உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு

விக்கிமூலம் இலிருந்து

14. தியாக வரலாறுகள்,
பாரதிதாசன் பிரிவு.

(கடிதம் எண் 14. காஞ்சி—20-12-64)

தம்பி!

இன்று நீக்ரோக்களுக்குக் கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே தீர்க்கப் பட்டிருக்கிறது. துவக்க நாட்களில், இந்தப் பிரச்சினை குறித்து உலகு துடித்தெழ, இந்தத் தியாகத் தீயில், தூயவர் வீழ்ந்துபட்டிருக்கிறார்.

இதுபோன்ற தியாக வரலாற்று நிகழ்ச்சிகளைப் படிக்கும்போதுதான், நாம் மேற்கொண்ட அறப்போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் இழப்பும் இன்னலும் மிகச் சொற்பம்—அற்பம்—என்ற மெய்யுணர்வு ஏற்படுகிறது—அதுமட்டுமல்லாமல், பெரிய பிரச்சினைகளைத் தீர்த்திட எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றாக வேண்டும் என்ற தெளிவு பிறக்கிறது.

இந்த உணர்ச்சி உள்ளத்தைத் தடவிக் கொடுக்கும் நிலையில், உறங்கச் செல்கிறேன்.

11—4—64

வேதனை தரத்தக்க இழப்புகள் குறித்த பட்டியலில் மற்றும் ஒரு பெயர் இணைக்கப்படவேண்டி நேரிட்டுவிட்டதை இன்றைய பத்திரிகை அறிவித்தது. நாச்சியார் கோயில் தவுல் வித்வான் ராகவப்பிள்ளையின் திடீர் மறைவு பற்றிப் படித்து மிக்க வேதனைப்பட்டேன். தமிழக இசை உலகுக்கு இதுவும் மிகப் பெரிய இழப்பு. எனக்குற்ற நண்பர்களில் இவரும் ஒருவர். இவரும், காருகுறிச்சியுடன் காஞ்சிபுரம் எங்கள் இல்லத்திற்கு, திருமணத்தின்போது வந்திருந்து இசை விருந்தளித்தார். காருகுறிச்சியைவிட இவரை எனக்கு அதிக ஆண்டுகளாகத் தெரியும். மிக்க அன்புடன் பழகுபவர். தவுல் வாசிப்பில் இவருடைய தனித் திறமையை அனைவரும் அறிவர். இவருடைய புலமையை அறிந்த அனைவரும் நெஞ்சம் திடுக்கிடத்தக்க விதமான மறைவு இவருடையது.

நான் சோர்வாகக் காணப்பட்டதை எண்ணியோ என்னவோ, இங்கு என்னுடைய நண்பர்கள்,என்னுடைய பயண அனுபவங்களைப்பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அரித்துவாரம், டேராடன், சாரன்பூர், காசி, சாரநாத், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய பல இடங்களுக்குச் சென்று வந்ததுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். எத்தனை பெரிய பெரிய நகர்கள் போய்வந்தாலும், சென்னை போல, மனதுக்கு நிம்மதி தரத்தக்க இடம் இல்லை என்ற என் எண்ணத்தையும் கூறினேன். சென்னை மேலும் எழில் நகராவதற்காக மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

கடந்த நாலைந்து நாட்களாகவே, கையில் வலி குறைந்திருந்தாலும், மிகவும் பளுவாக இருப்பது போன்ற ஒரு உணர்ச்சி. இதன் காரணமாக, நூற்பு வேலை செய்யவில்லை. இன்றுதான் மறுபடியும் நூற்பு வேலையில் சிறிது நேரம் ஈடுபட்டேன்.

என்ன காரணத்தினாலோ நாலைந்து நாட்களாக நாங்கள் இருக்கும் பகுதியின் முன்வாயில் இரும்புக் கம்பிக் கதவைப் பூட்டியே வைக்கிறார்கள். சிறையில், முறைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குக் காரணம் புரிவதில்லை; கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முடிவதில்லை.

பல செய்திகளால் ஏற்பட்டிருந்த மனவருத்தத்தைப் போக்குவதுபோல், இன்று மாலை பரிமளம் என்னைக் காண வந்திருந்தான். இன்றுடன் பரிட்சை முடிவுற்றதாகவும் சொன்னான். உடன் யாரும் வரவில்லை. ஆகவே நீண்ட நேரம் பரிமளத்திடம் குடும்ப விஷயமாகவும், பொது விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். நான் இளைத்துக் காணப்படுவதாகவும் சொன்னான்—எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

ஆப்பிரிக்க பூபாகத்தைப்பற்றி ஆங்கிலேயர்கள், 'விநோதமான' முறையில், கதைகள் எழுதுவது வாடிக்கை. அங்கு பூர்வீகக்குடிகள் மனிதமாமிசம் தின்பவர்கள், மாய மருத்துவக்காரரிடம் சிக்கிக்கிடப்பவர்கள் என்றெல்லாம் எழுதுவது வழக்கம். பிறநாடுகளையும் பிடித்தாட்டும் ஏகாதிபத்திய உணர்ச்சிக்கு உணவளிக்க, இதுபோல எழுதத் தலைப்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். இத்தகைய முறையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில ஏடு படித்தேன், எந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டிருந்த போதிலும், அதைப் படிக்கும்போது, ஆப்பிரிக்க பூபாகத்தின் இயற்கைச் செல்வம் எவ்வளவு அளவுகடந்து இருக்கிறது என்பதைத்தான் உள்ளபடி உணர முடிகிறது. அந்த இயற்கைச் செல்வத்தை, விடுதலைபெற்ற ஆப்பிரிக்க நாடுகள் தக்கமுறையில் பயன்படுத்தினால், இந்த நூற்றாண்டு ஆப்பிரிக்க மக்களின் புதுவாழ்வு நூற்றாண்டாகும் என்றுதோன்றுகிறது,

12—4—64

காக்கை குருவிகளெல்லாம், எங்களைக் கேலி செய்வதுபோலக் கூச்சலிட்டு, மரங்களிலே தாவிக்கொண்டிருந்தன.—இன்று 5-30க்கே, 'எங்களை அறைகளிலே போட்டுப் பூட்டி விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் அறைக்குள் அனுப்பப்பட்டோம். உள்ளே போவதற்கு முன்பு, ஒருமணி நேரம் வரையில், மிகப் பயங்கரமான கூச்சல்—கதறல்—நாங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்துப் பகுதியில், வேட்டையாடப்பட்ட மிருகம், வெகுண்டெழுந்து கதறுவது போன்ற கூச்சல். காரணம் கேட்டோம். ஒரு ஆயுள் தண்டனைக் கைதிக்கு மனம் குழம்பிப்போய் இவ்விதம் கூச்சலிடுவதாகச் சொன்னார்கள். உட்புறத்தில் இதுவரை இருந்து வந்தவனாம். கதறிக் கதறிக் களைத்துபோய்ப் பிறகு பேச்சற்றுக்கிடக்கும் நிலை மேலிட்டு விட்டது என்று எண்ணுகிறேன்.

இன்று பிற்பகல், சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு விழா பற்றி இன்றைய பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. எனவே நண்பர்கள் அதுபற்றிக் கேட்டார்கள்—நான் அங்குச் சென்று வந்த நிகழ்ச்சிபற்றிக் கூறினேன். அதைத் தொடர்ந்து, விஜயநகரம்—ஹம்பி இடிபாடுகள் பற்றிப் பேச்சு எழுந்தது. அங்கு நான் கண்டவைகள் பற்றியும் கூறினேன்.

சென்ற ஆண்டு நான் சிரவணபலகோலா பற்றி எழுதியதைப் படித்துவிட்டு, தான் போய்ப் பார்த்துவிட்டு வந்ததாக, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி என்னிடம் கூறினார்.

போகப்போகிறார்களோ இல்லையோ, இங்கு இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி நான் கூறியதைக் கேட்ட நண்பர்கள், பல இடங்களுக்குச் சென்றுவரப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

அரக்கோணம் ராமசாமி, தனது தொகுதியில் உள்ள மகேந்திரவாடி என்ற ஊரையும், ஏரியையும் நான் அவசியம் வந்து பார்க்கவேண்டும்—அந்த இடம் பல்லவர்கள் காலத்தது என்று கூறினார். வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

ஷேக்அப்துல்லா நிலைமைபற்றியும், கம்யூனிஸ்டு கட்சியின், பிளவுபற்றியும், இங்கு நண்பர்கள் திகைப்புடன் பேசிக்கொண்டுள்ளனர்.

13—4—64

நேற்றுப் போலவே இன்று மாலையும் புத்தாண்டுக்காக விடுமுறையாம்—விடுமுறை என்றால், கைதிகளுக்கு மாலை ஆறுமணிக்குள் கூடு என்பது நிலைமை.

இன்று காலையிலேயே, கவலை தரும் செய்தி—ஆசைத்தம்பி, அறிவழகன் தோற்றுவிட்டதாக. அவர்கள் தேர்தலில் ஈடுபட்ட செய்தி அறிந்தபோதே கவலைப் பட்டேன்—அந்தத் தேர்தல் முனைகள் (உள்ளாட்சி மன்றங்கள் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி) நமது கழகத்துக்குப் போதுமான தொடர்பு உள்ளவைகள் அல்ல. அந்த முனைகளில் செல்வாக்குப் பெறும் வழிமுறைகள், நமக்கு இன்னும் சரியானபடி பிடிபடவில்லை. எனவே, அந்தத் தொகுதிகளில் கழகத் தோழர்கள் தேர்தலில் ஈடுபடுவது, மிகமிகத் துணிகரமான முயற்சி என்று கூறவேண்டும். என்றாலும், எப்படியும் அந்த முனைகளிலும் நாம் ஒருநாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் ஈடுபடத்தானே வேண்டும். இது, முதல் முயற்சி என்ற அளவில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன்.

இந்த இரு தொகுதிகளிலும், அதிலும் குறிப்பாக உள்ளாட்சி மன்றத் தொகுதிகளில் வாக்காளர்களாக உள்ளவர்களில் எந்தக் கட்சியினர் அதிகம் என்று நண்பர்கள் கேட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், ஆளுங் கட்சியைச் சேர்ந்து விடுபவர்கள்—ஜஸ்டிஸ் கட்சி ஆளுங் கட்சியாக இருந்தபோது, அதிலே இருந்தனர்; இப்போது காங்கிரசில் உள்ளனர்—அவர்கள் மட்டுமல்ல, 'பெரிய புள்ளிகள்' என்பவர்களே அவ்விதம்தான் என்று நான் கூறினேன். மாவட்ட வாரியாக, எந்தெந்தப் பெரிய புள்ளிகள், முன்பு ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள், இப்போது காங்கிரசில் சேர்ந்துள்ளனர் என்பதுபற்றி நண்பர்கள் கணக்கெடுத்தனர். இதழில், செட்டிநாட்டரசர் முத்தைய்ய செட்டியார், சென்னை மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது என்று அன்பழகன் சுட்டிக் காட்டினார். அவருடைய தம்பி இராமநாதன் செட்டியார், டில்லி பாராளுமன்ற உறுப்பினர்—காங்கிரஸ் கட்சி, அது கூட வேடிக்கை இல்லை, ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக விளங்கிய 'பொப்பிலி ராஜா'வின் மகன், பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி; என்று நான் கூறினேன். பெரிய புள்ளிகளின் போக்கு இதுதான் என்று நண்பர்கள் கூறி வருந்தினர்.

நேற்றும் இன்றும், 'சாடர்லீ சீமாட்டியின் காதலன்' என்ற புத்தகம், ஆபாசமானது என்று தடை செய்யப் பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்குபற்றிய புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தின் கருத்து, நடை இரண்டுமே, நம்மைத் தூக்கிவாரிப் போடக்கூடியது, சாடர்லீ சீமாட்டி, மணமானவள்—கணவன், உலகப் பெரும்போரில் குண்டடி பட்டதால், இடுப்பிலிருந்து செயலற்ற உடல்நிலை பெற்றுவிடுகிறான். சாடர்லீ சீமாட்டி சீமானுடைய நண்பனிடமும், பிறகு, தோட்டக்காரனிடமும் தொடர்பு கொள்கிறாள். இதிலே தோட்டக்காரனிடம் கொண்ட தொடர்பு தொடர்கிறது—சீமாட்டிக்கு அவனிடம் இணைந்துவிட வேண்டும் என்ற துணிவு பிறக்கிறது; அவனும் மணமானவன்; முரடன். இருவரும் தத்தமது 'விவாகத்தை' விடுதலை செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, கண்காணா இடம் சென்று வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இது கதை. பச்சை பச்சையாகவும், புட்டுப் புட்டுக் காட்டுவதாகவும், ஆபாசமான சொற்களைக் கொண்டதாகவும், நடை.

'இந்த ஏடு, ஆபாசமானது, படிப்பவரின் மனதைக் கெடுத்து, ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பாழாக்கி விடும். ஆகவே இது தடை செய்யப்பட வேண்டும்' என்பது வழக்கு.

வழக்குத் தொடுத்தது பிரிட்டிஷ் அரசு, புத்தகம் வெளியிட முன்வந்தது, பென்குவின் புத்தக நிலையத்தார்.

இந்த நூலின் ஆசிரியர் டி. எச். லாரன்ஸ் என்பார் இலக்கியத் துறையில் வித்தகர் என்ற விருது பெற்றவர். அவருடைய கதைகள்—கட்டுரைகள்—கவிதைகள், இலக்கியச் செறிவுள்ளன என்பதற்காக, பல பல்கலைக் கழகங்களில் பாட நூற்களாகவும் ஆராய்ச்சிக்குரிய நூற்களாகவும் இடம் பெற்றுள்ளன. இந்த நூற்றாண்டின் இணையில்லா இலக்கியப் பேராசிரியர் வரிசையில், லாரன்சுக்குச் சிறப்பிடம் இருக்கிறது.

லாரன்சின் மேதைக்கு ஒரு எடுத்துக் காட்டாக, மற்றொன்றும் கூறலாம். அவருடைய நூற்களைப் பற்றியும், அவருடைய திறமை பற்றியும் மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டும் 8001

லாரன்சின் புகழ், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சாடர்லி சீமாட்டி எனும் ஏட்டின் கருத்தும் நடையும் படிப்போருக்கு ஒரு குமட்டலைத் தருவதாக உள்ளது.

எனினும், வழக்கு நடைபெற்று, 'புத்தகம் வெளியிட்டதிலே குற்றம் ஏதுமில்லை' என்று தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.

ஆபாசமானது என்று கருதத்தக்க விதமாக, கருத்தும் நடையும் இருப்பினுங்கூட, பெரிய இலக்கிய மேதையான லாரன்சு, அந்த ஏட்டின் மூலம், மண வாழ்க்கை தூய்மையானது, தேவையானது, கனிந்திருக்க வேண்டியது. என்ற பண்பைத்தான் விளக்க முற்பட்டிருக்கிறார், என்ற காரணம் ஒப்புக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஏடு பற்றி, பல்கலைக்கழக இலக்கியப் பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், மனோதத்துவ ஆசிரியர்கள், மார்க்கத் துறை வித்தகர்கள், கல்விக்கூட அதிபர்கள், தமது கருத்தினைச் சான்றாக அளித்துள்ளனர்.

வழக்கிலே, இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடிய முறை மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

படிப்போரை மகிழ்ச்சியும் பயனும் கொள்ளச்செய்யும் விதமான ஏடு, இந்த வழக்கு பற்றிய ஏடு.

எல்லாவற்றையும் விட என் மனதைப் பெரிதும் ஈர்த்த பகுதி, மிகப் பெரிய இலக்கிய மேதையான லாரன்சு இதுபோல எழுதியுள்ளாரே என்பதற்காக, பேனா பிடித்தவனெல்லாம் இது போன்ற கதையையும், நடையையும் எழுத முற்பட்டுவிடக்கூடாது என்று, லாரன்சின் ஏட்டுக்காக வாதாடிய வழக்கறிஞரே அறிவுரை கூறியிருக்கும் பகுதிதான்.

வழக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது—1960-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபதாம் நாள் துவக்கம்.

எந்த ஏடு பற்றி வழக்கு நடைபெற்றதோ, அந்த ஏட்டின் ஆசிரியரான லாரன்சு இப்போது இல்லை—அவர் மறைந்து ஆண்டு முப்பது ஆகிறது.

14—4—64

வழக்கமான, 'கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி' இன்று. நாங்களும் எதுவும் பேசுவதில்லை. அதிகாரிகளும் எங்களை ஒன்றும் கேட்பதில்லை. கைதி உடையில், வரிசையாக நிற்கிறோம்—அதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடுகிறார்கள்—இது ஒவ்வொரு கிழமையும். இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாவதற்கு ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தலாம் போல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும், எந்த அதிகாரிகள் கைதிகளைப் பார்க்கிறார்களோ, அவர்களேதான், அன்றும் பார்க்கிறார்கள். சிறையின் நிலைமை, கைதிகளின் நிலைமை இவற்றை அன்று ஊரிலுள்ள பொறுப்புள்ள சிலருக்குக் காட்டும் முறையில் இந்த நிகழ்ச்சியை மாற்றி அமைத்தால், ஓரளவுக்குப் பயன் ஏற்படலாம்— மாநகராட்சி மன்றத் தலைவர்—மேயர்—இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை கலந்து கொள்வது, மற்றோர் முறை சுகாதாரத் துறை பெரிய அலுவலர்கள் கலந்துகொள்வது, மற்றோர் முறை, விடுதலையான கைதிகளின் நல்வாழ்வுக்காக உள்ள அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வது என்று, இவ்விதமாக ஏதாகிலும் மாற்றம் ஏற்படுத்துவது தேவை என்று நினைக்கிறேன்.

பொழுதுபோக்காக 'ஓவியம்' வரையலாம். அதற்கான தீட்டுக்கோல், கலவைகள் தருவிக்கிறேன் என்று சுந்தரம் சொன்னார்—அவர் கேட்டுக்கொண்ட படி எடுத்து வந்தார்கள்—ஆனால் அவைகளை : அனுமதிக்க முடியாது என்று சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். இவ்விதம் பொருளற்ற கட்டுத்திட்டங்கள் கையாளப்படுகின்றன. கைதிகளை இவ்விதம் நடத்தினால்தான், அவர்களுக்கு தண்டனையை அனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சி ஏற்படும் என்ற ஒரு பழையகாலக்கருத்துத்தான் இன்றும் அமுல்செய்கிறது. அரசியல் கிளர்ச்சி காரணமாகச் சிறை புகுந்துள்ளவர்களுக்கும் இப்படி வீணான கட்டுத்திட்டம் தேவைதானா, என்று மேல்மட்டத்தில் எண்ணிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. நன்கு பதப்படுத்தப்படாத பஞ்சு—அதை நூற்பதிலேயே, எத்தனை நேரம்தான் காலத்தை ஓட்டமுடியும்? தோட்ட வேலையாவது செய்யலாம், தச்சு வேலையாவது பழகலாம்—என்றெல்லாம் நண்பர்கள் கூறிக் கொள்கிறார்கள்; சலிப்பு, நேரக்கேடு, பத்திரிகைகளின் மூலம், நமது கழகத்தோழர்கள், என்னென்ன விதமாகப் பணியாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்து அகமகிழ்கிறோம்—அதேபோது, உடன் இருந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டுகிறது. இன்று நண்பர்கள், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடத்திலே வழக்குகள் முடிவு பெறாததால், காவலிலே மாதக்கணக்காக அடைபட்டுக் கிடக்கும் மதுரை முத்து, கோவிந்த சாமி போன்ற நண்பர்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவித்தார்கள். தூத்துக்குடியில் நடைபெற்றதுபோல, விரைவாக வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று எங்களைப் போலவே, பலரும் கருதத்தான் செய்வார்கள்.

அறுபது வயதுக்கு மேலான முதியவர்—குடும்பம் நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட முடியாத நிலையில், ஊரூராகச் சுற்றி, சாமான்களை விற்பனை செய்யும் வேலையைச்செய்து, உடல் இளைத்து, உள்ளம் வாடி, ஆவி சோர்ந்துபோகும் கட்டத்தில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள்--- —முப்பது, முப்பத்தைந்துவயதில், குடும்பத்தை நடத்திச்செல்லும் பொறுப்பில் அவர்கள் இருவரும் வெற்றி காணவில்லை. தகப்பனோ பிள்ளைகள், மணிமணியானவர்கள், குடும்பத்தை மிக மேல் நிலைக்குக் கொண்டுவரத்தக்க அறிவாற்றல் படைத்தவர்கள் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை சிதையும் நிகழ்ச்சி ஏற்படுகிறது—மனமுடைந்து மாண்டுபோகிறார்.

நெஞ்சை உருக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள, இந்தக் கருத்துவிளக்க ஆங்கில ஏடு ஒன்று படித்தேன்.

இதுபோல், தமிழகத்தில், பல்லாயிரக்கணக்கில் தகப்பன்மார்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமைகளைப்பற்றி எண்ணிக்கொண்டேன். நொந்த உள்ளத்துடன், படுத்துப் புரண்டபடி இருந்தேன்—நெடு நேரம். இன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை.

மகன் உதவாக்கரையாகிவிட்டான் என்று மனம் நொந்து வெகுண்டு, தகப்பன், மகனை ஏசுகிறான். மகன், கண்ணீர் சிந்துகிறான். அந்தக் கண்ணீரைக் கண்டதும், தகப்பனுக்குக் கோபம் எங்கோ பறந்து போய்விடுகிறது. என் மகன் அழுகிறான்! எனக்காக அழுகிறான்! என் நிலைமை கண்டு அழுகிறான்! என்னிடம் அவ்வளவு அன்பு, என் மகனுக்கு—என்று கூறி உருகிப்போகிறான். இரவு பல முறை, இந்தக் கட்டத்தைப்பற்றிய நினைவு. எனக்கு அந்தக் குடும்பமே கண் முன் நிற்பதுபோல ஒரு எண்ணம். அந்தக் குடும்பமா? அதுபோன்ற குடும்பங்கள்!

15—4—64

இங்குள்ள சிறை அதிகாரிகளிலே சிலர், மதுரைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும், புதிய அதிகாரிகள் இங்குவர இருப்பதாகவும், பேச்சுக்கிளம்பிற்று. மருத்துவர்கூட மாறுகிறார்—இங்கு இருப்பவர், தஞ்சைக்குச் செல்கிறார். இன்று புதிய டாக்டர் எங்கள் பகுதிக்கு வந்திருந்தார்; இவர் நான் 1939-ல் சிறையில் இருந்த போது இங்கு டாக்டராக இருந்தவர்—பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் இங்கு வந்திருக்கிறார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் என்னிடம் பேசியபிறகுதான் எனக்குப் புரிந்தது.

இங்கு நண்பர்களுக்கு, சிறுசிறு நலிவுகள். மதிக்கு பாதத்தில் சுளுக்குபோல வலி—எலும்பு முறிவோ என்று சந்தேகம்—கட்டுபோடப்பட்டிருக்கிறது. சுந்தரத்துக்குக் கண்வலி, அன்பழகனுக்குக் காலில் வலி, இராமசாமிக்கு வயிற்றில் வலி, பார்த்தசாரதிக்கு இரத்த அழுத்தம், பொன்னுவேலுவுக்கு இருமல், இப்படி. சிலருக்கு மாத்திரை, சிலருக்கு மருந்து என்று மருத்துவரும் தந்தபடி இருக்கிறார். எல்லாமருந்துகளும் ஒரேமாதிரியாகவே இருப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இரவு சாப்பிடுவதை நீக்கிவிட்டேன்—ஏதாகிலும் சிற்றுண்டிதான், உட்கொள்வது. அதுவே ஜீரணமாவது கடினமாக இருக்கிறது; அதற்கான மருந்து, நாளுக்கு இருவேளை உட்கொள்ளுகிறேன். கைவலிக்கு, கடுகு எண்ணெய் தேய்த்துக்கொள்கிறேன்—சுந்தரம் மெத்த அக்கறையுடன் ஒவ்வொரு நாளும், பிற்பகல் 'மூன்று மணிக்கு' தைலம் தேய்த்துவிடுகிறார். ஓரளவு பலன் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குள், நண்பர் அன்பழகன், பிண்டத்தைலம் என்று மற்றோர் மருந்து தருவித்திருக்கிறார். சிறை அதிகாரி ஒருவர் தென்னமரக்குடி எண்ணெய் தான் இந்த வலியைப் போக்கும் என்று கூறினார்—மாயவரம் சென்று வரும்போது அந்தத் தைலத்தை வாங்கிக் கொண்டு வரும்படி, பரிமளத்துக்குச் சொல்லி இருக்கிறேன். கையோ, இன்னமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தூக்க முடியாதபடிதான் இருக்கிறது.

இன்று, காஞ்சிபுரம் மணி, திருவேங்கிடம், கிளியப்பன் ஆகியோரைக் காண, அவரவர்களின் வீட்டினர் வந்திருந்தனர். அதிகமான கலக்கம் காட்டவில்லை என்று கூறினார்கள். எல்லோரும் களிப்பாகவே இருக்கிறார்கள்.

16—4—64

தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மதி ஒரு உறுப்பினர்—குழு, மே பதினோராம் நாள் கூடுகிறது. அதற்குச் சென்று கலந்து கொள்ளத் தக்கவிதமாக, விடுதலைநாள் அமையுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, மதியும் பார்த்தசாரதியும் இன்று சிறைமேலதிகாரியைக் காணச் சென்றனர். சிறையில் வேலை செய்வதற்காக, மாதத்திற்கு நான்கு நாட்கள் கழிவு உண்டு; இது மூன்று மாதத்திற்கு மேற்பட்ட தண்டனையாக இருந்தால்தான்—அதிலும் கடுங் காவல் தண்டனையாக இருக்கவேண்டும்.

சிறை மேலதிகாரியைக் காணச்சென்றதில் ஒரு திடுக்கிடத்தக்க தகவல் தெரியவந்தது. தொத்தா மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கும் முறையில் இங்குள்ள நமது கழகத் தோழர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். சிறை மேலதிகாரிகள் மிகக் கோபம் கொண்டு விட்டனர். 'ஐயா! உங்கள்பேரில் கோபித்துக் கொண்டோ, சிறை நிருவாகத்தின்மீது அதிருப்திகொண்டோ நாங்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது எங்கள் குடும்பத்திலே நேரிட்டுவிட்டதுபோன்ற ஒரு இழப்புக்காக வருத்தம் கொண்டு நடத்தப்படும் ஒரு மரியாதைச் சடங்கு' என்றெல்லாம் தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதுபோல எழுதிக்கொடுக்கச் சொல்லியும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். என்றாலும், உண்ணாவிரதம் இருந்தது குற்றம்! தண்டிக்கத் தக்கது என்று கூறி, இரண்டு வாரங்கள் யாரும் வந்து பார்க்க அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டதுடன், கழிவு நாட்களில் நாலுநாட்களைக் குறைத்து விட்டனர்.

இந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டு வந்தனர். மேலதிகாரியிடமிருந்து. பட்டதும் படாததுமாக, மேலதிகாரி, மே முதல் வாரத்தில் உங்களில் சிலரை அனுப்பி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். எத்தனை நாட்கள் 'கழிவு' தரப்படும், எந்தத் தேதியில் விடுதலை என்பதை மூடு மந்திரமாகவே வைத்துக்கொண்டிருப்பதில், இவர்களுக்குப் பிரமாதமான விருப்பம் இருப்பது தெரிகிறது. கழிவு நாட்கள் தருவதிலேயும், நாம் அறிந்து கொள்ளத்தக்க திட்டவட்டமான ஒரு முறை கையாளப் படுவதாகவும் தெரியவில்லை. இந்த முறையை இங்குள்ள கைதிகள் 'மார்க்கு' என்று சொல்லுகிறார்கள்—இதிலே பலரகம் இருக்கிறதாம், பேசிக்கொள்கிறார்கள். ராணிமார்க்கு என்கிறார்கள்; வேலைமார்க்கு என்கிறார்கள்; துரைதரும் மார்க்கு என்கிறார்கள். எல்லாம் 'கைதி' பாஷை. துரை என்றால் சிறை மேலதிகாரி.

கைதிகள் இங்கு நடந்துகொள்ளும் முறையின்படி, சுறுசுறுப்பு, அடக்க ஒடுக்கம், ஆகிய முறையின்படி, வெளியே வேலைகளிலே ஈடுபடும்போது நடந்து கொள்வார்களா என்பது சந்தேகந்தான்.

தெரியாமல் வந்துவிட்டேன்—விரோதி சிக்கவைத்து விட்டான்—விதிவசம்—என்று கைதிகள் உருக்கமாகப் பேசுகிறார்கள். ஆனால் சிலர், திரும்பத்திரும்ப சிறை வந்தபடி இருக்கிறார்கள். இங்கு எங்கள் பகுதியில் வேலை செய்யும் கைதிகளை மேற்பார்வை பார்க்க ஒரு கைதி—மேஸ்திரி என்ற பெயருடன் விடுதலை ஆகிப் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. இன்று மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்து விட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள். விடுதலைக்கு முன்பு 'இனி ஜென்ம ஜென்மத்துக்கும் இங்கு வரமாட்டேன்; பட்டது போதும்; புத்தி வந்துவிட்டது' என்றெல்லாம் சொன்ன ஆசாமி, எண்ணி பத்துநாள் ஆவதற்குள், மறுபடியும் 'உள்ளே' வந்தாகிவிட்டது.

இங்கே, 'சிறையில்' இப்படி வந்துபோகிறவர்களை, விக்கிரமாதித்தன் பரம்பரை என்றும், ஆயுள் தண்டனைக் கைதிகளை இராமன் பரம்பரை என்றும், வேடிக்கையாகப் பேசிக்கொள்கிறார்கள்—விக்கிரமாதித்தன் நாடாறுமாதம் காடாறுமாதம் அல்லவா! இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அல்லவா!!

17—4—64

இன்று, இளங்கோவனுடன் கௌதமனும் கே. ஆர். இராமசாமியும் என்னைக் காணவந்திருந்தனர். என்னைச் சிறையில் கௌதமன் வந்து பார்ப்பது, இது தான் முதல் முறை. பரீட்சை எப்படி எழுதினாய் என்று கேட்டேன்; நன்றாகவே எழுதி இருப்பதாகச் சொன்னான். பரிமளம் மாயவரம் சென்றிருப்பதாகவும், அடுத்த வாரம் வரக்கூடும் என்றும் இளங்கோவன் கூறினான். இராமசாமி, சோர்வாகக் காணப்பட்டார். சட்டசபை படிப்பகத்திலிருந்து சில புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து கொடுக்கும்படி, இராமசாமியிடம் கூறி அனுப்பினேன்.

இன்று தையற்கலை ஆசிரியர் கே. பி. சுந்தரமும், தமிழ்ப் பேராசிரியர் அன்பழகனும், சிலப்பதிகார காலத்தில், தையற்கலை இருந்திருக்கிறதா என்பதுபற்றி, சுவையுடன் பேசலாயினர். துன்னகாரர் என்றிருப்பது தையற் கலைஞர்களைக் குறிப்பது ஆகும் என்று அன்பழகன் விளக்கினார். இன்று உள்ளதுபோன்ற, வெட்டு முறைகளும், விதவிதமான, 'பாணிகளும்' அப்போது இருந்ததாக ஆதாரம் இல்லை என்பது சுந்தரத்தின் வாதம். நான் பொதுவாக ஒன்று கூறினேன்—மேனாடுகளில், அவ்வப்போது இருந்த நிலைமைகள், பழக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து எழுதும் பழக்கம் உண்டு. அதனால், மிகப் பழங்காலத்துத் தகவல்களைகூடத் தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது. நம்மிடம் அந்தப் பழக்கம் வெகு காலமஈ இல்லை, அதனால் எத்தனையோ தகவல்கள் மறைந்துபோய்விட்டன' என்று குறிப்பிட்டேன்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகள் பற்றிப் பேச்சு வந்தது. புதுவை ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்பு, இங்கே சிறைப் படிப்பகத்திலே இருந்தது; மும்முனைப் போராட்டத்தின்போது சிறையில் நாவலர் அந்தப் புத்தகத்தைப் படித்து, மன்றத்தில் சில கட்டுரைகள்கூட எழுதினார் என்பதை நான் கூறினேன்.

20—4—64

இரண்டு நாட்கள் குறிப்பு எழுதத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை; வழக்கமான, சுவையற்ற அன்றாட நடவடிக்கைகள். பேச்சும், சோர்வுடன்; காரணம், அருப்புக் கோட்டை. இங்கு நான் துவக்க முதலே ஐயப்பட்டுக் கொண்டிருந்தேன். முடிவும் அதுபோலவே ஆகிவிட்டது. தேவருடைய மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதியைக் காங்கிரசுக்கு ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற காங்கிரஸ் திட்டம் பலனளித்துவிட்டது. என்றாலும், பத்திரிகைச் செய்தியைக் கூர்ந்துபார்த்தால், சாத்தூர் சிவகாசி தொகுதிகளை முதுகுளத்தூர் அருப்புக்கோட்டை தொகுதிகளுடன் இணைக்காமலிருந்தால் நிலைமை வேறுவிதமாகி இருக்கும் என்பது புரியும். நண்பர்கள், இதுபோல, மனதுக்கு ஒரு விதமான திருப்தி வருவித்துக் கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரையில், இதுபோலத் திருப்தியை வருவித்துக் கொள்வதிலே பலன் இல்லை, நியாயமுமாகாது என்று தோன்றுகிறது. பல இடங்களில், காங்கிரஸ் தனது பிடியை இழந்துவிடாதிருக்க, பலமானதோர் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி சிலஇடங்களில் வெற்றியைக் கொடுக்கிறது. எனவே, காங்கிரசின் ஆதிக்கத்தை அகற்றும் முயற்சி தீவிரமாக்கப்பட வேண்டும் என்ற பாடத்தைத்தான் அருப்புக்கோட்டைத் தோல்வி மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

படித்து, குறிப்பெடுக்கத்தக்க புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் பொழுதுபோக்குக்கான கதைப் புத்தகங்கள் தான் தரப்பட்டன. அவைகளையும் படித்து முடித்தேன்—சிறையிலே படிக்காவிட்டால் வேறு எங்குதான் அவைகளைப் படிக்க முடியும்! இதிலேயும் ஒரு பலன் இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்க நாட்டு மக்கள், எத்தகைய மனப்போக்கில் விருப்பம் காட்டுகிறார்கள் என்பதை, இந்தக் கதைகள் காட்டுகின்றன. காட்டுமிராண்டிகளிடம் இருந்த நாட்டை, நாகரிகப்படுத்தும் புனிதப்பணி புரிந்தனர் அமெரிக்கர்கள் என்று, இன்றுள்ள அமெரிக்க இளைஞர்கள் எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, பெரும்பாலான கதைகள் புனையப்பட்டுள்ளன.

பண வருவாய் அதிகமாகி உள்ள அமெரிக்காவில் காமக் களியாட்டங்கள் மிகுந்துவிட்டிருக்கிறது என்பதையும்; சில ஏடுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அத்தகைய வாழ்க்கை தவறானது என்று, இந்த ஏடுகள் கண்டிக்கவில்லை; உள்ளதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. வேகமும் தாகமும் மிகுந்த வாழ்க்கை.

21—4—64

அருப்புக்கோட்டை பற்றிய ஆய்வுரையே பெரும் பகுதி இன்றும். வழக்கமாகக் காங்கிரசை ஆதரிக்கும் சில ஏடுகள்கூட, இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஜாதி வெறியை ஊட்டி வெற்றிபெற்றதைக் கண்டித்து எழுதி உள்ளன. இதைப் படித்துவிட்டு, நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்; பாராட்டக்கூடச் செய்தார்கள். 'என்ன பிரயோஜனம்? தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் ஜாதிவெறியைக் கிளப்புவதைக் கண்டித்து, இந்த ஏடுகள் எழுதி இருந்தால் மக்களில் சிலராகிலும், காங்கிரசின் போக்கை வெறுத்து. எதிர்த்து ஓட்டளித்திருப்பார்கள். அப்போது வாய்மூடிக் கிடந்துவிட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்றபிறகு, அதன் போக்கைக் கண்டித்து என்ன பலன்? என்று நான் கேட்டேன். உண்மைதான், இந்தப் பத்திரிகைகள், காங்கிரசின் போக்குக்கு உடந்தையாகத்தான் இருந்துவிட்டன என்று நண்பர்கள் பேசிக்கொண்டனர்.

சுந்தரம், ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கேட்டதற்குத் தரமுடியாது என்று கூறிவிட்ட சிறை அதிகாரிகள், என்ன காரணத்தாலோ, தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, வண்ணங்களைக் கொடுத்துள்ளனர். இப்போது, ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்து விட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு. ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே என்றார்கள் நண்பர்கள். "அதெப்படி சரியாக இருக்க முடியும்: இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காகச் செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு போகிறான்" என்று காரணம் கூறினேன். ஐயோ பாவம்!என்று அனுதாபம் தெரிவித்தார்கள்; ராணுவத்தலைவனுக்கா, ஓவியம் போடத் தெரியாத எனக்காக என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்!

22—4—64

இன்று என்னைத் திடுக்கிடச் செய்த செய்தி தாங்கி இதழ்கள் வந்தன! நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்தார் என்று செய்தி. எல்லோருக்கும், தாங்கொணாத வருத்தம் அதிர்ச்சி தரத்தக்க இழப்புகள் பலவற்றை இந்த முறை சிறை வாசத்தின்போது நான் காணவேண்டி நேரிட்டு விட்டதை எண்ணி மிகவும் வேதனைப்பட்டேன். தமிழகத்தில் தனிப் புகழுடன் விளங்கிய அந்தப் பாவேந்தனுடைய பார்வையே ஒரு கவிதை! பேச்சே காவியம்! அவருடன் உரையாடினாலே போதும், தமிழின் மாண்பினை உணரலாம். அவருடைய 'மறைவு', தமிழகத்துக்கு ஈடு செய்யவே முடியாத பெரும் இழப்பு.

இந்த வேதனையுடன் நாங்கள் இருந்ததால், நாற்பதாவது வட்டத்தில் நமது கழகத் தோழர் வெற்றி பெற்ற செய்தி மாலையில் அறிந்தபோது, சுவை எழவில்லை. பாரதிதாசனுடைய கவிதைகளைப்பற்றி எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியில், ஒரு அறையில், யாரோ ஒரு நண்பர் முன்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார், புரட்சிக் கவிஞரின் கவிதையினை.

"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை."

நாற்பதாவது வட்டத் தேர்தலின்போது கலகம் விளைவித்ததாக, மாநகராட்சிமன்ற உறுப்பினர்கள் துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, இன்று மாலை இங்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் உள்ள பகுதிக்குப் பக்கத்தில் உள்ளனர். பார்க்கத்தான் முடிந்தது! பேச முடியவில்லை.

23—4—64

ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நான் வரைந்த 'தோற்றுப்போன இராணுவத் தலைவன்' படத்தை அன்பழகன் பார்த்து விட்டு, "நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள்—இதை எழுதியது ஏழுவயதுச் சிறுவன் என்று கீழே குறிப்பெழுதினால்" என்று நகைச்சுவை ததும்பக் கூறினார். ஆனால் இன்று அன்பழகனே ஒவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா! அதனால் அவர் தீட்டத்தொடங்கிய முதல் ஓவியமும், திருவள்ளுவரேதான். ஆக இப்போது மூவர், ஒலியம் தீட்டும் பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறோம்—நான், சுந்தரம், அன்பழகன்.

மற்றோர் மலைக்காட்சி வரைந்தேன்—இது முன்பு வரைந்ததைவிட 'தரமாக' இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள். கூறுகிறார்கள் என்றுதான் கூறமுடிகிறது—கருதுகிறார்களா என்று அறிந்துகொள்ள முடியவில்லை. ஓவியம் வரைவதிலே ஓரளவு பயிற்சி இருந்தால், இங்கு திறமையை நேர்த்தியாக்கிக்கொள்ளலாம். எனக்கோ, மாணவப் பருவத்திலேயே ஓவியம் வரையத் திறமை ஏற்பட்டதில்லை, இத்தனைக்கும் என் மாமா, நான் படித்த பச்சையப்பன் பள்ளியில் ஓவிய ஆசிரியர்! ஆனால் திறமை இருக்கிறதோ இல்லையோ நாமாக ஒரு ஓவியம் வரைந்து அதற்கு வண்ணமிட்டுப் பார்க்கும்போது, களிப்பு எழத்தான் செய்கிறது.

இன்று, யூதர்களின் வரலாறு பற்றிய ஒரு ஆங்கில ஏடு படிக்கத் துவங்கினேன், யூதர்கள் கொடியவர்கள், கல் மனம் படைத்தவர்கள், கடன்பட்டவர்களைக் கசக்கிப் பிழிபவர்கள் என்பதை விளக்கும் ஏடுகளே நிரம்ப உள்ளன. இந்த ஏடு அந்த வகையைச் சேர்ந்ததல்ல. யூதர்கள் கொடுமைகளை, இழிவுகளை, இன்னலை ஏற்றுக்கொண்டவர்கள், மதமாச்சரியம் காரணமாக பல நாடுகளில், கிருத்தவ அரசு யூதர்களை விரட்டியும், வாட்டியும் வந்தன. அவ்வளவையும் யூதர்கள் தாங்கிக் கொண்டு தங்கள் மார்க்கக் கோட்பாட்டை விடாப்பிடியாகக் காத்து வந்தனர் என்ற கருத்தை விளக்கும் ஏடு இது. யூதர்களின் மார்க்கத் தலைவன் என்று ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான கொடுமைக்கு ஆளாகவேண்டி வந்துவிடும். சில கிருஸ்தவ நாட்டு அரசுகளில் ஒரு விபரீதமான திருநாள் இருந்து வந்ததாக, இந்த ஏட்டிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்டுக்கொருநாள், கிருத்தவ அதிபர்கள், தமது நாட்டிலே உள்ள யூதர்களை, சந்தைச் சதுக்கத்தில் நிறுத்தி வைத்து கன்னத்தில் அறைவார்களாம்! இதைக் கண்டு, மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்களாம். சில காலத்திற்குப் பிறகு, ஒரு அதிபன், ஒரு குறிப்பிட்ட தொகை காணிக்கை செலுத்திவிட்டால், அப்படிச் செலுத்தும் யூதர்களை, கன்னத்தில் அறைவதுபோல, சற்றுத் தொலைவில் நின்றபடி—ஐந்தடி தொலைவில்—அறைவதுபோல, குறிகாட்டி விட்டுவிடுவது என்ற புதிய ஏற்பாட்டைப் புகுத்தினானாம்.

'ஏசுவைக் காட்டிக் கொடுத்தவர்கள். அவரைத் தேவகுமாரன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள்' என்பதனால், யூதர்கள், கேவலமானவர்களாகக் கிருத்தவ மக்களால் கருதப்பட்டு வருவது நெடுங்காலத்து வழக்கம். இதுபற்றி அன்பழகனோடு பேசிக்கொண்டிருந்தேன். யூதர்களை இழிவாக நடத்திவரும் போக்கை இனியும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று போப்பாண்டவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவுரை வெளியிட்டது பற்றிக் குறிப்பிட்டேன்.

யூதர்கள் நாடற்றவர்களாக, பல நாடுகளிலே தஞ்சம் புகுந்து வாழவேண்டியவர்களாக, பலப்பல நூற்றாண்டுகளாக வேதனைக்கு ஆளாகி இருந்த நிலையை மாற்றி, இப்போது, இஸ்ரேல் எனும் நாட்டைத் தமது தாயகமாக்கிச் கொண்டு, அதனைப் பொன்னகமாக மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றனர். இதனை அரபுக்கள், குறிப்பாக எகிப்துத் தலைவர் நாசர், 'புதிய ஆபத்து' என்றும், மேற்கத்திய வல்லரசுகளின் சதித் திட்டமென்றும் கூறி, தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வருகிறார்.

இஸ்ரேல் நாட்டுத் தூதர், தமது நாட்டு விடுதலை விழாவுக்காக, டில்லி, அசோகா ஓட்டலில் ஒரு தனிவிருந்து ஏற்பாடு செய்ததும், அது முறைப்படி ஏற்பாடாகவில்லை என்ற காரணம் காட்டி, இந்திய அரசு அந்த விருந்தை நிறுத்திவிட உத்திரவு பிறப்பித்ததும் பத்திரிகையில் வந்திருந்தது. நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் உள்ள பிரச்சினையோடு ஒட்டியதாக இந்த நிகழ்ச்சி இருந்தது. எனவே, அதுபற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

24—4—64

இன்று அன்பழகன், ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் படம் வரைந்தார். அந்தப் பெருங்கவிஞருடைய 100-வது நினைவு நாள் கட்டுரைகள், படங்கள், இதழ்களில் நிரம்ப வெளியிடப்பட்டுள்ள நேரம்; எனவே இந்த ஓவியம் மிகப் பொருத்தமான நேரத்தில் அமைந்தது. தரமும் நல்லபடி அமைந்து விட்டது. அன்பழகன் மேற்பார்வையில், அந்த ஓவியத்துக்கு சுந்தரம் வண்ணம் தீட்டினார். புதிய பொலிவு பெற்றிருக்கிறது ஓவியம். ஆங்கில மொழியை எதிர்த்துவந்த தவற்றுக்குக் கழுவாய் தேடிக் கொள்வதுபோல இப்போது நம்முடைய நாட்டு இதழ்கள் அடிக்கடி ஆங்கில மொழியின் அருமை பெருமைகளையும், உலகத் தொடர்புக்கு அம்மொழி மிகமிகத் தேவை என்பதையும் வலியுறுத்தி எழுதிக்கொண்டு வருகின்றன. அந்தப் 'புதிய திருப்பம்' காரணமாகவோ என்னவோ; ஆங்கிலப் பெருங்கவிஞரின் நினைவுநாள் குறித்து இதழ்கள் நிரம்ப அக்கறை காட்டி, பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எவ்வளவோ பரவாயில்லை; அடித்துப் பேசி இருக்கிறார்; "இந்தி ஆட்சிமொழியாக இரண்டு தலைமுறைகவாவது பிடிக்கும்; அறுபது ஆண்டுகள் ஆகும்;" என்று பேசி இருக்கிறார்; இந்த அளவுக்குக் கூடத் துணிவில்லையே நமது முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு என்று பொன்னுவேலுவும் மற்றவர்களும் குறைப்பட்டுக் கொண்டார்கள். உண்மைதான்! டி.டி.கே. துணிவுடன் பேசுகிறார்: ஆனால் அதேபோது, இது என்னுடைய சொந்தக் கருத்து என்று கூறி இருக்கிறார். அதனை மறந்துவிடக்கூடாது! கட்சி இந்தி ஆதிக்கத்திற்கு முனைகிறது என்று உணரும்போது, இந்தி ஆதிக்கம் கூடாது, தேவையில்லை, என்று உள்ளூரக் கருதுபவர்கள், அந்த போக்கை எதிர்த்து வெளியே வந்து பணியாற்ற வேண்டுமேயன்றி, கூடிக் குலவிக்கொண்டே, 'என்னுடைய சொந்தக்கருத்து, இந்திகூடாது என்பதுதான்' என்று பேசுவதிலே, நேர்மையோ, தக்க பலனோ என்ன இருக்கமுடியும் என்று கேட்டேன். 'ஏன் சிலர் அப்படி இருக்கிறார்கள்' என்று நண்பர்கள் கேட்டனர். பதவியின் சுவை ஒரு காரணம்; மற்றோர் காரணம், இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதில் வெற்றி காணமுடியாது என்று ஒரு நம்பிக்கை; மற்றோர் காரணம். நம்முடைய காலம் வரையில் ஆங்கிலம் இருக்கும்; பிறகு எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும் என்ற பொறுப்புணராத தன்மை; இவைகளே சிலருடைய போக்குக்குக் காரணம் என்று குறிப்பிட்டேன்.

இன்று, ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1944-ல் லாகூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டபோது, எழுதிய நினைவு நிகழ்ச்சிக் குறிப்புகள் பற்றிய புத்தகம் படித்தேன். இதிலே பெரும்பகுதி, பாகிஸ்தான் பிரச்சினை பற்றிய ஜெயப்பிரகாசருடைய கருத்தே நிரம்பி இருக்கிறது. அவர் அப்போது தெரிவித்துள்ள கருத்தைப் பார்க்கும்போது, பாகிஸ்தான் கூடாது என்று மட்டுமல்ல, பாகிஸ்தான் அமையாது என்றும் மிக உறுதியாக அவர் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

நாட்டு விடுதலைக்காக, ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற பலாத்கார முறைகளையும் பின்பற்றத்தான் வேண்டும் என்ற உறுதியையும், பலாத்காரத்தில் மறைந்திருந்து தாக்கும் முறையில் ஈடுபட்டிருந்தேன் என்று ஒப்புக்கொள்ளும் துணிவும் கொண்டவராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்திருக்கிறார் என்பது இந்த ஏட்டின் மூலம் தெரிகிறது. அவ்வளவு உரம்படைத்தவர், இன்று, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டிருப்பதும், சர்வோதய இயக்கவாதி ஆகி இருப்பதும், விசித்திரமான நிகழ்ச்சி என்றே தோன்றுகிறது.

அப்துல்லா பிரச்சினையும், கம்யூனிஸ்டு கட்சியின் உட்போர் பிரச்னையும், இங்குள்ள எங்களுக்கு, ஒவ்வொரு நாளும், பேசிக்கொள்ளும் பிரச்சினைகளாக உள்ளன. பத்திரிகைகள் கிடைத்த உடன், முதலில், இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்த பகுதிகளைத்தான், ஆவலுடன் படிக்கிறோம்.

இராஜ்யசபையில் அப்துல்லா பிரச்னைபற்றிப் பேசிய, எ. டி. மணி என்பவர், அரசியல் சட்டத்தில் ஒரு தாளைக் கொளுத்துவதாகச் சொன்ன அண்ணாதுரையைச் சிறையில் தள்ளிவிட்டு, இந்திய அரசியல் சட்டத்தைக் காலின்கீழ் போட்டுத் துவைக்கும் அப்துல்லாவை, உலாவர விடுகிறீர்கள்; இது எந்தவகையான நியாயம்?—என்று கேட்டிருக்கிறார். அவரும், வேறு சிலரும் பேசி இருப்பதிலிருந்து, அப்துல்லா எழுப்பிவிட்டுள்ள புயல்குறித்து, பெருத்த கவலையும் பீதியும் பாராளுமன்ற வட்டாரத்திலேயே கிளம்பிவிட்டிருக்கிறது என்று தெரிகிறது.

இராஜ்யசபையில் பேசிய எ.டி.மணி என்பவர் குறித்து என்னைப் பொன்னுவேல் கேட்டறிந்து கொண்டார்—மணி தமிழகத்தவர்; ஐயர். பல ஆண்டுகளுக்கு முன்பே வடநாட்டில் சென்று தங்கிவிட்டவர்; நாகபுரியிலிருந்து நீண்ட பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் 'இதவாதா' எனும் ஆங்கில நாளிதழ் ஆசிரியர். 'இதவாதா' போபால் நகரிலிருந்தும் வெளியிடப்படுகிறது; மணி இப்போது போபாலில் இருந்து வருகிறார்; சுயேச்சை உறுப்பினர்.