கண்ட அனுபவத்தால் மட்டுமே. முதலமைச்சர் திகைத்துப் போய், அன்று சென்னையில் அவ்விதம் பேசியிருக்க வேண்டும் அவருடைய அனுபவம்,காங்கிரஸ் வட்டாரத்திலே பெயர் பெற்றதாகத் தானே இருக்கமுடியும்—தமது பக்கம் கூட அவர் தலை வைத்துப் படுத்தறியாதவராயிற்றே! அனுபவ பூர்வமாக ஓர் உண்மையை முதலமைச்சர் கண்டறிந்திருக்கிறார்: வகுப்பு வாதம், மேடையில் தெரிவதில்லை, தனிப்பட்ட சந்திப்புக்களின் போது, அதன் தாண்டவம் இருக்கிறது. அவர் திகைக்கிறார், மேடையிலே வகுப்பு வாதம் பேசுபவர் இல்லை—செயலிலும், தனியான பேச்சுகளிலும், வகுப்பு வாதம் வேலை செய்கிறது என்று அனுபவப் பூர்வமாக கண்டறிந்து, திகைத்து, அந்த வகுப்பு வாதம், இந்தியாவையே நாசமாக்கி விடும் என்று கூறிக் கவலைப்பட்டு, வகுப்பு வாதத்தை விட்டொழிக்கும்படி, அன்புரை வழங்குகிறார். ஆனால் முதலமைச்சர் ஓமந்தூராரே, இன்று ஓர் வகுப்பு வாதியாகக் காணப்படுகிறார், பல காங்கிரஸ் தலைவர்களின் கண்களுக்கு!!

வகுப்பு வாதம் கூடாது என்று தான் அவர் பேசுகிறார். ஆனால் அவரை வகுப்புவாதி என்று தான், அவர் வாழும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே சிலர் கூறுகிறார்கள். பாரததேவி சித்திரநடையிலேயே எழுதிற்று, விபூதி பூசும் ராமசாமிப் பெரியார் இவர் என்று! சுதந்திரா எனும் ஆங்கில வார இதழில், ஓமந்தூரார் ஒர் வகுப்புவாதி என்று பொதுவாகக் கூறியதோடு விடவில்லை, அவர் ஓர் 'பிராமணத் துவேஷி' என்று எழுதியதுடன் திருப்தி அடைய வில்லை, அவருடைய தலைமையில் நடைபெறும், மந்திரி சபையே பிராமணத் துவேஷ சபை!! என்று சென்ற இதழில் கூட எழுதி இருக்கிறது.

வகுப்பு வாதத்தை விரட்டப் போய், வகுப்புவாதி என்ற தூற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். இதுகண்டு, அவர் மேலும் திகைப்படையக் கூடும். திகைப்புகூடாது, தெளிவு பெற, சற்றுத் தீர் யோசிக்க வேண்டும். வகுப்பு வாதம் என்றால் என்ன? ஏன், அது மாபெரும் குற்றமாக கூறப்படுகிறது? யாரால் கூறப்படுகிறது? எந்தெந்தச் சமயத்தில் கூறப்படுகிறது? என்ன நோக்கத்துடன் கூறப்படுகிறது?— இவைகளைப் பற்றி முதலமைச்சரும் அவர் வழி சிந்திக்கும் நபர்களும் யோசிக்க வேண்டும்—அப்போது, வகுப்பு வாதத்தின் பிறப்புவளர்ப்பு விளங்கும்—உண்மைக் குற்றவாளிகள் தெரிவர்.

மேடையை மட்டும் கவனித்தால், வகுப்பு வாதம் தெரியக்காணோம் என்கிறார் முதலமைச்சர். அது முழு உ ண்மையல்ல.

பிரிட்டிஷார், இவ்வளவு பெரிய நாட்டை எப்படி அடக்கி அள முடிந்தது?

நாம் நாற்பது கோடி மக்கள்—ஆனால் நாலாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து, பிளவுபட்டுப் பாழானோம். உன் ஜாதி பெரிது, என் ஜாதி உயர்ந்தது, நீ. மட்டம், நீ தாழ்ந்த ஜாதி என்று நமக்குள் சண்டையிட்டு நாசமானோம். இதனைச் சாதகமாக்கிக்கொண்டான் அன்னியன். பாழான சாதி, பேதம் இந்த நாட்டிலே இருக்கும் வரையில் நாடுஉருப்படாது.

வீணான ஜாதி பேதத்தாலே தான், நம் நாடு வெள்ளைக்காரனிடம் இவ்வளவு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

“தமிழர்கள், ஜாதி பேதத்தை அடியோடு விட்டொழிக்கவேண்டும்.

ஒன்றே குலம்—ஒருவனே தேவனும்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை.

நாமெல்லாம் இந்தியர்—தமிழர், நமக்குள் ஒற்றுமை வேண்டும்,வகுப்பு வாதம் கூடாது"

"அவாளவாளுக்கு ஒரு ஜாதின்னு ஏற்பட்டிருக்கு.அது சரியோ, தப்போ, நம்மாலே ஆகிற காரியமல்ல அது. மேலும் இன்று நேற்று ஏற்பட்ட விஷயமல்ல, ஞானஸ்தாள், ஆதிநாட்களிலே, தீர்க்காலோசனைக்குப் பிறகு, சாஸ்திரோக்தமாகச் செய்த ஏற்பாடு. வர்ணாஸ்ரமம், சனாதனம் என்று அந்தக் காலத்திலே பெரியவர்கள் ஏற்பாடு செய்தான்னா, அது அர்த்தமற்றதாகவோ, கேவலமானதாகவோ இருக்க முடியாது. மகரிஷிகள் காலத்தில் ஏற்பட்ட முறை, இப்போது காலம் மாறிண்டு போறதாலே, ஒரு சமயம் அந்த ஏற்பாடு தப்புண்ணு கூடத் தோன்றலாம். தப்போ, சரியோ, அது நம்ம பூர்வீகச் சொத்து.அதை நம்புகிறவர் நம்பட்டும், வேண்டாமன்னு சொல்கிறவா சொல்லட்டும். ஆனா நான் என்ன சொல்றேன்னா,ஜாதி பேதத்தை பிரமாதப் படுத்திண்டு, சதா சர்வகாலமும் அதையேபேசிண்டு ஒரு ஜாதியாரைப் பழிச்சிண்டு, வகுப்பு வாதம் பேசிண்டு இருக்கிறது, கூடாதுன்னுதான் சொல்றேன். அது நம்ம தேசத்துக்கே பெரிய நாசமான காரியமாகும். அவாளவா ஜாதி உசத்திதான்; இதிலே சண்டை எதற்கு, சச்சரவு எதற்கு? எல்லோரும் சகோதராளாகப் பாவிச்சுண்டு. வாழ்ந்தாதான் க்ஷேமம்."

கூர்ந்து கவனித்தால், மேடைப் பேச்சிலேயே, இந்த இருவிதக் குரல் கிளம்பக் காணலாம். முன்னது, உறுதியுடன் உள்ள குரல்—தீமையைத் தீய்த்தாக வேண்டும் என்ற தீர்மானமான குரல்! மற்றது, தட்டுத் தடுமாறி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஏனோ தானோவென்றுள்ள குரல்! இந்த இரு விதங்களும், காங்கிரஸ் மேடையில் உண்டு—நெடு நாட்களாகவும்—இன்றும். இந்த இரு வகைப் பேச்சில் பின்னதற்கே, பத்திரிகைகளில் தாராளமாக இடம் கிடைக்கும்! எனவே, மேடைப் பேச்சு மூலம், அதிகமாகப் பரவிய கருத்து இரண்டாவதாக உள்ள 'இரண்டுங் கெட்டான்' கருத்துத் தான் !!

இப்போதும், முதலமைச்சர் பரீட்சை பார்க்கலாம். அவர் வகுப்புவாதம் பேசவேண்டாம், ஜாதிக்கொடுமை ஒழிய வேண்டும் என்று பேசி, நாட்டிலே என்னென்ன வகையான கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்றன என்று விளக்கட்டும்—எத்தனை இதழ்கள் இருட்டடிப்புச் செய்கின்றன என்பதை அனுபவப் பூர்வமாகக் கண்டு கொள்ளலாம்.

வகுப்புவாதி! மிகமிகச் சாமர்த்தியமாக பொதுமக்கள் முன்னிலையில் நடமாட விடப்பட்ட சொல்! தன்னலக்காரரின் அகராதியில் முளைத்த இச்சொல் தமிழகத்திலே, சமூக நீதிக்காகப் பாடுபட, என்றையத்தினம் சிலர் கிளம்பினார்களோ, அன்றுமுதல் உலவிவரும் சொல்!! என்றையத் தினம் ஆதிக்கக்காரரைப் பார்த்து, விழிப்பு நிலை பெற்ற அடிமைகள், இது என்னய்யா அநீதி என்று கேட்கத் தொடங்கினார்களோ, என்றையத்தினம் முதற்கொண்டு, நீதிக்காக வாதாடவும், பிறகு போராடவும் சிலர் முன் வந்தார்களோ, அன்று முதல் இந்தச் சொல் கிளம்பிற்று, தூய்மையான மனமுள்ளவர்களை இச்சொல் துடிதுடிக்கச் செய்திருக்கிறது! பலருடைய அரசியல் வாழ்வை வாட்டி வதைக்கிறது—இன்றும் வதைக்கிறது. விழிப்புணர்ச்சியுடன் காணப்பட்டால், விவேகியாகத் தெரிந்தால், வீரனாகக் காட்சி தந்தால் போதும், இந்தச் சொல் கிளம்பும், அவரை வதைக்க, அரசியல் வரலாற்றை, இந்தச் சொல் பாதித்ததைப் போல, டயரின் குண்டுகள்கூடப் பாதிக்கவில்லை. இதனால், மனம் உடைந்தவர்கள், வாழ்க்கை நொருங்கியவர்கள் எவ்வளவு பேர் ! சந்தேகமும் கண்டனமும், சொல்லடியும் கல்லடியும், எவ்வளவு பேருக்கு இந்தச்சொல் வாங்கித்தந்தது! இந்தச் சொல்லின் சரிதமே ஓர் சோகத் தொடர்கதை! தியாகராயரில் தொடங்கி இன்று ஓமந்தூரார் வரையிலே உள்ள தொடர்கதை ! ஓமந்தூரார் மந்திரி சபையை, இன்று வகுப்புவாத மந்திரிசபை, பழைய ஜஸ்டிஸ்கட்சி வாடை வீசும் மந்திரிசபை என்றெல்லாம், காங்கிரஸ் கட்சியினரே கூறுகின்றனர்.

ஓமந்தூராரைச் சில காங்கிரஸ்காரர்கள் வகுப்புவாதி என்று கூறுகின்றனர்.

ஓமந்தூரார் மந்திரிசபையை ஆதரிப்பவர்கள், மந்திரி சபையைக் குறைகூறுபவர்களை, வகுப்புவாதிகள் என்று கண்டிக்கின்றனர்.

ஒரு பிரிவினர், மற்றப் பிரிவினரின் கண்களுக்கு வகுப்பு வாதிகளாகத் தெரிகின்றனர்.

ஓமந்தூரார் உள்ளம் நோகிறது! வகுப்புவாதத்தை ஒழிக்க அரும்பாடுபடும் நம்மை வகுப்புவாதி என்று வகுப்பு வாதச்செயல் புரிபவர் குறைகூறுகிறார்களே! இது என்ன காலக்கேடு!—என்று எண்ணி வருந்துகிறார்.

அதுபோலவே, காங்கிரஸ் கட்சியிலே ஒருசாரார் பேசுவது தேசியம்! காரியமோ அசல் வகுப்புவாதம்—இந்த இலட்சணத்தில் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் போவதாக வேறு வாய் வீச்சு! இப்படி ஒரு வகுப்பு வாதியை நாங்கள் கண்டதே இல்லை—என்று கண்டிக்கிறார்கள்.

ஆந்தை குயிலைப் பழிக்கிறது என்கின்றனர் ஒரு சாரார்.
பூனை போதகாசிரியர் போல வேடம் போடுகிறது என்கின்றனர் மற்றோர் சாரார்.

இப்படி ஒரே கட்சியிலுள்ள இரு பிரிவுகளுக்குள், ஏற்பட்ட மனபேதம், வகுப்புவாதி என்ற அந்தப்பழைய சொல்லையே ஆயுதமாகக் கொண்ட போருக்கு அடிகோலுவதாகிவிட்டது. இதிலே நியாயம் எந்தப்பக்கம் இருக்கிறது என்பது அல்ல, முக்கியமான பிரச்னை. இந்த வகுப்பு வாதம் என்ற சொல்லுக்குள் இதுவரை அடைத்துவைத்துள்ள குற்றச்சாட்டு, எத்தன்மையது என்பதே முக்கியமான பிரச்னை. இதற்கு இன்றைய அரசியல் நிலைமையை மட்டும் கவனித்தால் போதாது. வகுப்பு வாதம் என்றசொல் பிறந்த காலத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழர் நன்கு அறிவர்—ஓயாது பிரச்சாரம் இது பற்றி நடந்திருப்பதால்—வகுப்புவாதி என்ற சொல்லை, காங்கிரசார் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்பட்ட உடனே, சிருஷ்டித்து ஏவினர் என்பதை.

சமூகத்திலே பல ஜாதிகள்—அவைகளுக்கிடையே உயர்வு தாழ்வுகள்—அதன் பலனைச் சிலருக்கு ஆதிக்கம் பலருக்கு அடிமைத்தனம் அந்த ஆதிக்கத்தின் விளைவாகச் சிலருக்குச் சுகவாழ்வு, அடிமைத் தனத்தின் பலனாகப் பலருக்குப் பாதி வாழ்வு! இப்பப்பட்ட நிலையை மாற்றி சமுகநீதி ஏற்படுத்த வேண்டும், என்று சிலர் எண்ணினர்! இந்த எண்ணம் கொண்டது தவறா? சமூகத்தில், மிகப்பெரும்பாலோராகப் பார்ப்பனரல்லாதாரும், சிறுபான்மையினராகப் பார்ப்பனரும் இருப்பதும் பெரும்பாலோர். அந்தச் சிறுபான்மையினரை, சாஸ்திர ஆதாரப்படியும், பழக்க வழக்கத்தின் படியும், மேல் ஜாதியினராகக் கொண்டிருப்பதும், இந்த நிலைமையினால் பெரும்பாலோர், கல்வி, தொழில், பொருளியல், அரசியல், மத இயல், முதலியவற்றில் உரிய அளவு இடமோ, வசதியோ பெறாமல் இருந்தும் அதே துறைகளில் சிறுபான்மை வகுப்பினரான பார்ப்பனர், மிக மிக அதிகமான உயர்வு பெற்று விளங்கியதும், கருத்துள்ளோர் அனைவருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்டவர்களிலே ஆண்மையாளர்கள் சிலர். இந்த அந்தி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறினர்—வகுப்பு நீதி கேட்டனர்—அந்த வகுப்பு நீதி கோரிக்கை, தங்கள் ஆதிக்கத்துக்கு உலை வைப்பதாகும் என்று எண்ணிய பார்ப்பனர், நீதி கேட்டவர்களை வகுப்பு வாதிகள் என்றனர்—அந்தச் சொல், நிபந்தனைப் பதமாகி, தக்க பிரசார சாதனம் இருந்த காரணத்தால், வகுப்பு நீதி கோரியவர்களை, வகுப்பு வாதிகள் என்று பொதுமக்களே எண்ணி ஏசுக்கூடிய ஓர் வேதனையான நிலைமையை உண்டாக்கி விட்டது.

பிரசார பீரங்கிகள் முழங்கின ! எங்கும் !! வகுப்பு வாதி ! வகுப்புவாதி!! கண்டனக் கணைகள் சரமாரியாகக் கிளம்பின. பலருடைய அரசியல் வாழ்வை, வதைத்தன—இருதயங்களைச் சிதைத்தன ங்கிரஸ் மேடை ஏறினதும், சபாஷ் பட்டமும், பத்திரிகையில் இடமும் பெற வேண்டுமானால், வெகு சுலபம். வகுப்பு வாதிகளைக் குழி தோண்டிப் புதைப்போம் என்று கூறினால் போதும் கடந்த இருபதாண்டுகளாக, தமிழ் நாட்டு அரசியலில், இந்த அணுகுண்டு உபயோகப்படுத்தப்பட்டது, நீதி கேட்டவர்களுக்கு எதிராக.

இப்போது காங்கிரசிலேயே ஒரு பகுதி, மற்றோர் பகுதியை வகுப்புவாதி என்று குற்றம் சாற்றுவதைக் காண்கிறோம்

வகுப்புவாதி என்று முதன் முதல், அனியாயமாக நிந்திக்கப்பட்ட நீதிக் கட்சியினர் செய்ய விரும்பியதெல்லாம், பெரும்பான்மையினராக உள்ள பார்ப்பனரல்லாதாரை, அவர்களின் வீழ்ச்சியுற்ற, தாழ்நிலையிலிருந்து, எழிச்சியுறச் செய்து, சம உரிமை பெறச் செய்வது என்பது தான். இதற்குத் தான் வகுப்பு வாதம் என்று பெயரிடப்பட்டது.

“தமிழ் நாட்டில் ஒரு விஷமப் பிரசாரம் சமீப காலத்தில் நடந்து வருகிறது. மெஜாரிட்டி வகுப்பாரைத் தூக்கி விடுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும், உடனே அதைப் பிராமணத் துவேஷம் என்று சொல்லுகிறார்கள்," என்று தினசரி, 48, ஏப்ரல் 5ம்தேதி, தலையங்கத்தில் தீட்டுகிறது. அதாவது, வகுப்புவாதி, பார்ப்பனத் துவேஷி, என்ற ஏசல், 'தினசரி'யின், நட்டத்தின் மீது வீழ்ந்த பிறகு.

சமீப காலமாக விஷமப் பிரசாரம் நடை பெறுகிறது என்று தினசரி எழுதுகிறது. முழுஉண்மை அல்ல! தினசரி சொக்கலிங்கனார் தினமணி ஆசிரியராக அமைவதற்கு முன்பிருந்தே நடைபெறுகிறது—கால் நூற்றாண்டாக இக்கடுமொழி வீசப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனம் நடைபெறுகிறது—நடை பெற்று வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல உண்மை. நண்பர் சொக்கலிங்கமும் சேர்ந்து நடத்தி வந்தார், இந்த விஷமப் பிரசாரத்தை!! தன் தலை மீது, இதே வசைச் சொல் வீசப்படும் என்று எண்ணியிருப்பாரா, அந்த நாட்களில்!

அந்த நாட்களில், அவருடைய அறியாப் பருவத்தில், என்றபொருளில் கொள்கிறோம், அந்த வாசகத்தை.

இன்று, அனுபவம் நிரம்பப் பெற்று, உண்மையில் வகுப்புச் சுயநலமிகள் யார் என்பதைக் கண்டறிந்து, வகுப்பு நீதிக்காகப் போராடக் கிளம்பி, வகுப்புவாதி என்று ஏசப்படுகிறாரே, அந்த ஏசல் அவருக்குக் கோபத்தை மட்டுமல்ல. சிறிதளவு வருத்தத்தையும் தந்திருக்கும். இன்று நாம் எந்தக் காரியத்தை வகுப்பு நீதிக்காகச் செய்கிறோமோ, எந்தக் காரியம் செய்வதற்காகத் தூற்றப்படுகிறோமோ, இதையே, பல ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக் கட்சியினர் செய்த போது, அவர்களை நாம் எவ்வளவு பதை பதைக்கத் திட்டினோம், எவ்விதமெல்லாம். கண்டித்தோம்—என்பது பற்றி, அவர் எண்ணும் போது இரண்டோர் சொட்டுக் கண்ணீர் வராமலிருக்குமா! விஷமப் பிரசாரம்! ஆ ! சமீப காலமாக, இவர் மீது ! பல காலமாக, நம்மவர் மீது !!

மெஜாரட்டி வகுப்பாரைத் தூக்கிவிடுகிற காரியத்தைக் கண்டு, பிராமணத் துவேஷம் என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்று தினசரியார் தீட்டுகிறார்.

தூக்கிவிடுகிறார்! மெஜாரட்டி வகுப்பை!! இந்த வாதத்தை இவர் எவ்வளவு கேலி செய்தார் மெஜாரட்டியைத் தூக்கி விடுவதாக? ஏன்! விரல் விட்டு எண்ணக் கூடிய நிலையிலுள்ள பிராமணர்கள் மீது, வீணாகத்துவேஷத்தைக் கிளப்பிக்கொண்டு, பார்ப்பனரல்லாதாரின் நலனைப்பாதுகாப்பதாகப் பறைசாற்றுகிறார்கள் இந்த வகுப்புவாதிகள்—இதுவன்றோ முன்பு தினசரியார் தீட்டும் பாணி! இன்று? தூக்கிவிடுகிறார், மெஜாரட்டி வகுப்பினரை! ஆச்சரியம், இவருடைய மாறுதல் அல்ல! மாறாது இருக்கும் மெஜாரட்டியின் நிலைமைதான்! முதல் வகுப்புவாதிக்கும் முதலமைச்சராக ஒமந்தூரார் வீற்றிருப்பதற்கும் இடையே எவ்வளவோ ஆண்டுகள் எத்தனையோ முயற்சிகள் எனினும், இன்றும், மெஜாரட்டி வகுப்பினர், தூக்கிவிடப்படவேண்டிய நிலை இருக்கிறது! ஏன்? அவ்வளவு கீழே அழுத்தி வைக்கப்பட்டுள்ளனர் தினசரியார் நாட்களிலே, இந்தத் தூக்கிவிடும் பணி தேவை என்றால், தியாகர்நாட்களிலே, இது எவ்வளவு அதிகமாகத்தேவைப்பட்டிருக்கவேண்டும்? எண்ணிப்பார்க்கவேண்டுகிறோம். இன்னமும்எண்ணத்தில் தெளிவுபெறாதிருப்பவர்களை, சிறு பான்மையோருக்குத்தான் பாதுகாப்புத் தேவை. பெரும்பான்மையினருக்கு ஏன்? என்று பேசினவர்கள் தினசரியாரின் கருத்தைக் கவனித்துத் தெளிவுபெற வேண்டுகிறோம்.

தூங்கிக்கிடந்தவர்களைத் தட்டி எழுப்பிய தியாகர், விழித்தவர்களைப் பார்த்து, உங்கள் நிலை மிகமிகப் பிற்போக்காக இருக்ககிறது, முன்னேறுங்கள் துரிதமாக, சகல துறைகளிலும், என்று கூறினார், தூக்கிவிடத் தொடங்கினார். இதுதான் அவர் செய்த வகுப்புவாதம்! ஆனால், அவருடைய பேரன்மார் காலத்துச் சொக்கலிங்கனார், தாத்தா கண்டறிந்த திட்டத்தை தத்துவார்த்த விளக்கத்தோடு செய்துகாட்டுகிறார். "ஜனநாயகம் என்றால் எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட வகுப்பார்தான் செய்ய வேண்டுமென்ற கட்டாயமோ, ஏகபோக உரிமையோகிடையாது" என்று தினசரி தீட்டுகிறது. இதே இலட்சியத்துக்காகத்தான். நமது இயக்கம் இடையுறாது பாடுபடுகிறது. இந்தக் கருத்துடன் பணிபுரியத் தொடங்கியபோது, வகுப்புவாதி, பார்ப்பனத் துவேஷி, வேதநிந்தகன், சாஸ்திர விரோதி, ஆரியவைரி, நாத்தீகன் என்று சரமாரி தூஷணைகள் நமது இயக்கத்தவரைத் துரத்திக்கொண்டு வந்தன. தூற்றும் சொக்கலிங்கங்களும் என்றேனும் ஓர் நாள், இதே கருத்துக்கு வந்துசேருவார் என்ற நம்பிக்கை ஒன்றுதான் நமது இயக்கத்தவரை இவ்வளவு நிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளச்செய்தது. அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. நாம் இன்று வரை நீதிக்காக உரிமைக்காகப்போரிடும் எங்களை அழித்தாலும் சரி, கடைசி மூச்சு இருக்கும் வரை உரிமைக்குப் போராடுவோம் என்று மட்டுமே கூறிவந்தோம், நெடுநாட்களுக்குப் பிறகு நாம் வகுத்தவழி நடக்கும் நண்பர் தினசரியார் "மைனாரிடிகள் மெஜாரிட்டிகளை ஆளமுயற்சிக்கும் போதுதான் தகறாருகிளம்புகிறது. லீகர்கள் மைனாரிட்டியாய் இருந்து மெஜாரிட்டியை ஆளமுயற்சித்ததால்தான் இந்தியாவில் அமளி ஏற்பட்டது, அதே தவறை வேறு யாரும் செய்யாமல் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்" என்று தீர்மானமாக எழுதியிருக்கிறது! அமளி குமளி! ஜாக்கிரதை!—நாம் உபயோகிக்கமறுக்கும் சொற்கள்——தினசரியிடமிருந்து கிளம்புகின்றன! “இருக்கிற ஏகபோக உரிமையைக் காப்பாற்றிக்கொள்ள தேசியம் பேசுவது ராஜிய நாணயமல்ல." என்றும் எழுதியிருக்கிறது. 1940-ல் நமது இயக்க ஏடு, விடுதலை டிசம்பர் 9-ந்தேதி இந்த வகுப்புவாதப் பிரச்னையைப்பற்றி பார்ப்பனர் விஷயமாக நாம் கொண்டுள்ள கருத்தைக் கூர விரும்புகிறோம். பார்ப்பனத் துவேஷி என்று கூறப்படும் நாம், பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோம். வகுப்புத் துவேஷ விஷயத்தை நாம் மக்களிடை ஊட்டுகிறோம் என்றும், வீணான வகுப்பு வித்தியாசங்களைக் கூறி நாட்டிலே பிளவை, பேதத்தை, மாச்சரியத்தை, கலகத்தை உண்டாக்குகிறோம் என்றும், இங்ஙனம் நாம் செய்வதற்குக் காரணம் நமக்குப் பட்டம் பதவிமீதுள்ள ஆசை என்றும் பலப்பல கூறுகின்றனர். பட்டமும், பதவியும் காங்கிரசில் சேர்ந்தால், பாடு படாமல், தொல்லைக்கு ஆளாகாமல், தொந்திரவை மேற்போட்டுக் கொள்ளாமல், பெற முடியும் என்பது நமக்கும் நம்மைத் தூற்றும் தோழர்களுக்கும் தெரியும். இருந்தும் பதவியைச் சுலபத்திலே பெறக்— கூடிய காங்கிரஸ் கூட்டுறவை விட்டு, பதவி கிடைக்காத தொல்லை நிரம்பிய வகுப்புவாதம் பேசுவது ஏன்? என்பதைச்சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். "வகுப்புவாதம்" பேசுவதாக 'ஜாதித்துவேஷத்தை' ஊட்டுவதாக, "பார்ப்பன துவேஷம்” பேசுவதாக பாமர மக்களிடை ருசிகரமான பிரசார முறைகளைக் கொண்டு எடுத்துக்கூறி, தேர்தல்களில் நம்மைத் தோற்கடிக்கும் "திறமை" நமது மாற்றார்களிடம் இருக்கிறது என்பது தெரிந்தும். நாம் ஏன் அவர்களை எதிர்க்கிறோம்?. சும்மா இருந்தால் சுகம் உண்டு என்பதற்கு அவர்கள் ஜாடை மாடை காட்டியும் நாம் ஏன் சமர்ச் சுழலில் விழுகிறோம்.

வெறும் சுகவாழ்வு, சுயநலம், பட்டம், பதவி, இவைகளே தேவை எனில், இவைகளைச் சுலபத்திலே பெறக்கூடிய வழி எது என்பதை மட்டுமே யோசித்து, காலத்துக்கேற்ற கோல மிட்டு வாழ் முடியும், ஆனால் எதற்காகப் புயலின் முன் கப்பலைச் செலுத்துவது போல், போராட்டத்தில் ஈடு படுகிறோம்? எதிரிகளின் சக்தி பாமரரை ஏய்க்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்பது தெரிந்தும், நம்மைப் பற்றி தாறுமாறான பிரச்சாரத்தை தந்திரமாகச் செய்யும் கூட்டம் எதுசெய்யினும் செய்க, எத்தகைய தொல்லைதரினும் தருக, என்று உறுதியுடன் நாம் இருக்கக் காரணம் என்ன? நமக்கு, நம் மாற்றார்களின் வலிமை தெரியாதா? தெரியும் பலவிதமான சாதனங்கள் அவர்களிடம் இருப்பதும் தெரியும். பாமரர் அவர்களின் பிரபாரத்துக்குப் பலியாகிறார்கள் என்பதும் தெரியும். நம்மைத்தாக்க அவர்கள் உபயோகிக்கும் கோடாரிக்கு "காம்புகள்" நம்மவரிலேயேகிடைப்பதும் நன்கு நடிக்குத் தெரியும். தெரிந்தும் எதிர்க்கிறோம். பொல்லாங்கும் பழியுமே பரிசாகக் கிடைக்கிறது என்று தெரிந்தும் போரிடுதிறோம் ! ஏன்? நமக்கு பித்தமா ?

ஆம்? பித்தமே கொண்டுள்ளோம் ! ஜாரின் படைபலம், பண பலம், துருப்புகளின் ஈட்டிமுனையின் கூர் தெரிந்தும், வெனின், ஜார் ஆட்சியை ஒழித்தேதீருவேன் என்று ஓயாது கூறி வந்தாரே! உருமாறியும், ஊரூராக அலைந்தும், உற்றார் உறவினரைப்பற்றிக் கவலையற்றும், புரட்சிப் போரை, புது உலக உற்பத்திப் போரை நடத்தியே தீருவதென "பித்தம்" பிடித்து அலைந்தாரே. அத்தகைய "பித்தம்" நமக்கு இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை.

எதிர்த்தோர், பாஸ்ட்டில்லி (சிறைக்கூடம்) யில் இருதயவலியுடன் இருப்பது தெரிந்தும், ஈட்டி ஏந்திய வீரர்கள் குதிரைகளின் மீதேறி, மக்களை குத்திக்கொல்வர் என்பது தெரிந்தும் முடி ஆட்சியை எதிர்த்து குடி ஆட்சியை ஏற்படுத்தியே தீருவோம் என்று பிரான்சு நாட்டு மக்கள், புரட்சிப் பித்தம் கொண்டார்களே முன்னம், அத்தகைய பித்தம் நமக்கு உண்டு.

🞸 பல ஆயிரம் ஆண்டுகளாக நாட்டிலே பரவி ஊன்றி, பாமரரை செயலற்ற, சிந்தனையற்ற உருவங்களாக்கி, உழைக்க வைத்து உறிஞ்சி வாழும் பார்ப்பனியத்தின் பலம் பயங்கரம். பக்க பலம் யாவும் நமக்கு நன்கு தெரிந்திருந்தும், அதனை ஒழித்தே தீருவோம், என்று "பித்தம்" பிடித்தே நாம் அலைகிறோம். பித்தர் லெனின் சோவியத் நாட்டை கண்டது போல், பெரியார், திராவிட நாட்டைக் காணட்டும் என்று கூறுகிறோம்.

ஏனய்யா இத்தனை ஆத்திரம் ? எதற்கு. ஒரு சிறு கூட்டத்தினரான பார்ப்பனர் மீது இத்தனை துவேஷம் ? என்று கேட்கிறார்கள், தோழர்கள். பார்ப்பனர் மீது பாய்வது ஒரு வீரமா? வேதியர் மீது ஏன் வீணாக மோதிக் கொள்கிறீர் என்று கேட்கிறார்கள். அவர்களை இங்ஙனம் கேட்கவைக்கும் பார்ப்பனருங்கூட இது போலவே கேட்கக்கூடும்; ஆகவே அவர்களுக்கும் அவர் தம் அடியார்களுக்குமாகச் சேர்த்தே கூறுகிறோம். நாம் பார்ப்பனர் மீது மோதிக் கொள்ளவில்லை; பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்.

🞸 பார்ப்பனீயத்தினால், பார்ப்பனர் என்ற சமூகம், பாடுபடாது வாழவும், பதமாக இருக்கவும் பதவியில் அமரவும் முடிகிறது என்ற "வெறும் பொறாமை" மட்டுமல்ல, நாம் அதனை எதிர்ப்பதற்குக் காரணம்.

🞸 பிளேக் பிடித்த வீட்டிலே பாயையும்தலையணையையும் போட்டுக் கொளுத்துகிறார்கள் என்றால், பாய்மீதும் தலையணை மீதும் கோபம், துவேஷம் என்று பொருள் கொள்ள முடியுமா ! பிளேக்கால் பீடிக்கப் பட்டவனுக்கு "ஊசி" போடுகிறார்கள் என்றால், டாக்டருக்கு அந்த நோயாளிமீது, துவேஷம் என்று பொருள்கூற முடியுமா ? அதுபோல்தான், இந்தப் பழைய பெரிய பூபாகத்திலே, பார்ப்பனீயம் என்ற கொடுமை இருக்கிறது.

🞸 பார்ப்பனீயத்தின் பலனாக ஒரு பெரிய திராவிட சமுதாயம் சின்னாபின்னப்பட்டுப் போய்க்கிடக்கிறது. பிறவி அடிமைகளாக, பேசும் ஊமைகளாக, நடைப்பிணமாகப் போய்விட்டது, ரோஷமான உணர்ச்சியற்று தடித்த தோலராகி விட்டது.

🞸 தகப்பனுக்கு மேக வியாதி இருப்பின், பிறக்கும்குழந்தை குருடாகும், என்பர் மருத்துவ நூல் கற்றோர். குருட்டுக் குழவிக்கு, குவலயத்தின் குதூகலக் காட்சி எங்ஙனம் தெரியும்? அதுபோல்தான் திராவிடச் சமுதாயம், பார்ப்பனீயம் எனும் மேக நோயால் பிடிக்கப்பட்டு இருக்கிறது. பிறக்கும் திராவிடன் குருடனாகிறான். எனவேதான் இந்தப் பார்ப்பனீயத்தை ஒழிக்க விரும்புகிறோம்.

🞸 ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரஉணர்ச்சி, தன்மானம், இவைகள் ஒரு பெரிய சமுதாயத்துக்கு வந்தால்தான் ஏகாதிபத்யத்தை எதிர்த்து வெல்ல முடியும். இக்குணங்கள் இன்று நம் மக்களிடை இல்லாது போனதற்குக் காரணம் பார்ப்பனீயந்தான். எனவேதான் நாம் அதனை எதிர்க்கிறோம், முடியுமா வெல்ல என்பர், முடிவைப்பற்றிக் கவலை இல்லை, கடமை இது என்போம், வெற்றி கிடைக்காதா? என்பர். வெள்ளி முளைக்குது என்போம் என்று தீட்டிற்று.

வெள்ளி முளைக்குது! என்றோம், எட்டு ஆண்டுகள் பிடித்தன வெள்ளி, தினசரி நிலையத்திலே இருந்து கிளம்ப பட்டகஷ்டம் வீண் போகவில்லை. யார் உ ண்மை வகுப்பு வாதிகள் என்பதை நாடு உணரத் தொடங்கி விட்டது. வேதனைக்கு ஆளான ஓமந்தூராரும், வேல் தாக்கிய வேழமெனச்சீறும் தினசரியும், பார்ப்பனீயம் என்பது பிரித்தானியம் போலவே, ஒழிக்கப்பட வேண்டிய முறைதான் என்பதை, ஆண்மையுடன் அறிவித்துவிட வேண்டும். மெள்ள மெள்ள நகருவோம், என்பதில் பலன் இல்லை. பார்ப்பனியத்தைக் காரணம் காட்டி ஆதரிக்க எந்த அறிவாளியும் முன் வரமுடியாது. அந்த முறையை முறியடிக்கப் போரிடுவதால், ஓமந்தூராருக்கும், அவரை ஆதரிப்போருக்கும், வகுப்புவாதி என்ற தூற்றனலுடன், ஒரு சம்யம் நாத்தீகர் என்ற ஏசல் கிடைக்கக்கூடும்—ஆனால் நெஞ்சில் கைவைத்து நேர்மையாக நடக்க விரும்பும் யாரும், தூற்றலையும் ஏசலையும் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்த மாட்டார்கள் எவ்வளவு நியாயமான காரியத்தைச் செய்தாலும். அதனால் யாருடைய ஆதிக்கமோ சுயநலமோ கெடும் என்று தெரிந்திருந்தால் அவர்கள் ஏசவும் செய்வர்—தூற்றவும் செய்வர்— * எவ்வளவு இன்சொல்லால், அன்பையும் சக்தியையும் உத்தமர் காந்தியார் போதித்தார்! கோட்சே இதற்கே அவரைக் கொல்லத் துணிந்தானல்லவா! உத்தமர் உண்மைக்காக உயிரைத் தந்தபோது, நாம் சாதாரணப் புகழை, பதவியை இழந்தால்தான் என்ன? நஷ்டம் அல்ல—நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.