உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கைப் புயல்/நாடோடி

விக்கிமூலம் இலிருந்து

நாடோடி


"நாடோடிப் பயல்—நாடோடி! பிழைக்கிற கழுதே இங்கேயே பிழைக்கக்கூடாதா? ரொம்பக் காரியமாக, சிதம்பரம் ஓடினானா.....போயி....." என்று எம்பெருமான் கேட்டார், தோட்டக்காரன் தன் மகன் விஷயமாக முறையிட்டுக்கொண்டபோது.

எஜமானர் எம்பெருமான் பிள்ளை—மான் அண்டு கோ சொந்தக்காரர். தோட்டக்காரன், எம்பெருமான் பிள்ளையின் தகப்பனாருக்குப் பால்ய சினேகிதம். கால வித்தியாசத்தாலே, அவன் தோட்டக்காரனாக நேரிட்டது. அதுவேறு கதை. தோட்டக்காரனாக இருந்தாலும் தன் தகப்பனாருக்குப் பால்ய சினேகிதம் என்பதாலே எம்பெருமான் பிள்ளை தோட்டக்காரனிடம் கொஞ்சம் அன்போடும் அக்கரையோடும் பேசுவது வாடிக்கை. அன்று தோட்டக்காரன் தன் மகனுடைய, 'கெட்ட நடவடிக்கை'யைப்பற்றி முறையிட்டுக்கொண்டு வரும்போதுதான், எம்பெருமான் பிள்ளை, நாடோடி—நாய்—கழுதை என்று பேசித் தோட்டக்காரனிடம் தனக்குள்ள அக்கரையைக் காட்டிக்கொண்டிருந்தார். "என்ன பண்றதுங்க, நான் எவ்வளவோ சொன்னேன்"

"ஆமாம்! முந்தி அவன் நாகப்பட்டணம் போறபோதே கூட வேண்டாம்னுதான் சொன்னே"

"ஆமாங்க, ஏண்டாப்பா நாகப்பட்டணம் போக வேணும்னு கேட்டேன். போய்த்தான் ஆகணும், அங்கே வேலை கிடைக்கும்னு சொல்லிவிட்டுப் போனான்..."

"போன, பத்தாம் நாள், பாண்டிச்சேரிக்குப் போறேன்னு கடிதம் போட்டான்."

"நானும்கூடக் கொஞ்சம் சந்தோஷப்பட்டனுங்களே, தொலையட்டும் பாண்டியிலேதானே, என் மச்சான் இருக்கறான், அவனோடு இருந்து தொலையட்டும்னு நினைச்சேன். அங்கே இரண்டு மாசம் சரியா இல்லை! நான் சிலோன் போகிறேன்டான்னா"

"போறவனோடு போய்க்கொண்டிருக்கிற போக்கு. உழைச்சி, ஊருக்கு அடங்கி இருக்கவேணும்னா, நாகப்பட்டினத்திலேயே இருக்கமாட்டானா, சிலோன் ஏன் போகணும்? அதுதான் சொல்றனே, இதுகளுக்குக் காலிலே சக்கரம் இருக்கு, சுத்திகிட்டே இருக்கும்."

"நான் தலைப்பாடா அடிச்சிகிட்டேன். டே! மருதாச்சலம் வேண்டாம்டா. நாம்ப ஏதோ கொஞ்சம் கௌரவமா வாழ்ந்தவங்க. கால வித்யாசம், கொஞ்சம் நொந்துபோயிட்டோம்; ஊரோட இருந்து எதுவோ ஒரு பிழைப்புக்கான வேலையைக் கவனிப்போம், நீ இங்கேயே இருடான்னுசொன்னேன்; நீங்க சொல்ற மாதிரியா, அவன் காலிலே சக்கரம் இருக்கோ என்னமோ, நாகப்பட்டணம்டான்னா, புதுச்சேரின்னா, கடைசியிலே சிலோனுக்குப் போனான்.

போனான் முட்டாப் பய. இவனை என்னான்னு, எண்ணியிருப்பாங்க அங்கே. நாடோடி போலிருக்குன்னுதானே சொல்லி இருப்பாங்க?"

"வேறே என்ன சொல்வாங்க? சிலோனிலே இருந்து மறுபடி தூத்துக்குடி வந்தானாம். இப்ப சிதம்பரத்திலே இருந்து கடுதாசி போடறான், சிங்கப்பூர் போகிறதாக இருக்கிறேன்னு. நான் என்னத்தைச் செய்யறதுங்க."

"என்ன செய்ய முடியும்? அவன் சுபாவம் அப்படியாகிவிட்டது. நாடோடியாகிவிட்டான். போயி கெட்டு அலைஞ்சு, கழுதே, தானா வந்து சேரும்."

எஜமானர் நெடுநேரம் பேசிவிட்டார். மேலும் அன்று ஒரு கமிட்டிக்கூட்டம், அதற்குப் போகவேண்டிய அவசரம் இருந்தது. தோட்டக்காரனுக்குத் திருப்திதான், என்னமோ எஜமானர் இவ்வளவு அக்கரையுடன், தன்னிடம் பேசினாரே என்பதுபற்றி.

எஜமானர் சொன்னதிலே என்ன தப்பிதம் இருக்கு? பயல், நாடோடியாகத்தான் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே, தோட்டம் போய்ச் சேர்ந்தார், மருதாச்சலத்தின் தந்தை, மார்த்தாண்டம் பிள்ளை.

மான் அண்டு கம்பெனி, எம்பெருமானுடையது; ஆனால் இது தவிர அவருக்கு வேறு பல வியாபாரக் கம்பெனிகளில் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட ஒரு கம்பெனியின் கமிட்டிக்கூட்டம்தான் நடந்தது—அதற்காகத்தான் அவசரமாகத் தன் தோட்டக்காரனிடம் பேச்சை முடித்துக் கொண்டு, எம்பெருமான் பிள்ளை சென்றார்.

கமிட்டியிலே கொஞ்சம் சூடான விவாகம். கமிட்டியாரால் நியமிக்கப்பட்டிருந்த கம்பெனி மானேஜர்மீது புகார்கள்; அவர் சரியாக வேலையைக் கவனிக்கவில்லை என்று. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது எம்பெருமான் பிள்ளை. அன்று குறுக்குக் கேள்விகளையும் அவரேதான் பூட்டினார்.

"ஆமாம் சார்! ஆறாம் தேதிதானே ஆற்காடு போனான்?"

"ஆமாம்! ஆற்காட்டிலேயே சரக்குக்கிடைக்குமென்று சொன்னார்கள், போனேன். சரியா பஸ் சர்விஸ்கூட இல்லை பாதிதூரம் ஜட்காவில்கூடப் போகவேண்டி நேரிட்டது"

" அது சரி! வேலையை அக்கரையாகப் பார்க்காவிட்டால் எப்படி ஆகுமய்யா? ஜட்காவிலே போனது ஒரு பெரிய பிரமாதமாக இருக்கு உமக்கு. இப்படி, உடல் குலுங்கக் கூடாது என்று எண்ணுபவர்கள், வீட்டோடு இருக்கவேண்டும்; வேலை பார்க்கிறேன் என்று வருவானேன்? கம்பெனிக்கு நஷ்டம் ஏதற்கு? உம்முடைய டயரியைப் பார்த்தாலே தெரிகிறதே, நீர் வேலை பார்த்த இலட்சணம். ஆற்காட்டுக்கு ஆறாம் தேதி போயிருக்கிறீர்; மறுதினமே திரும்பி ஊருக்கு வந்துவிட்டிருக்கிறீர்?"

"ஆமாம்! வராமல் என்ன செய்வது? ஆற்காட்டிலே சரக்குக்கிடைக்கவில்லை"

"உடனே மாப்பிள்ளைமாதிரி ஊருக்கு வந்துவிட்டீர்—ஏன், ஆற்காட்டிலே இல்லை என்றால், வேலூர் போய்ப்பார்க்கிறது!"

"ஆற்காடு போவதற்குப் பட்ட அலைச்சல் கொஞ்சமா? அலைச்சலோடு அலைச்சலா வேலூருக்கும் போகதணும்னா."

"உம்மாலே முடியலேன்னா சொல்லிவிடவேணும். எதுக்காக, இப்படிக் கல்லுப் பிள்ளையார்போல, ஊரோடு உட்கார்ந்துகொண்டு இருக்கிறவர், மானேஜர் வேலைக்கு வரணும்? நம்ம கம்பெனி வியாபாரத்துக்குச் சுத்தி அலைஞ்சாத்தானே நடக்கும். கொட்டி இருக்கிறமே பணத்தை. உமக்கு ஊர் போய் வருவது பெரிய சிரமமா இருக்கு."

"ஊர் சுற்றி அலையாமலா இருக்கறேன். ஆற்காடு போய்வந்த பிறகு அடுத்த வாரமே, சோளிங்கபுரம் போயிருந்தேன்."

"சோளிங்கபுரம் போய்வந்ததை என்னய்யா, என்னமோ சிலோன் சிங்கப்பூர் போய்வந்ததுபோலப் பேசிக்காட்டறே. பிரமாதமான பிரயாணம் செய்துட்டே போய்யா. ஆறாம் தேதி ஆற்காடு போய்வந்த ஆசாமி பதினாலாம் தேதி வரைக்கும் ஊரைவிட்டு அசையவே இல்லை. ஒருநாள் சோளிங்கபுரம் போய்வந்தே, பிறகு மறுபடியும் ஏழு நாள், இங்கேயே இருந்திருக்கிறே, பிறகு ஒரு நாலு நாள், ஏதெதுவோ ஊர் போய் வந்திருக்கிறே...."

"அந்த நாலு நாள், நான் அலைஞ்சு திரிஞ்சது இருக்குங்களே, நாய் படாத பாடுபட்டிருக்கிறேன். செல்லூர் எங்கே இருக்கு, அங்கே போயி, மறுநாளே புறப்பட்டு சித்தூர் போய், வருகிற வழியிலே வேலூரைப் பார்த்துகிட்டு மறுபடியும் ஆற்காட்டுக்குப் போயி, காஞ்சிபுரத்திலே ஒரு மணி நோம் இருந்து, அந்த வேலையைக் கவனிச்சிக்கிட்டு, மறுபடியும் ஊருக்கு வந்தேன். நாடோடிமாதிரியாகச் சுத்தி இருக்கறேன்"

"ஓஹோ! நாலு ஊரு போயி வந்தது உமக்கு நாடோடிப் பிழைப்பாகத் தோணுதா? நாடோடியாகச் சுத்தினாதானேய்யா, வியாபாரம் நடக்கும். மாசம் முள்ளங்கி பத்தை மாதிரி, தொண்ணுறு ரூபா வாங்கறயே—வெளியூர் போகாவிட்டா வியாபாரம் எப்படி இலாபம் தரும்—யார் அப்பன் வீட்டிலே இருந்து உமக்குச் சம்பளம் கொடுக்கறது? நாடோடியாமே, நாடோடி. ஆமாய்யா, ஆமாம்—நாங்களெல்லாம் வியாபார சம்பந்தமா வெளியூர் போகாமத்தானே இருக்கிறோம்! நாடோடியாம்! கட்டிப்போட்ட மாடுமாதிரி, பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரியா, இடிச்சு வைச்ச புளிமாதிரியா உள்ளூரிலேயே இருந்துகொள்ளேன், யார் உன்னை வேண்டாம்னு சொல்றவங்க. நம்ம கம்பெணிக்கு மானேஜராக இருக்கவேணும்னா, நாலு ஊரு அலைஞ்சு திரியத்தான் வேணும் — தூத்துக்குடி தொலைவாச்சே, பெங்களூரிலே குளிராச்சே, நெல்லூரிலே வெள்ளமாச்சேன்னு பேசினா, கம்பெனி என்ன ஆவது? அலையத்தான் வேணும், திரியத்தான் வேணும், இன்றைக்கு ஒரு ஊரு, நாளைக்கு ஒரு ஊருன்னு போய்த்தான் வரவேணும். இதோ பாரய்யா! மானேஜர்! நான் திட்டமா, கண்டிப்பாச்சொல்லிவிடுகிறேன், கேட்டுக்கோ. என்மேலே குறை சொல்லாதே. நம்ம கம்பெனிக்கு அலைஞ்சு திரிகிற ஆசாமிதான் வேணும். ஊரோடு இருக்கணும், வெளியூர் அடிக்கடி போகமுடியாதுன்னு நினைச்சா, கணக்கைத் தீர்த்துக்கோ. நாலு ஊரு போய் வந்திருக்கிறே, ஏனய்யா, இன்னும் சில இடத்தைப் பார்த்திருக்கக்கூடாதா என்று கேட்டதற்கு, உன் வாய்க்கொழுப்பு, நாடோடியா, நானா அலையறதுன்னு கேட்டிருக்கிறே. இதோ பாரய்யா, வெளியூர் போகவர இருக்கிறதுதான் வியாபாரி இலட்சணம்னு நான் சொல்கிறேன். உள்ளூரோடே இருந்து கொண்டிருப்பவனை, குண்டு சட்டியிலே குதிரை ஒட்டுகிறவன்னு சொல்கிறேன், நீ என்ன சொல்லமுடியும் அதற்கு? நாடோடியாம்—நாலு ஊரு போக வர இருந்தாத்தானே கம்பெனி நடக்கும். நீ நாடோடியா இருக்கவேணாம்னா, மகராஜனாக, நீ உண்டு, உன் வீடு உண்டு, இந்த ஊர் உண்டுன்னு இருந்துகொள்வதிலே எனக்கு ஆட்சேபனை இல்லை. மத்தவங்களுக்கும் ஆட்சேபனை இருக்காது. இங்கே இருக்கிற நாங்களெல்லாம் நாடோடிகதான்; இன்னிக்கி ஒரு ஊரு, நாளைக்கு ஒரு ஊருன்னுபோய் அவர்கள் வியாபாரத்தைக் கவனிக்கிறவர்கள்தான். உனக்கு வேணாம் அந்த நாடோடிப் பிழைப்பு — நீ பட்டத்து ராஜா, அரண்மனையைவிட்டு வெளியே வரவேணாம், போ."

கமிட்டி, எம்பெருமான் பிள்ளையின் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிவிட்டது. மானேஜருக்கு வேலை போயிற்று. அடுத்த வாரம்—ஜோலார்பேட்டை ஜங்ஷனில் மலபார் மெயில் வந்து நின்றது. மலபார் மெயிலிலிருந்து எம்பெருமான் பிள்ளை இறங்கிப் பிளாட்பாரத்தில் உலாவிக்கொண்டிருந்தார். பெங்களூர் வண்டியிலிருந்து, எம்பெருமானின் நண்பர் கம்பெனி டைரக்டர்களில் ஒருவர் சம்பந்தம் பிள்ளை, அவர் இறங்கி வந்தார்- "அட்டே! பிள்ளையவாளா? மைசூரிலிருந்தா?"

மைசூரிலே இருந்து நேற்றே வந்துவிட்டேன்—பெங்களூரில் கொஞ்சம் வேலை இருந்தது, பார்த்துக்கொண்டு புறப்பட்டேன், நீங்க, கோயமுத்தூரா?"

கோயமுத்தூரிலே காலையிலே கொஞ்சம் வேலையைப் பார்க்கணும்—மத்யானமா பாலக்காடு போகலாம்னு இருக்கிறேன்."

"நானும் நேரா மெட்ராஸ் போகிறேன், அங்கு போனபிறகு மார்க்கட் நிலவரத்தைப் பார்த்துவிட்டு, மங்களூர் போகணும்....."

"மசூலிப்பட்டணம் போகவேணும்னு சொன்னீரே?"

"ஆமாம், அங்கேயுந்தான் போய்வரணும். வேலை சரியாக இருக்கு, ரயிலில் இடம் சௌகரியமாக் கிடைச்சுதா?"

"செகண்டு கிளாஸ் கிடைக்கலே, பஸ்ட் கிளாஸ் வாங்கிக்கொண்டு வருகிறேன்."

"சரி, பாலக்காடு முடிந்ததும், நேரே ஊருக்குத் தானா?

"ஆமாம்! ஊருக்கு வந்து உப்பங்கழி காண்ட்ராக்ட் வேலையைக் கவனித்துவிட்டு, உடனே ஊட்டி போக வேணுமே, நம்ம பம்பாய் சேட் மூல்ஜி வந்திருக்கிறான் ஊட்டியிலே. என்னமோ அமெரிக்கன் ரேடியோவுக்கு ஏஜண்டு வேணும்னு சொன்னானாம். அதை எடுத்து வைப்போமென்று ஒரு யோசனை."

"செய்யறது. சரி, ரயில் புறப்படப் போவுது. வரட்டுமா?"

இரயில்கள் புறப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப்பிலே சம்பந்தம், 'அப்பா! பயல், பணத்துக்குப் பிசாசா அலைகிறான்' என்று எண்ணிக்கொண்டே படுத்தார், எம்பெருமான் பிள்ளையைப்பற்றி. எம்பெருமான், "சம்பந்தம் சுற்றுவதற்குச் சளைப்பதில்லை. பணம் எங்கு கிடைக்குமோ என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைகிறான்" என்று சம்பந்தத்தை மனதிற்குள் திட்டிக்கொண்டே, படுத்தார். வியாபாரிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு இரயில்களும் கெம்பீரமாகச் சென்றன. சிதம்பரம் சந்திரா டாக்கிசில் டீ கடையில், மருதாச்சலம், அரைத் தூக்கத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே 'மாய உலகு' என்ற தமிழ்ப்படக் காட்சி நடந்துகொண்டிருந்தது.


"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கைப்_புயல்/நாடோடி&oldid=1654679" இலிருந்து மீள்விக்கப்பட்டது