உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கைப் புயல்/கைதிகள்

விக்கிமூலம் இலிருந்து

கைதிகள்


"அவன் கிடக்கிறான், திருட்டுப் பயல்" என்றான், 84.

"செ! என்னடா, அந்த ஆசாமியைப் போய் அப்படித் திட்டுகிறே?" என்று கேட்டான், 63.

"ஏண்டா! என்றாவது, அவன் கோயிலிலே சமாராதனை செய்கிறானே, அந்தச் சமயம், உனக்கும் ஒரு இலை கிடைத்ததுபோலிருக்கு. அதனாலேதான், அந்தத் திருட்டு ஆசாமியைத் தூக்கிவைச்சிகிட்டு ஆடறே" என்று விளக்கமுரைத்தான், 84.

"போடா போ! ஆளைப் பார்த்தாலே நல்லவனென்று தெரிந்துகொள்ளலாம்....."

"கோயிலுக்கு வருகிறபோது பார்த்திருப்பே. டே! அவனைத் தெரிந்துகொள்ளவேணும்னா, கோபுர வாசற்படியண்டை பார்க்கக்கூடாது. அங்கே வருகிறபோது, முலாம் போட்டுக்கொண்டுதான் வருவான். அவனுடைய நிஜசொருபத்தைப் பார்க்கவேணும்னா..." 84 பேச்சை முடிப்பதற்குள், வார்டர் வந்துவிடவே, இருவரும், அவர்களுடன் இருந்த வேறு பல நம்பர்களும்,தொப்பியைச் சரிப்படுத்திக்கொண்டு, வேலைக்குப் புறப்பட்டனர். எங்கே என்று சொல்லவில்லையே—ஜெயிலில்! 84, கருப்புக் குல்லா; அதாவது பல தடவை ஜெயிலுக்கு வந்தவன் — 63, முதல் தடவை-அதாவது ஜெயிலும் அவனுக்குப் புதிது, ஜெயில் புகவேண்டியதற்கான தொழிலையும் அவன் அவசரத்திலே கற்றுக்கொண்டவன்.

"ஏண்டா! இது எத்தனையாவது தடவை?" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டபோது, 84, அதாவது குட்டியப்பன், இலேசாக ஒரு புன்சிரிப்புக் காட்டி, "என்னா எஜமான்! தண்டிக்கிற தொரைக்குத்தானே கணக்குத் தெரியும்!" என்று ஹாஸ்யம்கூடப் பேசினவன். அவ்வளவு 'தேறிய' ஆள்—சிறைப் பறவை! ஆசாமி, கூட்டம் பார்த்து நுழைவது. ஒரு உரசல், “என்னாய்யா மாடு மாதிரி மேலே விழறே" என்ற கேள்வி; இதற்குள் வழிப்போக்கனின் மணிபர்ஸ் மறையும். அந்த வேலையில் அவனுக்குத் தெரிந்த புதுப் புது முறைகள் பல போலீசாரேகூட, லாக்கப்பில் அவன் இருக்கும்போது, பொழுதுபோக்குக்கு அவனுடைய முறைகளைக் கூறும்படி கேட்டுச் சிரிப்பார்கள். அவனுக்குப் போலீசார் அனைவரும், அடிப்பவர் அடிக்காதவர், இரண்டு ரகமும்—'நாய்னா'தான்— அதாவது, 'என்னா நாய்னா' என்று தான் கூப்பிடுவான்—அவ்வளவு அன்பு காட்டுவான். அத்தகைய திருட்டுத்தனம் செய்து, கருப்புக்குல்லாக்காரனானவன்; ஊரிலே கவுன்சிலராக, கோயில் தர்மகர்த்தாவாக இருக்கும் ஒருவரைப்பற்றி, வேறோர் திருட்டுக் கேசில் தண்டிக்கப்பட்ட 'கைதியிடம்', கேவலமாகப் பேசினான், ஜெயிலிலே.

"அவனுடைய நிஜ சொரூபத்தைப் பார்க்கவேண்டுமானால், கோபுர வாசற்படியண்டை பார்க்கக்கூடாது, எங்கே பார்க்கவேணும் தெரியுமா....." அவ்வளவுதான் 63-க்கு அவன் சொன்னது—வார்டர் தடையாக வந்து சேர்ந்தான், இதற்குள்.

'ஜன சகாய நிதி'த் தலைவர் தருமலிங்கம் பிள்ளை, தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தார், வீட்டிலே. மறுநாள் சர்க்கார் மேலதிகாரி, 'நிதி'யைப் பார்வையிட வருவதாகக் கடிதம் வந்துவிட்டது, நிதியிலே, அடகு வைக்கப்படடிருந்த கெம்பு அட்டிகையை, இரவல் கொடுத்துவிட்டிருந்தார்—கலியாண விசேஷத்துக்கு. இன்னும் வரவில்லை—தருமலிங்கம் பிள்ளை தவிக்காமல் எப்படி இருக்கமுடியும்? ஆள் அனுப்பி இருந்தார்—அவனும் ஆமையாகிவிட்டானோ என்னவோ, திரும்பி வரவில்லை. பதைக்கிறார் பிள்ளை; "ஐயா, காலையிலே பத்துமணி சுமாருக்கு வருவதாகச் சொன்னார்—வெந்நீர் தயாராக இருக்கவேண்டும்—இன்னின்னவிதமான சமையல் இருக்கவேண்டும்" என்று ப்யூன் வந்து சொல்வி விட்டான். தர்மலிங்கம் பிள்ளைக்கு அடிவயிறு கலக்கம், இரவல்தான் கொடுத்தார்—ஆனால் சர்க்கார் ஆபீசரிடம் எப்படிக் கூறமுடியும்? பொதுப் பணத்தைக் கையாண்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டால்.....நினைக்கும்போதே தர்மலிங்கம் பிள்ளைக்குத் தில்லை, திருப்பதி, திருவரங்கம் போன்ற சகலமும் நாக்கு நுனியிலே வந்து நின்று நர்த்தனமாடின. கையைப் பிசைந்துகொள்கிறார் — பெருமூச்செறிகிறார்—கண்ணீர் விடாதது ஒன்றுதான் பாக்கி.

கற்பகவல்லி, தன் கணவரின் நிலையைப் பார்த்துச் சிரிக்கலானாள். "என்னங்க கூத்தா இருக்கு! ஏன் இப்படிப் பதறுறிங்க. அட்டிகையைக் கொண்டுவந்து அவரு தராமப் போயிடுவாரா? இல்லை, ஆபீசரிடம் சொன்னா, அவர் என்ன தலையை வாங்கிடுவாரா! இல்லாதப்பட்டவங்களுக்கா இரவல் கொடுத்தோம்? வைர அட்டிகை வீட்டுக்குத்தான், இந்தக் கெம்பு அட்டிகை இரவல் போயிருக்கு. இதுக்கு என்னமோ கலங்கிக்கிட்டு நிக்கிறிங்க" என்று கற்பகம் பேசினாள்.

"சனியனே! உனக்கு என்ன தெரியும். செக்குன்னு தெரியுமா, சிவாலிங்கம்னு தெரியுமா; நான் படுகிற வேதனை உனக்கென்ன தெரியும்" என்றார் பிள்ளை. "அதைத்தானே நான் கேட்கிறேன், ஏன் வேதனைப்படணும். வைத்தீஸ்வர முதலியார் வீட்டுக்கு நகையை இரவல் கொடுத்தா, என்ன? அவர் என்ன உங்களை ஏமாத்திவிடுவாரா! வாங்கினதை இல்லேன்னு சொல்கிற மகராஜனா அவரு" என்று வாதாடினாள். தலை தலை என்று அடித்துக்கொண்டார், தர்மலிங்கம் பிள்ளை. கற்பகத்துக்கு நிதி சம்பந்தமான சட்ட திட்டம் என்ன தெரியும். அது ஒரு காட்டுப்பூச்சி!

"என்னா கற்பகம், என் உயிரை வாங்கறே. ஊரார் நகை அது, பாங்கிலே அடமானம் அதை இரவல் கொடுத்துவிடுவது கூடாது" என்று சிறு குழந்தைக்குப் பாடம் கற்றுக்கொடுப்பதுபோலக் கூறினார். கற்பகமோ, "சரிங்க, அவருக்கு இரவல் கொடுத்தா, அதிலே என்ன ஆபத்து? அவரு என்ன, சொத்துச் சுதந்திரம் இல்லாதவரா?" என்று கேட்டாள். "எல்லாம் இருக்கிறது கற்பகம்—ஒருவேளை...." என்று பயத்தோடு சொன்னார், பிள்ளை. "சிவ! சிவ! மனசாலேகூட அப்படிப்பட்டவங்களைச் சந்தேகிப்பது பாவம்" என்றாள், கற்பகம். "இந்தக் காலத்திலே யாரை நம்பமுடியும் கற்பகம்? எல்லோரும் யோக்யராகவே இருப்பார்கள்னு சொல்லமுடியுமா?" என்று இழுத்தார். "உலகம் பலவிதமாகத்தாங்க இருக்கும். ஆனா, நம்ம வைத்தீஸ்வர முதலியாருக்கு என்னங்க, சத்யசந்தர்" என்றாள்.

அந்தச் சத்யசந்தர், மார்பிலே பூசிய சந்தனம் உலர விசிறிக்கொண்டே தர்மலிங்கம் பிள்ளை அனுப்பிய ஆளிடம் சாவதானமாகப் பேசிக்கொண்டிருந்தார். காலா காலத்திலே மழை பெய்யாத கொடுமை, விலைவாசி ஏறிவிட்ட கொடுமை. இப்படிப்பட்ட விஷயங்களை. அவனும் 'ஆமாங்க, போட்டுப் போட்டு அலுத்துப் போய்விட்டான், "அப்ப நான் புறப்படட்டுங்களா?" என்று கேட்டான். வைத்தீஸ்வரர், "வேடிக்கை! இன்ன ராத்திரி, குன்னக்குடி கோகிலா பாட்டுக் கச்சேரி; அதைக் கேட்காமலா போவது?" என்று கூறி, நிறுத்திவிட்டார். ஊரிலே—இருபது மைலுக்கு அப்பால்—தருமலிங்கம் பதைத்தபடி இருக்கிறார். இங்கே அவரை அனுப்பிவைத்த ஆள் அரைத் தூக்கத்தோடு கச்சேரியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். வைத்தீஸ்வரர், கலியாண வீட்டுக்கு நாலாவது வீட்டிலே அவருக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த தனி ஜாகையில், யாருடனோ—ஆணுடன் தான்—இரகசியமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

"அவருடைய நிஜ சொரூபத்தைக் காணவேண்டுமானால் கோபுர வாசற்படி போனால் தெரியாது—அதற்கு வேறு இடம் இருக்கிறது” என்று காலையிலே பேசிய கைதி, இரவு தன் பேச்சைத் தொடர்ந்து நடத்தினான். "கேௗடா தம்பி, உலகிலே ரொம்பப் பேர், இடத்துக்கேற்ற வேஷம், ஆளுக்கேற்ற வேஷம் போட்டுக்கொண்டுதான் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள்—அந்தப்படி, ஜெயம் பெற முடியாத நாமெல்லாம் ஜெயிலுக்கு வந்து சேருகிறோம். உன் கண்களுக்கும் அதுபோலவே, ஊரிலே வேறு எவ்வளவோ பேருடைய கண்களுக்கும் பெரிய பக்திமானாக, தர்மிஷ்டராகத் தெரிகிற ஆசாமியின் நிஜ சொரூபம் அவனுடைய தனி அறையிலே சுயநலக் காரியத்துக்காகச் சூது செய்து கொண்டிருக்கும்போதுதான் தெரியும், அங்கே அவன் நரி. யாராவது அவன் விஷயத்திலே குறுக்கிட்டாலோ, அவர்களை அழிப்பதிலே ஈவு இரக்கமின்றி வேலை செய்வான்—புலிபோல. கோபுர வாசற்படியில் அவன் ருத்ராட்சப் பூனை. நீ அவனைப் புதரிலே பதுங்கிச்கொண்டிருக்கும் போது பார்த்ததில்லை; நான் பார்த்திருக்கிறேன்" என்று விவரமாகப் பேசத் தொடங்கினான்.

"என்ன அது மாயவரம்; விடிய விடியப் பேசுவேபோலிருக்கே" என்று இன்னோர் கைதி கேட்டுக்கொண்டே, இவர்களருகே வந்தான். ஊர்ப் பெயரை, ஆளுக்குப் பொருத்திக் கூப்பிடுவதிலே அவனுக்கோர் ஆசை. "அடடே! முத்து அண்ணனா! வாண்ணேன்", “தம்பி, இதோ இவருக்குத் தெரியும் அவருடைய யோக்யதை. வேணுமானா கேட்டுப் பாரு" என்றான், 84. யாருடைய யோக்யதைபற்றியப்பா நீங்க நியாயாதிபதிக நடு ராத்திரியிலே பேசிகிட்டு இருக்கிறிங்க" என்று அந்தக் கைதி கேட்டான். "வைத்தீஸ்வர முதலியார் விஷயமாத்தான்" என்றான், 84. "அந்த முழுப்பா சுருட்டி விஷயமா?" என்றான், அந்தக் கைதி, "உங்களுக்குத் தெரியுமா அவர் விஷயம்" என்றான், 63.

"தெரியுமான்னா கேட்கறே? நான் இங்கே வந்ததே, அந்தப் புண்யவானாலேதான். கேள் தம்பி, நான், முதலியார் குடும்பம், சின்ன வயதிலே; படிக்கலை சரியா—பள்ளிக்கூடம் போவேன், வருவேன்—வீட்டிலேயும் அடங்கறதில்லை—வீட்டிலேயும் ஓயாத சண்டை, அப்பாவுக்கும் அம்மாவுக்கும்— அந்தச் சண்டைதான் எனக்குப் பாஷை கத்துக் கொடுக்கிற பள்ளிக்கூடமாக இருந்தது. ஒரு வேலையும் எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. எதிர் வீடு பக்கத்து வீடு போவது சீட்டு ஆடுவது, கதை பேசுவது, இப்படிப் பொழுது போக்குவேன். எதிர் வீட்டிலே, ஒரு ஆச்சாரி நகை செய்வாரு. அங்கே போய் உட்கார்ந்துகொண்டு, அவர் தொழிலைப் பார்த்துக்கொண்டிருப்பதிலே எனக்கு ஒரு பிரியம். இப்படிப் பார்த்து பார்த்து, நான், அந்தத் தொழிலையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன், 'உனக்கேம்பா இந்தத் தொழிலு!' என்றுதான் அவர் கேட்பார். 'சும்மா தமாஷுக்குத்தானே' என்று நான் சொல்வேன், உண்மையிலேயே தமாஷ்தான். எனக்கு ஒரு வேலையும் கிடைக்காது குடும்பக் கஷ்டம் ஏற்பட்டபோது ஒரு நினைப்பு வந்தது ஏன் நாம் அந்தத் தொழிலையே செய்தாத்தான் என்னான்னு. ஆனா, மறு விநாடி அந்த யோசனையை விட்டுவிட்டேன். நாம்ப முதலியார் ஜாதி—நாம்ப போய் இந்தத் தொழிலைச் செய்தா — ஜாதியாரு என்னா எண்ணுவாங்கன்னு விட்டு விட்டேன். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் வைத்தீஸ்வர முதலியார், எங்க ஊர்க் கோயில் தர்மகர்த்தாவாக ஏற்பட்டார். அவர் எனக்குச் சொந்தக்காரர்கூட. மாமான்னுதான் கூப்பிடுவது. அவர் என்னிடம் திடீரென்று ஆசையாக இருக்கத் தொடங்கினார். எனக்குக் காரணம் தெரியவில்லை அப்போ, இப்ப தெரியும். "வைத்தி, தர்மகர்த்தா வேலையைப் பார்த்துவிடுவானா? நான் பார்க்கிறேன், அதை" என்று முன்பு தர்மகர்த்தாவாக இருந்த மோட்டூராரு, மீசையை முறுக்கிக்கொண்டு இருந்தார். அவரிடம் அடி ஆள் உண்டு. அதனாலே, வைத்தீஸ்வர முதலியார் பயந்துபோய், என்னைத் துணைக்கு வைத்துக்கொண்டார். நான், இப்ப இருக்கிறமாதிரியா நாறும் நரம்புமாக இருக்கமாட்டேன்—அந்தக் கஞ்சாவாலே இப்படியாகிவிட்டேன்—அப்போ ஆள் 'வாட்ட சாட்டமாக' இருப்பேன். என்னைத் துணையாக வைத்துக்கொண்டு, காரியத்தைச் சாதித்துக்கொண்டதோடு விடவில்லை, அந்த வைத்தி. என்னிடம் பேசிப் பேசி, எனக்கு நகை செய்யத் தெரியும் என்கிற விஷயத்தைத் தெரிந்துகொண்டார். உடனே பிளான் போட்டார். கோயிலிலே இருக்கிற முக்கியமான கல்லிழைத்த நகையை எடுத்து வருவாரு—அவருடைய வீட்டிலேயே தனி அறை—நான் அங்குசாமான்களோடு இருப்பேன்—வைரமா, அதைப் பெயர்த்துவிட்டு, வேறே வெள்ளைக்கல் புதைத்துவிடுவேன்—கோயிலுக்குப் போய்விடும் நகை—வைரம் வைத்திக்கு—நம்ம வேலைக்கும் பணம் கிடைக்கும்—இதுபோல, வைரம், பச்சை, கெம்பு, இப்படி முதலிலே, வேலை தீர்த்தாச்சு—பிறகு தங்க நகையைக் கவனிக்க ஆரம்பிச்சோம். எண்டா தம்பி! உனக்கு ஆச்சரியமாக இருக்கா? எப்படி இவ்வளவு தப்புத் தண்டா செய்துவிட்டு, வைத்தி, வெளியே இருக்கிறான், அதிலும் கௌரவமா இருக்கிறான்னு யோசிக்கிறயா! அதுபோல எவ்வளவோ பேர்டா. ஜெயிலுக்குள்ளே தான் திருட்டுப் பயல்கள் இருக்கிறதாக எண்ணாதே. ஜெயிக்காதவன், ஜெயிலிலே! ஜெயித்தவன் சுகத்திலே இருக்கிறான். கேள், கதையை! இப்படி, தர்மகர்த்தா, கோயில் நகையைத் 'தீத்துக் கட்டிகிட்டு' இருந்தாரா? நானும் அதையே பிழைப்பாகிக்கிட்டு, கொஞ்சம் சௌக்கியமாசகத்தான் இருந்தேன். காசு கையிலே நடமாட ஆரம்பிச்சதும், குடி அதிகமாயிடுத்து—குடி அதிகமாயிடவே, பணம் தேடவேண்டிய அவசியம் வளரலாச்சி—அதனாலே, கையில் நகை வருவது குறையவே—வேறே நகையைத் தேடவேண்டியதாச்சி. வைத்தி தனக்கு இனிமேல்பட அந்தமாதிரி காரியத்திலே இஷ்டமில்லைன்னு சொல்லிவிட்டான். கனவிலே சாமி வந்து மிரட்டிச்சின்னு சொன்னான்—விஷயம் அதுவல்ல—சர்க்காரிலே தர்மகர்த்தாவுக்குத் துணையாக மானேஜரை நியமித்து விட்டதுதான் உண்மையான காரணம். எப்படியோ ஒண்ணு, நான் வேறே இடம் தேடவேண்டியதாச்சி. கொஞ்சநாள் அதிலேயும் வெற்றிதான். உதவிக்கு ஒரு ஆசாமியை வைத்துகிட்டுக் கடையே வைத்துவிட்டேன். உதவிக்கு வந்த ஆள், ஒரு ஆச்சாரி. கடை விலாசம் அவன் பேரில்தான்—எல்லாம் வைத்தியோசனைதான்.

இப்படி, 'தொழிலை' நடத்தி வந்தபோது, ஒரு கேசிலே கிக்கிக்கிட்டோம்—நல்ல கெம்பு அட்டிகை, அதுரிப்பேருக்கு வந்தது—நானு கெம்பை நகர்த்திவிட்டு, அதிலே நல்ல இமிடேஷன் கெம்பு வைத்து அழுத்திக் கொடுத்துவிட்டோம்—நம்மப் 'போறாத வேளை', அதை அந்த ஆசாமிங்க, ஈடுவைக்க வேண்டி இருந்தது—அதுவும் வைத்திகிட்டவே தான் போனாங்க—அவரிடம் பேசுறபோது, அந்த அட்டிகையை என்னிடம் ரிப்பேர் செய்ததாகச் சொன்னார்களாம். அந்தப் பாவி உடனே சிரித்துக்கொண்டு, "ஓஹோ! நகை அங்கே போய் வந்ததா—இதுமேலே பணம் தரமுடியாது" என்று சொல்லிவிட்டான். சந்தேகமாயிடுத்து அவர்களுக்கு—வேறே இடத்திலே கொடுத்தாங்க—விஷயம் வெளியாயிடுத்து—இதோ நான் இங்கே இருக்கறேன்—கேசிலே மாட்டிகிட்டபோது கெஞ்சி கெஞ்சிப் பார்த்தேன், வைத்தியிடம். ஒரு உதவியும் செய்யவில்லை. என்கூட இருந்த ஆசாமிக்குத் தண்டனை முடிந்து வெளியே போய்விட்டான். நான் போக இன்னும் ஒன்பது நாளிருக்கு. வைத்தீஸ்வர முதலியாருன்னு பேர் இருக்கு, அந்தத் திருட்டு ஆசாமிக்கு. வெளியே போய் என்னா செய்யப்போகிறேன்னு தெரியாது அவனுக்கு. கோயில் நகை விஷயமாக, அம்பலப்படுத்தி விட்டு மறுவேலை பார்க்கிறேன். என்கூட இருந்த ஆசாமி, இப்ப வெளியே போயிருக்கிறானே, அவனிடம்கூடச் சொல்லியனுப்பி இருக்கிறேன்—டே! கண்ணா! ஜாக்கிரதையாகக் கவனிச்சிக்கிட்டே இரு, அந்த ஆசாமியை, வெளியே வந்ததும் அவனைத் தீர்த்துப்போடணும், என்று உஷார் படுத்தித்தான் அனுப்பி இருக்கிறேன். அப்படிப்பட்ட திருட்டு ஆசாமி—கோயில் சொத்தைக் கொள்ளை அடிச்சவன்—முழுப்பா சுருட்டியாச்சே, வைத்திஸ்வரன். அவன் வெளியிலே இருக்கறதாலேயே, அவன் யோக்யன்னு எண்ணிடாதே. எனக்கு இந்தத் திருட்டுத் தொழிலைப் பழக்கமாக்கியதே, அவன்தான். அதனாலே அவன் இலாபம் அடைந்து பெரிய மனுஷ்யனாயிட்டான்; நான் ஜெயிலிலே இருக்கிறேன். தம்பி! சொத்து, நகை, பணம், காசு இதெல்லாம் பேச ஆரம்பிச்சா தெரியும், ஜெயிலுக்கு வெளியே எவ்வளவோகள்ளனுங்க. இருக்கிற சூட்சமம்" என்று அந்தக் கைதி கூறினான்.

"கேட்டுக்கிட்டயா 63. அப்படிப்பட்ட வைத்தீஸ்வரனை, நீ வேஷத்தைப் பார்த்துவிட்டுப் பெரிய மனுஷன்னு சொல்லறே, விவரம் தெரிந்துகொள்ளாமே. மாயவரத்துக்கு அடிக்கடி வருவான், இந்த வைத்தீஸ்வரன். அங்கேதான் எனக்கு இவன் யோக்யதை தெரிந்தது. ஒரு ஓட்டலிலே ரூம் எடுத்துக்கொண்டு அதிலே இருந்தான். நான் அந்தச் சமயத்திலே, ஒட்டல் பக்கம் போய்வருகிற வழக்கம்—அங்கே கொஞ்சம் சௌகரியமாகச் சாமான்கள் கிடைத்து வந்தது. ஒருநாள் இவன் ரூமுக்குள்ளே நுழைஞ்சேன்—இவன் கீழே குளிக்கப் போயிருந்தான்—உள்ளே போய்ப் பார்க்கிறேன்—ஒரு பெட்டி நிறைய 'அபின்' அடைச்சி வைச்சிருக்கு. அபினியைப் பெட்டியிலேபோட்டு அடைச்சி அதுமேலே ஒரு தட்டுப் போட்டு மூடி, அந்தத் தட்டு மேலே, அத்தர் பாட்டில் வைத்திருக்கிறான். அத்தர் வியாபாரம் செய்கிறதாகப் பாசாங்கு. பார்த்தேன்; வெளியே போகவில்லை. சரி! இவனை ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து, அங்கேயே கட்டில்மேலே உட்கார்ந்து விட்டேன் ஆசாமி வந்தான்—கதவைச் சாத்தி வைத்திருந்தேனல்லவா—பூட்டி இல்லாமல் போகவே, பதறிப்போனான்—கதவைத் திறந்து உள்ளே வந்தாள்—என்னைப் பார்த்தான், ஒரே அலறல்—"ஸ்! கூச்சல் போடாதேய்யா; கதவைச் சாத்திவிட்டு உட்காரு. அத்தர் வாங்க வந்திருக்கிறேன்" என்றுமெதுவாகச் சொன்னேன். ஆசாமி மிரண்டு போனான்.

"சரியான ஆசாமிதான்பா நீ, அத்தர் கீழே அபினி—அபினி மேலே அத்தர்—என்னா ஜோரா ஏற்பாடு செய்துகிட்டே" என்று கேலியாகப் பேசினேன். அவனும் பல்லை இளித்துக்கொண்டு, "நீங்க...யாருங்...கோ...எப்படி..." என்று பேசலானான். போலீசா? என்றான். இல்லை என்றேன். முகத்திலே இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். பிறகு பேரம் நடந்தது—இருநூறு ரூபாகிடைத்தது. நானும் அவனும் சினேகிதரானோம். இரண்டு மூன்று நாள்—அதற்குள்ளே அபின் விற்கப்பட்டாகிவிட்டது—பாராரோ ஆசாமி இவனுக்கு எஜண்டுகள்—ஊருக்குப் புறப்படும்போது, அவனுக்கு ஒரு பயம்—நான் கூட வருகிறேனோ என்று—நான் இவனுடைய விலாசம் யாவும் விசாரித்துக்கொண்டால், அவ்வப்போது மிரட்டலாமே என்று ஆசைப்பட்டேன். ஆகவே, அவன் எனக்குத் தெரியாமலே ஊருக்குக் கிளம்பப் பிளான் போட்டான். ஓட்டலிலே இவனுக்குப் பெயர், அத்தர் வியாபாரம் ஆறுமுகம் பிள்ளை— என்னிடமும் அதே பேரைத்தான் சொன்னான், இவன் துணியிலே பார்த்தா, 'V' என்று குறி இருந்த்து—எனக்குச் சந்தேகம்—இவனை விடக்கூடாது, பின் தொடரவேண்டும் என்று எண்ணம். இரயிலிலே ஏறிக்கொண்டான், செகண்டு கிளாசிலே. ஆரஞ்சு தருகிறான், ஆப்பிள் தருகிறான், எனக்கு ஆனா, கூடமட்டும் வரவிடவில்லை. வண்டி புறப்பட்டது—நான் விடை பெற்றுக்கொண்டேன்—ஆசாமி, நான் தொலைந்தேன் என்று சந்தோஷப்பட்டிருப்பான்—நானா இவனுக்கு ஏமாறுகிறவன்—நம்ம பொடிப்பயல் ஒருவனை முன்னேற்பாடாக அனுப்பி இருந்தேன், தகவல் விசாரித்து வர—பயல் இரண்டு நாள் கழித்து வந்து என்னிடம் சொன்னான், தகவலை. "அவர் பேர் வைத்தீஸ்வர முதலியாரு; ஊரிலே அவருக்கு நல்லவருன்னு பேரு! எல்லோரும் அவரிடம் மரியாதை காட்டுகிறார்கள். கோயிலுக்கு அவர் தர்மகர்த்தா" என்றெல்லாம் கூறினான். அத்தர் ஆறுமுக முதலியாக வேஷம் போட்ட ஆசாமியைப் போலீசிலே சிக்கிவிடலாம்னு கூட நினைச்சேன்—சிக்கிவிட்டா நமக்கு ஒரு இலாபமும் இல்லை—சரி கிடைத்தவரைக்கும் அவனிடமே கரைப்பது என்று எண்ணி இரண்டொரு மாதம் காத்துக்கொண்டிருந்தேன்—ஆசாமி மாயவரம் பக்கம் தலை காட்டவே இல்லை—ஏஜண்டுகளுக்குக் கடிதம் போட்டு இடம் வேறு ஏற்பாடு செய்துகொண்டான் போலிருக்கு. கடைசியிலே ஊருக்கே போய், நேரடியாகவே பார்த்துவிட்டு வருவதுன்னு போனேன்—பார்த்தேன்—கோயிலிலே கும்பிடு போட்டேன், "யார்? எந்த ஊர்?" என்று கேட்க ஆரம்பித்தான்—அத்தர் ஆறுமுக முதலியார் என்று பெயரைக் கவனப்படுத்தினேன். "யாரடா இவன், ஆள் மாறாட்டமாப் பேசுகிறான்" என்று முறைப்பாகப் பேசினான்-இதற்குள்ளே கோயில் சேவகர்கள் வந்து சூழ்ந்துகொண்டார்கள், என்னை அடித்தும்விட்டார்கள்—கூவினேன். கொக்கரித்தேன், போலீஸ்காரரிடம்கூடச் சொன்னேன், இந்த ஆசாமி அபின் வியாபாரம் செய்கிறான் என்று. நான்தான் லாக்கப்யில் தள்ளப்பட்டேன். இதற்குள் போலீசார் என்னைப்பற்றித் தகவல் விசாரித்துவிட்டனர். மாயவரம் போலீசார் நான் 'முன்னாலே ஜெயிலுக்குப் போய்வந்தவன்" என்று தகவல் கொடுக்கவே, கோபுர வாசற்படி அருகே, தர்மகர்த்தா வைத்தீஸ்வர முதலியார் மடியிலிருந்து பணப் பையைப் பிடுங்க முயற்சித்ததாகக் கேஸ் போட்டார்கள்—தண்டனையும் தந்தார்கள். அப்படிப்பட்ட வைத்தீஸ்வரனை அவன் நம்மோடு ஜெயிலிலே இல்லாத காரணத்தாலேயே, பெரிய யோக்யன் என்று பேசுகிறாயே" என்று 84 கூறினான். 63 ஒரு நீண்ட பெருமூச்செறிந்து, "இப்படியா இருக்கு விஷயம். நான், ஏழைகள், இல்லாதவர்கள், கெட்டுப் போனவர்கள் மட்டுந்தான் திருடுகிறார்கள் என்று நினைத்தேன். நானும் திருடிவிட்டு ஜெயிலுக்கு வந்தவன்தான் ஆனா, என் கஷ்டகாலம் எனக்கு அப்படிப்பட்ட புத்தியைக் கொடுத்தது. நான் இந்த வைத்தீஸ்வர முதலியாரைப் பார்க்கிறபோதெல்லாம், அடடா! எவ்வளவு பெரிய மனுஷராக இருக்கிறார். இப்படி அல்லவா இருக்கவேண்டும். நாமோ திருட்டுப் பயலானோமே என்றெண்ணி வருத்தப்படுவது வழக்கம். நீங்கள் சொன்னதைக் கேட்டா, இந்த ஆசாமி, மகா மோசக்காரனாக அல்லவா இருப்பதாகத் தெரியுது" என்று கூறி ஆயாசப்பட்டான்.

"விடிவதற்குள்ளே முடியாதுபோலிருக்குங்களே, ஏன்னா, இப்பல்லாம், முந்தியாட்டம் வேலை முடியறதில்லைங்க. ஜெயிலிலே போடறான் பாருங்கோ, அந்தக் கீரைக்குழம்பு, அது இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுத்துங்கோ. நீங்களே பாருங்களேன், உடம்பு எனக்குத் துரும்பு துரும்பா இளைச்சித்தானே போச்சிங்க" என்று பேசிக்கொண்டே, கெம்பு அட்டிகையின் கற்களைப் பெயர்த்தெடுத்துக்கொண்டே இருந்தான், கண்ணாச்சாரி. வைத்திஸ்வர முதலியார் "வெறும் கீரையா? சோறு அளவுகூடச் சரியாக இருக்காதா?" என்றெல்லாம் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.

வெளியே கச்சேரியில், குன்னக்குடி கோகிலம், முதலியாரை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, மங்களம் பாடலாம் என்று யோசித்தபடி, திருப்புகழிலிருந்து காவடிச்சிந்து, அதிலிருந்து தில்லானா தெம்மாங்கு இப்படிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். தர்மலிங்கம் பிள்ளை அனுப்பிய ஆள், கோகிலாவின் கண்களில் உள்ள மை கரைந்து போனதை பக்கத்திலே இருப்பவருக்குக் காட்டிக்கொண்டிருந்தாள்.

வைத்திஸ்வர முதலியார் ஆறு இமிடேஷன் சிகப்புக்கற்களை எடுத்துக்கொடுத்தார், கண்ணாச்சாரியிடம். பழைய கற்கள் முதலியார் மடியில் போய்விட்டன. புதுக் கற்கள் அட்டிகையில் குடி ஏறிவிட்டன.

விடிந்தது. தர்மலிங்கத்தின் ஆளிடம் அட்டிசையைக் கொடுத்து அனுப்பினார், வைத்தீஸ்வரர், கிராமத்தார். "கலியாணமென்றால் இது கலியாணம்—கச்சேரி என்றால் இப்படி இருக்கவேண்டும்—முதலியார் குணம்போல் யாருக்கு வரும்—அவரே குடும்பத்தோடு வந்திருந்து, தன் சமையற்காரனுக்குத் தானே பெண் பார்த்து, தானே பணம் செலவுசெய்து கலியாணம் செய்துவைத்தார்—எவ்வளவு நல்ல மனம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் சௌக்யமாக நூறு யுகம் வாழவேண்டும்" என்று பேசிக் கொண்டனர்.

பல் விளக்கிக்கொண்டே, கலியாணப் பெண்ணின் தாயாரிடம் வைத்தீஸ்வரர் பரிகாசம் பேசிக்கொண்டிருக்கிறார், "ஏன் பார்வதி! நான் மட்டும் எப்போதும் சினேகிதத்தை மறக்கமாட்டேன் என்கிற விஷயம் இப்பவாவது புரிஞ்சுதா? பார் உன் மகளுக்கு எல்லாச் சீரும் சிறப்பும் நான் கிட்ட இருந்து செய்கிறேன்—நீ கவலைப்படாதேன்னு அன்று சொன்னதை நிறைவேற்றி வைத்தேனா இல்லையா, பார்" என்றார்.

"அது சரிங்க. அவ விஷயமாக உங்களுக்கு இல்லாத அக்கரை, வேறே யாருக்கு இருக்கமுடியுமுங்க. நீங்க சத்ய சந்தரு—சொன்ன வாக்கியத்தைக் காப்பாத்தினிங்க" என்று நன்றி கூறினாள்.

"எழுந்திருடா மாயவரம்! ஏது நேத்து இராத்திரி, சத்யசந்தன் காலட்சேபத்தைச்செய்து அலுத்துப்போச்சி போலிருக்கு. எழுந்திரு, எழுந்திரு—ஏமாந்தவன் ஜெயிலிலே, ஏய்த்துவிட்டவன் வெளியிலே" என்று கூறினான், முத்து.