உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள்

விக்கிமூலம் இலிருந்து

12. நிலவு, கழக வெற்றி,
சிறைச்சாலை நிலைமைகள்

(கடிதம் 12, காஞ்சி—6-12-64)

தம்பி!

வகுப்புக் கலவரம், உ. பிரதேச சட்ட மன்றத்துக்கும் நீதி மன்றத்துக்கும் இடையே கிளம்பியுள்ள 'உரிமை' மோதுதல் போன்ற செய்திகள், உள்ளபடி கவலை தருவனவாக உள்ளன. வடக்கே வகுப்பு மாச்சரிய உணர்ச்சி மங்கவில்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலை இப்போதைக்கு மட்டுமல்ல, களையப் படும்வரையில், ஆபத்தைக் கக்கியபடியே இருக்கும் என்று தோன்றுகிறது. வகுப்பு மாச்சரிய உணர்ச்சி வடக்கே எந்த அளவிலே இருக்கிறது என்பதுபற்றி நண்பர்களிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இயல்பாகவே அமைந்துள்ள 'சமரச நோக்கம், உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்கது என்று பேசிக் கொண்டோம்.

சிறையைப் பார்வையிடுவதற்காக மேயர் வரப்போகிறார் என்ற பேச்சு இங்கு இரண்டு நாட்களாக இருந்தது—பேச்சாகவே போய்விட்டது—வரக்காணோம். மேயர், கழக ஆதரவு பெற்றவர் என்று தெரிந்து கொண்ட 'கைதிகள்', மேயர் வரப்போகிறார் என்று அறிந்ததும், எங்களிடம் புதிய தனி மரியாதை காட்டினார்கள்.

சட்டமன்றத்தில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள், திருவள்ளுவர் திரு உருவப்படத்தைத் திறந்துவைத்த செய்தியும், அந்த நிகழ்ச்சிபற்றிய படங்களும் இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். இத்தனை காலத்துக்குப் பிறகாகிலும், வள்ளுவருக்கு ஆட்சி மன்றத்திலே 'இடம்' தந்து பெருமை தேடிக்கொள்ள முடிந்ததே என்பதிலே மகிழ்ச்சி. வெளியில் இருந்திருந்தால் இந்த நாளை ஒரு திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருப்பேன், அப்படி ஒரு எண்ணம் இருந்தது. சிறைக்கு உள்ளே இருந்துதான், அந்தச் சிறப்பான நிகழ்ச்சி பற்றி மகிழ முடிந்தது. வள்ளுவரின் திரு உருவப்படம், இந்த ஆட்சி மன்றத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளின் பெருமன்றத்திலேயே இடம் பெறத்தக்கது.

தென்னக வரலாற்றிலே ஒரு கட்டம் பற்றி சோவியத் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய நூல் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.

இன்று 'நூற்பு வேலை' செய்யவில்லை—கதர் திட்டத்தின் பயனற்ற தன்மைபற்றி, மாறன் முரசொலியில் தலையங்கம் எழுதியிருந்ததைப் படித்தோம்—ஆனால் அதனால் அல்ல 'நூற்பு வேலை' நடைபெறாதிருந்தது; பஞ்சு தரப்படவில்லை.

அறப்போரில் ஈடுபட்டு இங்கு உள்ள தோழர்களில் இருவருக்கு உடல் நலமில்லை—சிறையில் உள்ள மருத்துவ மனையில் உள்ளனர். அவர்களைப் பொன்னுவேல் பார்த்து வரும் வாய்ப்பு கிடைத்ததால், செய்தி அறிந்து கொள்ள முடிந்தது.

26—3—64

இன்று எனக்கு டாக்டர் ஊசி போட்டார். மதியழகனுக்கு இலேசாக ஜுரம்; அவருக்கும் ஊசி போடப்பட்டது.

காலையிலிருந்து இங்கு ஒரே பரபரப்பு; ஒவ்வொரு பகுதியிலும் கூட்டுவதும் மெழுகுவதும், சாமான்களை ஒழுங்குபடுத்துவதுமாக இருந்தனர். காரணம், சிறை மாநில மேலதிகாரி பார்வையிட வருகிறார் என்ற செய்தி. அது செய்தி அளவோடுதான் முடிந்தது, என்றாலும், ஒரு சிலமணி நேரத்தில், சிறையே புதுக்கோலம் கொண்டு விட்டது.

சிறைத்துறை குறித்து, சட்டமன்றத்தில் நம்முடைய தோழர்கள் பேசியது முரசொலியில் விரிவாக வெளிவந்திருந்தது. குறிப்பாகக் கருணாநிதியின் பேச்சு மிகத்தரமாக இருந்தது, அரக்கோணம் ராமசாமிக்கு அளவில்லா மகிழ்ச்சி.

எம்.ஜி. ராமச்சந்திரன் கழகப் பொதுக்கூட்டத்தில் பேசியது 'நம்நாடு' இதழில் வெளிவந்திருந்தது. உருக்கமான பேச்சு. கழகத்திடம் அவர் கொண்டுள்ள உள்ளன்பு தெள்ளெனத் தெரிகிறது. சிலநாட்களாக நான் அடைந்திருந்த மனச்சங்கடம், அவர் கழகக் கூட்டத்தில் பேசினார் என்ற நிகழ்ச்சிபற்றி அறிந்ததால், நீங்கிற்று.

குழந்தைகளுக்கான விளையாட்டு 'ரயில்வே' அமைக்க, மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்போவதாக, முனுசாமி பேசியது பார்த்தேன். பரோடாவில், மிகப்பெரியபூங்காவில் நான் அதுபோன்ற ஒரு அமைப்பைப் பார்த்திருக்கிறேன். முனுசாமியிடம் அப்போதே அதுகுறித்துச் சொல்லியும் வைத்தேன். இங்கும் அதுபோலவே அமைக்கத் திட்டமிடுவது, மிகவும் வரவேற்கத்தக்கது. மாநகராட்சி மன்றத்தினரின் குழு ஒன்று 'பரோடா' சென்று முழு விவரம் தெரிந்துகொண்டு வருவது மெத்தவும் பயனளிக்கும்.

மகிழ்ச்சியுடன் பெருமையும் பெறத்தக்க முறையில், மற்றோர் திட்டமும் மேற்கொள்ள மாநகராட்சி மன்றம் முனைவதுபற்றியும் அறிகிறேன். மயிலையில், திருவள்ளுவரின் சிலையினை அமைக்க ஏற்பாடு செய்யப் போவதாக முனுசாமி தெரிவித்திருக்கிறார். மிக நேர்த்தியான யோசனை.

ஒளவையார் சிலை ஒன்றினை, டில்லியில் உள்ள ஒரு அமைப்பில்—அது அமெரிக்க அரசுக்குத் தொடர்புள்ள அமைப்பு என்று அறிகிறேன்—அமைத்திருப்பதாகச் செய்தி பார்த்தேன், மாநகராட்சி, ஒளவையாரின் சிலையையும், அமைத்திட முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். வெளியில் சென்ற பிறகு இது பற்றி நண்பர்களுடன் கலந்து பேச விரும்புகிறேன்.

இன்று 'பஞ்சு' கொடுத்துவிட்டார்கள்—நூற்பு வேலையும் நடைபெற்றது.

கிருத்துவமார்க்கம் நிலைபெற்ற பிறகு, அறிவுத் துறையினருக்கும் மார்க்கத் துறையினருக்கும் இடையே மூண்டுவிட்ட மோதுதல் பற்றிய பின்னணி கொண்ட 'ஏடு' முன்புபடித்து, பகுதியில் நிறுத்திவைத்திருந்தேன்—இன்று தூக்கம் வருகிற வரையில், அந்த புத்தகத்தைத்தான் படிக்க இருக்கிறேன். மார்க்கத்திலே புகுந்துவிட்ட மாசுகளைப் போக்கவேண்டும், தூய்மைப்படுத்தவேண்டும் என்று துவக்கப்பட்ட ஒரு இயக்கத்தையே, கெடுமதியாளர் கூட்டம், கடவுள் மறுப்புக் கும்பல் என்றெல்லாம் தூற்றிக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் இந்த ஏட்டிலே விளக்கப்பட்டுள்ளன.

27—3—64

இன்று கிருத்தவ மார்க்கத்தாருக்குத் திருநாள்—சிறையில் விடுமுறைநாள். ஞாயிற்றுக்கிழமைபோலவே இன்று கைதிகளுக்கு 'வேலை' கிடையாது! நாங்கள் கைதி உடை அணியத் தேவையில்லை. விடுமுறை நாள் என்பதால், இன்று மாலை 5மணிக்கெல்லாம், எங்களை அறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள். வார்டர்களில் சிலர், கண்டிப்புக்குரலால் காரியம் சாதிப்பவர்களில், சிலர் கனிவு காட்டியே காரியம் சாதிப்பவர்கள். "இன்றுவிடுமுறைநாள் சற்று முன்னதாக 'லாக்-அப்' வேலை முடிந்துவிட்டால், வீட்டுக்குப்போகச் சவுகரியமாக இருக்கும்......" என்று கனிவாகப் பேசும்போது, நாங்களே வேலைகளைச் சீக்கிரமாக முடித்துக்கொண்டு, அறைகளிலே சென்று அமர்ந்து விடுவதுதானே முறை? அந்த முறையில் மாலை ஐந்துக்கே உள்ளே சென்று விட்டோம்—பூட்டிவிட்டு, அதை இழுத்துப் பார்த்து விட்டு, வார்டர்கள் சென்றுவிட்டார்கள். மற்றப் பகுதிகளில் இரவில், மணிக்கு ஒருமுறை வார்டர்கள் வருவார்கள். இங்கு அநேகமாக இரவுக் காலத்தில் வார்டர்கள் வருவதில்லை. அதனால் அடைபட்டுக்கிடக்கும் எங்களுக்கு ஏதேனும் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டால், எந்தவிதமான உதவியும் கிடைப்பதற்கு வழி இல்லை. இது கவலைதரத்தக்க நிலை.

இன்று காலை, மதியழகன் சொன்னார், இரவெல்லாம் காய்ச்சல்—விடியும்போதுதான் வியர்வை கண்டது என்று, சோர்வு அதிகம் தெரிகிறது. இந்த நிலையிலும் வார்டர்கள் வருவதில்லை என்றால் என்ன சொல்லுவது!

எனக்கு இடக்கரத்திலே உள்ள வலி சற்று வளர்வது போல் தோன்றுகிறது. வலிபோக்க, தரப்பட்டுள்ள தைலத்தைக் காலையிலே தடவிக்கொண்டு பார்த்தேன்—மாலையில் தண்ணீர் கொதிக்கவைத்து வலியுள்ள இடத்திலே ஊற்றிக் கொண்டு பார்த்தேன்—அந்த நேரத்துக்கு இதம் தெரிகிறது, அவ்வளவே.

இங்கே இப்பொழுதே, வார்டர்களும் வேலை செய்வோரும், எங்கள் 'விடுதலை' பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள், குறைந்தது ஒருமாத காலமாவது தண்டனைக் காலத்திலே 'கழிவு' ஆகிவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள். இதுபற்றிய பேச்சுத்தான், இங்கு பொழுது போக்காகி இருக்கிறது.

'சட்டமே செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துவிடப்போகிறது, நீங்களெல்லாம் விடுதலை ஆகப் போகிறீர்கள்' என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

பொதுவாக அனைவருக்கும், குறிப்பாகப் பொதுவாழ்வுத் துறையினருக்கும், அன்றாடம் பத்திரிகைகள் பார்த்து உலகநிலை, நாட்டுநிலை, கட்சிநிலை, ஆகியவற்றினைத் தெரிந்துகொள்வதிலே ஆர்வம், துடிப்புணர்வு இருப்பது இயற்கை. ஆனால், இந்தத் துடிப்பினுடைய முழுவேகத்தை உணரவேண்டும் என்றால், சிறையிலே தான் உணரமுடியும். எத்தனை ஆவல், ஆர்வம், துடிப்பு! பத்திரிகைகள் கைக்குக் கிடைத்த உடன், பலநாள் பசித்துக்கிடந்தவன், விருந்து கிடைக்கப்பெற்றால் எத்துணை பதைப்பு ஏற்படுமோ, அப்படிப்பட்ட ஒரு பதைப்பு. ஒரு எழுத்துவிடாமல் படித்துப் படித்துச் சுவைக்க முடிகிறது. பத்திரிகைச் செய்திகளைப்பற்றி ஒருவருக்கொருவர் உரையாடல், கருத்துரைகள் வழங்கிக் கொள்வது, இப்படி.

எழுதிய எழுத்து உலருவதற்கு முன்பு, நான் சொன்ன ஒரு விஷயம் பொய்த்துவிட்டது. இப்போது ஒரு வார்டர் இங்கு வந்திருந்தார்—இன்னும் தூக்கம் வரவில்லையா என்று கேட்டுவிட்டுச் சென்றார். ஒரு சமயம் வார்டர்களே வருவதில்லை என்று நண்பர்கள் குறைபட்டுக்கொண்டது, எட்டவேண்டிய இடத்துக்கு எட்டி, வார்டர் வந்திருக்கிறாரோ, என்னவோ!

படித்து முடித்துவிட்ட 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் எடுத்தேன்.

சிறையில் கைதிகளுக்கு உணவளிக்க எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதுபற்றிச் சட்டசபையில் அமைச்சர் கணக்களித்திருந்தாரே அதுபற்றி இன்று பிற்பகல் இங்கே நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். செலவு மிகக்குறைவு என்றும் கூறிவிட முடியாது; பண்டங்கள் தரப்படுவதே இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை; ஆனால், பண்டங்கள் பாழாகும் விதமான சமைக்கும் முறைதான் இங்கு சங்கடத்துக்குக் காரணம். கைதிகளே சமைக்கிறார்கள்—சமையல் முறை தெரியாதவர்கள். அதனால் பண்டங்கள் பாழாக்கப்பட்டு, கைதிகள் சுவையையோ, வலிவையோ பெறமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

முற்காலத்திலே இருந்ததைவிடச் சிறை எவ்வளவோ மேல் இப்போது என்று அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள்—அதுபற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தனர். விளக்கொளி, உடை, அலுமினிய பாத்திரம், காற்றோட்டத்துக்கான வழி, இவைகளெல்லாம் இப்போது உள்ளன; முன்பு இருட்டு, மண்பாண்டம், அழுக்குடை, குகைபோன்ற அமைப்பு இவை இருந்தன; இது முன்னேற்றமல்லவா என்று அமைச்சர்கள் கேட்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் நிலைமை சிறையிலே இருந்த நாட்களில், வெளியிலேயே இருட்டும் இடர்ப்பாடும் மிகுந்திருந்தன; அதனுடைய மறு பதிப்பாகச் சிறை இருந்தது. இப்போது, வெளியே அமைந்துள்ள வாழ்க்கை முறையில், ஒளியும் காற்றும், தூய்மையும் துப்புரவும் புகுத்தப்பட்டு விட்டிருக்கிறது; ஆகவே அதனுடைய சாயல், சிறையிலும் இருக்க வேண்டும்—இதனை அமைச்சர்கள் மறந்துவிடுகிறார்கள். முன் பீப்பாயில் போட்டு உருட்டுவது, சுண்ணாம்புக்காளவாயில் போட்டு வேகவைப்பது. கழுமரத்தில் ஏற்றுவது, மாறுகால் மாறுகை வாங்கிவிடுவது, யானை காலில் இடர வைப்பது, இப்படிக் கொடுமைப்படுத்தும் முறைகள் நிரம்ப இருந்தன! அந்தக் காலத்தைத்தான் காட்டு மிராண்டிகள் காலம் என்கிறோம். அவைகளைக் கவனப்படுத்தி அவைகளைவிட, கசையடி பரவாயில்லை அல்லவா, கை காலுக்கு விலங்கிடுதல் பரவாயில்லை அல்லவா என்று கேட்பது, வாதமுமாகாது; மனிதத்தன்மையின் மேம்பாட்டை வளர்க்கும் வழியுமாகாது. சிறை கொடுமைப்படுத்த உள்ள இடம் என்ற கொள்கை, காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு கூறு. திருத்துவதற்கான் இடம் சிறை என்பதுதான் நாகரிக நாட்டினர் ஒப்புக்கொண்டுள்ள கருத்து. இந்தக் கருத்தை இங்குள்ள அரசு ஒப்புக்கொள்கிறதா மறுக்கிறதா என்பதுதான் பிரச்சினை. நமது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில் இதனை எழுப்பினார்கள்—அமைச்சர் அவையினர் பொருத்தமான பதிலோ, விளக்கமோ, தரவில்லை. பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு வந்தவர்கள், இதே காங்கிரஸ்காரர்கள் ஜெயிலில் இருந்தபோது, என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்? சிறையை அப்படித் திருத்தப் போகிறோம், இப்படி மாற்றப் போகிறோம் என்றெல்லாம் பேசினார்கள், பதவியில் உட்கார்ந்ததும் அதை எல்லாம் காற்றிலே பறக்க விட்டுவிட்டார்களே என்று கேலி பேசுகிறார்கள்.

டில்லி மேலவைத் தேர்தலில், நண்பர்கள் சமதும் மாரிசாமியும் வெற்றி பெற்றது பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது. இங்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

28—3—64

இன்று அறையினுள் அடைக்கப்பட்டதிலிருந்து கிட்டதட்ட முக்கால் மணி நேரம், கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றபடி, எதிர்ப்புறம் எழிலோடு விளங்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி இருந்தேன். அழகிய நிலவு, முழு நிலவுக்கே மறுதினம்! கிளம்பும் போது பொன்னிறம்? மேலே செல்லச்செல்ல உருக்கி வார்த்த வெள்ளி நிறம்! எனக்கு எப்போதுமே நிலவைக் காண்பதிலே பெருமகிழ்ச்சி. கம்பிகளுக்குப் பின்னால் நின்றபடி பார்க்கும்போதும், பெருமகிழ்ச்சியே! சிறைப்படாத நிலவு. அழகினைச் சிந்திக்கொண்டிருக்கிறது—சிறைப்பட்டிருக்கும் எனக்குக் களிப்பை அள்ளிப் பருகிக்கொள் என்று நிலவு கூறுவது போலத் தோன்றிற்று. இங்கு வந்த இத்தனை நாட்களில் இத்துணை அழகு ததும்பும் நிலவை நான் கண்டதில்லை. கடலோரத்தில், வெண் மணலின் மிதமர்ந்து கண்டு இன்பம் கொண்டிட வேண்டும் அண்ணா! சிறைக்குள் இருந்தா!! என்று கேட்டுக் கேலி பேசுவர் என்பதால், அதிகம் இதுபற்றி எழுதாதிருக்கிறேன். இன்று உள்ள வானம் நிலவு அளிக்கும் ஒளியினால் புதுப்பொலிவு பெற்று விளங்குவது போலவே, என் மனமும் எனக்குக் கிடைத்த செய்தி காரணமாக மகிழ்ச்சியால் துள்ளியபடி இருக்கிறது. நண்பர்கள் நடராசனும், சி. பி. சிற்றரசும் மேலவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர் என்ற செய்தி கிடைத்தது. இன்று மாலை—நறுமணம் வீசும் சந்தனத்தை வேலைப்பாடு மிக்க வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றித் தருவதுபோல, இந்த மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியை எனக்குத் தந்தவர், டில்லி மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர் மாரிசாமி.

முதலமைச்சருடைய தனி அனுமதி பெற்று, நண்பர் மாரிசாமி, ஆம்பூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சம்பங்கி, திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சின்னராஜு, வாணியம்பாடித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடிவேலு ஆகியோருடன் இன்று மாலை என்னைக் காண வந்திருந்தார். சிறை மேலதிகாரிகள் தமது திறமைமிக்க கண்காணிப்பை நடத்த அங்கு அருகிலே அமர்ந்திருந்தனர். நண்பர் மாரிசாமிக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்தேன். அவர் தம்முடைய நன்றியைக் கூறினார்.

காங்கிரஸ் வட்டார ஓட்டுகள் சில அவருக்குக் கிடைத்திருப்பது பற்றி, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் விசாரம் தரும் விசாரணை நடத்த இருப்பதாக காலைப் பத்திரிகைகளில் பார்த்தேன்—அதுபற்றி மாரிசாமியிடம் கேட்டேன்.—எனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள், காங்கிரஸ் வட்டாரத்தில், சில மந்திரிகள் மட்டுமே இருக்கிறார்கள்—அவர்களுடைய ஓட்டுகள்தான் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவ்விதமாக, பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு வந்ததாகவும் சொன்னார். சுதந்திராக் கட்சிக்காரர் என்பதனால் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தின் பெரிய புள்ளிகளின் இயல்புகளை, நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறவர் என்பதாலே, இன்றையக் காங்கிரஸ் தலைவர்களிலே முதன்மையானவர்களுக்கு, மாரிசாமியிடம் கோபம்—கசப்பு—அச்சம்கூட அவருடைய வெற்றியை அவர்கள், தங்கள் இதயத்துக்குத் தரப்பட்ட கசையடியாகவே கருதுவார்கள்.

திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவர் சின்னராஜு நமது இயக்கத்தவர் என்றாலும், எதற்கும் தாமாக முந்திக் கொண்டு வந்து நிற்கும் சுபாவம் உள்ளவரல்ல. சட்டமன்றத் தேர்தலில் அவர் ஈடுபட்டதே என்னுடைய இடைவிடாத வற்புறுத்தலுக்குப் பிறகுதான். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலிலும் ஈடுபட அவர் இலேசில் இடம் கொடுத்திருக்கமாட்டார். தேர்தலில் பல்வேறு வகையான எதிர்ப்புகள் இருந்தன என்று கூறினார். அவருடைய வெற்றி, நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும், காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வேலைகளில் ஒரு தலைமுறை அனுபவம் பெற்றவர்களாயிற்றே என்பதை எண்ணிச் சிறிது கவலைப் பட்டுக் கொண்டிருந்தவன், வெளியே சென்று அவரைக்காண, நாட்கள் பல ஆகுமே என்று எண்ணிக்கொண்டிருந்தேன்—அவரே இங்கு வந்தது என் ஆவலை அறிந்து வந்தது போலிருந்தது.

ஆம்பூர் சம்பங்கி, மிக அமைதியாகக் காரியத்தைக் கணக்கிட்டு முடிக்கும் இயல்பினர். விலைவாசிக் குறைப்புப் போராட்டம் காரணமாக என்னோடு வேலூர் சிறையில் இருந்தவர். அப்போதே, அவர் ஆம்பூர் நகராட்சித் தலைவராக வரவேண்டும் என்று பேசிக்கொண்டோம். எண்ணியபடியே நடந்தேறியது. ஆம்பூர் நகராட்சிக்கான தேர்தலின்போது இருந்த நிலைமைகள் பற்றிச் சிறிதளவு கூறினார்.

அவர்களைக் கண்டுவிட்டுவந்து, இங்கு நமது நண்பர்களிடம் 'சேதி' கூறியபோது, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இன்று காலையில், சிறை மாநில மேலதிகாரி வந்திருந்தார்—இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவராம். நாங்கள் இருந்த பகுதிக்கு, சிறை அதிகாரிகளுடன் வந்திருந்தார். மிகப்பெரிய பொறுப்பான பதவியில் இருப்பவர். சிறை நிலைமைகளைக் கண்டறிய வரும் போது, எங்களையும் பார்த்து, நாலு வார்த்தை பேசுவார், நிலைமை எப்படி? என்று கேட்பார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். கேட்டிருந்தால் சொல்வதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பதால் அல்ல; ஒரு பரிவு காட்டும் முறையில், பேசுவார் என்று நினைத்தேன். அவர், எங்கள் பகுதியின் கீழ்த்தட்டில் உலவினார்—நாங்கள் மாடிப் பகுதியில், நூற்பு வேலையில் இருந்தோம்—திரும்பிக்கூடப் பார்க்கவில்லை! சமையற்கட்டைப் பார்த்துவிட்டு, அங்கு இருக்கும் ஒரு அரச மரத்தைப் பார்த்துவிட்டுப் போய் விட்டார். வெள்ளைக்கார ஆட்சி ஒழிந்ததும், அதிகாரவர்க்கத்தின் பழய மனப்பான்மையே ஒழிந்துவிட்டது என்று வேறு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள்!

கம்யூனிஸ்டு கட்சியிலே 'பிளவு' விரிவாகிக் கொண்டு வருவதுபற்றி, நண்பர் மதியழகன், இன்றையப் பத்திரிகையைப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆந்திராவில் சுந்தரய்யா—நாகிரெட்டி போன்ற புடம் போட்டு எடுக்கப்பட்டவர்களெல்லாம் கூட, புரட்சி செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில், கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்படுவது, களிப்பூட்டும் நிகழ்ச்சி அல்ல—காங்கிரசை எதிர்க்க அமைந்துள்ள ஒரு கட்சி வலிவிழந்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தைப் புதுவலிவு கொள்ளச் செய்கிறதே என்பது கவலை தருவதாகவே இருக்கிறது.

பொதுவாகவே, இப்போது, எல்லாக் கட்சிகளிலும், இரு பிரிவுகள்—ஒன்றை ஒன்று பிற்போக்கு என்று கூறிக்கொண்டு முளைத்து, முடைநாற்றத்தைக் கிளப்பிவிடும் நிகழ்ச்சி ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில், வலதுசாரி டி. டி. கிருஷ்ணமாச்சாரி மொரார்ஜி போன்றோராலும், இடதுசாரி கிருஷ்ணமேனன், மாளவியா போன்றாராலும் நடத்தப்பட்டு வருகிற நிலைமை இருப்பதை, மறைக்கக்கூட முடியவில்லை.

கம்யூனிஸ்டு கட்சியில், டாங்கே கோஷ்டி, கோபாலன் கோஷ்டி என்கிறார்கள்.

பிரஜா—சோஷலிஸ்டுகளில், மிஸ்ரா கோஷ்டி அசோக்மேத்தா கோஷ்டி என்கிறார்கள்.

திராவிடர் கழகத்தில் பெரியார் சுயமரியாதைக் கட்சி, குருசாமி சுயமரியாதைக்கட்சி என்று பேசப்பட்டு வருகிறது.

மாற்றார்கள் எத்துணையோ இட்டுக்கட்டியும் மூட்டி விட்டுங்கூட, நமது கழகம் மட்டும் இத்தகைய கேட்டினுக்கு இரையாகாமல் இருந்து வருவதுபற்றி, வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.

இன்று பத்திரிகைகள், காங்கிரஸ் கட்சிக்குள் மூண்டுகிடக்கும் உட்பூசல்களை எவ்வளவோ மூடி மறைக்கின்றன. கேரளத்திலும் ஆந்திரத்திலும், ராஜ்யசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்தனர். தேர்தல் தந்திரத்தில் தனக்கு மிஞ்சியவர் இல்லை, கட்டுப் பாட்டில் நிகர்வேறு இல்லை என்று விருது பெற்ற காமராஜர் கண்எதிரில், மாரிசாமிக்குக் காங்கிரஸ் ஓட்டுகள் கிடைத்துள்ளன!

இந்த நிலைமைகளோடு மிகப் பெரிய நெருக்கடியின் போதும், திராவிட முன்னேற்றக் கழகம், கட்டுப்பாட்டு உணர்ச்சியுடன் காரியமாற்றிவரும் கண்ணியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொதுமக்கள், நமது கழகத்தைப் பாராட்டாமலிருக்க முடியாது. எந்த ஒரு கழகத் தோழரும், இந்த மேலான நிலைக்கு ஊறு நேரிடும்படியான சொல்லிலோ செயலிலோ தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்ற செம்மையான பாடத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

வெளியில் இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடியதைவிட, சிறைப்பட்டிருப்பவர்களுக்குத்தான், இந்த அருமையும், அதனால் கிடைக்கப்பெறும் பெருமையும் எழுச்சியைத் தந்திடும். நாம் சிறையில் இருக்கிறோம், நமது கழகம் வெற்றிமேல் வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளருகிறது என்பதனைவிட, உற்சாகமான வேறு உணர்ச்சி தேவை இல்லை அல்லவா? அத்தகைய வெற்றிகளை ஈட்டித்தரப் பாடுபடும் அனைவருக்கும், நன்றி கூறியபடிதான், சிறையிலே இருக்கிறோம்.

இவைபற்றி இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக் கொண்டிருந்தேன், நகராட்சி மன்றத் தேர்தல்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா என்று கேட்டார்—பெரும் அளவு கிடைத்தது. ஆனால் சேலம் ராசிபுரம் இரண்டு இடங்களிலும் நான் அதிக அளவு வெற்றி எதிர்பார்த்தேன்—கிடைக்கக்காணோம்—பொதுவாக இது பற்றி வெளியே சென்றபிறகு கண்டறியவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஏன் இதற்கு ஒரு குழு அமைக்கலாமே என்றார்—குழு அமைத்து, இன்னின்னாரால் குறைகள் ஏற்பட்டுவிட்டன என்று கிளறிக் கொண்டிருப்பதை நான் விரும்புபவன் அல்லவே என்பதை நினைவு படுத்தினேன்.

நிலவைக்கண்டு களிப்பைப் பருகிக் கொண்டிருந்துவிட்டு, உடனே குறிப்பு எழுதவில்லை. இடையில் வைசாலி தட்சசீலம் ஆகிய பழம் பெருமைமிக்க ஊர்களிலே உலவிக் கொண்டிருந்தேன்—ராகுல் எழுதிய சிந்துமுதல் கங்கைவரை என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இனி, கெய்ரோ நகர் நோக்கி, கிருஸ்தவ அரசுகளின் படைகள் பாயும் நிகழ்ச்சி பற்றி—புனிதப் போர்பற்றி—(ஆங்கில) ஏடு படித்துவிட்டுத் தூங்க முயற்சிக்கவேண்டும். நேற்றிரவு இரண்டு மணியிலிருந்து நாலு மணிவரையில் கைவலியினால், தூக்கம் வராமல் கஷ்டமாக இருந்தது. இன்று பிற்பகலும் வலிதான். ஆனால் இப்போது இல்லை. நிலவின் அழகும் கழகவெற்றியின் நேர்த்தியும், வலியை விரட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன், பார்ப்போம்.

1—4—64

ஏப்ரல் மாதத் துவக்கம் இடையில் குறிப்பு எழுதாததற்குக் காரணம், ஏற்பட்டுவிட்ட மனச்சங்கடம். திடீரென்று டி. எம். பார்த்தசாரதிக்கு நெஞ்சுவலி கண்டது. கவலைப்படும் அளவுக்கு வலி விறுவிறுவென்று வளர்ந்து களைப்பு, மயக்கம் மேலிட்டுவிட்டது. சிறைமருத்துவர், சில மணி நேரம் பார்த்துவிட்டு. வெளியே மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்றார். நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம். அதற்கு ஏற்றபடி, பார்த்தசாரதியின் நிலைமையையும் இருந்தது. மாலை ஏழு மணி இருக்கும், பார்த்தசாரதியை வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, படிக்கட்டுகளில் இறங்கியதும் மயக்கம் அதிகமாகிவிட்டது. வார்டர் தாங்கிப் பிடித்துக்கொண்டு சென்றார் என்றாலும், சிறிது தூரம் நடப்பதற்குள் மயக்கம் மேலும் அதிகமாகி நடந்துபோக முடியாத நிலை ஏற்பட்டு, வார்டர்கள் பார்த்தசாரதியைத் தூக்கிச் செல்லும்படி ஆகிவிட்டது. இதைக்கண்ட எங்களுக்கு மேலும் திகிலாகிவிட்டது. வேறு எங்கும் பெறமுடியாத மேலான மருத்துவ உதவி, வெளி மருத்துவமனையில் கிடைக்குமென்பது தெரிந்திருந்தாலும், பொதுவாக நெஞ்சுவலி விபத்தாக முடிந்துவிடுவதை அறிந்திருந்த காரணத்தால், எங்களுக்குப் பெருத்த மனச்சங்கடம் ஏற்பட்டது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாளும் மருத்துவமனை சென்றுள்ள பார்த்தசாரதியின் நிலைமை எப்படி இருக்கிறதோ என்பதுபற்றிய கவலையே உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. சிறை அதிகாரிகளைக் கேட்டாலோ 'மருத்துவமனைக்கு ஒரு கைதியை அனுப்பிய பிறகு, தொடர்பு வைத்துக் கொள்வதில்லை' என்று கூறிவிட்டனர். பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றி, வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய துணைவியாருக்குச் 'சேதி’ தரும்படி சிறை அதிகாரிகளில் ஒருவரைக் கேட்டுக்கொண்டோம். அவர், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பி, வீட்டாருக்குத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இது ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. என்றாலும், கண்களில் நீர் தளும்பும் நிலையில், இங்கிருந்து பார்த்தசாரதி சென்ற காட்சி, கண்முன் எப்போதும் நின்று மனதை வாட்டியபடி இருந்தது. வயது 60, எப்போதும் மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தபடி இருப்பது வாடிக்கை. நான் பலமுறை தடுத்தும் எந்த வேலையையும் அவரே மேற்கொள்வார். அந்த அளவு வேலைசெய்யக் கூடிய வலிவும் இல்லை. அதை அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதன்றி வீட்டை ஒட்டிய கவலைகள்.

பொன்னுவேல் சமையல் காரியத்தைக் கவனித்துக் கொண்டார்; எனக்கும் மற்றவர்களுக்கும் சாப்பாட்டின் வகைபற்றிய எண்ணமே எழவில்லை. சிறை மருத்துவரிடம், பொன்னுவேலுவை அனுப்பி இருந்தேன். அவர், 'பயப்படும்படியாக நிலைமை இல்லை; இருதயசம்பந்தமான வலி என்றுகூடத் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. பரிசோதனைக்காகத்தான், பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி இருக்கிறேன்' என்று கூறி அனுப்பினார்.

எனக்கு ஊசிபோட மருத்துவர் வந்திருந்தார். பெரிய மருத்துவமனை சென்று, நிலைமையைக் கண்டறிந்துவந்து கூறும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலையே, அவர், பெரிய மருத்துவமனை சென்று பார்த்தசாரதியைப் பாரித்துவிட்டுத் திரும்பி, கம்பவுண்டர் மூலமாக, கவலைப்படத்தக்கதாக ஏதும் இல்லை என்று செய்தி அனுப்பி இருந்தார். மிகுந்த ஆறுதலாக இருந்தது. தொடர்ந்து, சிறைக்காவலர்களில் ஒருவர், மருத்துவமனை சென்று பார்த்து விட்டுவந்து, பார்த்தசாரதி நல்லபடி இருக்கிறார் என்ற செய்தியைக் கூறினார்.

எங்கள் கவலையையும் 'கலக்கத்தையும் போக்கிடத் தக்கவிதத்தில் 1—4—64 மாலை, பார்த்தசாரதியே, இங்குத் திரும்பிவந்துவிட்டார். நேரிலே பார்த்த பிறகுதான் மன நிம்மதி ஏற்பட்டது. பரிசோதனைகள் செய்தது குறித்தும், வீட்டாரும் நண்பர்கள் நடராசன், கருணாநிதி, நெடுஞ்செழியன், கிட்டு ஆகியோர் வந்து விசாரித்தது குறித்தும் பார்த்தசாரதி கூறினார். அதிகமாக வேலை செய்யக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறினேன். அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. சோர்வு நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.

மனச்சங்கடம் காரணமாக, படிப்பதும், உரையாடுவதும், தட்டுப்பட்டுவிட்டிருந்தது.

வைசாலி—தட்சசீலம் ஆகிய இடங்களில் அமைந்திருந்த குடிஅரசுக்கும் மகத நாட்டின் முடியாட்சிக்கும் இடையே மூண்டுவிட்ட போர்பற்றி, ராகுல் விவரித்திருந்த பகுதியைப் படித்தேன்.

ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்படுவார் என்று காஷ்மீர் முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஷேக் அப்துல்லா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, பயங்கரமானது—அவருக்கும் அவருடைய கூட்டுத் தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத் தரத்தக்க வழக்கு. பாகிஸ்தானோடுகூடி, காஷ்மீர் சர்க்காரைக் கவிழ்க்கச் சதிசெய்தார் என்பது வழக்கு. பல இலட்சம் வழக்குக்காகப் பாழடிக்கப்பட்டது. இப்போது வழக்கினைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர். பத்து ஆண்டுகளாக சிறைக்கொடுமைக்கு ஆளான ஷேக்அப்துல்லா, நிபந்தனையின்றி விடுதலை பெறுவது, அவருடைய புகழொளியைப் பார் அறியச்செய்யும் என்பதில் ஐயமில்லை. காஷ்மீரத்தின் எதிர்காலமும், காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் நிலையும், இந்தச் சம்பவத்தினால் எந்த விதத்தில் உருப்பெருகிறது என்பது இனித்தான் தெரிய வேண்டும்.

மொரார்ஜி தேசாய் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 'அடிமைப்பட்ட மக்களிடம் எஜமானன் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டு செல்லும் விதமாக அவருடைய பேச்சு இருக்கிறதே தவிர, காரணம், விளக்கம், கனிவு ஏதும் காணோம்' என்று நண்பர்கள் கேட்டார்கள். "மனதிலே பட்டதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுகிறார் இது ஒருவிதத்தில் பாராட்டத்தக்கது. நமது அமைச்சர்களைப்போல மூடி மறைத்து, மக்களின் நோக்கை வேறுதிசையில் திருப்பி விடவில்லை? இதுபோன்ற பேச்சுதான், நமது மக்களுக்கு உண்மையான நிலைமையை எடுத்துக்காட்ட உதவும்" என்று நான் கூறினேன்.

மொரார்ஜியின் பேச்சில் மற்றோர் கருத்து—பேசாததன் மூலம்—தொனித்தது. பலரும் பாராட்டிப் பேசிய காமராஜ் திட்டம்பற்றி அவர் ஏதும் குறிப்பிடவே இல்லை. ஒருவேளை அதனால் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால், அது குறித்துப் பேசவில்லை போலும்!