உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் ஒரு வாரம்/2

விக்கிமூலம் இலிருந்து

2

ன் நண்பர் ஒருவரிடம் ஒரு சமயம் ஒரு பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். “1935-ம் வருஷத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தார். அச்சமயம் நானும் அவ்விடம் போயிருந்தேன்.......” என்று சொல்லத் தொடங்கினேன்.

உடனே நண்பர் குறுக்கிட்டு, “எந்த வருஷத்தில் போனீர்கள்? 1935-லா 1936-லா?” என்று கேட்டார்.

“1935-ல் தான்!” என்றேன். “எந்த மாதத்தில்?” என்றார்.

“நன்றாய் ஞாபகம் இல்லை. ஆகஸ்டு மாதமாயிருக்கலாம்.”

“ஒரு வருஷம் ஆகஸ்டில் பெரு மழை பெய்தது. அந்த வருஷமா?”

“இருக்கலாம்.”

“எந்த ஊருக்குப் போனீர்கள் ? திருச்செங்கோட்டுக்கா?”

“ஆமாம்.”

“திருச்செங்கோட்டுக்குப் போக எந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கினீர்கள்!”

“சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனுக்கு!”

“அப்போதெல்லாம் ரயிலில் நீங்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வது வழக்கமா? இரண்டாம் வகுப்பிலா?”

“கிடைத்த வகுப்பில்!”

“சென்னையிலிருந்து சங்கரிதுர்க்கத்துக்கு டிக்கெட் விகிதம் என்ன ?”

“சுமார்.......” “சுமாராகத்தான் தெரியுமோ? நிச்சயமாய் தெரியாதாக்கும்?”

“தெரியாது.”

“உங்கள் காதில் தொளை போட்ட அடையாளம் இருக்கிறதே! அப்போதெல்லாம் கடுக்கன் போட்டுக் கொள்வதுண்டோ?”

“இல்லை.”

“அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் காதில் கடுக்கனோடு போனால் மகாத்மா கடுக்கனைக் கழற்றிக் கொடு என்று கேட்டுவிடலாம் அல்லவா? அதிருக்கட்டும்; யாரோ இங்கிலாந்தில் ஒரு வெள்ளைக்காரன் காதைக் குத்திக் கடுக்கன் போட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறானாமே? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?”

“சாதகமான அபிப்பிராயந்தான். காதைக் குத்தினால் கண்ணுக்கு நல்லது. கண்ணைக் குத்திக் கொண்டால் காதுக்கு ரொம்ப நல்லது .......”

“அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதெல்லாம் வைரத்தின் விலை எப்படியிருக்கிறது. அதிகமா? குறைவா?”

மேற்படி நண்பரிடம் நான் சொல்ல ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லவே இல்லை! சொல்ல முடியவில்லை.

இலங்கைக்கு எந்தக் காரிய நிமித்தமாகவாவது போக விரும்பும் நண்பர்கள் ஆகாச விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளிடமும் சுங்கப் பரிசோதனை அதிகாரிகளிடமும் மேற்கண்டவாறு பலகேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்க வேண்டும்.

சுகாதார அதிகாரி உங்களை ஏற இறங்கப் பார்த்து விட்டு, கையில் உள்ள அச்சுப்பாரத்தையும் ஏற இறங்கப் பார்ப்பார்.

பிறகு, “உங்களுக்கு வைசூரி உண்டா?” என்று கேட்பார்.

“இல்லை.”

“பிளேக்”

“இல்லை.”

“காலரா?”

“அதுவும் இல்லை.”

“டைபாய்ட், நிமோனியா, டபிள் நிமோனியா, காக்கை வலிப்பு, முடக்கு வாதம், குன்மம்....”

“இவை ஒன்றும் இல்லை.”

சுகாதார அதிகாரியின் முகத்திலிருந்து சோக ரஸம் சொட்டும். பிறகு உங்கள் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டே , “சுரம், கிரம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்பார்.

“சுரம் ஒன்றும் இல்லை. கிரம் ஏதாவது இருக்கிறதா என்று கையைப் பிடித்துப் பார்த்த நீங்கள் தான் சொல்ல வேண்டும்.”

இல்லை என்பதற்கு அறிகுறியாக உத்தியோகஸ்தர் தலையை ஆட்டி விட்டு, “ஓக்கே! போகலாம்!” என்பார்.

இத்தனை கேள்வி கேட்ட டாக்டர் “ஆஸ்த்மா உண்டா?” என்று மட்டும் என்னைக் கேட்கவில்லை. துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள்! அவ்விதம் கேட்டிருந்தால் உடனே, “உண்டு! திவ்யமாய் உண்டு!” என்று அந்த டாக்டருக்குப் பதில் சொல்லியிருப்பேன் அல்லவா?

சுகாதார அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரியிடம் போகவேண்டும்.

சுங்க அதிகாரி உங்கள் பெட்டிகளையும் படுக்கைகளையும் திறந்து காட்டச் சொல்வார். வாயைத் திறந்து காட்டச் சொல்வார். வயிற்றைத் திறந்து காட்டச் சொல்வார். சட்டைப் பைகளை உதறிக் காட்டச் சொல்வார்.

எல்லாவற்றையும் பார்த்த பிறகு “ஏதாவது பட்டு கிட்டு எடுத்துப் போகிறீர்களா?” என்று கேட்பார்.

“இல்லை.”

“துணிமணி?”

“இல்லை. இலங்கையில் நிர்வாணம் அடைய எண்ணிப் போகிறோம்.”

“தங்கம் ஏதாவது இருக்கிறதா?”

“இல்லை, இருந்தாலும் கொடுக்கும் உத்தேசமில்லை.”

“வைரம்? வைடூர்யம்? கோமேதகம்? புஷ்பராகம்? ரத்தினம்? முத்து? பவழம்? (இல்லை! புகையிலை? கஸ்தூரி? கோரோசனை? குங்குமப் பூ!”

“ஒன்றும் இல்லை!”

சுங்க அதிகாரி மிக்க அதிருப்தி அடைந்து சந்தேகக் கண்ணுடன் உங்களை மேலுங் கீழும் பார்ப்பார்.

“ஓக்கே! போகலாம்!” என்று சொல்லி அடுத்த ஆளைக் கூப்பிடுவார்.

அப்புறம் போலீஸ் அதிகாரியிடம் போக வேண்டும்.

“எங்கே போகிறீர்?”

“இலங்கைக்கு!”

“இலங்கைக்கா? சிலோனுக்கா?”

“சிலோனுக்கு!” “சிலோனுக்கு எதற்காக?”“”

“சிலோனைச் சுருட்டி எடுத்துக்கொண்டு வருவதற்கு!”

“வந்து?”

“விரித்துக்கொண்டு படுப்பதற்கு.”

“சரி! நீர் எந்த வருஷம் பிறந்தீர்?”

“1953-ல்.”

“எங்கே பிறந்தீர்?”

“ஒரு இருட்டறையில்!”

“சாட்சி உண்டா?”

“கிடையாது.”

“அது வருந்தத் தக்கது. நீர் எப்போது இறந்தீர்?”

“1950-ல்”

“எங்கே!”

“காஷ்மீரில் நடந்த விமான விபத்தில்!”

“பிறகு இங்கு எப்படி வந்தீர்!”

“இந்திய சர்க்கார் விமான விபத்தைப் பற்றி விசாரிக்கக் கமிஷன் ஒன்று நியமித்தார்கள். கமிஷன் விசாரித்து விபத்து நேரிடவில்லை என்று முடிவு செய்தது. நானும் அந்த முடிவை ஒப்புக் கொண்டேன். துண்டு துண்டாய்க் கிடந்த என் உடம்பெல்லாம் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று எழுந்தது. பிறகு இங்கே வந்தேன்.”

“ரொம்ப வருந்தத் தக்க விஷயம். ஓக்கே! நீர் போகலாம்.”

இப்படியாகப் பலவிதச் சோதனைகளுக்கு உள்ளான பிறகு ஆகாச விமானத்துக்குச் சென்றோம். எங்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்த விமானத்தின் முன் பகுதியில் “சீதா தேவி” என்று எழுதியிருந்தது. விமானத்தின் பெயர் அதுவென்று தெரிந்தது. இது பற்றி நண்பர் ஸ்ரீ பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.

“முன் காலத்தில் அன்னை சீதாதேவியைக் கண்டு பிடித்து வருவதற்காக அனுமார் ஆகாசமார்க்கமாய் இலங்கைக்குச் சென்றார். இப்போது அதற்குப் பதிலாக அன்னை சீதா தேவி குழந்தைகளாகிய நம்மை இலங்கைக்குக் கொண்டு போகிறார்” என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப் பட்டார்.

விமானத்துக்கு அனுமார் என்று பெயர் வைக்காமல் “சீதா தேவி” என்று பெயர் வைத்ததில் எனக்கும் சந்தோஷந்தான். சென்னை சர்க்கார் மந்திரிகள் ஆகாயப் பிரயாணம் செய்வதற்காக ஒருவிமானம் வாங்கினார்கள். அதற்கு “அனுமார்” என்று பெயர் வைத்தார்கள். அனுமார் தமது சுபாவத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் ‘அனுமார்’ மீது ஏறிச் சென்னை மந்திரிகள் டில்லிக்குப் போனார்கள். வழியில் ஒரு கிராமத்தில் சில பக்தர்கள் ராம பஜனை செய்து கொண்டிருந்தார்கள். அனுமார் காதில் அது விழுந்து விடவே, திடீரென்று முன்னெச்சரிக்கையில்லாமல் கீழே ஒரு மைதானத்தில் இறங்கி விட்டார். அப்புறம் அங்கிருந்து புறப்படவும் மறுத்துவிட்டார். சென்னை மந்திரிகள் திண்டாடித் திணறி, பிழைத்தது புனர்ஜன்மம் என்ற எண்ணத் துடன், கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் சென்று ரயில் ஏறி டில்லி போய்ச்சேர்ந்தார்கள்.

கருணை மிக்க சீதாதேவி அப்படியெல்லாம் எங்களைப் பாடாய்ப் படுத்தாமல் பத்திரமாய் யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் இறக்கினார். அங்கேயுள்ள சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முதலியவர்களிடம் தாக்கல் கொடுத்துவிட்டு, விமான நிலையத்திற்கு வந்திருந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களிடம் சற்றுத் தூரத்திலிருந்தபடியே அளவளாவிப் பேசிவிட்டு மறுபடியும் புறப்பட்டோம். அந்த மரகதத் தீவின் இயற்கை வளங்களை மேலிருந்து பார்த்துக்கொண்டே, கொழும்பு போய்ச் சேர்ந்தோம். தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தபடி கொழும்பு நகரில் டாக்டர் நெல்லைநாதன் அவர்களுடைய இல்லத்தில் தங்கினோம்.

கொழும்பில் முதன் முதலாக நான் விசாரித்த விஷயம் அங்கே உணவு நிலைமை எப்படி என்பதுதான். சில வருஷங்களுக்கு முன்னால் இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டைக் குறித்து அடிக்கடி செய்தி வருவதுண்டு. இந்தியாவிலிருந்து அரிசி அனுப்பி வைப்பதற்குத் தூது கோஷ்டிகளும் இங்கே வந்ததுண்டு. அப்படியிருக்க, தற்போது இலங்கை இந்தியாவுக்கு அரிசி கடன் கொடுப்பதாக முன் வருவது எவ்வாறு சாத்திய மாயிற்று?

இலங்கையின் நிலப்பரப்பை எண்ணும்போது ஜனத் தொகை அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டில் மூன்று ஜில்லாக்களின் பரப்புக் கொண்டது இலங்கை. வாழ்கின்ற மக்கள் சுமார் 67 லட்சம் பேர்தான். ஆயினும் இலங்கை பற்றாக்குறை நாடாகவே இருந்து வருகிறது. இலங்கை மக்களுக்குப் போதுமான உணவுப் பொருள் இலங்கையில் விளைவதில்லை. சமீப காலத்தில் விளைவிக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலைமையில் இலங்கையில் தற்சமயம் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. எல்லா மக்களுக்கும் பசி தீர உண்பதற்கு வேண்டிய உணவு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்ல; அரிசி கடன் கொடுப்பதற்கு வேண்டிய வசதியும் இருக்கிறது.

இவ்வளவு திருப்திகரமான நிலைமை இலங்கையில் தற்சமயம் குடி கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன வென்று விசாரித்துப் பார்த்தபோது பின்வரும் காரணங்கள் தெரிந்தன:

1. உணவுத் திட்டத்தை முன் ஜாக்கிரதையுடன் சரியாக வகுத்து அமுல் நடத்துகிறார்கள். உணவுத் தேவை இவ்வளவுதான் என்பதைச் சரியாக நிர்ணயித்துக் கொண்டு, அதில் பற்றாக் குறைக்குப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவித்துக் கொள்கிறார்கள். உணவுப் பங்கீடு முறை, புகாருக்கு இடமின்றிச் சரிவர அமுல் நடத்தப் பட்டு வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கத்தை நாம் கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும்.

உணவு இலாகா இவ்வளவு திறமையுடன் நிர்வகிக்கப்பட்டு வருவதத்குப் பொறுப்பாளியான அதிகாரி ஸ்ரீ ஆள்வாப் பிள்ளை என்னும் தமிழர் தான் என்று அறிந்தபோது எனக்கு இரு மடங்கு மகிழ்ச்சி உண்டா யிற்று. இலங்கையில் நான் சந்தித்துப் பேசிய நண்பர்களில் ஸ்ரீ ஆள்வாப் பிள்ளை அவர்களின் திறமையைப் பாராட்டாதவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

2. இலங்கை வாசிகள். (சிங்களவர், இந்தியர்கள், தமிழர்கள் அனைவரும்) அரிசியின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். “அரிசியே கதி.....அரிசிச் சோறு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது” என்ற மனப்பான்மை இலங்கையில் கிடையாது. ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் கோதுமை மாவைக்கொண்டு நல்ல முறையில் உயர்ந்தரகமான ரொட்டி (Baker's Bread) இலங்கையில் எங்கும் செய்யப்படுகிறது. ரொட்டிக் கிடங்குகள் (Bakery) எங்கெங்கும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் சாதாரணக் கடையில் வாங்கும் ரொட்டி சென்னையில் ஸ்பென்ஸர் கம்பெனியில் வாங்கும் ரொட்டியை விட மேலாயிருக்கிறது. எல்லோரும் ரொட்டி சாப்பிடப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

வாரத்துக்கு ஒரு படி அரிசிதான் ஒவ்வொருவருக்கும் ரேஷன். இந்த ஒரு படி அரிசியின் விலை ஆறணாத்தான். ஒரு படி அரிசியோடு ரொட்டி, கறி காய்கள், கிழங்குகளைக் கொண்டு திருப்தியாகச் சாப்பாடு நடந்து விடுகிறது.

அதிகப்படியாக அரிசி வேண்டுகிறவர்கள் பகிரங்கமாக வேறு கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இலங்கையில் விளையும் அரிசிக்குக் கட்டுப்பாடு இல்லை. விலை நிர்ணயமும் இல்லை. ஒரு படி இலங்கை அரிசியின் விலை சுமார் ஒரு ரூபாய். ஆகையால் அதிகம் பேர் இந்த விலைக்கு இலங்கை அரிசி வாங்குவதில்லை.

ரேஷன் கடை அரிசியைப் பர்மாவிலிருந்து இலங்கை சர்க்கார் தருவிக்கிறார்கள். வாங்கிய விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலைக்கே கொடுக்கிறார்கள். இதில் ஏற்படும் வித்தியாசத்துக்கு இலங்கை சர்க்கார் உதவிப் பணம் (Subsidy) கொடுத்து உதவுகிறார்கள். அதாவது நஷ்டத்தைச் சர்க்கார் கணக்கில் எழுதிவிடுகிறார்கள் இந்த நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண வசதி இலங்கை சர்க்காருக்கு இருக்கிறது.

3. இலங்கை சர்க்கார் இலங்கையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவிக்கிறார்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு இலங்கை சர்க்கார் பணம் அனுப்புவது அவசியம் அல்லவா?

இந்தியாவில் நாம் வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவிப்பதை நிறுத்தப் பார்க்கிறோம். வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவித்து அதற்காகப் பணம் அனுப்பினால் இந்தியாவின் பொருளாதார நிலையை அது பாதிக்கிறது. ஆகையால் உணவு இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று நமது தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரிக் கவலை இலங்கை சர்க்காருக்குக் கிடையாது. இலங்கையிலிருந்து தேயிலையும், ரப்பரும் ஏராளமாக அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதற்காக அயல் நாடுகளிலிருந்து ஏராளமான பணம் இலங்கைக்கு வரவேண்டியதாயிருக்கிறது. இப்படி வர வேண்டிய தொகையில் ஒரு பகுதியை அரிசியும் கோதுமை மாவும் தருவித்துக் கொள்ள உபயோகப் படுத்துகிறார்கள். இதனால் இலங்கை சர்க்காரின் பொருளாதார நிலைமை பாதிக்கப் படுவதில்லை.

அரிசியும் கோதுமை மாவும் தேவைக்குக் கொஞ்சம் அதிகமாகவே, தருவித்து வைத்திருக்கிறார்கள். எனவே, பத்தாயிரம் டன் அரிசி இப்போது கடன் கொடுத்துப் பிறகு திரும்பப் பெற்றுக் கொள்வதில் இலங்கை சர்க்காருக்கு யாதொரு கஷ்டமும் இல்லை. ஒரு வேளை கொஞ்சம் சௌகரியங்கூட இருக்கலாம்.

“இந்தியாவில் பஞ்சம் தாண்டவ மாடியபோது நாங்கள் தானே உதவி செய்தோம்? இங்கே நீங்கள் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் எதிர்க்கிறீர்களே?” என்று இலங்கையிலுள்ள ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளிகளுக்கு எடுத்துச் சொல்லலாம். “உங்களுடைய தலைவர்களைத் துரத்தி விட்டு எங்களையே தலைவர்களாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றும் சொல்லலாம். யார் கேட்பது?

ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளர் என்று சொன்னதும், முக்கியமான ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

இலங்கை இன்று இவ்வளவு செல்வத்தில் சிறந்த நாடாயிருப்பதற்குக் காரணமானவர்கள் யார்? இலங்கையின் செல்வத்துக்கு அடிப்படை என்ன? பர்மாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் தருவிக்கும் உணவுப் பொருளுக்கு அலட்சியமாகப் பணம் கொடுக்கக்கூடிய நிலைமையில் இன்று இலங்கை எதனால் இருக்கிறது?

இலங்கையின் செல்வச் செழிப்புக்குக் காரணம் அதன் வியாபாரப் பெருக்கம். இலங்கையின் வியாபாரப் பெருக்கத்துக்குக் காரணம் தேயிலையும் ரப்பரும். தேயிலை - ரப்பர்த் தோட்டங்களில் ஆதி நாளிலிருந்து உழைத்துப் பாடுபட்டு வளர்த்தவர்கள் இந்தியாவிலிருந்து, முக்கியமாகத் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றுள்ள தொழிலாளிகள்.

தேயிலையும் ரப்பரும் இலங்கையில் நிரம்ப உற்பத்தியாகிறது. பல தேசங்களுக்கும் போகிறது. அவற்றுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. ஆகையால், ஸ்டர்லிங்—டாலர் நாணயங்களில் இலங்கைக்குப் பணம் வரவேண்டியதாகிறது. அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு அரிசியும் கோதுமை மாவும் வேண்டிய அளவு தருவிக்க முடிகிறது.

இந்தச் சுபிட்சமான நிலைமைக்கு ஆதிகாரணமானவர்களும், இன்றுவரை காரணமாயிருப்பவர்களும் ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளர்கள்தான்.

இலங்கையில் முன் தலைமுறைகளில் வேலை செய்யப் போனவர்களும் அவர்களுடைய சந்ததிகளுமாக இன்று ஏழரை லட்சம் தமிழ் நாட்டுத் தொழிலாளிகள் இலங்கையில் இருக்கிறார்கள். இவர்களைப் பின் தொடர்ந்து சென்று வியாபாரம் முதலிய தொழில்களில் ஈடுபட்ட வர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இந்த ஏழரை லட்சம் இந்தியர்களை — பெரும்பாலும் தமிழர்களை — அங்கிருந்து கிளப்பிவிட இலங்கை சர்க்காரின் மந்திரிகள் பலவித உபாயங்களைக் கையாண்டு வருகிறார்கள். பற்பல சூழ்ச்சித் திட்டங்கள் வகுக்கிறார்கள்.

முக்கியமாக இந்தியர்களுடைய பிரஜா உரிமையையும் வோட்டுரிமையையும் பறித்துவிடக் கூடிய சட்டங்களைச் செய்திருக்கிறார்கள்.

இத்தனை வருஷங்கள் இலங்கையில் தொடர்ந்து வசித்தவர்களுக்கு மட்டுமே இலங்கைப் பிரஜா உரிமை உண்டு என்றும், அதற்கு அவர்கள் அத்தாட்சி காட்டி ருசுப் படுத்த வேண்டும் என்றும் விதித்திருக்கிறார்கள்.

இந்தக் கடுமையான சட்டத்தின்படியும் இலங்கையின் பிரஜா உரிமை பெறக்கூடிய இந்தியர்கள் லட்சக்கணக்கானவர்கள் உண்டு. ஆனால் அதற்குரிய தஸ்தவேஜுகளைத் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து கொடுத்துப் பதிவு செய்து கொள்வதென்பது பெரும்பான்மை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைத் தொழிலாளர்களுக்கு அசாத்தியமான காரியம்.

படிக்கத் தெரிந்தவர்களும் உலகம் அறிந்தவர்களுமான மனிதர்களுக்குத் தற்காலிகமாக இலங்கை போய்விட்டு வருவதற்குரிய பத்திரங்களைப் பூர்த்தி செய்து, அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டுப் போய் வருவது பிரம்மப் பிரயத்தனமாயிருக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத தோட்டத் தொழிலாளி ஒருவர் தம்மை இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்து கொள்வதற்காகப் பூர்த்தி செய்ய வேண்டிய பாரங்களைப் பார்த்தால் நாம் மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவோம். அதற்குரிய இதர தஸ்தவேஜுகளைக் கொண்டு வரும்படி சொன்னால் வேண்டாம்! “வேண்டாம்! எங்களுக்குப் பிரஜா உரிமையே வேண்டாம்! சும்மா விட்டால் போதும்!” என்று கதறுவோம்.

அவ்வளவு பயங்கரமான சோதனையை இந்தியத் தொழிலாளிகளுக்கு இலங்கை சர்க்கார் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தச் சோதனையில் அவர்கள் தேறுவதற்காகப் பெருமுயற்சி புரிந்துவரும் சில தலைவர்களை இலங்கையிலுள்ள இந்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களுடைய பாக்கியம்.

இத்தகைய இந்தியத் தலைவர்களில் சிலரை இலங்கையில் நான் சந்தித்தேன். ஸ்ரீ ராஜலிங்கம், ஸ்ரீ தொண்டைமான், ஸ்ரீ குமாரவேல், ஸ்ரீ சுப்பையா, ஸ்ரீ சோம சுந்தரம், ஜனாப் அஸீஸ் ஆகியவர்களைப் பார்த்துப் பேசினேன்.

ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளிகள் பிறப்புரிமை, வோட்டுரிமை உள்பட எல்லா உரிமைகளையும் இழந்து அடியோடு சர்வ நாசம் அடையாமல் தடுத்துக் கொண்டு நிற்பவர்கள் இந்த ஒரு சில இந்தியத் தலைவர்கள் தான்.

சில நாளைக்கு முன்பு இலங்கை மந்திரிகளில் ஒருவரான ஸ்ரீ குணசிங்கா என்பவர் இந்தத் தலைவர்களைப் பற்றிப் பேசியது பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

“இந்தியத் தொழிலாளிகளே! ராஜலிங்கத்தையும், தொண்டைமானையும், சுப்பையாவையும் நம்பாதீர்கள். அவர்களை நம்பினால் அழிந்து போவீர்கள். அவர்களுடைய திட்டம் எதுவும் உருப்படாது!” என்று ஸ்ரீ குணசிங்கா எச்சரித்திருக்கிறார்.

ஒரு ராஜலிங்கமும், ஒரு தொண்டைமானும், ஒரு சுப்பையாவும் இல்லாமற் போயிருந்தால் இலங்கையின் சகல வளங்களுக்கும் காரணமான ஏழரை லட்சம் தமிழர்களை இலங்கை சர்க்கார் ஓட்டைக் கப்பலில் ஏற்றிக் கடலிலே விட்டிருப்பார்கள்.

ஸ்ரீ ராஜலிங்கத்துக்கும் ஸ்ரீ தொண்டைமானுக்கும் ஸ்ரீ சுப்பையாவுக்கும் மற்றும் அவர்களுடைய சகாக்களுக்கும் ஏழரை லட்சம் தோட்டத் தொழிலாளர் மட்டுமின்றித் தமிழ்நாடே மிகவும் கடமைப் பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=இலங்கையில்_ஒரு_வாரம்/2&oldid=1650633" இலிருந்து மீள்விக்கப்பட்டது