பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/புன்செய் நில உழவர் பெருமை
8. புன் செய் நில உழவர் பெருமை
உழுதுண்ணும் ஆயர்வாழ் சிற்றூர்களின் சிறப்பை எடுத்துரைத்த புலவர், பெரும்பாணன், அடுத்துப்புக இருக்கும் மருதநில மாண்பு குறித்துக் கூறத்தொடங்கினார். தொடங்கியவர், வரப்பு உயர நீர் உயர்ந்து நிற்கும் நன்செய் நிலங்களை மட்டுமேயல்லாமல், மருத நிலத்து உழவர் மழை ஒன்றையே கொண்டு விளைந்து பயன்தரும் புன்செய் நிலங்களையும் கொண்டிருப்பர் ஆதலாலும், அத்தகைய புன்செய் நிலங்கள், பெரும்பாலும், முல்லையும் மருதமும் கலக்கும் மேட்டுப் பகுதியிலேயே அமைந்திருக்கும் ஆதலாலும், நன்செய் நிலங்களின் நலம் பாராட்டுவதன் முன்னர், புன்செய் நில உழவு நலம் பற்றிக் கூறத் தொடங்கினார்.
மருத நிலத்து உழவர் மனைகளில், ஊர் உலகம் அனைத்தையும் ஒருசேரப்புரக்கவல்ல உணவுப் பொருள்கள் மண்டிக் கிடக்கும். அதற்குக் காரணம், நிலத்தைப் பலசால் உழுதல் வேண்டும் என்பது முதலாம், உழவு முறைகளை, அவர்கள் நன்கு பயின்று நடைமுறைப்படுத்தி வருவதே ஆம். அவர்களின் எருதுகளையும் ஏரையும் பார்த்தாலே, அவர்கள் எவ்வளவு சிறந்த உழவர்கள் என்பது புலப்பட்டு விடும். எருதுகளெல்லாம் எவ்வளவுபெரிய கலப்பையைப் பூட்டி, எவ்வளவு ஆழமாக அழுத்தி எவ்வளவு நேரம் உழுதாலும், சிறிதும் தளரா உரம் வாய்ந்தவை. ஏரில் பூட்டும்எருதுகள் இரண்டில், ஒன்று விரைந்து நடைபோட, ஒன்று மெல்ல அடியிட்டாலும், ஒன்று வலப்புறம் ஈர்க்க ஒன்று இடப்புறம் ஈர்த்து ஓடினும், உழுதொழில் நன்கு நடைபெறாது. இவ்வுழவர் எருதுகள், அக்குறைபாடு நீங்க, நன்கு பழக்கப்பட்டவை. ஒன்றுபட்டுச் செயலாற்றும் உயர்வுடையவை. மாட்டிற்கு ஏற்றவை அவர்பால் உள்ள கலப்பைகளும். கலப்பை முகம், பெண் யானையின் தந்தம் நீங்கிய வாய்போல், அகன்றும் பருத்தும் காணப்படும். அதன் கொழு, உடும்பு முகம் போலும் உரமும் உருவும் வாய்ந்தவை.
நிலம், வீட்டிற்கு அணித்தாகவே இருப்பதால், எருதுகளைத் தங்கள் வீட்டிற்கு முன்பாகவே ஏர்களில் பூட்டி விடுவர். நிலத்தில் இறங்கி ஏர் ஒட்டும்போது, கொழு, நிலத்துள் மறைந்து, மண்ணை அடிகாணப் புரட்டிவிடுமாறு கலப்பையை அழுத்திப் பிடித்து ஓட்டுவர். களை, அறவே நீங்குமாறும், மண், படுபுழுதி ஆகுமாறும், மடக்கிப் பலசால் ஓட்டுவர். விதைத்து, விதை முளைத்துச் சிறிதே வளர்ந்ததும், மறுபடியும் ஏர்பூட்டிப் புதுக்களைபோகவும், மண் தளரவும் உழுவர்; அந்நிலையிலும் அழியாத களைகளைக் களைக்கொட்டுக் கொண்டு அகற்றுவர். இவ்வாறு முறை அறிந்து பயிர் செய்வதால், பயிர், குறும்பூழ் போலும் பறவைகள் கூடுகட்டி வாழுமளவு செழித்து உயர்ந்து வளரும்.
வளர்ந்து நிற்கும் பயிர்கள் இடையே இருந்து, அவ்வப்போது எழுந்து உயரப் பறக்கும், சின்னம்சிறு கால்களும், கருநிறக் கழுத்தும் உடைய குறும்பூழ்ப் பறவைகளையும், உயரப் பறக்க மாட்டாது, தத்தித் தத்திப் பறக்கும், வெண்கடம்பு, மரத்தின் மலர் போலும் வடிவமும், வண்ணமும் மென்மையும் வாய்ந்த, குறும்பூழ்க் குஞ்சுகளையும் கண்டு கண்டு மகிழ்வர். அதனால், பயிர் வளர்ந்து முற்றியது கண்டு அறுவடை செய்யும் பருவத்தில், அருள் உள்ளம் வாய்க்கப்பெற்ற அவ்வுழவர்கள், அப்பறவைகளை அகற்றிய பின்னரே— அவை பாதுகாப்பான இடம் சென்று சேர்ந்த பின்னரே, அறுவடைமேற்கொள்வர். அதனால், வயலின் நாற்புறமும் நின்று ஆரவாரப்பெருங்குரல் எழுப்புவர். அது கேட்ட குறும்பூழ்ப் பறவைகள், பயின்ற இடம் விட்டுப் பிரிகிறோமே என்ற வருத்தத்தோடு, பறக்கமாட்டாத்தம் பார்ப்புகளையும் தழுவி எடுத்துக்கொண்டு பறந்து போய், அடுத்திருக்கும் முல்லை நிலத்து மரங்களில் பாதுகாப்பான இடம் தேர்ந்து தங்கிவிடும். அவ்வாறு, அவை பறந்து செல்லும் அழகைப் பார்த்து அகமகிழ்ந்த பின்னர், உழவர்கள் புனத்துள் புகுந்து அறுவடை தொடங்குவர்.
"ஞாங்கர்க்
குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும் பகடு புதவில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புழுக முழுக்கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇக், குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்
வன்புலம் இறந்த பின்றை."
(196–206)
8-1 வயலில் உழவர், வரப்பில் சிறார்
மருத நிலத்து உழவர்களின் புன்செய் நிலத்து உழவுப் பணி பற்றிய விளக்கம் அளித்த புலவர், அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் நன்செய் உழவு பற்றிய விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.
உழுகாளைகளின் உரமும் திறமும் பற்றிப், புன்செய் நில உழவு பற்றிய விளக்கத்தின் போதே விரித்துரைத்தும், புலவர் உள்ளம் அமைதியுற்றிலது. அத்துணைச் சிறப்புடையவை அக்காளைகள். அதனால் நன்செய் உழவு பற்றிய விளக்கத்திலும், காளைகள் பற்றிய சிறப்பிற்கே முதலிடம் வழங்கியுள்ளார், ஆழ உழவேண்டும்; நுண்சேறு படுமளவு பலமுறை உழவேண்டும் என்ற உழவியல் முறைகளை உணர்ந்த அவ்வுழவர்கள், உழுதது போதும் இனி உழத்தேவையில்லை எனக் கூறுமளவு முற்ற உழுது முடித்த பின்னரே காளைகளைப் பூட்டவிழ்த்து விடுவர். கரம்பு நிலை உழவு முடிந்து, நன்செய் நிலை உழவு தொடங்கும் போது, பொதுவாக, காளைகள் தளர்ந்துவிடும். நன்செய் உழவு முடியும் நிலையில், அவற்றால் நடக்கவும் இயலாது, அவ்வளவு தளர்ந்து விடும். ஆனால், இம்மருத நிலத்து உழவர் காளைகள், உரம் மிக்கவை; அத்துணை உழவு முடிந்த நிலையிலும், அவற்றின் உரம் குறைந்து விடாமையால், பூட்டவிழ்த்து விட்டதும் தொழுவடைந்து படுத்து விடுவதற்குப் பதிலாக, வரப்பு ஓரங்களில் நண்டுகள் தோண்டி வைத்திருக்கும் வளைகள் இருந்த இடம் தெரியாத வாறு மறைந்து மண்மூடிப் போகுமாறும், வரப்புகளில் வளர்ந்திருக்கும் கோரைப்புற்கள் வேரற்றுப் போகுமாறும், கொம்பெல்லாம் மண்ணாகிப் போகுமாறும், அவ்வரப்புகளை முட்டிமோதும். அவ்வாறு முட்டியும் உரம் அடங்கா நிலையில், உழுது முடித்த நிலத்தை அடுத்து உழுவதற்காகக் காத்திருக்கும் கரம்பு நிலத்தில் புகுந்து, தமக்குள்ளே கடும் போரிடத் தொடங்கிவிடும். அதன் பயனால், ஏர்கொண்டு உழ வேண்டாதே, பெருஞ்சேறுபட்டு விடும் அந்நிலத்தை, உழவர்கள் காலால் மிதித்துச் சமன் செய்து, அதையும் நடுவதற்குத் தகுதி உடையதாக ஆக்கிவிடுவர்.
மருத நிலத்து நஞ்செய் உழவு நிலம் பற்றிய விளக்கத்தை மேற்கொண்ட உழவர், ஒரு நாடு உழவுத் தொழில் ஒன்றை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது. அது, நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்கி விடாது. அவ்வளம் சிறக்க, அது, தொழில் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதை அறிந்தவர். அதற்கேற்ப, திரையனுக்கு உரியதான அம்மருத நிலம், உழவுத் தொழிலோடு தொழில் துறையிலும் சிறந்து விளங்குகிறது என்பதைப் பெரும்பாணனுக்கு உரைக்க விரும்பினார், போலும், உழவுத் தொழில் வளம் பற்றி உரைத்த பின்னர், அதைத் தொடர்ந்து, தொழில் வளம் பற்றி விரிவாக உரைக்க எண்ணினார் என்றாலும், காளைகள் மோதியதால் மறைவுண்ட வளைகளிலிருந்து வெளியேறி விரைந்து ஓடும் நண்டுகளின் கவர்த்த கால்கள், தொழில்வளம் பற்றிய சிறு குறிப்பையேனும் தொடக்கத்தில் உரைத்தல் வேண்டும், என்ற உணர்வைத் தூண்டி விடவே, நண்டின் கவர்த்த கால்களைப் போலும் தோற்றம் உடையதாய்க் காய்ச்சிய இரும்பினை இறுக்கிப் பிடிக்கப் பயன்படும் கொறடு என்ற ஆயுதம். அதைக் கையாளும் கொல்லன் அவன் பணிபுரியும் உலைக்களம், உலையில் கொழுந்து விட்டெரியும் செந்தழல், அது அவ்வாறு எரியத் துணை புரியும் தோலால் ஆன துருத்தி, அது வெளிக்காற்றை ஈர்த்து உலையுள் செலுத்த, அதை விட்டுவிட்டு மிதிப்பது ஆகிய இவற்றைச் சுருங்கிய அளவில் கூறி, மருத நிலத்துத் தொழில்வளம் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பெரும்பானனுக்குச் செய்து வைத்தார்.
நண்டின் கால்களைக் கண்ணுற்றது கொண்டு, தொழில் துறை பற்றிச் சிறிதே கூறினாராயினும், புலவர் நினைவெல்லாம் உழவுத் தொழிலைச் சுற்றியே உழன்று கொண்டிருந்தமையால், உழவு பற்றித் தொடர்ந்து கூறத் தொடங்கி விட்டார். முறையாக உழுது சேறுபட்ட நிலத்தைப் போலவே, ஏறுகள் பொருதலால் சேறுபட்ட நிலத்திலும், நாற்றுநட்டு நாள் தோறும் நீர் பாய்ச்ச, பயிர்களை பறிக்குமளவு வளர்ந்து விட்டது. களை பறிக்க, உழவர் மகளிர் நிலத்தில் இறங்கிவிட்டனர். நிலம், வளம் மிக்கது, மேலும், உழவர்கள், முறையறிந்து பயிர் ஏற்றியுள்ளனர். அதனால் பயிர் செழித்து வளர்ந்திருப்பதோடு, அதற்கேற்ப களைகளும் அதிகமாகவே இருந்தன; களைகளுக்கிடையே நெய்தலும் கொடிவிட்டு மலர்ந்திருந்தது. தேன் நிறைந்து மணம் நாறும் நெய்தல் மலர்கள் காண மகிழ்ச்சியளிக்குமாயினும், அவை, பயிர் வளர்ச்சியைக் குன்றச் செய்திடுமென்பதால் அவற்றையும் பறித்துக் களைந்தனர்.நெய்தலைக் களைந்து பறித்தனராயினும், அதன் அழகிய மலர்களை அழிக்க மனம் வராமையால், அம்மலர்களை வயல் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் தம் சிறுவர்களிடம் கொடுத்தனர். நெடுநேரம் கழிந்துவிட்டது; களை பறிப்பது முடியவில்லை. சிறுவர்களுக்குப் பொறுமை குறைந்து விட்டது. நெய்தல் புது மலர்கள், தேன் நிறைந்து மகிழ்ச்சி தருவனவாக இருந்தாலும், அவை குவியல் குவியலாகக் குவிந்துவிடவே, அவர்களுக்கு அம்மலர்கள் மீது வெறுப்புப் பிறந்து விடவே, அவ்விடம் விட்டு விட்டு உடனே புறப்பட்டனர். வயலை அடுத்த நீர்நிலைகளில் முளைத்திருந்த நீர்முள்ளிச் செடிகளில், கண்கவரும் கருநிற மலர்கள் மலர்ந்திருப்பது கண்டனர். உடனே அவற்றைப் பறித்தனர்; தண்ணீர் மட்டத்திற்கு மேல் வளர்ந்திருந்த தண்டாங்கோரையைப் பிடுங்கி வந்து, அதைப் பல்லிடையே வைத்து மெத்தென ஆகுமாறுமென்று நாராக்கி. முள்ளி மலர்களை மாலையாகத் தொடுத்து மலரும், கோரையும் பறிக்க நீருள் இறங்கியபோது நனைந்து போன தலையில் சூடிக்கொண்டனர்.
இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற உடலமைப்பும், அது காரணத்தால் மென்மைத் தன்மை வாய்ந்ததாயினும், தளர்ந்து திரைந்து போகாத் திள்மையும், தொடர்ந்து தொழிலாற்றினாலும், சோர்ந்து போகாக் கைவன்மையும் வாய்ந்த உழவர் ஈன்ற மக்களாவர் அச்சிறுவர்கள். அதனால், வாளா மடிந்திருக்க இயலாது போகவே, அவ்விடம் விட்டு அகன்று, கண்பின் என்ற காரைப் பறித்து உடைத்து, அதன் உள்ளே இருக்கும் பொன்னிறமான சுண்ணப் பொடிகளைத் தம் மார்பில் கொட்டிப் பூசிக் கொண்டனர். கருநிறம் வாய்ந்த தம் அகன்ற மார்பு பொன்னிறத்தாது படிந்து, பொன்துகள் நிறைந்து மின்னும், பொன்னுறை கல் போல் காட்சி அளிப்பது கண்டு அகமகிழ்ந்தனர். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ப. பசிவரப் பெற்ற அவர்கள் இவ்வின்ப விளையாடல்களை மறந்தனர். மனைநோக்கி விரைந்தனர். உழவு நலம் கருதி, அறுவடை முடியுங்காலும் வயல்களை அடுத்தே வாழ வேண்டியிருப்பதால், வயல்களை அடுத்து, வரப்பு ஓரங்களில் தற்காலிகமாக, சிறுசிறு குடிசைகளைக் கட்டியிருந்தனர். புது வைக்கோல் வேயப்பட்ட அக்குடில்களுள் புகுந்த சிறுவர்கள் ஆங்குப் பானை நிறைய கட்டி கட்டியாகச் சோறு இருந்தாலும், அது பழஞ்சோறு என்பது கண்டு, அதை வெறுத்துவிட்டு, குடிசையின் முன் புறத்தே இருக்கும் உரலில் அவித்த நெல் இட்டு, அவல் இடித்து உண்டு பசி ஆறிய பின்னர், அவலிடிக்கும் போது வாள இடிக்காது, பாட்டுப் பாடிக்கொண்டே இடிக்க, அவ்வுலக்கைப் பாட்டொலியும், உலக்கை இடிக்க. உரல் எழுப்பும் ஒலியும் கேட்டு பயந்து தாம் வாழ்ந்திருந்த மரங்களை விட்டுப் பறந்தோடும், கிளிக் கூட்டங்களையும், வளைந்த மூக்கு, பச்சை வண்ணமேனி ஆகிய அவற்றின் உடலழகையும் கண்டு மகிழ்வாராயினர்.
"மென்தோல்
மிதி-உலைக் கொல்லன் முறிகொடிற்று அன்ன
கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின்
கார் ஏறு பொருத கண்ணகன் செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்
களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கள்கமழ் புதுப்பூ முனையின், முள்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்துகொண்டு அவண,
பஞ்சாய்க் கோரை பல்லிற்; சவட்டிப்
புணர் நார்ப்பெய்த புனைவுஇன் கண்ணி
ஈர்உடை இருந்தலை ஆரச் சூடிப்
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
புன்காய்ச்சுண்ணம் புடைத்த மார்பின்
இருப்பு வடித்தன்ன மடியா மென்தோல்
கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்
பழஞ்சோற்றுப் அமலை முனைஇ, வரம்பில்
புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடு பிறந்து
அயல, கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்".
(206—227)
8-2 பொன்மலை நிகர் நெல் மலை
நெற்பயிர் விளைந்து, பதரோ, பசுங்காயோ ஒன்று கூட இல்லாமல் நெல்மணிகள் முற்றிவிடும். கொட்டினால் கடுக்கும் செங்குளவிக் கூட்டம் ஒரு சேரத் திரண்டிருப்பது போல், செந்நெல் மணிகள் வரிசை வரிசையாகச் சேர்த்து வைத்தாற்போல் திரண்டிருப்பதால் பொறை தாங்கமாட்டாது கதிர்கள் தலை சாய்ந்துவிடக் கண்டு, பயிர் அறுவடைக்குத் தகுதியுடையதாகி விட்டது என அறிந்து கொள்ளும் உழவர்கள், அரிவாள் கொண்டு, வளம் மிகுதியால் உள்ளே துளைபடுமளவு பருத்துத் திரண்டிருக்கும் தாளை அறுத்து. அரி அரியாக அடுக்கிக் கட்டி, கட்டுகளைச் சுமந்து களம் நோக்கி விரைவர்.
களத்துமேடு, பரந்த வயல்களில் பெருக விளையும் நெற்கட்டுகள் இட்டு வைப்பதற்கேற்ற பரப்புடையதாக இருக்கும். ஆங்குப் பணிபுரிவாரை வெய்யிற் கொடுமையினின்றும் காக்கவல்ல நிறை நிழல்தரும் அடர்ந்த உயர்ந்தகிளைகளைக் கொண்ட மருத மரங்கள் வளர்ந்திருக்கும். ஆண்டு முதிர்ந்த மரங்களாகவே, அவற்றில், பாம்புகள் வந்து குடிபுகுவதற்கு வாய்ப்பளிக்கும் கங்குகள் பல காணப்படும். பொந்துகளில் குடிவாழும் அரவுகள், நெற்கதிர்களுக்கு ஊறுவிளைவிக்கும் எலிகளைத் தின்று தங்களுக்குத் துணைபுரிவதல்லது, தங்களுக்கு ஊறு செய்யா என நம்புவதால், உழவர்கள், பாம்புக்கு அஞ்சாது அம்மரத்தடியிலேயே களப்பணிமேற் கொள்வர். களத்தில், உழவுப்பணியாற்றுவோரேயல்லாமல், அவர்கள் வாரி வழங்கும் நெல்பெறுவான் வேண்டி, வந்து கூடியிருக்கும் ஏர்க்களப் பாணர் முதலாம் இரவலர் பெருங்கூட்டமும் கூடியிருக்கும்.
அத்தகைய களத்து மேட்டில். கதிர்க்கட்டுகளை வரிசை வரிசையாக அடுக்கிவிட்டு, பழுக்காதிருக்கும் ஓரிரு நெல்லும் பழுத்துவிடட்டும் என்பதாலும் கதிர்களில் ஒரு நெல்கூட நில்லாமல் கொட்டிவிடட்டும் என்பதாலும் அடுக்கிய கட்டுகளை ஓரிரவு இருக்கவிட்டு, திரையன் நாட்டில் களவாடுவார், இலராதலின் கதிர் களவு போய்விடுமே என்ற கவலை சிறிதும் இலராய், காவல் கருதாது இரவில் மனை சென்று தங்கிவிட்டு மறுநாள் களம் வந்து சேர்வர். வரிசை வரிசையாகப் போடப்பட்டிருக்கும் கதிர்ப்போர்களில், தாம் பின்னும் வலையுள் வந்து விழும் பூச்சிகளை உண்டு உயிர் வாழும் சிலந்திக்கூட்டம், வளைத்து வளைத்துப் பின்னிய வலைகள், இரவில் வீழ்ந்த பனித்துளிகளால் நிறைந்து வெண்ணிறம் காட்ட, அந்நிலையில் நிற்கும் கதிர்ப்போர் காட்சி தம் சுற்றத்தோடு கூடிக் கைகோத்துத் துணங்கைக் கூத்து ஆடக் கூடிநிற்கும் பூதகணங்கள், வெண்ணிற ஆடை உடுத்திருக்கும் அழகிய காட்சியை நினைவூட்ட, அக்கதிர்ப் போர்களை மகிழ்ச்சி பொங்கச் சுற்றி வரும் உழவர்கள் கதிர் களவாடப்பட்டிருப்பின், களவாடியவர் கைப்பட்டுச் சிலந்திவலை அறுபட்டிருக்கும்; அது சிறிதும் அறுபடாமையால், கதிர் களவு போகவில்லை என்ற மனநிறைவோடு போர் அழித்துக் கடாவிடத்தொடங்குவர்.
போரை, அடிகாணப் பிரித்துப் போடப்போட, காளைகளை ஒருங்கு பிணித்து மிதிக்க விடுவர், தாளில் ஒரு நெல் கூட இல்லை; அறவே உதிர்ந்து விட்டன என்பதை உணர்ந்ததும், வைக்கோலையும் கூளத்தையும் அகற்றி, நெல்லைத் தனியே பிரித்த பின்னர், மேல்காற்று வீசும் காலம் பார்த்திருந்து, நெல்லை, முறங்களில் வாரித்தூற்ற, நெல்லோடு கலந்திருக்கும் ஓரிரு பதரும், சிறு தூசுகளும் நீங்க, அகத்துள அரிசி செந்நிறம் காட்டினும், புறம் பொன்னிறமே காட்டும் நெல்மணிகள், வடதிசைக் கண்ணதாகிய பொன்மலையாம் மேருமலையே களத்தில் வந்து நின்றுவிட்டதோ எனக் கருதுமளவு, மலைபோல் குவிந்துவிடும். நெல்கொண்ட உழவர்கள், களம்பாடும் பொருநர்க்கும் பிற இரவலர்க்கும் நெல்வழங்கி, பெற்ற அவர்கள் மகிழ்ந்து வாழ்த்த மனம் நிறை மகிழ்வோடும், நெற்பொதிகளோடும், நகரில் உள்ள தம்மனைபுகுவர்.
"நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனி
கடுப்பு உடைப் பறவைச் சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்
தூம்பு உடைத் திரள் தாள் துமித்து வினைஞர்
பாம்புஉறை மருதின் ஓங்குசினை நிழல்
பலிபெறு வியன்களம் மலிய ஏற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும்
துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவைபோல்
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சிப்
பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள்தப
வையும் துரும்பும் நீக்கிப் பைது அறக்
குடகாற்று எறிந்த குப்பை, வடபால்
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்."
(228–241)
8-3 மாட்சி மிகு மனை வாழ்க்கை
மருத நிலத்து உழவர்கள் தங்கள் தொழிலில் வெற்றி காணும் சிறப்பை விளங்க உரைத்த புலவர், அடுத்து, அவ்வுழவர்களின் மனை வளங்கள் பற்றிய விளக்கத்தை மேற்கொண்டார்.
ஒரு நாட்டிற்குச் சிறப்புத்தருவது, அந்நாட்டு மக்கள், ஆங்கு வாழ்வாங்கு வாழ மாட்டாமையால், அவ்விடம் விட்டு அகன்று, அவ்வாறு வாழத்தக்க இடம் தேடிப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தானும் உண்டாகாத வகையில், அவர்கள் அங்கேயே வளமார் வாழ்க்கை வாழ்வதற்கேற்ற் வளமெலாம் ஒருங்கே குவிந்திருக்கப் பெறுவதாகும். அத்தகைய பெருவளம் நிறைந்தமையால் மருதநிலத்து மண், பதி எழு எண்ணாப் பழங்குடி மக்கள் நிறைந்த பழம்பெரும் ஊர்களைக் கொண்டிருந்தது. அத்தகைய பேரூர் ஒன்றில் பெரு வாழ்வு வாழும் மனை ஒன்றின் மாண்பினை விளக்க, முனைந்தார்.கன்று ஈன்ற பசுவும், பசுவின் மீது அன்பு பாராட்டும் காளையும் தொழிவில் இருக்க, இளமை மிகுதியால் கால்களை நேர்வைத்து நடக்கவும் மாட்டாத கன்றைத் தாம்பில் பிணித்து, அத்தாம்பை, மனை முன்றிலில் நடப்பட்டிருக்கும் கட்டுத்தறியில் கட்டிவைப்பர். அக்கட்டுத்தறியை அடுத்து, மூங்கிலால் ஆன குதிர் நிற்கும். ஏணியிட்டு ஏறினாலும் எட்ட முடியாத உயர்வுடையது அக்குதிர். அது, தலையைத் திறந்து கொட்டிய பழைய நெல்லால் நிறைந்து வழியும். ஒன்று நடப்பு ஆண்டில் விளையும் நெல் போதாது போகக் குறை நேரவேண்டும். அல்லது, கடும் வறட்சியாலோ அல்லது கொடும் புயலாலோ அந்த ஆண்டு நிலம் விளையாது போக வேண்டும். அத்தகைய காலங்களில்தான் சென்ற ஆண்டில் விளைந்து, அக்குதிரில் கொட்டிவைக்கப்பட்டிருக்கும் நெல்லை எடுப்பர். ஆனால், அத்தகைய பற்றாக்குறை எந்த ஆண்டும் நேராமையால் குதிரும், குதிரில் கொட்டிய நெல்லும், மேலும் மேலும் பழையனவாக ஆகிக் கொண்டிருக்குமே ஒழிய, அவை பயன்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு சேமித்து வைக்கப்படும் பழைய நெல்லால் நிறைந்திருக்கும் குதிர்கள் அம்மனைகளின் செல்வ நலத்திற்குச் சான்று பகர்ந்து நிற்கும்.
அம்மனைவாழ்வார் ஈட்டத் தெரிந்தவரேயல்லாது. ஈட்டியதை, இல்லாதவர்க்கு வழங்கத் தெரிந்தவரோ, நன்கு துய்க்கத் தெரிந்தவரோ அல்லர் எனக் கூறிவிட இயலாது, மாறாக, அவற்றை அறிந்தவர்கள், வாழ்க்கையிலும் வழுவாது கடைப்பிடிப்பவர்கள். விளைந்த நெல்லின் ஒரு பகுதியைக் களத்து மேட்டிலேயே, இரவலர்க்கு வழங்கிவிட்டு எஞ்சிய நெல்லையே மனைகொண்டுவரும் மனவளம் படைத்த அவர்கள், செல்வ நலனைச் சிறக்க நுகரவும் தெரிந்திருந்தார்கள்.
இளஞ்சிறுவர்கள் உடல் உரம் பெற ஓடி ஆடவேண்டும். ஆடிய பின்னர் அரிய உணவினை ஆர உண்ண வேண்டும். உண்டபின்னர் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற மக்கள் வளர்ப்பு முறைகளை அறிந்து மக்களை வளர்த்து வருவார்கள். சிறுவர் சிறுதேர் ஈர்த்து விளையாடி மகிழ்வர். அவர்கள் ஈர்த்துத் திரியும் சிறு தேரிலும், அவர்களின் செல்வச் சிறப்பு புலப்படும். தச்சர்கள், ஊரில் உள்ளார் அனைவர்க்கும் விதவிதமான சிறு தேர்களைச் செய்து அளிப்பர். அத்தேர்களையெல்லாம், அவை செய்யப்படும்போதே, உடனிருந்து பார்க்கும் அத்தச்சர் வீட்டுச் சிறுவர்களுக்கு எந்தத் தேர் மீதும் பற்று ஏற்படாது. ஆனால், கூறிய மனையைச் சேர்ந்த சிறுவர் ஈர்க்கும் சிறு தேர், அந்தச் சிறுவர்களுக்கும் அதுபோலும் ஒரு தேர் தேவை என்ற ஆசையை ஊட்டவல்ல சிறந்த வடிவமைப்பு உடையதாக இருக்கும். அச் சிறுதேர், தக்சச் சிறுவர்க்கே ஆசை ஊட்டும் என்றால், ஏனைய சிறுவர்களைப்பற்றி கூறத் தேவையில்லை. அதனால், சிறுவர் நெடிது நேரம் ஈர்த்துத் திரிந்துக் களைத்துப் போவர்; தளர்ந்துபோன அச்சிறுவர்க்குப் பால் உணவு ஊட்டுவர்; பால், வெறும் பசும்பால் அன்று; தாய்ப் பால்; ஆனால், அது அச்சிறுவனை ஈன்ற தாயின் பால் அன்று: செல்வம் கொழிக்கும் அவ்வீட்டில் சிறுவரைவளர்ப்பதற்கென்றே செவிலியர் சிலர் இருப்பர்; அவர்கள், வெறும் கூலிக்குப் பணிபுரிபவர் அல்லர். அக்சிறுவர்பால், பெற்றெடுத்த தாயினும் பேரன்புடையவர்: அதனால், பசி எடுத்ததும், அச்சிறுவரும், பெற்ற தாயிடம் செல்ல எண்ணாது, பேணி வளர்க்கும் செவிலியரிடமே விரைவர். அச்செவிலியரும், அச்சிறுவர் பால், தலையாய தாயன்பே செலுத்துவதால், சிறுவர்கள் தம்மைத் தழுவியதுமே பால் சுரக்க, சிறுவர்க்குப் பால் அளித்து மகிழ்வர். பால் உண்டு பசி தீர்ந்த சிறுவர், பஞ்சணைப் பள்ளியில் படுத்து அயர்ந்து உறங்கிவிடுவர். அத்துணை வளம் மிக்கவை அம்மனைகள்
மருத நிலத்துப் பேரூர்களில் உள்ள ஒவ்வொரு மனையும் வளம் கொழிக்கும் மனைகளாகவே இருக்கும்; ஆதலின் அவ்வூரார் பசி என்பதையும் அறியார்; பசித்துயர் போக்க அவ்வூரை விட்டுப் பிரிந்தும் அறியார் என அப்பேரூர்களின் பெருமையினைப் பெரும்பாணனுக்கு எடுத்துரைத்த புலவர், "பெரும்பாண! நீயும் உன் சுற்றமும் அவ்வூரில் சென்று தங்குவீராயின், அவ்வூரார், உன்னைத் தங்கள் ஆருயிர் அனைய உறவினர்களாகவே கொண்டு பெருவிருந்து அளிப்பர். அவர்கள் உழுது கொண்டது செந்நெல். ஆனால், அதை உங்களுக்கு அளிக்க மாட்டார்கள்: அரும்பாடுபட்டு உழவுத் தொழில் புரிவார் மட்டுமே விளைவிக்க வல்லதும், தூய வெண்ணிறம் வாய்ந்ததுமான மெல்லிய அரிசியைத் தேடிப் பெற்று ஆக்கிய சோற்றையே படைப்பர்; துணைக் கறியாக, நாள்தோறும் வழக்கமாக உண்ணும் கறிகளை, அன்று சமைக்காது, சிறப்பு விருந்தினர்களாக வருவார்க்கு மட்டுமே அளிப்பதான, தங்கள் மனையில் தாம் வளர்க்கும் கோழியை அடித்துக் செய்யும் கோழிப் பொறியலையே படைப்பர்; சிறந்த அவ்வுணவுண்டு மகிழ்த்து செல்வீராக" என்றார்.
"பகட்டுஆ ஈன்ற கொடுநடைக் குழவிக்,
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள்நெடும் மார்பின்
முகடுதுமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஓங்கு நல்லில்;
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட, அலர்முலைச்
செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து
அமளித் துஞ்சும் அழகுடை நல்லில்
தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின், மடியா
விளைஞர் தந்த வெண்நெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெருகுவீர்"
(243—256)
8-4 மருதநாட்டுத் தொழில் வளம்
ஆலைகள் ஆக்கிக் குவிக்கும் செய்பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், ஆலைகளுக்குத் தேவைப்படும் இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் வேண்டியிருக்குமாதலின், ஒருநாட்டின் தொழில் நிலையங்கள், பெரும்பாலும் அந்நாட்டின் கடற்கரையை ஒட்டியே அமைந்திருக்கும். அம்முறைக்கு ஏற்ப, திரையன் நாட்டு ஆலைகளும், மருத நிலத்து வயல்களைக் கடந்து, கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தில் அடியிடும் பகுதியிலேயே அமைந்திருந்தன.
மருதநில வயல் வளத்தை—பேரூர் மக்களின் செல்வப் பெருக்கை—எடுத்துரைத்த புலவர், அப்பேரூரில், கோழிப் பொறியல் கலந்த வெண்சோறுண்டு காஞ்சி நோக்கிப் புறப்படும் பெரும்பாணன், அம்மருத நில எல்லையில் காண நேரும் ஆலைகள் பற்றிக் கூறத் தொடங்கினார். பெரும்பாணன், ஆலைகள் அமைந்திருக்கும் பகுதியை அணுகும் போதே, அவர்களை அச்சுறுத்தும் பேரொலி கேட்கும், அது, இரவு பகல் ஓயாமல், கரும்பில் சாறுபிழிந்து, காய்ச்சிக் கட்டியாக்கும் இயந்திரங்கள் எழுப்பும் ஒலியாகும். அவ்வொலி, பாணன் கடந்து வரும், மூங்கில்கள் காடுபோல் வளர்ந்திருக்க, அதன் குளிர்ச்சியால் ஈர்ப்புண்டு, பெருமழை பெய்யும் மலைநாட்டுப் பகுதியில், எதிர்ப்படுவார் அனைவரையும் தாக்கித் துயர் விளைவிக்கும் கொடுமை மிக்க புவியால் தாக்குறும் யானைக்கூட்டம் அஞ்சி எழுப்பும் பெருங்குரல் ஒலிபோல் இருக்கும். அது அறிந்தவர் புலவர். அதனால், பெரும்பாணனுக்கு அதை அறிவித்து, அவ்வொலி கேட்டு அச்சுறாது சென்று, அவ்வாலைகளை அடைவீர்களானால், ஆலை உரிமையாளர்கள், கருப்பஞ்சாறும், கருப்பங்கட்டியும் தருவார்கள். உங்களில் யார் யார் எது எதை விரும்புவீர்களோ, அது உண்டு, செல்வீர்களாக" என்று கூறினார்."மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பலவுடன்
கணஞ்சால் வேழம் கதழ்வு உற்றாங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலைதொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்"
(257–262)