உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து

13. அரசியல்-மற்றும் பல சிந்தனைகள்
(கடிதம் 13, காஞ்சி— 13—12—64)

தம்பி!

இந்தியை எப்படியும் அரியணை ஏற்ற இருக்கிறார்கள், நாம் விழிப்புடன் இருந்து தடுத்தாலொழிய, அந்த விபத்து ஏற்பட்டே தீரும் என்று நாம் எடுத்துக்கூறும் போது ஏதோ கட்சி மாச்சரியத்தால் பேசுகிறோம் என்று எண்ணிக்கொள்ளும் மக்கள்கூட மொரார்ஜியின் பேச்சைக் கேட்ட பிறகு, உண்மை நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அந்த வகையில் மொரார்ஜியின் பேச்சு வரவேற்கத்தக்கதுதான் என்று நண்பர்களிடம் கூறினேன்.

2—4—64

இன்று தமிழ் நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதற்காக, துரைத்தனம் மேற்கொண்டுள்ள திட்டத்தை விளக்க, மாவட்டப் படங்கள், புள்ளி விவரங்கள் தரும் ஏடுகள் ஒரு பெரிய கட்டு, மதியழகனுக்குத் தரப்பட்டது, இந்திய துரைத்தனத்தார், சென்னை மாநில அரசு மூலம் இதனை அனுப்பியிருந்தனர்—மதியழகன் இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினர். இன்று பெரும்பகுதிப் பேச்சு இந்தப் பிரச்சினையை ஒட்டியதாகவே இருந்தது. மே திங்கள் 11—ம் நாளிலிருந்து இதற்கான குழு உதகையில் கூடுகிறது. இதற்கான அழைப்பிதழும் மதிக்கு அனுப்பப்பட்டது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயத்தப்பட இருக்கிறது—242 ஆக. எனவே, பல புதிய தொகுதிகள் அமைய இருக்கின்றன. மதியும் ராமசாமியும், எந்தெந்த வகையில் புதிய தொகுதிகள் அமையலாம் என்பதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். மலைவாசிகளுக்காக இப்போது ஏற்காடு தொகுதி இருக்கிறது—மற்றோர் தொகுதி மலைவாசிகளுக்கு அமையலாம்—அது கொல்லி மலையை ஒட்டியதாக அல்லது ஜவ்வாது மலையை ஒட்டியதாக இருக்கலாம் என்று புள்ளி விவரக் கணக்கைக் கொண்டு மதி கூறினார். ஆங்காங்கு உள்ள நமது கழகத் தோழர்களின் கருத்தையும் அறிந்து, இறுதியாக முடிவு மேற்கொள்ளவேண்டும்.

அரசியல் சட்ட எரிப்பு சம்பந்தமான சட்டம் செல்லுபடியாகாது என்பதாக, தொடரப்பட்டிருந்த வழக்கில், நீதிபதிகள் வீராசாமி, குன்னி அகமத் குட்டி ஆகியோர் அளித்த தீர்ப்பு பத்திரிகையில் பார்த்தோம். தீர்ப்பின் வாசகத்தைப் பார்க்கும்போது, மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று வழக்காடலாம் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால் ஏற்கனவே மதுரை முத்துவும் அவர் குழுவினரும் மூன்று திங்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருக்கிறார்கள்—இனியும் அந்த நிலையை நீடிக்கவைக்கக் கூடாது என்று, இங்கு அனைவரும் கருதினோம்.

அருப்புக்கோட்டையில் நடைபெற இருக்கும் தேர்தல் பற்றி, சுவைதரத்தக்க செய்தி எதுவும் இதழ்களில் காணவில்லை, திருச்செங்கோடு, திருவண்ணாமலை, போடி, நாங்குனேரி ஆகிய இடங்களிலே தேர்தல்கள் நடந்தபோது காணப்பட்ட பரபரப்பான சூழ்நிலை, என்ன காரணத்தாலோ இப்போது தென்படவில்லை, காமராஜரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி மட்டுமே குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பாக நிற்பவர், மறவர் குலத்துப் பிரமுகர்—ராமநாதபுரம் ராஜாவின் இளவல். பார்வார்டுபிளாக், அவருக்கு எதிராக வேலாயுதன் நாயர் என்பவரை நிறுத்திவைத்திருக்கிறது. துணிகரமான முயற்சி என்று நான் கூறினேன். வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று மதி, காரணம் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.

சினிமா, நாடகத் துறைகளைக் கேலி பேசிக்கொண்டிருந்த காமராஜர், இப்போது அந்தத் துறைகளைத் தன் நட்புக்கரத்தில் கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கழகத் தோழர்கள் நல்ல நாடகங்கள் நடத்துவதை அடியோடு நிறுத்தி விட்டது, நமது பிரசார முனையிலே நட்டத்தை உண்டாக்கிவிட்டது என்று நான் விளக்கியபோது, நண்பர் ராமசாமி, எனக்குக்கூட நாடகத்திலே நடிக்க ஆவலாக இருக்கிறது; ஒரு நல்ல நாடகம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நேரமும் நினைப்பும் துணைபுரியும்போது எழுதிக்கொடுக்கிறேன் என்று தெரிவித்தேன், சுயமரியாதை இயக்க கால முதற்கொண்டு, நமது இயக்கப் பிரசாரத்துக்கும் நாடகத்துறைக்கும். இருந்துவந்த தொடர்புபற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

சுயமரியாதை இயக்கத்தில் நான் ஈடுபட்டபோது, மாநாடுகளிலே, 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற நாடகம் நடத்தப்பட்டுவந்தது. திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு நாடகக்குழு, இதுபோன்ற நாடகங்களை நடத்திக்கொண்டுவந்தது. பிறகு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அளித்த 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் நடத்தப்பட்டது. ஒரு முறை அதிலே இப்போதைய திருவாசகமணி, கே. எம். பாலசுப்பிரமணியமும், குத்தூசி குருசாமியும் நடித்ததுண்டு. இந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்டு, நாடகக் குழுக்களே இதனை நடத்தலாயின. பி. ஜி. குப்புசாமி நாயுடு போன்ற நடிகர்கள் இதிலே ஈடுபட்டனர். நமது இயக்கத் தோழர்கள் இங்கும் அங்குமாக, சீர்த்திருத்த நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். நடிகவேள் எம்.ஆர்.ராதவின் நாடகம்—சி. பி. சிற்றரசு எழுதியது—முதன்முறையாக, திருச்சி திராவிடர் கழக மாநாட்டிலேதான் நடத்தப்பட்டது; மிகக் குறைந்த செலவில். அதற்கான பணத்தை வாங்கிக்கொடுக்கவே பெரியாரிடம் மெத்தப் போராடவேண்டி இருந்தது. நண்பர் ஏ. கே. வேலன் ஒரு சில நாடகங்கள் நடத்தினார். சி. பி. சிற்றரசு சில நாடகங்களை நடத்திக் காட்டினார், நாகைத் தோழர் கோபால் ஒரு நாடகக்குழுவே அமைத்து, சில ஆண்டுகள் நடத்திவந்தார்; அதிலே கருணாநிதி வேடம் தாங்கினார். கருணாநிதியின் சாந்தா என்ற நாடகம் நல்ல செல்வாக்குடன் இருந்தது. பாவலர் பாலசுந்தரம் ஒரு நாடகக்குழு அமைத்து நடத்தினார். இவ்விதமாக இயக்கப் பிரசாரத்தில் நாடகம் இணைந்து வளர்ந்தது.


டி. கே. எஸ்.நாடகக் குழுவிலிருந்து டி. வி. நாராயணசாமியும், எஸ். எஸ். இராஜேந்திரனும் விலகி, சீர்திருத்த நாடகங்களை நடத்தத் தொடங்கினர். நான் எழுதிய சந்திரோதயம் என்ற நாடகம் முதல் முதலில் வடாற்காடு மாவட்ட, திருவத்திபுரத்தில் நடைபெற்றது. இரண்டொரு நாடகங்களுக்குப் பிறகு, அதிலே, நடிகர் குழுவைச் சேர்ந்தவர்களும் ஈடுபடலாயினர்.

முன்னேற்றக் கழக துவக்க நாட்களில், கழக கட்டடநிதி, அச்சகநிதி, வழக்குநிதி போன்றவைகளுக்காக கே. ஆர். ராமசாமி எம்.எல்.சி—யின் ஆர்வமிக்க நாடகங்களின்மூலம் பெருநிதி திரட்டப்பட்டது. சந்திர மோகன்—நீதிதேவன் மயக்கம்—ஆகிய நாடகங்களைத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்திவந்தோம். சந்திரமோகன் நாடகத்தில் நடித்தபோதுதான், கணேசன், 'சிவாஜி' என்ற பட்டம் பெற்றது—பெரியார் சூட்டியது.

கருணாநிதியின், தூக்குமேடை—வாழப்பிறந்தவர்கள்—நச்சுக்கோப்பை—போன்ற நாடகங்கள் நாடெங்கும் நல்ல பிரசாரப்பலன் கொடுத்தன. கணேசன் அனேக நாடகங்களில் பங்கேற்றார். ஓரிருமுறை எம். ஜி. சக்ரபாணியும் அந்த நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார்.

நாடகக் குழுக்களுக்கென்றே எழுதிக்கொடுத்த நாடகங்கள் வேறு. நான் இப்போது குறிப்பிட்டிருப்பது, கழகத் தோழர்கள் அதிகமாக ஈடுபட்டு நடித்த நாடகங்களைப்பற்றி.

இவ்விதம் வளர்ந்த நாடகமுனை, கழக நிர்வாக அலுவல் வளரவளர, முடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கருணாநிதி எழுதி, பல இடங்களில் நாடகக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த உதயசூரியன் என்ற நாடகம், சர்க்கரால் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

பெரிய நகரங்களிலில்லாவிட்டாலும், சிறிய அளவுள்ள நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் பிரச்சார நாடகங்கள் நடத்த, மறுபடியும் கழகம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்விதம், நண்பர்களிடம் விவரமாகப் பேசினேன்—எல்லோருக்கும் நிரம்ப ஆர்வம் இருக்கிறது, நாடகங்களை நடத்த—நடிக்க—எழுத.

3—4—64

இன்று காலையில் வழக்கறிஞர் நாராயணசாமி என்னைக் காண வந்திருந்தார். நான் எதிர்பார்த்தபடியே சட்ட சம்பந்தமான பிரச்சினையுள்ள வழக்கை, சுப்ரீம் கோட்டுக்குக் கொண்டு செல்வது பலனளிக்கும் என்று கூறினார். இப்போதைக்கு வேண்டாம்— பிறகு ஒரு வாய்ப்பு ஏற்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பினேன்.

மாலையில் ராணியுடன், அ. க. தங்கவேலரும், என்.வி.நடராசனும் வந்திருந்தனர். நகராட்சிமன்றத் தலைவரான பிறகு, முதன்முறையாக அ. க. தங்கவேலரைப் பார்க்கும் வாய்ப்பு. மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். எம். எல். சி ஆகிவிட்ட, என். வி. நடராசனிடம் ஒன்றும் மெருகு—முடுக்கு—காணோம்.

காஞ்சிபுரத்தில் அம்மா, அக்கா, கௌதமன், பாபு, என் மருமகப்பெண்கள் எல்லோரும் நலமாக இருக்கும் செய்தி, ராணி மூலம் கேட்டு மகிழ்ந்தேன். பரிமளத்துக்குப் பரீட்சை சமயம், அதனால்தான் வரவில்லை என்றார்கள். படிப்பதற்குப் புத்தகங்கள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்—கொண்டுவரவில்லை.

கைவலிக்கு அன்பழகன், கடுகு எண்ணெய் தடவினால் நல்லது என்று சொல்லி, வீட்டிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த எண்ணெயை இன்றிரவு தடவிக் கொண்டேன்—இரண்டொரு வாரங்கள் தொடர்ந்து—தடவினால்தான் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, முதல் இந்தி எதிர்ப்புப் போர்க் காலத்தில், மிக்க ஆர்வத்தோடு பங்குகொண்ட மறை. திருநாவுக்கரசு இப்போது முற்றிலும் மாறிவிட்டிருப்பதாகச் சொன்னார். மறைமலை அடிகளாரின் திருமகன் திருநாவுக்கரசு. இன்றைக்கும், மறைமலை அடிகள் எழுதிய, 'இந்தி பொது மொழியா?' என்ற ஏடு, எவரும் மறுக்கொணாததாக இருக்கிறது. ஆனால் மகன், மாறிவிட்டிருக்கிறாராம். எனக்கு மிக நெருக்கமான நண்பர். இப்போது 'மறை' தூத்துக்குடிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் என்று அறிகிறேன். கருத்திலே காரணத்துடனோ—காரணமற்றோ—மாறுதல் ஏற்பட்டுவிட்டிருப்பினும், என்னிடம் கொண்ட கனிவு மாறி இருக்காது என்று அன்பழகனிடம் கூறினேன்.

பொதுவாக, இந்தி ஆதிக்கத்தின் முழுக்கேட்டினை, மக்கள் நேரிடையாக இன்னும் சந்திக்கவில்லை—அதனால் தான், சிலர் இதனைக் கவனிக்க வேண்டிய அவசியமில்லாத பிரச்சினை என்று கருதுகிறார்கள். வேகமும் பளுவும் நாளாகவாக வளரும்—அப்போது, இப்போது 'ஏனோதானோ'வென்று உள்ளவர்கள்கூட, இந்தி ஆதிக்கத்தின் கேட்டினை உணர்ந்து துடித்து எழுவார்கள், என்று கூறினேன்.

இன்றும், கம்யூனிஸ்டு கட்சியிலே பிளவு வெகுவாக விரிவாகிவிட்டதற்கான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன—அவைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

இரவு, தூக்கம் வருகிறவரையில், பொன்னுவேலிடம், காஷ்மீர் பிரச்சினைபற்றி பேசிக்கொண்டிருந்தேன்—(இப்போது என்னுடன் பொன்னுவேல்—வெங்கா—இருவரும் துணை இருக்கிறார்கள்) ஷேக் அப்துல்லாவைப் பத்து ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருந்ததால் ஏற்பட்ட கெட்ட பெயரும், தொடுத்த வழக்கை நடத்த முடியாமல் திரும்பப் பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட ஏளனநிலையும், உள்ளபடி தாங்களாகத் தேடிக்கொண்டவைகள். பிரச்சினை மிகவும் சிக்கலானதாகிவிட்டது என்பதுபற்றி விவரித்துக்கொண்டிருத்தேன்.

இரண்டு நாட்களாக, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை, சிறைப் படிப்பகத்தார் தொகுத்து வைத்திருக்கிறார்கள்—அவைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான கதைகள், கவிதைகள்; கருத்து விளக்கம் அதிகம் இல்லை. ஆனால் செல்வவான் வீட்டு மாநிற மங்கை மினுக்குத் தைலத்தால் பளபளப்பது போல, அழகிய ஒலியங்களால், கதைகள் அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன. சில கதாசிரியர்கள் வேண்டுமென்றே, 'கழகத்தை'—திருவிழாக்களிலே காளையர்கள் கன்னியர்கள்மீது உரசிவிட்டு மகிழ்வது போல—இரண்டொரு இடங்களில், தாக்கியும் இருக்கிறார்கள். வைதீக கருத்துகளையும் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள். இத்தகைய கதைகளையும் கட்டுரைகளையும் படித்ததில், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் எண்ண ஓட்டம், எந்தவிதத்திலே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

4—4—64

இன்று மறுபடியும் ஊசி போடப்பட்டது. ஆனால் இந்த ஊசிகள் பொதுவாக வலிவு ஊட்டுபவை—எனக்குள்ள கை வலியை நீக்குவதற்கானவை அல்ல.

பந்திரிகையில், ஆச்சாரியர் ஒரு பாராட்டுக் கூட்டத்தில் பேசுகையில், அடுத்து தி. மு. க. அரசு அமைய வேண்டும்; அப்போதுதான், இந்தி திணிப்பினால், எத்தகைய குமுறல் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தில்லி அரசு உணர முடியும் என்று காரணம் காட்டி இருக்கிறார். பொருத்தமான பேச்சு. இந்தியை எதிர்த்து எத்தனை கிளர்ச்சிகள் நடத்தினாலும், எத்தனைபேர் சிறை புகுந்தாலும், மூடிமறைத்துவிட முடியும்—முடிகிறது—செய்து வருகிறார்கள். ஆனால் இந்தித் திணிப்பைக் கண்டித்து, காங்கிரசைத் தேர்தலில் முறியடித்தார்கள் என்றால், அந்த நிகழ்ச்சியை மூடி மறைக்க முடியாது. ஆகவே, கழகம் இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறை புகுவது மட்டுமில்லாமல், தேர்தல் முனையிலும் வெற்றி ஈட்டியாக வேண்டும் என்பது குறித்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் கழகம் பெற்ற வெற்றி, தில்லி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது என்று ஆச்சாரியார் சொன்னதும், முற்றிலும் உண்மையானது. இங்குள்ள காங்கிரஸ் வட்டாரமும், அதற்கு ஆதரவு அளிக்கும் இதழ்களும், கழக வெற்றியை எவ்வளவு மூடி மறைக்கவும், குறைத்து மதிப்பிடவும் முனைந்தாலும், தில்லியிலும், வேறு இடங்களிலும், கழக வெற்றியை மிக முக்கியமான நிகழ்ச்சியாகத்தான் கருதுவார்கள். அதிலும், தடைச்சட்டம் காரணமாகக் கழகம் அடியோடு ஒழிந்து போய்விடும் என்று அவர்கள் கணக்குப்போட்டுக் களிப்பில் மூழ்கியிருந்த சமயத்தில், கழகம் இத்தனை வெற்றிபெற்றிருப்பது, மிகமிக முக்யத்துவம் வாய்ந்ததாகும். தி.மு.கழகம், காங்கிரஸ் அரசிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலைக்கு வளர்ந்துகொண்டு வருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது என்பது பற்றி நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். கழகம் இவ்விதமான வளர்ச்சி பெற்றுக்கொண்டு வருகிறபோது, காங்கிரசை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளும் பிற கட்சிகளில் எத்தகைய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதுபற்றிய பேச்சு எழுந்தது.

திருவரங்கத்தில் கூடிய அசோக்மேத்தா குழுவினர் பிரஜா—சோஷலிஸ்டுகள் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த அதேபோது, திருச்சியில் கூடிய சுரேந்திரன் குழுவினர், பிரஜா—சோஷலிஸ்டுகள் காங்கிரசில் சேரக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். இந்தக்கூட்டத்தில் ம. பொ. சிவஞானம் கலந்துகொண்டு, காங்கிரஸ் போக்கைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

அசோக்மேத்தாவின் போக்குக்குக் காரணம் என்ன என்று நண்பர்கள் கேட்டார்கள். அசோக்மேத்தாவே சொல்லியிருக்கும் காரணம் ஒருபுறம் இருந்தாலும், அவருடைய போக்கு மாறியதற்கான அடிப்படைக் காரணம், காங்கிரசை எதிர்த்து நிற்க எந்தக் கட்சியாலும் முடியாது என்ற தோல்வி மனப்பான்மைதான்—பிரஜா—சோஷியலிஸ்டு கட்சியின் வளர்ச்சியின் வேகம் அவருக்கு நம்பிக்கை தரவில்லை. எனவே அவர், காங்கிரசிடம் இணைந்து போய்விடுவது நல்லது என்ற முடிவெடுத்துவிட்டார்; இது ஜனநாயக வளர்ச்சிக்கு நல்லதல்ல, என்று கூறினேன். தமிழகத்தில், இது போன்ற தோல்வி மனப்பான்மை காரணமாகப் பல கட்சிகளும், தனிப்பட்டவர்களும், காங்கிரசிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது பற்றியும் எடுத்துச் சொன்னேன். இந்தத் தோல்வி மனப்பான்மையை எதிர்த்து நின்று, மக்களிடம் முறையாக நெறியாகப் பணியாற்றினால், காங்கிரசைத் தேர்தலில் வீழ்த்த முடியும் என்பதை மெய்ப்பித்த பெருமை கழகத்துக்கு உண்டு என்பதைச் சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அடுத்த பொதுத் தேர்தல்பற்றி மிக்க ஆர்வத்தோடு பேசலாயினர்.

காமராஜர், தேர்தல் தந்திரங்களிலே வல்லவர்; அவர் முனைந்து நின்றால், வெற்றிதான் கிடைக்கும் என்றிருந்த நிலையையும், கழகம் பொய்யாக்கிவிட்டது என்பதுபற்றி நண்பர்கள் பூரிப்புடன் கூறினார்கள். அது பெருமளவுக்கு உண்மைதான் என்றாலும், காங்சிரசிடம் சிக்கிக்கொண்டுள்ள பணபலத்தையும் பத்திரிகை பலத்தையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று நான் எடுத்துக் காட்டினேன்.

காஞ்சிபுரம் மறியலில் ஈடுபட்டு, பூவிருந்தவல்லி வழக்கு மன்றத்தால், நாலுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற கே. டி. எஸ். மணி—திருவேங்கிடம்—ராஜிகிளியப்பன்—ஏகாம்பரம்—ஆகிய ஐவர், இன்று மாலை இங்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களை, நாங்கள் இருக்கும் பகுதியிலேயே இருந்திடச் செய்யலாமா என்று சிறைக்காவலாளி ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்; அப்படியே செய்யலாம் என்றேன். இப்போது அந்த ஐவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள்—11-ம் நம்பர் அறையிலிருந்து வரிசையாக அவர்களுக்கு இடம்.

கே. டி. எஸ். மணியும் திருவேங்கிடமும் காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்—சிறையில் இருந்தபடியே.

கே. டி. எஸ். மணி, காஞ்சி கலியாணசுந்தரத்தின் மருமகன். மணியின் திருமணம் என் தலைமையில் நடந்தது. ஆசாமி அப்போது ஒரே கதர் மயம்—காங்கிரஸ்காரர். ஆர்வம் கொந்தளிக்கும் இயல்பு—இலட்சியங்களிலே ஈடுபாடு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெத்த உடல் நலிவாக இருந்தவர். சிறையில் மிக்க எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியவர்.

திருவேங்கிடம், தோல் போர்த்துக்கொண்டிருக்கும் எலும்புருவம். உடல்நலம் சென்ற ஆண்டு மோசமாக இருந்தது. இப்போது ஆர்வம் காரணமாக, நல்லபடி காணப்படுகிறார்.

காஞ்சிபுரம் தேர்தல் நிகழ்ச்சிகள் பற்றி மணி பல விஷயங்களைச் சொன்னார்; காங்கிரஸ் கட்சியினரின் முயற்சிகள்; நம்முடைய தோழர்களிலே எவரேனும் சபலத்துக்கு இரையாவார்களா என்று எதிர்பார்த்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவைபற்றி விரிவாகக் கூறினார்.

எட்டுப்பேராக இருந்தவர்கள் இப்போது பதின்மூன்று பேராகி இருக்கிறோம்.

வெளியே இருந்து வந்துள்ள அந்த ஜவரிடம், நமது தோழர்கள், பல விஷயங்கள்பற்றி பேசி அளவளாவி மகிழ்ச்சி அடைந்தனர்.

7—4—64

இரண்டு நாட்களாகக் குறிப்பு எழுத இயலவில்லை—மண்டைக் குடைச்சல், கழுத்து நரம்புகளில் வலி, மருந்து உட்கொண்டு வருகிறேன். அதனால், குறிப்பு எழுத முடியாது போயிற்று. இன்று வலி பெருமளவு குறைந்து போய்விட்டது.

மூன்று நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன்.

மணி இப்போது கிட்டதட்ட 11- பொன்னுவேலுவும் வெங்காவும் தூங்கி அரைமணி நேரத்துக்கு, மேலாகிறது, இது வரையில் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் எழுதியுள்ள 'நினைவு அலைகள்' படித்துக்கொண்டிருந்தேன். முக்கால் பகுதி முடித்துவிட்டேன்.

இன்று காலையில், வழக்கப்படி, சிறை மேலதிகாரிகளின் 'பார்வையிடல்' நடைபெற்றது. நேற்று மாலையே புதிதாக வந்துள்ள ஐவருக்கும் 'கைதி' உடை கொடுத்துவிட்டார்கள். ஆகவே இன்று பதின்மூன்று பேர் கொண்ட எங்கள் அணியை, மேலதிகாரி பார்வையிட்டார்.

கே. பி. சுந்தரம் கண்வலிக்கு மருத்துவம் பெற, எழும்பூர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 9-மணிக்குச் சென்றவர் 11-மணிக்குள் திரும்பச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்.

இந்த இரண்டு நாட்களாக, மதுரைப் பள்ளிக்கூடம் இடிந்ததால் ஏற்பட்ட பயங்கரமான விபத்து பற்றிய செய்தி, எங்களைத் திகைப்பிலும், துயரத்திலும் ஆழ்த்திற்று. இதுபோன்றதோர் கோரமான நிகழ்ச்சி, நாம் இதுவரை கேள்விப்படாதது என்பதால், எங்கள் மனம் மெத்த வேதனைப்பட்டது. தமது செல்வங்களைப் பறிகொடுத்து விட்டுக் கதறிடும் குடும்பங்களுக்கு, யார்தான் ஆறுதல் கூறமுடியும்—என்னவென்றுதான் ஆறுதல் கூறுவது! நினைத்தாலே நெஞ்சு பகீர் என்றாகிவிடுகிறது. அன்பழகன் சொன்னார் "சென்னையிலும், அண்ணா! பல பள்ளிக்கூடக் கட்டடங்கள் கலனாகிக் கிடக்கின்றன. அவைகளை உடனடியாகக் கவனித்து தக்க முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்" என்று. ஆமாம்! கட்டடங்களைப் பரிசீலித்து, முறைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கவேண்டும் என்று நான் கூறினேன்.

இன்றைய பத்திரிகையில், நமது தோழர் வி. முனுசாமி, இவ்விதமான ஒரு குழுவை அமைத்திருக்கும் செய்தி பார்த்தோம்—மகிழ்ச்சிகொண்டேன்.

இங்கே நாங்கள் தங்கியுள்ள சிறைப்பகுதி, புதிதுதான் என்றாலும், வெடிப்புகளும், கீறல்களும், பல இடங்களில் உள்ளன. வெகு சமீபத்திலேயே இரயிலின் ஓட்டம். இலேசான அதிர்ச்சிகூட இருப்பதை உணர முடிகிறது. இதைப்பற்றிய எண்ணமும் பேச்சும் இன்று எங்களிடையில் எழுந்தது. பிற்பகலில், கட்டடத்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு, சிறை மேலதிகாரி இங்குவந்து, வெடிப்புகளையும், கீறல்களையும் காட்டினார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

மீண்டும், கே. டி. எஸ். மணியிடம் காஞ்சிபுரத்து கழகநிலை, அரசியல்நிலை பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து கொண்டேன்.

கே. டி. எஸ். மணிக்குக் காஞ்சிபுரத்தில் உள்ள, கம்யூனிஸ்டுகளிடம் நட்பு உண்டு. எனவே, காஞ்சிபுரம் கம்யூனிஸ்டுகளின் நிலை, இப்போது என்ன? அவர்கள் எந்தப் பக்கம்? மணலி கட்சியா? இராமமூர்த்தி கட்சியா? என்று கேட்டேன். அனைவரும் இராமமூர்த்தி கட்சிதான் என்று கூறினார்.

ராமமூர்த்தி கட்சி என்பது காங்கிரசை எதிர்க்கும் அணியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான், ஆனால் அந்த அணி, சீனாக் கட்சி என்று கூறப்படுகிறதே, அது கண்டிக்கத்தக்கதாயிற்றே. இந்தப் பிரச்சினையில் காஞ்சிபுரத்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன என்று கேட்டேன். அதுபற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

தனிக் கட்சியே துவக்கிவிடத் திட்டமிடுகிறார்கள் ராமமூர்த்தி அணியினர் என்று சொன்னார்.

பத்திரிகையிலும் அப்படித்தான் செய்தி வருகிறது. டில்லியில் எ. கே. கோபாலன் போன்றாரும் இதுபோலத் தான் என்னிடம் கூறினார்கள். ஆனால் தனிக்கட்சி துவக்கி என்ன பலன்? அதிகமான பலன் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை என்று கூறினேன். பொதுவாக, கம்யூனிஸ்டுகள், தங்களுடைய வளர்ச்சியைவிட, கழகத்தை அழிப்பதையே முக்கிய குறிக்கோளாக, உடனடித் திட்டமாகக் கொண்டுவிட்டிருக்கிறார்கள் என்று மணி கூறினார்.

அவர்கள் நினைப்பது போலவே ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம், அதனால் யாருக்கு ஆதாயம்? காங்கிரசுக்குத்தானே! கழகத்தை ஒழிக்க காங்கிரசுடன் குலவுவது, கம்யூனிஸ்டு கட்சிக்கு என்ன பலன் கொடுக்கும் என்று நான் கேட்டேன். அந்தக் கேள்வி எழும்போது கம்யூனிஸ்டுகள் அதிர்ச்சி அடைகிறார்கள் —பதில் கூறுவதில்லை என்றார் மணி.

காமராஜரும், பத்திரிகைகளும் ஏன் இப்போது கப்யூனிஸ்டுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் கேட்டனர்.

இது அவருடைய பழைய வித்தைதானே! நப்பாசை என்று சொல்லலாம். பெரியார் தி.மு. கழகத்தைத் தாக்கியபோது, காமராஜர் தூபமிட்டார். இப்போது அதுபோல வேறு சிலருக்கும் ஆதரவு தருகிறார். கண்டபடி ஏசுகிறார்கள். இதனால் கழகத்திடம் பொதுமக்கள் அருவருப்பு அடைவார்கள் என்பது அவருடைய எண்ணம். இது தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடக்கிறது—இதிலே ஒவ்வொரு பருவத்துக்கு ஒவ்வொரு அணி கிடைக்கிறது. முதலில், 'திராவிட எதிர்ப்பு அணி' வேலை செய்தது—பிறகு பெரியாரின் பெரும் படை வேலை செய்தது—இப்போது கம்யூனிஸ்டு கூட்டணி வேலை செய்கிறது. இதிலே உற்சவ மூர்த்திகள் மாறி மாறி வருகிறார்களே தவிர மூலவர் ஒருவர்தான்—ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்துள்ள காமராஜர்தான். இதுவரையில் எப்படி, இழி மொழிகளையும், காதில் போட்டுக் கொள்ளாமல் நம்முடைய கடமையைக் கண்ணியமாகச் செய்து கொண்டு வந்தோமோ, அதுபோல், இப்போதும் நாம் நடந்து கொள்ள வேண்டும், என்று நான் கூறினேன்.

கழகத்தின் கட்டுக்கோப்பு பற்றிய பேச்சு கிளம்பிற்று. கழகத்திலே சிலர், இன்னமும் குறைகாணும் போக்கினராக இருப்பது பற்றிக் கூறினார்கள். நான்சொன்னேன், கழகம் மேலும் வலுவு பெறவேண்டும், முறைகள் மேலும் நேர்த்தியாக வேண்டும் என்ற ஆவல் எழுவதும், அதற்காக ஆர்வத்துடன் முறைகள் பற்றிப் பேசுவதும், நல்லதுதான். ஆனால், பேச்சோடு நின்றுவிடாமல், கழக வளர்ச்சிக்கு உருப்படியாக அவர்கள் தக்கதைச் செய்தபடி இருக்கவேண்டும்; வெறும் அதிருப்திகளை வெளியிடுபவர்களாக, யோசனைகளை அருளுபவர்களாக இருந்தால் பயன் இல்லை என்று கூறிவிட்டு, மேலும் சொன்னேன், ஓய்வு ஒழிச்சலில்லாமல், தமது சக்திக் கேற்ப, கழகப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், அந்தப் பணியினாலேயே களைத்துப் போய்விடுகிறார்கள். சிலரோ தங்கள் சக்திக்கும் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புக்கும் ஏற்ற அளவில் பணிபுரியாது இருக்கிறார்கள்; அவர்களிடம் தேக்கி வைக்கப்பட்டு, செலவிடப்படாமல் இருக்கும் அறிவாற்றல், வெளியே வரவேண்டி இருக்கிறது; அந்த ஆற்றல், குறை காண்பது, முறை கூறுவது என்றவிதமாக வெளிவருகிறது. அவர்களும், தங்கள் ஆற்றலுக்கு ஏற்ற அளவு தங்களைக் கழகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்களானால், குற்றம் காண நேரமும் இருக்காது நினைப்பும் எழாது என்று சொன்னேன். ஒரு எடுத்துக் காட்டையும் குறிப்பிட்டேன்—மோட்டாரில் ஆவி தங்கு தடையின்றி வெளியே வந்துவிட்டால், சத்தம் இருப்பதில்லை—ஆவி வெளிவராமல் தடைப்படும்போது தான், வெடிச் சத்தம் கிளம்புகிறது, அதுபோலத்தான் இது என்று கூறினேன்.

கழகப் பணிகள் இன்னின்னவற்றை இத்தனை செம்மையாகச் செய்திருக்கிறேன் என்று மெய்ப்பித்து விட்டு, கழகத்தில், இன்னின்ன முறைகளை இப்படி இப்படித் திருத்தி அமைக்கலாம் என்று கூறும் கழகத் தோழர்களை, நான் எப்போதும் பாராட்டி வரவேற்பேன்; கழகத்திலே ஓடியாடி வேலைசெய்யும் சிலருடைய முறைகளிலே குறை காண்பது மட்டுமே வேலையாகக் கொண்டிருப்பவர்களை, எப்படிப் பாராட்ட முடியும், என்றும் கேட்டேன். நண்பர்கள் நான் கூறியதை உணர்ந்து கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

வால்கா முதல் கங்கைவரை—சிந்து முதல் கங்கைவரை—என்ற இரு புத்தகங்களையும் இங்கு நான் வெங்காவிடமிருந்துதான் பெற்றுப் படித்தேன். இவை, கம்யூனிஸ்டு இயக்கத் தொடர்புள்ள வெளியீடுகள். இவைகளில், ஆரிய முறைகளை, பிராமண ஆதிக்கத்தை, வர்ணாஸ் ரமத்தை ஆசிரியர் ராகுல் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ஆனால், தமிழகத்துக் கம்யூனிஸ்டுகளின் பேச்சிலோ எழுத்திலோ; இந்தக் கருத்துகளின் சாயல்கூட வெளிப்படுவதில்லை. எனவே, வெங்காவைக் கேட்டேன், இந்தப் புத்தகங்களைக் கம்யூனிஸ்டுகள் நிரம்பப் பேர் படிக்கிறார்களா என்று. ஆம் என்றார். எனக்கு ஆக்சரியமாக இருந்தது. மதத் துறைபற்றி, பச்சை பச்சையாக, ராகுல் எழுதியிருக்கிறார்—அந்த ஏடுகளைச் சொந்தம் கொண்டாடும் கம்யூனிஸ்டுகள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேசும் நம்மை நாஸ்திகர்கள், என்று மக்களிடம் 'கோள்' மூட்டுகிறார்களே, இது என்ன விந்தை! என்று எண்ணிக்கொண்டேன்.

'இரண்டு ஏடுகளிலும் என்ன கூறப்பட்டிருக்கிறது' என்று பொன்னுவேல் கேட்டார். கி.மு.6000 ஆண்டிலிருந்து கி.பி.1942 வரை, பல கட்டங்களாகப் பிரித்து, கதை வடிவில் மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து காட்டுகிறார் ஆசிரியர். ஆனால், ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு, மக்களின் வாழ்க்கைமுறை ஏன் மாறிற்று, எப்படி மாறிற்று என்பதற்கான விளக்கம் போதுமானதாக இல்லை. உதாரணமாக, ஒருபுறம் பருத்திக் கொட்டை, அதற்குப் பக்கத்தில் பஞ்சுத் திரி, அதற்குப் பிறகு நூல், அதற்குப் பிறகு துணி, வைத்து ஆடைவரலாறு என்று கூறுவதுபோல் இருக்கிறது. நூற்பு எப்படித் துவங்கிற்று, நெய்வது எப்படி ஆரம்பமாயிற்று என்று காட்டப்படாதது மாதிரி; ஏடு இருக்கிறது. ஆனால், மொத்தத்தில் உனக்கு அந்த ஏடுகள் மெத்தவும் பிடிக்கும் என்று பொன்னுவேலிடம் சொன்னேன். 'அது என்ன அண்ணா?' என்று கேட்டார். இரண்டு புத்தகங்களிலும், பத்துப் பக்கங்களுக்கு ஒரு தடவையாவது விதவிதமான மாமிச விருந்து உண்டது பற்றி கூறப்பட்டிருக்கிறது என்றேன்.

'என்னென்ன மாமிசங்கள்?' என்று விவரம் கேட்கலானார், காண்டாமிருகத்தின் கல்லீரல் (பச்சையாக) முதற்கொண்டு, பசுங்கன்றின் தொடைக்கரி வரையில் கூறப் பட்டிருக்கிறது. முதல் கட்டத்தில் (கி. மு. 6000) ஓநாய்கள் மனிதர்களைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதும் எழுதப் பட்டிருக்கிறது, என்றேன். பொன்னுவேல், அது கேட்டு அருவருப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கல்லீரல் எத்தனை சுவையாக இருக்குமோ, என்ற ஏக்கமே கொண்டுவிட்டார் என்று எண்ணுகிறேன். 'சிந்து முதல் கங்கை வரை' என்ற ஏடு, சிம்ம சேனாதிபதி பற்றியது. இந்தச்சிம்மன், வைசாலிக் குடிஅரசுச் சேனாதிபதியாகி, மகத மன்னன் பிம்பிசாரனை எதிர்க்கிறான்—பயங்கரமான போர் நடக்கிறது—பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவிக்கிறான்—ஆனால், இதிலே ஒரு அதிசயம்—அவன் போரில் ஈடுபடுகிற நேரத்தில், ஜைனப் பெரியார் ஒருவரிடம் பாடம் கேட்டு, 'அகிம்சை'யை ஏற்றுக்கொண்டு, மாமிச உணவை நீக்கிவிடுகிறான்.

உணவிலே, 'அகிம்சை'—போரிலேயோ, பிணமலை; இரத்தவெள்ளம். இது முரண்பாடு அல்ல என்றும் வாதிடுகிறான்.

இதைவிடப் பெரிய அதிசயம்—அதிர்ச்சி தரத்தக்க அதிசயம்—ஜைனப் பெரியாரிடம் பாடம் கேட்டு, மாமிச உணவை நீக்கிவிட்ட சிம்மன், சிலநாள் கழித்து புத்தரைக் காண்கிறான்—அவருடைய புதுநெறியை மேற்கொண்டு, ஜைனத்தை விட்டுவிடுகிறான்—அதிர்ச்சி தரும் அதிசயம் இதிலே இல்லை—பௌத்தன் ஆனபிறகு, பழயுபடி மாமிச உணவு கொள்கிறான் என்கிறார் ராகுல்! அதிர்ச்சி அதற்கு மேலும் இருக்கிறது; புத்தருக்கும் சீடர்களுக்கும், மாமிச உணவு அளித்து உபசரிக்கிறான் என்றும் எழுதியிருக்கிறார்.

"மறுநாள் கசாப்புக் கடையிலிருந்கு பசு மாமிசத்தையும் பன்றிமாமிசத்தையும் வரவழைத்தேன். உணவுதயாரானதும் நான் புத்த பகவானை அழைத்து வந்தேன். அவர் பிட்சுக்களோடு வந்து உணவருந்திக் கொண்டிருந்தார்."

என்று சிம்மன் கூறுவதாக அந்த ஏட்டில் காணப்படுகிறது.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எந்த ஜீவனுக்கும் இம்சை செய்தலாகாது என்ற புதுநெறி பரப்பிய புத்தருக்கா, இந்த விருந்து நடந்தாகச் சொல்வது! எப்படிப் பொருந்தும்!! ஆனால், ராகுல், இந்தத் தமது ஏட்டை ஒரு ஆராய்ச்சி நூல் என்று தெரிவிக்கிறார்.

8—4—64

காருகுறிச்சி நாதசுர வித்தகர் அருணாசலம் அவர்களின் திடீர் மறைவு பற்றிய செய்தி பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன். மிக இளம் வயதிலேயே, மிகப் பெரிய புகழ் ஈட்டிய இந்த இசைவாணனின் மறைவு தமிழகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். காலஞ்சென்ற ராஜரத்தினத்தின் நாத இன்பத்தை வழுவாமல், தமிழகத்துக்குத் தந்துவந்த அரும்புலவர், கேட்போரின் நெஞ்சு திடுக்கிடும் வண்ணம் மறைந்தது பற்றி இங்கு நண்பர்கள் எல்லோரும் வேதனைப்பட்டனர். நாற்பத்து மூன்று வயது; இதற்குள், என்ன புலமை! எத்துணை இனிமை! எவ்வளவு நேர்த்தியான கற்பனைத் திறமையைக் காட்டிவிட்டார் காருகுறிச்சி! அறுபது ஆண்டுகள் வாழ்ந்து அளிக்கவேண்டிய நாத இன்பத்தை நாற்பதாம் ஆண்டுக்குள்ளாகவே வழங்கினார். தமிழகத்துக்கு நேரிட்டுவிட்ட இந்தப் பெரிய இழப்பை எண்ணி எண்ணிக் குமுறிக்கொண்டிருந்தோம். காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் எனக்குக் கிடைத்த ஒரு நேர்த்தியான நண்பர். களங்கமற்ற முகம்—கனிவான பார்வை—பரிவு ததும்பும் பேச்சு என் மகன்களின் திருமணத்திற்கு வந்திருந்து, நாத இசை விருந்து அளித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்ததை எண்ணிக் கொண்டேன். அவர், காஞ்சிபுரம் வந்து போகும் செலவுத்தொகை கூடத் தரவில்லை. எவ்வளவு பரிவுடன் வந்து, இசை விருந்தளித்தார்! அதனை எல்லாம் எண்ணி எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். இன்று படிப்பதிலேகூட நாட்டம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் நண்பர்களுடன், மறைந்தவரின் மாண்புகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். நாதஸ்வரம், தமிழகத்தின் தனிப்பெரும் செல்வம். இந்தியாவின் இதரபகுதிகளிலே இந்தச் செல்வம் இல்லை, இதிலே நேர்த்தியான தேர்ச்சி பெற ஓயாத உழைப்பு தேவை. காருகுறிச்சி, தமது ஆவியையே சிறிது சிறிதாகக் கரைத்து நாதமாக்கித் தந்துவந்தார் என்றே கூறவேண்டும். புலமை வளரவளர, அவருடைய அடக்கமும் பரிவு காட்டும் உணர்ச்சியும் வளர்ந்தது வந்தது. இப்படிப்பட்ட வித்தகரைத் தமிழர்கள் இழந்தது பெரியதோர் இழப்பு; கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், திருவாவடுதுறை ராஜரத்தினம்—எனும் கலைச்செல்வர்களை இழந்தது போதாது என்று, இப்போது காருகுறிச்சியையும் தமிழகம் இழந்து தத்தளிக்கிறது. தமிழகத்துக்குத்தான் எத்தனை எத்தனை இழப்புகள்—தொடர்ந்து—அடுக்கடுக்காக என்பது பற்றியெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமுற்றுக் கிடந்தோம்.

9—4—64

இன்று பிற்பகல், காஞ்சிபுரம் மறியலில் கலந்து கொண்டு இங்கு சிறைப்பட்டிருக்கும் மதுராந்தகம் தோழர் என்னைக் காண வந்திருந்தார். இளைஞர் கிராமத்திலுள்ளவர். சில விநாடிகள் ஏதுமே பேசாமல் என் எதிரே நின்றுகொண்டிருந்தார்—ஆனால் கண்களில் நீர்துளிர்த்தபடி இருக்கக் கண்டேன். 'என்ன தம்பி?' என்று கேட்டேன்—அண்ணா! என்னுடைய இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம்—என்று கூறினார்—திகைத்துப்போய் விட்டேன்—ஒரு குழந்தைக்கு மூன்று வயதாம் மற்றொன்று கைக்குழந்தையாம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தால் தாழ்நிலை அடையக் கூடாது என்பதற்காக அறப்போரில் ஈடுபட்டு இந்த இளைஞர் இங்கே சிறைப்பட்டுக் கிடக்கிறார்—அவர் பெற்றெடுத்த செல்வங்கள் இறந்துவிட்ட செய்தியைப் பெறுகிறார். என்னென்பது இந்த வேதனையை? என்ன ஆறுதல் கூறுவது? அந்த இளைஞனின் மனம் என்னென்ன எண்ணுகிறதோ! குழந்தைகளை இழந்த அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடுகிறதோ? இங்கே தமிழ் காத்திடத் தவமிருக்கிறான் வீரன். அவன் பெற்றெடுத்த முத்துக்கள் பறிக்கப்பட்டுப் போய்விட்டன. எத்தனை இன்னல்களைத் தாங்கிக்கொள்கிறார்கள், தமிழ் காத்திடும் வீரர்கள். தமிழகம், இதனை உணருகிறதா? காணோமே! எனினும் கடமையைச் செய்தாகவேண்டும், எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்படினும் கலங்கலாகாது என்ற உள்ள உரத்துடன் இந்த இளைஞர் போன்றார், அறப்போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தியாகம் வீண்போகும் என்று நான் நினைக்கவில்லை. பகட்டான விளம்பரம் கிடைத்திருக்கலாம், பாராட்டும் பண்புகூட மிகக் குறைவாகவே எழலாம். அமைச்சர்கள் அலட்சியப் கூடப் பேசிவிடலாம். அற்பர்கள் எள்ளி நகையாடலாம் ஆனால், இந்த இளைஞர்போன்றாரின் தியாகம் தமிழக வரலாற்றிலே தனி இடம் பெறப்போவது உறுதி, என்னாலான ! மட்டும் அந்த இளைஞனுக்கு ஆறுதல் கூறி அனுப்பினேன். அந்த இளைஞனுக்கு வந்துற்ற இழப்பை எண்ணி நண்பர்களெல்லாரும் வேதனைப்பட்டனர்.

10—4—64

இரவு மணி ஒன்று அடித்துவிட்டது. இனித்தான் தூங்கச் செல்லவேண்டும். குறிப்பை எழுதிவிட்டு; இதுவரை, மிக உருக்கமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியை—நாடக வடிவில் எழுதப்பட்டது—படித்துக் கொண்டிருந்தேன்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் காரணமாக, நமது தோழர்களுக்கு ஏற்பட்டுவிட்ட இழப்புகள் இன்னல்கள் ஆகியவை மனதை மருட்டுவதாக இருப்பதுபற்றிக் குறிப்பிட்டேன். இன்றிரவு நான் படித்த அந்த வரலாற்று நிகழ்ச்சி, நம்மைத் தாக்கியுள்ள இழப்புகளையும் இன்னல்களையும் ஒரு பொருட்டாகக்கூட எண்ணக்கூடாது என்ற எண்ணத்தைத் தந்தது.

"கருணை காட்டுவதற்கு இல்லை. உன் கணவன் தூக்கிலிடப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. உடலை உன்னிடம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது."

இவ்விதமான தந்தி கிடைக்கிறது; கவர்னரிடமிருந்து, ஒரு மூதாட்டிக்கு! மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டுப் போயினர். கணவன் தூக்குத் தண்டனை பெறுகிறான்; மற்றோர் மகன் ராணுவப் போலீசால் வேட்டையாடப் பட்டு வருகிறான். மகளுடைய காதலன் உடல் முழுதும் குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போனான். மருமகள் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள்; விதவை ஆக்கப்பட்டு விட்டிருக்கிறாள்.

இது அந்த வரலாற்று நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம்—புகழ்மிக்க தூக்குமரம் என்பது தலைப்பு—அமெரிக்க நாட்டு நிகழ்ச்சி.

நீக்ரோக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த நாட்களில், ஏசுவிடம் விசுவாசமும் நாட்டுப் பற்றும்கொண்ட ப்ரவுன் எனும் பெரியவர்—நாலு பிள்ளைகள் இரண்டு பெண்களுக்குத் தகப்பன்—தப்பி ஓடிவரும் நீக்ரோக்களைக் காப்பாற்றி, இரகசியமாக அவர்களை கனடா நாட்டுக்கு அனுப்பிவைக்கும் தொண்டு செய்து வருகிறார். குடும்பம் முழு ஒத்துழைப்புத் தருகிறது. இதனால், நீக்ரோக்களை அடிமைகளாக்கிக்கொண்டு கொக்கரிக்கும் தென்பகுதி, ப்ரவுன்மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறது.

பிரச்சினை, மனிதத்தன்மைக்கு மாறானது, கடவுள் நெறிக்கு முரணானது என்ற அழுத்தமான நம்பிக்கை அந்தப் பெரியவருக்கு, எப்படியும் அடிமைத்தனத்தை ஒழித்தாகவேண்டும் என்று துடிக்கிறார். அந்தத் தூய தொண்டிலே தன்னையே வதைத்துக்கொள்ளவும் தயாராகிறார்.

22-பேர்களைக்கொண்ட ஒரு படை அமைக்கிறார்—அதிலே மூவர் அவர் பிள்ளைகள்—ஒருவன் மகளுக்கு மணாளனாக விரும்பும் இளைஞன்.

இந்தப்படை, வர்ஜீனியா மாநிலத்திலுள்ள, பாசறையைக் கைப்பற்றி, ஆயுதங்களை எடுத்து, அடிமைகளிடம் கொடுத்து, புரட்சி மூட்டுவது, அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கும்வரையில் அந்தப் புரட்சி நடத்துவது என்பது திட்டம். திட்டம் என்று கூறுவதற்குத் துளியும் பொறுத்த மற்ற ஒரு ஏற்பாடு—ஒரு எழுச்சி—ஒரு துடிப்பு—தற்கொலை முயற்சி என்றே கூறலாம். இந்த முயற்சி முறியடிக்கப் பட்டாலும் நட்டமில்லை. ஏனெனில் அமெரிக்காவும் உலகும் துடித்தெழுந்து பிரச்சினையைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும். அந்தச் சிந்தனையிலிருந்து ஒரு எழுச்சி பிறக்கும். விடுதலைக்கு வழி கிடைக்கும் என்கிறார் ப்ரவுன். பாசறையைத் தாக்குகிறார்கள்—படைகள் சூழ்ந்து கொள்கின்றன—பலர் கொல்லப்படுகிறார்கள். ப்ரவுன் தூக்குத் தண்டனை பெறுகிறார். இது வரலாற்று நிகழ்ச்சி—அடிமை விடுதலைக்கான சட்டத்தை ஆபிரகாம் லிங்கன் பிறப்பிப்பதற்கு முன்பு நடைபெற்றது—1859-ல்.