உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கைப் புயல்/கள்ளன்

விக்கிமூலம் இலிருந்து

கள்ளன்


தொல்லை மிகுந்த வேலை; கடினமானது என்று கூற முடியாது; அவ்விதம் நான் சொன்னால் சிரிப்பார்கள்; கையிலே இருப்பது கடப்பாறை அல்ல, மண்வெட்டியுமில்ல, பேனா! தலையிலே மூட்டையுமில்லை, மண்சட்டியுமில்லை, தொப்பி அணிந்திருக்கிறேன்! உடலிலே கோட்டு; உத்யோகம் செய்கிறேன், ஆனால் உள்ளம் என்னமோ, உலைக்கூடத்தில் சிக்கிய இரும்புபோலிருந்தது; ஓயாத விசாரம்; தீராத தொல்லைமட்டுமல்ல, நாளாகவாகத் தொல்லை வளர்ந்துகொண்டே வாலாயிற்று. எவ்வளவோ முயன்றும் அந்தத் தொல்லையைக் குறைக்கமுடியவில்லை. நான், நந்தீஸ்வரர் மில்ஸ் சொந்தக்காரரும், நகர பரிபாலன சபையின் தலைவரும், நகர காங்கிரஸ் கமிட்டியின் போஷகரும், குமரேசர் கோயில் தர்மகர்த்தாவும், கோவாபரேடிவ் சபை உபதலைவரும், ஏழைகள் சகாய நிதிக்குக் காரியதரிசியும், என் தகப்பனாருக்குப் பள்ளிக்கூடச் சினேகிதருமான வைடூரியம் செட்டியாரிடம் வேலைக்கு அமரும்போது இப்படி என்மனம் கசக்கிப் பிழியப்படும் என்று எண்ணினதில்லை. அவரும், இன்றுவரையில் என்னிடம் கடுகடுத்துக்கூடப் பேசினவரல்ல. தம்பி! என்றுகூடச் சிலசமயங்களிலே கூப்பிடுகிறார். அதிகமாகக் கோபம் வந்தால், "சுத்தப் பைத்தியக்காரப் பிள்ளையப்பா நீ. எப்படித்தான் நீ பிழைக்கப்போகிறாயோ தெரியவில்லை" என்று கூறுவார். இப்படி, என்னைக் கௌரவமாகவே நடத்துபவரிடம் வேலை பார்க்கிறேன். 'வேலை பார்க்கிறேன்' என்று அர்த்தமில்லாமல் சொல்லவில்லை உண்மையிலேயே, அவருடைய ஆட்கள் வேலை செய்கிறார்கள், அது சரியாகச் செய்யப்படுகிறதா இல்லையா என்பதைக் கவனித்துக்கொள்ளும் வேலைதான் எனக்கு. மற்றவர்கள் வேலை செய்கிறார்கள், நான் அதனை மேற்பார்வை பார்க்கிறேன்

"பையன், பி.ஏ., தேறமாட்டான்போலிருக்கு. ஜோசியர் திட்டமாகச் சொல்லிவிட்டார். அதனாலே உம்மிடம் அழைத்துவந்தேன். எதிலாவது இழுத்துப்போட்டுவையுங்கள். வேறே யார் இருக்காங்க எனக்கு" என்று, என் தகப்பனார், வைடூரியம் செட்டியாரிடம் சொல்லி முடிக்கப் பதினைந்து நிமிஷங்கள் ஆயின. ஆஸ்த்மா இருமல் என் அப்பாவுக்கு. வைடூரியம் செட்டியார், நெடுநேரம் யோசித்து, "சரி! தம்பி நம்மிடம் இருக்கட்டும், சந்தர்ப்பம் போல் பாங்கியோ, முனிசிபாலிடியோ ஏதோ ஓர் இடம் பார்ப்போம். தற்போது, ஒன்றும் காலி இல்லை அங்கே எல்லாம்" என்றார். என் தகப்பனார், "எப்படியோ செய்யுங்க, இனி அவன் உங்க மகன்போல" என்று கூறி என்னை வைடூரியம் செட்டியாரிடம் ஒப்படைத்தார். செட்டியார் அப்போது, 'மாதூர்பூமி' என்ற ஓர் விடுதி கட்டிக்கொண்டிருந்தார். அதாவது, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வீடு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது அறிந்து, நகரசபையார் தீர்மானம் நிறைவேற்றினார்கள், யாராவது தனவந்தர்கள் முன்வந்து, விடுதிகள் கட்டி, வாடகைக்கு விடவேண்டும், நகர சபையார் இந்தக் காரியத்துக்காக, காலி நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்பதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று அந்தத் தீர்மானத்தை வைடூரியம் செட்டியார் நிறைவேற்றியபோது, பத்திரிகைகள் அவருடைய, பொது ஜனசேவா உணர்ச்சியைப் பாராட்டின. காலி நிலம் மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, விடுதி கட்டும் பணியை, பார்த்த சாரதிச் செட்டியார் மேற்கொண்டார். அவர் வைடூரியம் செட்டியாரின் இரண்டாம் மருமகன். மருமகனுக்கு மாமனார் உதவிசெய்யாமலிருக்கமுடியுமா? விடுதி கட்டுவதற்கான யோசனைகளை வைடூரியம் செட்டியார் கூறினார்: 'மாதூர்பூமி' என்ற பெயர் சூட்டியதும் செட்டியார் தான். நகரசபையிலே, எதிர்க் கட்சித் தலைவர் செங்கமலம் பிள்ளை, ஒரு வம்புக்காரப் பேர்வழி.

"முனிசிபல் காலி நிலத்தைப் பார்த்தசாரதி செட்டியார்பேரால் குறைந்த விலைக்கு வாங்கியது, உண்மையில் நகரசபைத் தலைவர் வைடூரியம் செட்டியார் தான், என்று ஊரார் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?," என்று ஒரு கேள்வி கேட்டார்.

"உண்மைதான்" என்றார், நகரசபைகத் தலைவராக வீற்றிருந்த செட்டியார்.

எதிர்க் கட்சித் தலைவர், ஆவேசத்துடன் எழுந்து, "இதுதானா பொதுஜன சேவா உணர்ச்சி" என்று கேட்டார்.

"பிள்ளையவாள்! உட்காருங்கள்; என்ன சொன்னேன் என்று ஆவேசம் ஆடுகிறீர்கள். முனிசிபல் நிலத்தை நான்தான் கிரயம் வாங்கினேன் என்று ஊரார் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா என்று கேட்டீர்கள். உண்மைதான் என்றேன். ஊரார் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். ஊரார் எதைத்தான் பேசாமல் இருக்கிறார்கள். ஓட்டர்கள் காலிலே செங்கமலம் பிள்ளை விழுந்து கும்பிட்டார் என்று கூடப் பேசிக்கொண்டார்கள். ஊரார் பேசிவிட்டால், அது வேத வாக்கோ! நிலம் விற்கப்பட்டது; அதனைப் பார்த்தசாரதிச் செட்டியார் வாங்கினார்; அதற்கான ரிகார்டு இருக்கிறது; அதுபற்றி வம்பு பேசுபவர்கள், வாய் வலிக்கப் பேசட்டும், நகரசபை அதுபற்றிக் கவனிக்கத் தேவையில்லை. பார்த்தசாரதிச் செட்டியார் என் மருமகப் பிள்ளையாக இருப்பதாலேயே 'விக்ரயம்' கெட்டுவிட முடியாது. 'மாதுர் பூமி'க்குச் சுண்ணாம்பு சப்ளைக்கான கான்ட்ராக்டு எடுத்து இருப்பவர், கற்பூரப் பிள்ளை; அவர் உமது தம்பி" என்றார்-சபையோர் சிரித்தனர். கூடவே சேர்ந்து சிரித்தார், செங்கமலம் பிள்ளையும்.

'மாதுர் பூமி'யில் மொத்தம் நூற்று முப்பது விடுதிகள் கட்டத் திட்டமிட்டு, வேலை ஜரூராக நடைபெற்று வந்தது. என்னை அந்தக் கட்டிட வேலைக்கு மானேஜராக்கினார், வைடூரியம் செட்டியார். வேலையாட்கள் வருகிற நேரம், போகிற நேரம், செய்த வேலையின் அளவு, இவைகளைக் குறித்து வைப்பது, கூலி கொடுத்துக் கணக்கு எழுதுவது, வேலை ஒழுங்காகச் செய்யும்படி பார்த்துக்கொள்வது; இது என் வேலை.

இதிலே கஷ்டம் இல்லையே, என்று கூறலாம். வெட்டுவது, குத்துவது, தூக்குவது, அரைப்பது, இவையல்லவா கடினமான வேலைகள்; உனக்கு என்னப்பா, வந்த ஆளைக்கணக்கு எண்ணுவது, குறித்துக்கொள்வது, வேலையைச் சரியாகச் செய்யும்படி பார்ப்பது, இவ்வளவுதானே, இதிலே என்ன கஷ்டம் என்று கேட்கலாம். நானும் அப்படி எண்ணிக்கொண்டுதான் வேலைக்குச் சென்றேன். அங்கே வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான், என் வேதனையான வாழ்வு எனக்குப் புலப்பட்டது.

கட்டிட மேஸ்திரி சொன்னான், இந்தக் காலி நிலம் வாங்கினதிலே, செட்டியார், சரியான அடி அடித்தார்; திருடனிடம் கொடுத்தால்கூட, விலை, மூன்றுமடங்கு அதிகமாகத் தருவான் என்று.

நகரசபைக்குத் தலைவராக இருப்பதால், அவனால், மிக மலிவாக இந்த நிலத்தைத் தட்டிக்கொள்ள முடிந்தது என்றான், செங்கல் கொண்டுவந்தவன்.

இரும்புக் கர்டர்கள், லாரிகளிலே வந்து இறங்கிய போது, "என்ன பஞ்ச காலமாக இருந்தாலும், கிடைக்கிறவர்களுக்குச் சாமான் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது" என்றான், லாரி டிரைவர். "எந்தக் கம்பெனி?" என்று கேட்டேன், "கம்பெனியாவது மண்ணாவது; எல்லாம் மிலிடெரியில் ஏலத்தில் எடுத்தது" என்றான்.

இப்படி, அங்கே வருகிறவர்களெல்லாம், 'மாதுர் பூமி'யால் வைடூரியம் செட்டியார் அடைகிற இலாபக் கொள்ளையையே, சொல்லிக்கொண்டிருந்தார்கள். மற்றத் தொழிலாளர்கள் இந்தப் பேச்சைக் கேட்டு, "அதிர்ஷ்டம்டா!" என்று கூறிவிட்டு வேலையைக் கவனித்தனர்; என்னால் முடியவில்லை. மனதிலே பலவிதமான எண்ணங்கள்! எப்படி எப்படி இலாபம் சம்பாதிக்கிறார், ஊரிலேயும் பெரிய மனிதராக இருக்கிறார், இப்படிப் பணம் திரட்டும் இவருக்குக் கோயிலிலே மரியாதை, தேச சபையிலே இடம், நகர சபையிலே பீடம், சே, என்ன மதி மயங்கிய மக்கள் என்று நினைத்து வருந்தினேன்.

நானும் கடப்பாறையைத் தூக்கியிருந்தால், வேலை அலுப்பிலே இந்த எண்ணங்கள் வராதிருந்திருக்கும்; நான் 'வேலை பார்ப்பவன்.' எனவே, சிந்திக்க வசதி இருந்தது; அந்தச் சிந்தனை தான், என் சித்தத்தைச் சிதைத்து வந்தது.

"டே! தடியா! எவ்வளவு நேரம், அந்த மூட்டையைத் தூக்கிப் போடுவதற்கு; ஆகட்டும் சீக்கிரம், ஆமைபோல நகராதே. அவர் வருகிற வேளை."

"தே, குட்டி! என்ன இது, அன்ன நடை நடக்கிறே; தூக்கு சட்டியை, ஏறு சீக்கிரம், மேலே பார், சுண்ணாம்பு சுண்ணாம்பு என்று அவன் கத்துகிறான்."

"மேஸ்திரி! போதும் சிமிட்டி செட்டியார், அரை மூட்டைக்கு மேலே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பாழ்பண்ணாதே பொருளை."

மானேஜரல்லவா நான், என் அன்றாட உத்தரவுகள் இவை. முதலிலே சந்தோஷம், கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது, இப்படிப் பல பேர்வழிகளை மிரட்டி வேலை வாங்குவது. நாளாகவாக இந்த வேலை எனக்குக் கசப்பு உண்டாக்கிற்று. இவர்கள் பாபம், இங்கே இப்படி உழைக்கிறார்கள், ஒரு நிமிஷம் சும்மா இருக்கவிடாமல் நான் கொத்துகிறேன் அவர்களை, பாடுபடும் இவர்கள் பெறுகிற கூலி; அவர்களின் வாழ்க்கைக்குப் போதாது என்பது எனக்குத் தெரியும். குடும்பம் குடும்பமாக வேலைக்கு வருகிறார்கள், குழந்தைகளை மரத்தடியில் தூங்கவைக்கிறார்கள், புளித்த கூழைச் சாப்பிடுகிறார்கள், உழைக்கிறார்கள், பொழுது சாயுமட்டும்; நான் அவர்களைக் கசக்கிப் பிழிந்து, வீடு போகும் போது கூலி தருகிறேன், ஒரு ரூபா ஆறணாவிலிருந்து ஒன்றே காலணாவரையில், பல ரகமாகப் பிரித்து.

'மாதுர்பூமி' வாயிலாக மாதம் 13,000 ரூபாய் வரும் என்று வைடூரியம் செட்டியார் குறித்திருந்தார். அந்த 13,000 ரூபாய் நிரந்தர வருமானத்தை அவருக்கு அமைத்துத் தரும் பாட்டாளி மக்களுக்கு அது தெரியும் ஆனால் அவர்கள் மனம் வேலையிலேயே ஈடுபட்டிருக்கிறது; எனவே, "நாம் உழைத்து இவ்வளவு பாடுபட்டுக் கொள்ளை இலாபத்தை வேறு ஒருவர் அடைகிறாரே" என்று எண்ண நேரம் இல்லை. நானோ சுண்ணாம்புச் சட்டி சுமக்கவில்லை; சுதந்தரம் சுகம், சமத்துவம், சமதர்மம் என்ற சுந்தரமான கருத்துக்களைச் சுமந்துகொண்டிருக்கிறேன். கல்லூரி வாழ்வு எனக்கு இந்தச் சுமைதாங்கி வேலையைக் கொடுத்துவிட்டது. அந்த எண்ணங்கள் உள்ளே குடைந்தன கண்ணெதிரே மாடுபோல் உழைக்கும் மக்களைக் காண்கிறேன்; அவர்கள் சரியாக உழைக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளும் வேலையையும் செய்கிறேன், அதற்காகப் பணமும் பெறுகிறேன், என் நிலை எப்படி இருக்கும்! மனமோ மரத்துப் போகவில்லை, மார்க்சும் பிறரும் புகுத்திய கருத்துக்களையோ மறந்துவிடவில்லை; உழைப்பவன் கஷ்டப்படுகிறான், உழைப்பவனை உறுஞ்சுபவன் ஊராள்கிறான் என்பது தெரிகிறது விளக்கமாக, அதைத் தடுக்கும் சக்தியோ எனக்கு இல்லை. நமக்கென்ன என்று இருந்துவிடவோ முடியவில்லை. தான் ஓர் பயங்கரமான இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுஎலியானேன், யந்திரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது, அதன்கீழே சிக்கிப் பல பொருள் பொடி பொடியாகின்றன. எலியோ சக்கரத்தின் அடியிலே சிக்கவில்லை! உருளையின் கிளைகளின் ஒன்றின்மேலே இருக்கிறது. என்ன செய்யும் எலி? அந்த நிலை எனக்கு! வைடூரியம் செட்டியாரின் சுரண்டல் இயந்திரத்திலே சிக்கிச் சிதைகிறார்கள் அந்தத் தொழிலாளர்கள், சுரண்டுவது கொடுமை என்பதை உணர்ந்தவன் நான்; சுரண்டல் இயந்திரத்தின் காவலனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்! எப்படி என் நிலை!

நான் வேதனையில் மூழ்கினேன்.

அவன் அறியாமல் ஒரு நாள் அந்த மூட்டையைத் தூக்கிப் பார்த்தேன். மூன்று நாளாயிற்று 'சுளுக்கு' தீர. அவனைத்தான் நான் ஒவ்வோர் நாளும், "தடியா! சீக்கிரம் மூட்டையைத் தூக்கு; ஆமைபோல நகராதே" என்று கண்டிக்கவேண்டும். சாதாரணமாகவே, எனக்கு அது வேதனையாக இருந்தது, மூட்டையைத் தூக்கிப் பார்த்துவிட்ட பிறகு எனக்கு அவனைக் கண்டிப்பது என்றால் பழுக்கக்காய்ச்சிய இரும்பைத் தொட்டாகவேண்டுமென்றால், எவ்வளவு கலக்கம் ஏற்படுமோ அப்படி இருக்கும்! என்ன செய்வேன், நான் மேனேஜர், செய்தாகவேண்டும்.

சுண்ணாம்புச் சட்டியைத் தலைமீது வைத்துக்கொண்டு ஏணிமீது ஏறிப் பார்ந்தேன், ஐந்தாவது படிக்கட்டிலேயே விழுந்துவிட்டேன்; அதன்மீது ஏறிச் செல்லவேண்டிய பெண்ணைத்தான் அன்றாடம் "அன்ன நடை நடக்காதே, ஆகட்டும் சீக்கிரம்" என்று சொல்லியாகவேண்டும். அதை நான் சொல்லும்போது, எனக்கு உண்டான வேதனையை எப்படிக் கூறமுடியும்! பாடுபடும் அவர்களின் பெரு மூச்சைக் கேட்டு, நான் பயந்தேன். அவர்கள் உடலிலே பொழியும் வியர்வையைக் கண்டு கண்டு. என் கண்களிலே நீர் வழியலாயிற்று. வயிற்றுக்காகப் பாடுபடும் அந்த லறியவர்களின் வாட்டமும் வருத்ததும், எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், அதை மாற்றும் வகையறியாதவனானேன், என் செய்வேன்? மார் உடையப் பாடுபடுகிறார்கள்; அவர்களை வேலை வாங்குபவன் நான். எனக்காக அல்ல அவர்கள் வேலை செய்வது, அவர்களுக்காக அல்ல, வைடூரியம் செட்டியாருக்காக. அவர் செல்வம் வளர இவர்கள் உழைக்கிறார்கள், அந்த உழைப்புச் சரியானபடி இருப்பதற்கு நான் கண்காணிப்புக்கு இருக்கிறேன். இந்த எண்ணம் தோன்றத் தோன்ற எனக்கு வேதனை அமோகமாகிவிட்டது; சித்ரவதை நடக்கிறது. நாம் கத்தி தீட்டித் தருகிறோம், சுரண்டல் வேலை நடக்கிறது, நாம் சக்கரம் சரியாக உருள எண்ணெய் போடுகிறோம். பாட்டாளியின் இரத்தத்தைப் பருக முதலாளித்துவம் துடிக்கிறது; நாம், படி இவ்வளவு, ஆழாக்கு இவ்வளவு என்று அந்த இரத்தத்தை முதலாளித்துவ முறைக்கு அளந்து தரும் வேலையில் இருக்கிறோம். புலியிடம், ஆடுகளை ஓட்டிக்கொண்டுபோய் நிறுத்தும் தொழில்புரிகிறோம். எவ்வளவு இழிவான வேலை இருக்கிறோம். எவ்வளவு இழிவான வேலை. பழியும் பாவமும் நிறைந்த வேலை! பாட்டாளிகளுக்கு துரோகம் செய்யும் வேலை! இதனையோ நாம் செய்வது? இதைவிட நாமும் கூலியாகலாம். கொடுமையைக் கண்ணாரக் கண்டு சகித்துக்கொள்ளுவதைவிட, கொடுமைக்கு உடந்தையாக இருப்பதைவிட, கொடுமைக்குப் பலியாகும் கூட்டத்திலே ஒருவனாகிவிடலாமே என்று ஏதேதோ எண்ணினேன், என்னென்னவகையாலோ, மனவேதனையைப் போக்கிக்கொள்ளச் சாந்தி தேடினேன், முடியவில்லை. மனதிலே மூண்ட வேதனை கொழுந்துவிட்டு எரியலாயிற்று. காலையிலே வேலை நடக்கும் இடம் போவதற்குப் புறப்படும்போதே, “எப்படி அந்த மனித்ததன்மையை மாய்க்கும் களத்துக்குப் போவது! எப்படிக் கண்டும் சும்மா இருப்பது" என்று தோன்றும். அங்கே சென்று வேலை நடந்தால் நடக்கட்டும் என்று சும்மா இருக்கவோ முடியாது. அவர்களை நான் வேலை வாங்கியே ஆகவேண்டும், அதுவே எனக்கு இடப்பட்ட வேலை. என்வேலையை ஒழுங்காகச் செய்கிறேனா என்று பார்க்க, செட்டியார் மாலையிலே வந்து போவார். ஆகவே, நான், அந்தப் பரிதாபத்துக்குரிய மக்களை வேலை! வேலை! சீக்கிரம்! சீக்கிரம்! என்று அதட்டியபடி இருந்தாகவேண்டும், அவர்களை நான் அதட்டும்போதெல்லாம், என் மனதிலே ஒரு சம்மட்டி அடிப்பதுபோல் இருக்கும்.

"தம்பி! மாடல்ல, மனிதன்! கண் இல்லையா உனக்கு? கடும் வெயில் என்றுதானே நீ, மர நிழலிலே நிற்கிறாய், காலிலே செருப்புடன். அவனைமட்டும் 'சீக்கிரம் சிக்கிரம்' என்று மிரட்டி வேலை வாங்குகிறாயே நியாயமா?"

"நியாயமில்ல! கொடுமைதான், தெரிகிறது. ஆனால், நான் செய்வேன்; அவர்களை வேலை வாங்கியாகவேண்டுமே, அதுதானே என் வேலை"

"கேட்கிறதா அந்தப் பெருமூச்சு, சுமக்க முடியாத பாரத்தைத் தூக்கினான் அவன், அதனால் அந்தப் பெருமூச்சு. அவன் வயிற்றுக்குப் போதுமான உணவுகூடக் கிடைக்காது இந்த உழைப்பால்"

"உண்மைதான், நான் என்ன செய்வேன்?"

"கொஞ்ச நாளில், உன் கண்கள் பழகிவிடும், இந்தக் கோரக் காட்சிகளைக் கண்டு. உன் செவிக்கு அந்தப் பெருமூச்சு சகஜமான சத்தமாகிவிடும். மணம் உணர்ச்சியற்றுப் போய்விடும். நீ உண்டு, உன் வாழ்வு உண்டு என்ற அளவிலே எண்ணம் தடித்துவிடும். இப்போது ஏதோ மனிதனாக இருக்கிறாய், கொஞ்சநாளிலே, நீயும் ஓர் இயந்திரமாகிவிடுவாய்” "ஐயோ! நான் என்ன செய்வேன்?"

"உண்மைதான்! பாபம்! உன் நிலைமை பரிதாபகரமானதுதான், நீ இரண்டு இயந்திரங்களுக்கிடையே சிக்கிச்சிதைகிறாய், முதலாளித்வம் அரைக்கும் இயந்திரம், தொழிலாளர்கள் அரைக்கப்படும் மனித உருவிலுள்ள பொருள்கள், நீ இந்த இரண்டும் பொருந்தி வேலை செய்கிறதா என்று பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலே சிக்கிக் கஷ்டப்படுகிறாய்"

"ஆமாம்! பூனை இருக்கும் இடம் தேடி, கிளியைக் கொண்டுபோய்க் கொடுக்கிறேன்"

"உபமானம் பொருத்தந்தான், ஆனால் உன் மனம் அதற்கு இடந்தரவில்லை! அல்லவா?”

"ஆமாம்! என்ன செய்வேன்? ஓடிவிடட்டுமா?”

"எங்கே ஓடப்போகிறாய்?"

"எங்காவது! இந்தக் கோரம் கண்ணிலே படாமல் இருக்கும் இடந்தேடி"

"அப்படி ஒரு இடம் கிடையாதே. எங்கே போனாலும் இதுதான் காட்சி, அதாவது ரஷ்யா தவிர"!

"அங்கே போய்விடுகிறேன்"

"போய்விட்டால், இங்கே இந்தப் பெருமூச்சும் வியர்வையும் நின்றுவிடுமா?"

"நிற்காது, இதை நிறுத்தமுடியுமா!"

"முடியும்!"

"எப்படி?"

"படி! பலமுறைகள் உண்டு, படித்துப் பார்"

என் மனப் போராட்டம் மேலே நான் தீட்டியது. வேதனையைக் குறைத்துக்கொள்ள, நான் படிக்கலானேன். படித்ததால்,மேலும் வேதனையே பெற்றேன்.

புத்தகங்கள், நாகரிக போதனை, நல்வாழ்வுக்கான வழிகள், நவயுக உதயம், என்று பலப்பலபற்றி இருந்தன, படித்தேன். இன்பம் என்ற இலட்சியத்தைப்பற்றிய ஏடுகளைப் படித்தேன். இவ்வுலகம் அவ்வுலகம் என்பது பற்றிய பாகுபாடுகளைக் கூறும் புராண இதிகாசாதிகளைப் படித்தேன். படித்து என்ன பலன் கண்டேன்? பரம்பரை பரம்பரையாகப் பாட்டாளி மக்கள் இதே நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதை; வேதனை இதனால் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. மனிதன் ஏன் அடிமைப்பட்டான்? ஏன் சுரண்டப்படுகிறான்? எப்படி அவனை விடுவிக்கமுடியும்? என்போன்ற மானேஜர்களை வேலை பார்க்கச் சொல்லி வைடூரியம் செட்டியார் போன்றவர்கள், பாட்டாளிகளைப் பதைக்கச் செய்வதுதானா, மனிதன் இவ்வளவு காலமாகியும் கண்டுபிடித்த முறை! வேறு கிடையாதா? குகையிலே வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், அறிவு வளர்ச்சியால் இன்று வானத்தின் அருகே வாழ்வதுபோன்ற நிலையில் மாடி அமைத்துக்கொண்டான். நாலு மைல் ஐந்து மைல் நடந்து சென்றவன், 400 மைல் ஐந்நூறு மைல் ஒரு மணி நேரத்தில் என்று செல்லத்தக்க விதத்திலே விமானம் கண்டு பிடித்தானே! எத்தனையோ துறைகளிலே புத்தம் புதுமுறைகளைக் கண்டு பிடித்தான். வாழ்வதற்குமட்டும், ஆதிநாட்களிலே இருந்துவந்த முறை, வலியோர் எளியோரை வாட்டும் முறை தவிர, வேறொன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே! என்? என்ற இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றின, ஏடுகள் படிக்க ஆரம்பித்து. பாட்டாளிகளின் நிலைமையை மாற்ற ஏன் அறிஞர்கள் முயலக்கூடாது என்று யோசித்தேன். பழங்கால அறிஞர்கள் பரலோகத்தைப் பற்றிய கருத்திலே மூழ்கிக்கிடந்தனர். பிறகு வந்தவர்களோ, கலை, ஜொலிப்பு, ஆகியவற்றுக்கே தமது திறமையைத் தத்தம் செய்தனர். பாட்டாளியின் குரலைக் கவனிக்க மறுத்தனர். முன்னவர்களின் செவியிலே, முரளியின் சத்தமே புகுந்தது. பின்னவருக்கோ, சதங்கை, கிண்கிணிச் சத்தமே புகுந்தது; பாட்டாளியின் பெருமூச்சுக்கு இடமில்லை!

வைடூரியம் செட்டியார்மீது கோபம் பிறந்தது. ஆனால் அந்தக் கோபம் அவர் என் எதிரே நின்று புன்னகை தவழும் முகத்தோடு நிற்கும்போது எப்படியோ பறந்துவிடும். கோபம் மட்டுமல்ல, எனக்கே சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது, கொள்கைகூட ஓடிவிடும். என் மனதுக்கு நேர்மாறான வாதம் புரிவார் அவர்; நான் என்னையுமறியாமல் தலை அசைப்பேன்.

"தம்பி! ஆட்களெல்லாம் ஒழுங்கா வேலை செய்கிறார்களா?" என்று கேட்பார் செட்டியார். ஒழுங்காகமட்டுமா உடல் உருகவேலை செய்கிறார்கள் என்பதைத்தானே வெட்ட வெளியிலே முளைத்து வரும் 'மாதுர் பூமி' காட்டுகிறது! இருந்தாலும், கேட்பார் அந்தக் கேள்வியை. நான் அதற்கென்ன சந்தேகம்! அவர்கள் அரும்பாடுபடுவதால்தான், இந்த அழகான விடுதிகள் தோன்றுகின்றன. ஓயாது உழைக்கிறார்கள்" என்றுதானே பதில் கூறவேண்டும்; சுண்ணாம்பும் கல்லும்மட்டுமல்ல, இந்தக் கட்டிடச் சாமான்கள், பாட்டாளியின் இரத்தமும் சதையும் கூடத்தான் ஐயா! என்று கூறவேண்டும். ஆனால் அவர் கேட்கும்போது, அந்த வாசகங்கள் வெளிவருவதில்லை. 'பரவாயில்லை' என்று சொல்வேன் நான். மனதறிந்த பொய்! ஆனால் கூசாமல் கூறினேன் அதனைப் பலதடவை. அவர்கள் உழைப்பதைக் கண்ணால்பார்த்து மனக் கஷ்டமுற்றிருந்த நானே, 'பரவாயில்லை' என்றுதான் சொன்னேன், ஏன்? செட்டியார் கேட்கிற கேள்வியின் பாவனையே அந்தப் பதிலை, எப்படியோ என் நாவிலே கொண்டுவந்துவிடும். "இப்போதெல்லாம் ஆட்கள் சரியாக வேலை செய்வதே கிடையாது" என்பார். இவருடைய தோட்டமும், மாடி வீடும், ஆலையும், அதை அடுத்தமனைகளும், 'வேலை சரியாகச் செய்யாததாலா' ஏற்பட்டன? என்ன செய்வது, அவர் அப்படித்தான் கேட்பார், 'ஆமாம்' என்பேன். ஏன் அப்படிச் சொன்னேன், எனக்கே புரியாது, அவருடைய கேள்வி அந்தப் பதிலைத்தான் கொண்டுவரும். சீறும் நாகம் சிறுகுழல் ஒலி கேட்டு, படம் எடுத்து ஆடுகிறதே, அதுபோல, அவர் கேட்பார் சில கேள்விகள், அவைகளுக்குப்பதில், என் கொள்கைக்கு நேர்மாறான உண்மைக்கு விரோதமாகவே எப்படியோ வரும். அவர் பாட்டாளிகளை உழைக்க வைத்தது மட்டுமல்ல, எப்படியோ என்னை, என் இஷ்டத்துக்கு மாறாகப் பொய்யும் பேசவைத்தார்.

"நீ இரண்டு யந்திரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டிருக்கிறாய்" என்று என் மனம் சொன்னது முற்றிலும் உண்மை. அவர்கள்—பாடுபடுபவர்கள் தங்கள் உழைப்பை அவருக்குத் தந்தனர். நானோ, என் உள்ளத்தையே அடகு வைத்துவிட்டேன்—தெரிந்து செய்தேன்—தவிர்க்க் முடியாத நிலையில் செய்தேன்—வழுக்கி விழுந்த வனிதையர், வாழ்வதற்காக விபசாரம் செய்வதாகக்கூறுகிறார்கள், அதற்காக அவர்களை ஏசுகிறார்கள், சமூகத்திலே அவர்களைக் கறை என்றும் கூறுகின்றனர். நான், உள்ளத்தையே விபசாரத்துக்கு விட்டுவிட்டேன். நான் என்ன சொல்லவேண்டுமென்று, அவர் நினைக்கிறாரோ, அதன்படி சொல்லும் ஒரு மனித இயந்திரமாக மாறினேன். ஆனால் என்னை 'மாதுர் பூமி' கட்டிட ஆபீஸ் மானேஜர் என்று மதிப்பாகவே ஊரார் அழைத்தனர்!

இந்த பயங்கர சூழ்நிலையிலிருந்து எப்படியாவது விலகிவிடவேண்டும், என்று தீர்மானித்தேன். ஏதாவது ஒரு சாக்குக் கிடைக்காதா என்று துடித்தேன். அவரோ, என்னை எப்போதும்போலவே அன்பாகவே நடத்திவந்தார். ஒரு முறையாவது, அவர் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாதா? இல்லையே. "நான் போகிறேன் வேலையில் இருக்க இஷ்டம் இல்லை?" என்று நான் எப்படிச் சொல்வது; சொன்னால் "ஏன் என்ன கஷ்டம்?" என்று கேட்டால் நான் என்ன பதில் கூற முடியும்.

"வேலை நேரம் அதிகமா?"

"சம்பளம் போதாதா?"

"யாராவது ஏதாவது குறை சொன்னார்களா?"

"வேறு ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா?"

"நான் ஏதாவது உன்னைக் கண்டித்தேனா?"

இவ்விதமான கேள்விகள்தானே கேட்பார். இவைகளுக்கு நான் என்ன பதில் கூறமுடியும்? இவை ஒன்றும் அல்லவே, என் மனக் கஷ்டத்துக்குக் காரணம். ஆகவே நான் எதைச் சொல்லி, "வேலையைவிட்டு விலகிக்கொள்கிறேன்” என்று கூறுவது. இந்த மனோ வேதனையிலே நான் சில நாட்கள் சிக்கித் தவித்தேன். கடைசியில் துணிந்து ஒருநாள் நான் அவரிடம், மிகப் பணிவாகவே "நான் வேலையைவிட்டு விலகிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினேன். நான் புயலை எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். அவர் புன்சிரிப்புடன், "ஆமாம் பாவம்! இவ்வளவு படித்துவிட்டு, இந்தப் பயல்களைக் கட்டி மேய்க்கிற வேலையைச் செய்வதென்றால் பிடிக்காதுதான். அடுத்த மாத முதல் பேங்கில் வேலைக்குப் போகலாம்" என்று திட்டமாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.

என் வேலை பிடிக்கவில்லை என்பதற்கு அவர் கண்டு பிடித்துக் கூறிய காரணம் என்னைத் தூக்கி வாரிப்போட்டது. ஆனால் எப்படி நான் உண்மையைக் கூற முடியும்! "ஐயா! தாங்கள் ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்டி செல்வவானாக வாழ்கிறீர்கள். அந்த முறை எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் உடந்தையாக இருக்க மனம் ஒப்பவில்லை" என்று சொல்லவேண்டும். எப்படி நான் அதனைச் சொல்வது? கல்லூரியைவிட்டு நின்றதிலிருந்து வேலைகிடைக்காமல் அலைந்தபோது, ஆஸ்த்மா இருமலால் என் தகப்பனார் தவித்தபோது, ஒரு வார்த்தை சொன்னதும் எனக்கு வேலை கொடுத்தவர் செட்டியார்; மாதம் அறுபது ரூபாய் தருகிறார்; அன்பாக நடத்துகிறார். அவரிடம் நான், "சுரண்டிப் பிழைக்கிறீர்கள்" என்று சொல்வது நியாயமாகுமா? அவர் மனம்நோகாதா! எனவே, மனதிலே மூண்டெழுந்த கோபம், சோகமாக மாறிற்று; கோபமே, பாதகமில்லை, சோகம், என்னைச் சித்திரவதை செய்தது.

ஒருநாள், என் தகப்பனார், பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சுப் புதியதோர் பயத்தை எனக்குத் தந்தது.

"சௌக்கியந்தானே, மகன், செட்டியாரிடம் வேலைக்குப் போகிறானல்லவா?”

"ஆமாம், அங்கே வேலை கிடைத்த பிறகுதான், நிம்மதி உண்டாயிற்று. புண்யவான் 60 ரூபாய் தருகிறார். சமயம் வரட்டும், வேறு நல்ல வேலையில் நானே அமர்த்துகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்."

"செய்வார்; அவருக்கென்ன நினைத்தமாத்திரத்திலே எத்தனையோ வேலைகளை உண்டாக்கமுடியும்."

"நம்ம மகன் குணம்தான் உங்களுக்குத் தெரியுமே. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற கொள்கை. குனிந்த தலை நிமிரமாட்டான். எஜமானரிடம் பயபக்தி விசுவாசத்துடன் நடந்துகொள்கிறான்."

சரி! அதெல்லாம் இருக்கட்டும். பிழைக்கவும் தெரிய வேண்டுமே. சம்பளம் 60 என்கிறீர். மேல்வரும்படி என்ன கிடைக்கிறது?”

"மேல் வரும்படியா?”

"சும்மா சொல்லுங்கள். பெரிய இலட்சாதிகாரியிடம் வேலைக்கு இருக்கிறான், நொள்ளை 60 ரூபாய் சம்பாதிப்பதா பிரமாதம், மேல் வரும்படிதானே, அந்த மாதிரி இடங்களிலே முக்கியம்."

"உங்களிடம் சொல்வதிலே சங்கோஜம் என்ன! எதோ அந்தவகையிலே மாதம் ஒரு நூறு ரூபாய்க்குக் குறையாது"

"பொய் சொன்னாலும் பொருத்தச் சொல்லுங்கள். போன மாதத்திலே, செங்கல் சூளைக்காரன்மட்டும் மூன்று சவரனிலே, ஒரு வளையல் செய்தான், உங்கவீட்டுக்கென்று, மொத்தத்திலே இதுவரை ஒரு நாலாயிரமாவது....."

"சிவ சிவ! எல்லாம் போய் ஆயிரத்து ஐந்நூறு மிஞ்சி இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான், அடுத்த மாதத்திலே கலியாணம் செய்துவிடலாம் என்று உத்தேசிக்கிறேன்."

"செய்துவிடவேண்டியதுதான். கலியாணச்செலவுக்கு மேலாகவே, 'மொய்'ப் பணமும் இனாமும் சேர்ந்துவிடும் பயப்படாதீர்."

"கடவுள் இருக்கிறார்; அவர் விட்ட வழிப்படி நடக்கும், ஏதோ, பையன் சாது; கெட்ட பழக்கம், கெட்ட சாவகாசம் இல்லாததாலே, குடும்பம் கொஞ்சம் தலை எடுக்க வழி பிறக்கிறது."

"இராத்திரியிலே நெடுநேரம் விழித்துக்கொண்டிருக்கிறானே என்ன விஷயம்?"

"அவனுக்குப் படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். இரவெல்லாம் படிக்கிறான். வேலை செய்கிற இடத்திலே, ஒரு ஆளைக்கூடக் கோபித்துக்கொள்ளமாட்டான். அவசரப்பட்டு ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை, மேல் வரும்படி கூட, அவன் வாய் திறந்து கேட்டதில்லை.”

"கேட்பானேன்? மாமூல்தானே அது. வழக்கப்படி வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவார்களே."

"அப்படித்தான்! ஆனால் மேல் வரும்படி வேண்டுமென்று அவன் யாரிடமும் ஜாடைமாடையாகக்கூடச் சொல்வதில்லை என்று அவன்கூடவேலை செய்பவர்களே ஆச்சரியப்படுகிறார்கள்.”

யாராரோ ஆச்சரியப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும், இந்தப் பேச்சைக் கேட்டு நான் கொண்ட ஆச்சரியமும் அச்சமும் கொஞ்சமல்ல. மேல் வரும்படி! அது என்ன வார்த்தை? இலஞ்சம்! ஆம்! பாட்டாளியின் உழைப்பை வைடூரியம் செட்டியார் அனுபவிக்கிறார். இடையே இருக்கும் எனக்கும் அதிலே பங்கு கிடைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமல்!! நான் வஞ்சகத்தால் வாழும் வைடூரியம் செட்டியாரின் போக்கைக் கண்டிக்க எந்த விதத்திலே யோக்யதை உடையவன். எனக்குத் தெரியாமல் என் தகப்பனார் கட்டிட சம்பந்தமான சாமான்களைச் "சப்ளை" செய்யும் வியாபாரிகளிடம், "இலஞ்சம்" வாங்கி வருகிறார், என்ற உண்மை தெரிந்ததும் நான் நடுங்கிப்போனேன். "சப்ளை" செய்பவர்கள் என்னைக் கண்டு சிரிப்பதும், மரியாதை செய்வதும், அர்த்தமற்றது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன், உண்மை துலங்கிற்று. அப்பா பேசினதைக் கேட்டபிறகு. என்ன கொடுமை இது! எவ்வளவு கேவலம்! என் இலட்சியம், என்ன கதியாகிவிட்டது. "நேற்று அப்பாவைப் பார்த்தேன்" என்று இரும்பு வியாபாரி, மரக்கடைக்காசர், சுண்ணாம்பு விற்பவர், ஆகியோர்கள் சொல்லும்போதெல்லாம், நான் இந்த 'மேல் வரும்படி' விவகாரம் நடக்கிறது, அதனைத்தான் அவர்கள் ஜாடையாகக் கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமற் போனேன். நான் இலட்சியவாதியாக இருந்தேன், அப்பா காரியவாதியாக இருந்தார்!

எனக்குக் கலியாணமாம்! அதுவும், 'மேல் வரும்படி' பணத்தைக் கொண்டாம்! கடவுள் விட்ட வழி என்று இதற்குப் பெயராம்! வேதனை அடைந்திருந்த எனக்கு வெட்கமும் உண்டாயிற்று இந்த உண்மை தெரிந்ததும். வைடூரியம் செட்டியாரைக் கண்டிக்கும் நான், 'மேல் வரும்படி' பெற்றுக் கவியாணம் செய்துகொள்கிறேன் என்றால் சே! என்ன பிழைப்பு இது! பாடுபடுகிறான் பாட்டாளி, பசியோடு போராடிக்கொண்டு. அவன் விஷயத்திலே பரிதாபப்பட்டு, அவனைச் சுரண்டும் காரியத்திலே உடந்தையாக இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் நான் சுரண்டல் இயந்திரத்திலே சிதறிய சிறு தூண்டுகளைப் பெற்று வாழ்வதா? ஈனப் பிழைப்பல்லவா அது? வேண்டாம் அந்தப் பணம்! வேண்டாம் அந்த வேலை!! என்று தீர்மானித்தேன். அன்றிரவு கள்ளச் சாவியிட்டு, அப்பா சேர்த்து வைத்திருந்த மூவாயிரத்தை எடுத்தேன். என்ன: செய்வது? யாராரிடம் வாங்கினாரோ அவரவர்களிடம் கொடுத்துவிடுவது என்று நினைத்தேன். அப்பா, தூக்கத்திலே உளறிக்கொண்டிருந்தார், "பையன் சாது! கெட்ட பழக்கம் கிடையாது. ஏதோ அவனாலேதான் குடும்பம் தலை தூக்குகிறது!" என்று பக்கத்து வீட்டுக்காரிடம் பேசிக்கொண்டிருந்தாரே, அதே நினைப்பு. நான் நள்ளிரவில் கள்ளச்சாவியிட்டுப் பணத்தைக் களவாடுகிறேன்; அவர் தூக்கத்திலே, என்னைச் 'சாது' என்று அழைக்கிறார். என் தலைசுழன்றது! நான் என்ன செய்வேன்? என் இலட்சியம், அந்தப் பணத்தைப் பாதகச் சின்னம் என்று கூறிற்று; தகப்பனாரின் குளறல், அவர் என்னிடம் வைத்திருந்த நம்பிக்கை, குடும்பம் தலை தூக்கவேண்டுமென்பதிலே அவருக்கு இருந்த பிரேமை, இவைகளைக் காட்டிற்று. என்னசெய்வது? நான் மகனாக இருக்கவேண்டுமானால், பணத்தை எடுக்கக்கூடாது; நான் இலட்சியவாதியாக இருக்கவேண்டுமானால் அந்தப் பணத்தை உபயோகப்படுத்தக்கூடாது. இரண்டிலொன்று அவர் கண் விழிப்பதற்குள், தீர்மானித்தாகவேண்டும். ஒரு பக்கத்திலோ பாட்டாளிகளின் துயரமிக்க தோற்றம், அவர்களால் கொழுக்கும் முதலாளித்வம்; அது வீசும் சிறு துண்டுகளைச் சேகரிக்கும் சிறு உருவம், மறுபக்கததிலே பார்த்தாலோ, கவலை தோய்ந்த என் தகப்பனாரின் முகத்திலே களிப்பு பிறக்கும் குறிகள்! அவர் அண்டை அயலாரிடம் பெருமையாக என்னைப்பற்றிப் பேசுவன; இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையே, இலட்சியங்களை மனதிலே கொண்டுள்ள நான். திகைப்புடன்! என் நிலையை என்னென்பேன்.

அப்பா திரும்பினார், நான் இருந்த பக்கமாக. விளக்கை அணைத்தேன். இருமினார், பெட்டியை ஓசைப்படாமல் மூடிவிட்டு, மூலையில் பதுங்கினேன்.

"யார் அங்கே?” அப்பா கேட்கிறார்; முறுக்குடன் அல்ல, பயத்துடன்.

"விளக்கு நின்றுவிட்டதோ? காற்றா" அப்பா அறியார் நான் விளக்கை நிறுத்தினேன் என்பதை. தலையணைக்கு அடியிலே தடவுகிறார். தீர்ந்தது, இரண்டோர் வினாடிகளில் தீப்பெட்டி கிடைத்துவிடும். பிறகு......என் கதி என்ன....."நீயா? ஏன்? இது என்ன காரியம்" என்று அவர் கேட்பார். நான்.....என்ன சொல்வது?.....என்ன செய்வது?

"கொமாரசாமி! டே! கொமாரசாமி"—அப்பா என்னைக் கூப்பிடுகிறார். தீப்பெட்டியில் குச்சி இல்லை. இருட்டு, பாபம்! விளக்கு இல்லை என்ற பயம் அவருக்கு. பணம் இருக்கிறதல்லவா. அதனால், உதவிக்கு என்னைக் கூப்பிடுகிறார்; நாங்கள் இரண்டுபேர்தானே வீட்டிலே! என்னைத் கவிர வேறு யாரைக் கூப்பிடுவார். ஆனால், நான் எப்படி "இதோ அப்பா!" என்று கூறமுடியும்.

“டே! அப்பா! கொமாரசாமி!" கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே, அறையின் நாலா பக்கங்களிலும், கூர்ந்து பார்த்தார். பெட்டிக்கு அருகே நான்.

"யாரங்கே!"—அலறிக் கூச்சலிட்டார்!

மேல் வேட்டியை வீசினேன் அவர் பக்கமாக, முகத்தருகே; பாய்ந்தேன்; அவர் வாயை மூடினேன், வாயில் துணிவைத்து. அடைத்தேன்; கை கால்களைக் கட்டிவிட்டேன், அவர் வயதானவர்; போரிட்டதாக எண்ணிக்கொண்டார், என் பலத்துக்கு ஈடு சொல்லமுடியுமா அவரால்? ஐயயோ! திருடன்! இரண்டு வார்த்தைகள்; குளறத்தான் முடிந்தது அவரால்.

தகப்பனார் உருண்டு கிடக்கிறார் கைகால் கட்டப்பட்டு; நான் பக்கத்திலேதான் இருக்கிறேன், பண மூட்டையுடன்! மகன் கள்ளன் வேலையில்; தகப்பனார் பணத்தைப் பறிகொடுத்த நிலையில்! பணத்தைப் பார்த்தேன், நெளியும் அவரையும் பார்த்தேன். என்னையுமறியாமல் கண்களிலே நீர் புரண்டது, என்ன செய்வது? பணத்தை எடுத்துக் கொண்டு, அறையைவிட்டு கூடத்துக்கு வந்தேன். கால்கள் பின்னிக்கொண்டன, மண்டைக் குடைச்சல், மார்வலி! தட தடவென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மறுபடியும் பதுங்கினேன். என் வீட்டிலேயே நான் பதுங்கினேன்!

"உடை! பிள! ஓட்டின்மீது ஏறு!" வெளியே சத்தம் பலமாகிறது.

"கொமராசாமி! டே! கொமாரசாமி!" என்னைக் கூப்பிடுகிறார்கள்.

"கிழவனைத் தனியாக விட்டுவிட்டு இவன் எங்கேகிளம்பிவிட்டான்?" பக்கத்து வீட்டுக்காரர் குரல்.

ஓட்டின்மீது ஏறுகிறார்கள். உள்ளே பதுங்கினேன்! விளக்குகள் வெளிச்சத்தைப் பரப்புகின்றன! சில நிமிஷங்களிலே பலர் உள்ளே நுழைவார்கள். நான் பண மூட்டையுடன் பதுங்கிக்கொண்டிருக்கிறேன்; அவர் உள்ளே கட்டி உருட்டப்பட்டிருக்கிறார்.

தைரியமாகச் சென்று "ஏன்? என்ன? தூங்கிவிட்டேன், ஏன் சத்தம்?" என்று கேட்கலாமே என்று தோன்றிற்று. கேட்கலாம். "என்ன தூக்கமடா இது, இவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டினோம்" என்பார்கள். 'குடியோ' என்று கேட்கக்கூடும். அத்துடன் நிறுத்தமாட்டார்களே. "எங்கே உன் அப்பா?" என்று கேட்பார்கள். "உள்ளே தூங்குகிறார்" என்று கூறலாம். "என்னடா தூக்கம், ஏகாம்பர மொதிலி" என்று கூப்பிடுவார்கள். அவர் எப்படி எழுந்து வருவார் ! கண்டு பிடித்துவிட்டால் என்னை என்னவென்று எண்ணுவார்கள்.

'ஐயோ' என்று ஒரே அலறல், என்னையும் மீறிப் புறப்பட்டது அந்தக் குரல்.

"என்னடா தம்பி!" என்று கேட்டனர் பலர், உள்ளே தைரியமாகக் குதித்தவர்கள் அவர்கள். தெருக்கதவைத் திறந்துவிட்டனர். அதற்குமேல் என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது.

கண்ணை மெள்ளத் திறந்தேன். மங்கலாகவே எங்கும் காணப்பட்டது, மனதிலே தெளிவு இல்லை. மூடினேன், திறந்தேன்; மூடினேன், திறந்தேன்! தலையை இப்பக்கமும் அப்பக்கமும் திருப்பினேன்! என் தகப்பனார், எனக்காகக் கஞ்சி ஆற்றிக்கொண்டிருக்கக் கண்டேன். அவரைப் பார்க்க தைரியமில்லை எனக்கு. மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன்.

"ஏகாம்பர மொதலி! எப்படி இருக்கிறான் பையன்?" பக்கத்து வீட்டுக்காரர் கேட்கிறார்.

"ஜூரம் குறையலே. இப்பத்தான் கண்ணைத் திறந்தான், மறுபடியும் மூடிக்கொண்டான்" என்றார் என் அப்பா.

"இரண்டு நாள் ஆகுதே" என்றார் அவர். "ஆமாம் அது பொல்லாத பேயாமே, அது அடித்தா, ஆள் பிழைப்பதே கஷ்டமாம், என்னமோ நான் செய்த பூஜா பலன், பையன் உயிருக்கு ஆபத்து இல்லாமெ போச்சு" என் தகப்பனாரின் அன்பு கனிந்த பேச்சு.

"என்ன ஆச்சரியமப்பா அது. நடு இரவிலே எழுந்து வந்து, உன் கைகாலைக் கட்டி, வாயிலே துணி அடைச்சி..."

பக்கத்து வீட்டுக்காரர் அன்றிரவு நடந்ததைக் கவனப்படுத்தினார்.

"அதுதான் பேயின் சேஷ்டை; அதனாலேதான், அவன் என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, தானும் காகூவென்று கூவி, ஊரையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டா என்றார் என் தகப்பனார்.

"நல்ல காலந்தான் உனக்கு. பேய் சேஷ்டையிலே, உன்னைக் கொன்று விட்டிருந்தா என்ன செய்வது?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர், என் அப்பா சிரித்தார். "நீங்களெல்லாம் ரொம்பப் பயந்துவிட்டீர்கள் இல்லை” என்று கேட்டார். "அடிவயித்தையே கலக்கிவிட்டது போ, முதலிலே உன் குரல் கேட்டது, 'ஐயயோ திருடன்னு'. வயித்துவலி எனக்கு. அப்பத்தான் தோட்டத்துக்குப் போய்விட்டுக் காலைக் கழுவிக்கொண்டு வந்தேன். திருடன்னு கூவவே, நான் ஓடிப் போயி, எதிர் வீட்டுக்காரரை எழுப்பினேன், ஏகாம்பரம்! ஏகாம்பரம்னு கூப்பிட்டோம், குரல் இல்லை. குமாரசாமியைக் கூப்பிட்டோம். பதில் இல்லை, உடனே எங்களுக்குப் பயமாயிடுத்து. விளக்கு எடுத்துகிட்டு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினா, திறக்கலே. ஒட்டுப் பக்கமா ஏறி உள்ளே வந்தா ஒரே இருட்டு.

"என்னடா இதுன்னு யோசிக்கிறோம், 'ஐயோ'ன்னு குமாரசாமி கூச்சலிட்டான். என்னடான்னு விளக்கைத் தூக்கிவிட்டுப் போய்ப் பார்த்தா, வாயிலே நொப்பும் நுரையும் தள்ளுது. மரத்தைச் சாய்த்ததுபோல உன் மகன் கீழே கிடக்கிறான், தலைமாட்டிலே ஒரு மூட்டை கிடக்குது! சரின்னு அவனைத் தூக்கிக்கிட்டுவந்து கூடத்திலே போட்டுவிட்டு முகத்திலே கொஞ்சம் தண்ணியைத் தெளிக்கச் சொல்லிவிட்டு, நான் உன்னைத் தேடிப் பார்த்தேன்! நீ உருண்டுகிடக்கிறேடகையும் காலும் கட்டிப் போட்டுவிட்டு இருக்கு. வாயிலே துணி அடைச்சிருக்கு. செச்சே, இந்தமாதிரி பேய் பிடிச்சவங்களை நான் எங்கேயும் பார்த்ததில்லையப்பா, நல்ல மந்திரக்காரனாப் பார்த்து, சீக்கிரமா குணப்படுத்து"—பக்கத்து வீட்டுக்காரர் போய்விட்டார்.

தள்ளாடிக்கொண்டு வந்தார் என் அப்பா, "கொமாரசாமி! கண்ணைத் திறடா, கொஞ்சம் கஞ்சிகுடிடா" என்றார்.

என்னைப் பேய் பிடித்துக்கொண்டதாம்! அதன் சேஷ்டைதானாம் அன்று இரவு நடந்தவை!!

கண்களைத் திறக்க மனமில்லை. அப்பாவோ விடவில்லை கஞ்சியை வாங்கிக் குடித்துக்கொண்டே யோசித்தேன், ஊரார் எண்ணியதுபோலவே என் அப்பாவும், என் நடவடிக்கைக்குக் காரணம் பேய் பிடித்துக்கொண்டதுதான் என்று எண்ணுகிறாரா, வேறு ஏதாவது நினைக்கிறாரா என்று யோசித்தேன்.

என் அப்பா, என் நெற்றியில் வழிந்த வியர்வையைத் தன் மேல் வேட்டியால் துடைத்துக்கொண்டே, "பைத்யக்காரப் பிள்ளை! ஏண்டாப்பா அந்த மாதிரி காரியம் செய்யவேணும். பணம் உன்னுடையது, கேட்டா நான் கொடுத்து விடுகிறேன். அதுக்காகப் பாதி ராத்திரியிலே, என்னையும் பாடுபடுத்தி, ஊராரையும் உபத்திரவித்து, உனக்கும் தொந்தரவு தேடிக்கொண்டாயே" என்றார். நான் மிரள மிரள விழித்தேன். ஊரார் என்னைப் பேய் பிடித்துக்கொண்டதாக எண்ணிக்கொண்டனர். என் அப்பா என்னைத் 'திருடன்' என்றே தீர்மானித்துவிட்டார். நான் யார் என்பது எனக்கே விளங்கவில்லை. கள்ளனா! நள்ளிரவில் பெட்டியைக் கள்ளச் சாவியிட்டுத் திறந்து, விழித்துக்கொண்ட தகப்பனாரைக் கட்டி உருட்டிய என்னைக் கள்ளன் என்று கூற, யாருக்கும் உரிமை உண்டு!

பாதி ராத்திரியிலே அப்பனைக் கட்டிப் போட்டுவிட்டு, அரை நிர்வாணமாக நின்றுகொண்டு ஆ—ஊ என்று அலறி, அடியற்ற பனைபோல் கீழே மயங்கி வீழ்ந்தான், ஆகவே அது கட்டாயம் பேயின் சேஷ்டைதான்; என்று ஊரார் கூறுகிறார்கள். இரண்டு தீர்ப்புகளும் தவறு! ஆனால் யார் நம்புவார்கள்? எதைக் கூறி மெய்ப்பிப்பது? எனக்கே விளங்கவுமில்லையே! அந்த மூவாயிரம், 'மேல் வரும்படி'. அதாவது நியாயமாக எனக்குச் சேரவேண்டிய பொருள் அல்ல, பிறருடையது, திருட்டுச் சொத்துப் போன்றதுதான்! அதை நான் பெற விரும்பவில்லை, என்னிடம் அது வந்து சேர்ந்தது, என்னை இவ்வளவு கோலத்துக்கு ஆளாக்கிவிட்டது. ஆக பேயாட்டம்தான் அது. ஆக ஒரு விதத்திலே பார்த்தால், கள்ளன், பேய் பிடித்தவன் என்ற இரண்டும் எனக்குப் பொருத்தந்தான். ஆனால், முழு உண்மையோ அதுவல்ல. நான் இம்சைக்கு ஆளான இலட்சியவாதி! கூண்டுக்குள்ளே இருந்துகொண்டு வெளியே தப்பிச் செல்ல முயன்று, இரும்புக் கம்பிகளின்மீது சிறகுகளை அடித்து அடித்துக் கம்பி அசையாத நிலையில், சிறகுகள் ஒடிந்த சிறு பறவை! என்னைப்போல் எவ்வளவுபேர் உளரோ!



"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கைப்_புயல்/கள்ளன்&oldid=1654680" இலிருந்து மீள்விக்கப்பட்டது