உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் சொல்லாரம்/மாநில அரசும் மத்திய அரசும்

விக்கிமூலம் இலிருந்து

மாநில அரசும்

மத்திய அரசும்

மாநில அரசு கம்பவுண்டர்;
மத்திய அரசு டாக்டர்

மாநில அரசு நோய் தீர்க்கும் டாக்டரின் நிலையில் அல்லாமல் கம்பவுண்டரின் நிலையிலேயே உள்ளது. மத்திய சர்க்காரோ முதல் வகுப்பு டாக்டரின் நிலையில் உள்ளது.

மாநில அரசோ மத்திய அரசோ அல்லது தனியார் துறையினரோ யாராகயிருப்பினும் பொருளாதாரச் சீர்கேடு ஏற்படாது தவிர்த்திட ஏதாகிலும் செய்தாக வேண்டுமென்று உணர்ந்துள்ளனர். இந்த உணர்வு மிக முக்கியம். இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

நோய்க்குக் கூறப்படுகிற மருந்துகளும், சிகிச்சை முறைகளும் மாறலாம் ஆனால் சிகிச்சை அளிக்கவேண்டுமென்ற உணர்வு ஏற்படுவதே முக்கியம்.

புதிய கட்சி இம்மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது பற்றிச் சொல்லப்பட்டது. இந்த வசீகரமெல்லாம் சில மாதங்கள்தான். நாளடைவில் இந்த வசீகரம், குறைந்து விடும், வரலாற்றின் நாளேட்டில் நெடுங்காலத்திற்குப் பிறகு இது மங்கியதொரு தாளாகிடும்.

புதிய கட்சி என்பதால் எவரும் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை.

இந்த அரசும் இதை நடத்திச் செல்கிற திராவிடமுன்னேற்றக் கழகமும் தனது மக்கள் நலப்பணியில் மக்களது ஆதரவினை நாடுகின்றன. மக்களுக்கு மூன்றுவேளை சோறாவது அவர்கள் திருப்தியடையும் வகையில் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டுமென்பதே எங்கள் நோக்கம். பொருளாதார லாப நட்டப் புள்ளி விவரப்பட்டியல் மக்களுக்குப் புரியாதது. எனவே சாதாரண மக்கள் தாங்கள் முன்னைவிட வலிவுடன் இருக்கிறோம், உடல் நலமுடன் இருக்கிறோம், என்ற உள்ள நிறைவோடு இருக்கத்தக்க வகையில் பணிகள் நடைபெற ஒத்துழைப்பு இருக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

பொருளுற்பத்தி செழிக்க உள்நாட்டு மார்க்கெட் வலிவானதாக இருக்கவேண்டும், மக்களிடம் வாங்கும் சக்தி வளரவேண்டும். அது வளராது பொருளுற்பத்தி மட்டும் பெருகுவதால் அதன் முழுப்பலனையும் அடைய இயலாது.

ஐந்தாண்டுத் திட்டங்கள் நல்ல நோக்கத்துடன் கூடியவைகளே. ஆனால் அதனால் விளைந்த பலன்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லை. திட்ட இலக்குகளுக்கும் அசல் சாதனைகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை -- அரசியல் மேடைகளைப் பார்த்தால் ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை மட்டும் பட்டியல் போட்டுக் காட்டுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். அசல் சாதனைகள் இன்னதென்று சொல்ல அஞ்சுவார்கள்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டமாகிலும் வேறுபட்டு இருக்குமென்று எதிர்பார்ப்போம் -- புதிய திருத்திய திட்டக்குழு, வெங்கட்ராமனைப் போன்றவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. அனுபவ ரீதியாக இக்குழு செயல்படுமென்று நம்புகிறேன்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் அது பிறப்பதற்கு முன்னே இரண்டு வயதை அடைந்துவிட்டது, இன்னும் அந்தரத்தில் நிறுத்தாமல் அந்தத் திட்டம் என்னென்ன என்பதை மக்களுக்கு நாம் தெரிவித்தாக வேண்டும்.

எந்தத் திட்டமாயினும். விவசாயத்தை பலமுடையதாகச் செய்யக் கூடியதாகவே அமையவேண்டும். இது அனைவராலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. இவ்வாறு விவசாயத்தை பலப்படுத்துவோமானால் இந் நாட்டுப் பொருளாதாரம் புத்துயிர் பெறும். புது வலிவு பெறும்.

விரைவான நற்பலன்களைக் கொடுக்கக் கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதில் தமிழக அரசு நெருங்கிய அக்கறை கொண்டுள்ளது.

இவ்வகையில் மின் உற்பத்தியை அதிகரிப்பதிலும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தமிழக அரசு இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய உடனடிப் பலன்களை அளிக்கக் கூடிய திட்டங்களுக்காகவே தமிழக அரசு கடன் எழுப்பியிள்ளது. இக்கடனுக்குத் தாராளமாகக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

உணவைப் பொறுத்த மட்டில் நாம் உபரி மாநிலம் என்ற நிலையை அடைந்து விடுவோமானால், நமது மாநிலம் தொழில் வளத்தை நோக்கி முன்னேற அதுவே ஒரு உந்துகோலாக அமையும்.

உற்பத்தியைப் பெருக்கும் காரியத்தில் ஒருமாநில சர்க்கார் ஈடுபடுகிறதென்றால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய சர்க்கார் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விலை ஏற்றத்திற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியது மத்திய சர்க்கார் தான்! என்ன காரணம்? பணவீக்கம் ஏற்படவும். அதனால் விலைகள் உயரவும் காரணமாக இருப்பது மத்திய சர்க்கார்தான்.

தாயுள்ளம்
வேண்டும்

தாய் பத்தியமிருந்து குழந்தைக்குப் பால் கொடுப்பது போல மத்திய சர்க்காரும் தாய்மைநிலையிலிருந்து மாநில அரசுகளுக்குத் துணைபுரிய வேண்டும். "நீயாகச் செய்ய வேண்டிய காரியம் இது-நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று மத்திய அரசாங்கம் கூறுமானால் நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம்--மத்திய அரசு அதற்குத் தயாரா?

தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் எந்தப் பொருளையும் எந்த வெளிநாட்டிற்கும் விற்பது-தேவையான பொருளை தருவித்துக் கொள்வது போன்ற உரிமைகளையெல்லாம் மத்திய அரசு எங்களுக்கு விட்டு விடுமானால், அதற்கான உரிமை தருமானால் எதற்கும் நாங்கள் மத்திய அரசாங்கத்தை எதிர்பார்க்கமாட்டோம்.

வெங்காயம் முதற் கொண்டு கைத்தறித் துணிகள் வரை எல்லாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. வெளி நாடுகளிலேயிருந்து குண்டூசியை, வரவழைத்துக் கொள்வதற்கான அதிகாரமும் மத்திய சர்க்காரிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றிலும் மந்திய அரசாங்கம் தான் குறுக்கிடுகிறது. சில பிரச்சினைகளில் விட்டு விடுவதும் சங்கடமான பிரச்சனைகளில் தலையிடுவதும் நியாயமல்ல.

மத்திய சர்க்காரிடமிருந்து நிதி உதவி வந்த பிறகு தான் ஒரு படி அரிசி போட வேண்டும் என்று மக்களைக் காத்திருக்கச் செய்ய எனக்கு மனமில்லை -- என்பதாலேயே உத்தரவு போட்டு விட்ட பிறகு மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி நிதி கேட்கிறோம்.

பக்தவத்சலம் ரூபாய்க்கு 8 படி கேட்டு ஊர்வலம் நடத்துவோம் என்றார். அதற்கு நான் பதிலளிக்கும் வகையில் மத்திய அரசிடம் 30 கோடி கேட்டுப் பதில் ஊர்வலம் நடத்துவேன் என்று சொன்னேன்.

அதற்கு பக்தவத்சலம் பதிலளிக்கும்போது "தி.மு.க. 'ஊர்வலமா? அதில் என்னென்னமோ நடக்குமே" என்று சொல்லியிருக்கிறார். அப்படி ஒன்றும் நடக்காது! எங்கள் ஊர்வலத்தில் மக்கள் அதிகமாக இருப்பார்கள். உங்கள் ஊர்வலத்தில் மக்கள் குறைவாக இருப்பார்கள். இந்த வித்தியாசத்தைத் தவிர வேறு ஒன்றும் இருக்காது.

ரூபாய்க்கு ஒரு படி என்று நாங்கள் போடும் போது விவசாயிகளிடமிருந்து ரூபாய்க்கு ஒரு படி என நாங்கள் வாங்கவில்லை.

பக்த்வத்சலம், ஆட்சிக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒரு காசுகூடக் குறைக்காமல் கொடுத்துத்தான் நெல் வாங்குகிறோம். அப்படிக் கொள் முதல் செய்து சில பகுதிகளில் அரிசி விலையைக் குறைத்துக் கொடுக்கிறோம். இதற்கு மத்திய அரசாங்கம் நிதி உதவி தர மறுப்பது மட்டுமல்லாமல் இப்போது உர விலையை வேறு உயர்த்தியிருக்கிறது-- இது நியாயந்தானா?

ஒருவருடைய கையை நீட்டச் சொல்லி அதில் ஒரு பிடி அரிசியையோ சோற்றையோ போடும்போது பின்னாலிருந்து ஒருவர் காலை இழுத்துவிட்டால் அந்த ஒரு பிடி அரிசியோ சாதமோ அவரது கையிலா போய் விழும்? உற்பத்தியைப் பெருக்கு என்று சொல்லும் மத்திய அரசாங்கம் உர விலையை உயர்த்தியுள்ளது.

நாங்கள் பதவி ஏற்றபோது எங்களுடன் ஒத்துழைப்போம் என்று சொன்னார்கள். கல்யாண வீட்டில் ஆசீா்வாதம் பண்ணுவதுபோல அப்படிச் சொன்னார்கள்,

ஆனால் நடைமுறையில் அந்த ஒத்துழைப்பு இல்லை. உர விலையை ஏற்றியது நியாயமானதோ மனிதாபிமானமுள்ள செயலோ அல்ல.

உர விலையைக் குறைக்கச் சொல்லி நாங்கள் கேட்டதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நிறுவனங்களும் குரல் எழுப்ப வேண்டும். உர விலையை உயர்த்தினால் உணவு  உற்பத்தி பாதிக்கும். ஆகவே இது அக்ரமமானது என்பதை மத்திய அரசு உணரச் செய்ய மக்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.

பசி நீங்கிட
அரிசி கிடைத்தது

பக்தவத்சலம் கூறுகிறார் சென்னை-கோவை நகரங்களுக்குத்தானா ரேசன்? மற்ற இடங்களுக்கு இல்லையா ? என்று!

இந்த ரேசனை சென்ற வருடம் காங்கிரஸ் எப்படி நிறைவேற்றியது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

என் வீடு இருக்கின்ற நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ரேசன் கடையில் காலை 6 மணிக்கு வந்து அரிசி வாங்குவதற்காக வரிசையில் நின்ற அன்னையார் ஒருவர் மாலை 6 மணிக்குத் திரும்பிச் சென்றார். கையில் அரிசியோடு அல்ல! கைக் குழந்தையோடு!

வெயிலின் கொடுமை தாளாமல் அலறி அலறி இடிபாடுகளால் இடுப்பு நோக மகவொன்றைப் பெற்றெடுத்துச் சென்ற பரிதாபம் காங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஆனால் இப்போது அந்தப் பகுதியில் போய் அரிசி உண்டா என்று கேளுங்கள் எவ்வளவு வேண்டும் என்பார்கள். இதை விட்டு விட்டு நீ என்ன செய்தாய்? என்ன. செய்தாய்? என்றால் என்ன பொருள்?

அரிசி கிடைக்காத இடத்தில் அரிசி கிடைக்கச் செய்தோம்!

இது என்ன பிரமாதமா என்கிறார்கள், பிரமாதம் இல்லை என்றால் நீங்கள் ஏன் செய்யமுடியவில்லை?  சர்க்கஸ் காரி ஒருத்தி கம்பியின் மேல் நடப்பதைப் பார்த்து, பூ என்ன பிரமாதம், இருபக்கமும் கையை நீட்டிக் கொண்டு ஆடாமல் அசையாமல் நடந்தால் கம்பிமேல் நடக்கலாம், என்று பார்வையாளர்களில் சிலர் கூறுவர். இது எவ்வளவு தூரம் நகைப்புக்கிடமாகிறதோ, அவ்வளவு தூரம் பிரமாதமா என்பவா்களும் நகைப்புக் கிடமாகிறார்கள்.

தண்ணீர் இறைக்கும் போது இரண்டு கையாலும் இழுத்தால்தான் தண்ணீர் வரும். சர்க்கஸ் பார்த்த ஞாபகத்தில் ஒருகையால் இழுத்தால் எப்படி நீர் வராதோ அது போல் அரசாங்கத்துடன் ஒத்துழைக்காமலிருந்தால் எந்தப் பலனையும் முழுமையாக அடைய முடியாது.

மக்களுக்கு அரிசி கொடுப்பதற்காக எத்தனை நாள் பாடுபட்டோம்? என்னென்ன இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டோம்? எவ்வளவு முயற்சிகள் செய்தோம்! அதை விட்டு விட்டு என்ன பிரமாதம் என்பது முறையாகுமா?

நாங்கள் மூன்று மாதத்தில் செய்ததை அவர்கள் ஏன் இருபது வருடங்களாகச் செய்யவில்லை? மக்கள் வாழ்வைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை!

அரிசியில்லை. என்றால் பால் சாப்பிடச் சொன்னார்கள் -- அதுவும் இல்லையென்றால் பழம் சாப்பிடச் சொன்னார்கள். ஒருவர் எலியைச் சாப்பிடலாம் என்றார். நல்ல வேளை அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை, வந்திருந்தால் பகலில் தவளைக் குழம்பும், இரவில் எலிக்கறிக் கூட்டும் சாப்பிடச் சொல்வார்கள்.

சென்னையைப் பொறுத்த வரை எலிகள் அதிகமில்லை. பெருச்சாளிகள்தான் எங்கு பார்த்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறது. பிள்ளையாருக்கு அது வாகனம் என்று கூறி அப்படிப் பட்ட பெருச்சாளியைச் சாப்பிடக் கொடுத்து வைக்க வேண்டும் என்ற காரணங் கூறி சாப்பிட வற்புறுத்தியிருப்பார்கள்

படி அரிசித்திட்டம் போட்டு அவர்கள் சாதிக்க முடியாததை நாம் சரதித்திருக்கிறோம்.

நான் டில்லிக்குச் சென்றிருந்த சமயம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அமர்ந்திருந்த போது காங்கிரஸ்காரர்களெல்லாம் வந்து, நீ நல்ல காரியம் செய்தாய்-நல்ல காரியம் செய்தாய் என்றார்கள். என்ன காரியம் என்றேன். ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுகிறீர்களே அதைத்தான் கூறுகிறோம் என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன், "ஆமாம் அந்த நல்ல காரியத்தை நான் செய்து விட்டேன். அதற்குத் தான் இங்கே உதவி கேட்க வந்திருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர்கள் 'எங்களால் ஒன்றும் முடியாது உன் சொல்வாக்குத் தான் செல்வாக்காய் இருக்கிறது, நீயே கேள் என்றனர். நான் கேட்டு இல்லையென்ற பதிலோடு திரும்பி வந்ததை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

ரூபாய்க்கு 1 படி அரிசி போடுவதை எல்லாரும் பாராட்டுகிறார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் மட்டும் தான் கேலி பேசுகிறார்கள். மக்களோடு மக்களாக அவர்கள் ஒன்றிப் பழகாத காரணமாகவும் அது இருக்கலாம்.

விலைவாசியை இவன் நோக்கத்திற்குக் குறைத்து விட்டு இவன் டில்லிக்குப் போகிறானே; இது நியாயமா? ஆகுமா? அடுக்குமா என்று கூறுகிறார்கள்.

குழந்தை பாலுக்கழுதால் தாயிடத்தில் போகுமா? அடுத்தவீட்டுக்காரியிடம் போகுமா?

டில்லியைக் கேட்காமல்

டில்லிக்குப் போகாமல் வேறு எங்கே போவது? இலண்டனுக்கா போவது ? அமெரிக்க நாட்டிலுள்ள வாஷிங்டனுக்கா போவது ? இல்லை மாஸ்கோவுக்குப் போவதா? டல்லாஸ் நகரம் போவதா?

உன்னால் உதவி செய்ய முடியவில்லையென்றால் வெளிநாடுகளிடமிருந்து வாங்குகின்ற உரிமையை எங்களிடம் கொடுத்து விடு. முடிந்தால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். அப்பொழுது முடியாமல் உன்னிடத்தில் ஓரணாவிற்காக வந்தாலும் ஏன் வந்தாய் என்று திருப்பிக் கேள்! அது முறை; நியாயமுங்கூட. அதைப் பேசாமல் இப்படி எதையோ கேட்பது அர்த்தமல்ல.

இதைப் போலத்தான் நேருவுக்கு ஒரு முறை மதுரையில் கறுப்புக் கொடி காட்டிய போது, நேருவுக்கா கறுப்புக் கொடி? நேருவுக்கா கறுப்புக் கொடி? என்று கக்கன் கேட்டார். அப்பொழுது 'நம் நாடு' இதழில் ஆசிரியராக இருந்த கல்யாண சுந்தரம் நேருவுக்குக் காட்டாமல் எனக்கா காட்டுவது என்றார். அதைப் போலத்தான் நான் கேட்கிறேன் டில்லி அரசே! உன்னிடம் கேட்காமல் நான் யாரிடம் கேட்பேன்.

நீ தானே சொன்னாய் இந்தியா ஒரே நாடு! எல்லோரும் ஓரின மக்கள்! பிரிந்து போகாதே என்று!

அதை மறந்து விட்டு அணைத்துக் கொண்டே இருக்கும் போது ஜேபியில் கை போடுகின்றாயே இது தகுமா?

பக்தவத்சலத்திற்கு நான் கூறுகிறேன். டில்லியிடம் கேட்பதற்கு முழு உரிமை இருக்கிறது. அவர்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் மக்களிடம் நான் கூறுவேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நான் செய்வேன்.

பக்தவத்சலத்திற்கு சொல்லுகின்ற நேரத்தில் இங்கு கூடியுள்ள மக்களுக்கும் நான் சொல்லுகிறேன் - மத்திய அரசு உதவாவிடில் போனால் போகிறது என்று சொல்லட்டும் அல்லது மத்திய அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்று சொல்லட்டும், அது அவர்களாகச் சொல்ல வேண்டும்.

விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி எரித்தால்--திரி நன்றாக இருந்தும் விளக்கு எரியவில்லையென்றால் எண்ணெயில் தான் கோளாறு என்று பொருள். எண்ணெய்க் கடைக்காரனிடம் சென்று ஏனய்யா இப்படி மட்டமான எண்ணெய்யாகக் கொடுத்து விட்டாய் என்று கேட்டால் என்னையா கேட்கிறாய் என்று அந்தக் கடைக்காரன் கேட்பானா?

அதைப் போல ஏழை எளியவர்களுக்கு படி அாிசி போடுவதால் இந்த வருடத்தில் எட்டுக் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

ஆறுமாதங்கள் மட்டும் கணக்கெடுத்தாலும் ஐந்து கோடி ரூபாய் நட்டம் வருகிறது. இந்த நட்டத்தை ஈடு செய்ய உதவி செய் என்றால் என்னையா கேட்கிறாய் என்று கேட்கிறது டில்லி அரசு.

மாநிலம் என்ற குழந்தையை அந்தந்த மாநில அமைச்சர்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று கூறுகிறார்கள். அதன்படியே வைத்துக் கொண்டால் என் குழந்தைக்கு நான் என் சொந்த முயற்சியில் ஈடுபடும்போது நீ தடையாகவோ -- பங்குக்கோ வரக் கூடாது.

இது தான் போகட்டும் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் என்ன? நானா அதற்குப் பொறுப்பாளி? நாங்களா முன்பு ஆட்சி புரிந்தோம்?

ஜோதியம்மாள் ஏற்றிய விலையை சத்தியவாணிமுத்து அம்மையாரா குறைப்பார்கள் ? கக்கன் ஏற்றிய விலையை கருணாநிதியா குறைப்பார்? விலையை ஏற்றுவது மட்டும் பக்தவத்சலம்! இறக்குவது மட்டும் நானா? வேடிக்கையான விவாதமாகத்தான் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

கொட்டும்
தேள்!

தேள் கொட்டிவிட்டுச் சென்றுவிடும். கொட்டிய இடத்தில் மருந்து போடும் வரை விண்விண் என்று தெறிக்கும். அது போல் காங்கிரஸ் என்ற தேள் மக்களைக் கொட்டிவிட்டுச் சென்று விட்டது. அதற்கு மருந்து போடத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். போடும்வரை கொஞ்சம் வலியேற்படத் தான் செய்யும். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருங்கள். சொன்னபடியே அரிசிபோடுகிறேன்.

இந்தியா முழுவதற்கும் வெளிநாடுகளில் கோதுமையை வாங்கி -- அதிலும் அதிக விலைக்கு வாங்கி குறைத்து விற்றார்கள். அதுவும் உத்திரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய கோதுமை சாப்பிடும் மாநிலங்களுக்குத்தான் அதைக் கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படுகின்ற நட்டத்தை டில்லி. சர்க்கார் தான் ஏற்றுக் கொள்கிறது. இந்த நட்டம் மட்டும் 180 கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.

நாமும் கோதுமை சாப்பிடுபவர்களாயிருந்தால் இந்த உதவி கிடைத்திருக்கும். கோதுமை சாப்பிடுகின்ற மாநிலங்களுக்கு உதவி செய்யும் டில்லி சர்க்கார் அரிசி சாப்பிடுகின்ற நமக்கு ஏன் செய்யக் கூடாது?

8 கோடி ரூபாய் நட்டத்தில் ஒரு பகுதியாவது கொடுங்கள் என்றேன். முடியாது என்று சொல்லி விட்டனர். இதைக் கேட்டதும் பஞ்சபாண்டவர் கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இல்லையென்று அவர்கள் கூறினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மலிவு விலையில் அரிசி போட முயற்சிகள் எடுத்துள்ளோம்; திட்டமிட்டும் வருகிறோம். விரைவில் நடைமுறைக்கு வந்து விடும்.

அரசியல் சட்டம்
திருத்தப்பட வேண்டும்.

அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான தக்க தருணம் வந்திருக்கிறது.

"சட்டத்தைத் திருத்துவது என்பதுபற்றி யாரும் எந்தவித நடுக்கமும் கொள்ளத் தேவையில்லை.

அரசியல் சட்டத்தை அலசி ஆராய்ந்து விமர்சித்துத் திருத்துவதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்க வேண்டும். என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரே சொல்லியிருக்கிறார்.

திருத்தப்பட வேண்டுமென்று வற்புறுத்துவதற்குக் காரணமே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்!

அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் - உள் நாட்டிலே ஒற்றுமை உண்டாக்குவதற்குமான அதிகாரங்களை மட்டும் மத்திய அரசு தன்பொறுப்பில் வைத்திருந்தால்போதும். மாநில அரசுகளின் வரவு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடத் தேவையில்லை.

பொதுவாக இன்றையதினம் அரசாங்க நிர்வாக இயந்திரம் சரிவர இயங்கவில்லை.

இருப்பினும் பொது மக்களின் ஊக்கமும் ஆக்கமும் இருந்தால் அரசாங்க நிர்வாக இயந்திரம் சரிவரச் செயல்பட முடியும் - அதைச் செம்மைப் படுத்த முடியும்.

மக்கள் சக்தியால் தான் நிருவாக இயந்திரத்தைச் சரிவர இயக்க முடியும்.

வெள்ளைக்காரன் தான் இந்த நிர்வாக இயந்திரத்தையே கொடுத்துவிட்டுப் போனதாக சிலருக்கு நினைப்பு இருக்கிறது.

தமிழ் நாட்டில் சேரர்களும் சோழ மன்னர்களும்-பாண்டிய மன்னர்களும் ஆண்ட காலத்திலேயும் -- வட நாட்டில் வேறு மன்னர்களின் அரசுகள் இருந்த நிலைமையையும் பார்க்கும்போதும் அன்றைக்கே நம்முடைய நாட்டில் மிகச் சிறந்த முறையில் அரசு நிர்வாக இயந்திரம் செயல்பட்டு வந்தது தெரியும் !

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்ல அரசு இயந்திரம் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாகவே அரசு நிர்வாகத்தை மிகுந்த திறம்பட இயக்கி வந்திருக்கிறார்கள் என்பதற்காகச் செப்பேடுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன !

ஆனால் இடையில் அவற்றைச் சரிவரப் பயன்படுத்தத் தவறியதால் அரசு நிர்வாக இயத்திரத்தை துருப்பிடிக்க விட்டு விட்டாேம்; அப்படித் துருப்பிடித்துவிட்ட நிர்வாக இயந்திரம் சரிப்படுத்தப்பட வேண்டும்.

வணிகர்களும் --- வழக்கறிஞர்களும் --- மருத்துவர்களும் பிற பட்டதாரிகளும் அரசியலுக்கு வரவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய விருப்பமாகும். பொது வாழ்வில் இப்படிப்பட்டவர்கள் ஈடுபடாமல் யார் எப்படிப் போனாலென்ன என்று இருந்துவிடக் கூடாது.

மத்திய அரசிடமிருக்கும் அதிகாரங்கள் எல்லாம் மாநில அரசுகளுக்கு நியாயத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அப்படி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்! வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது பல்வேறு அரசுகள் அதிகாரக் குவிப்பினால்தான் அழிந்தன என்பது புலனாகும்.

குப்தப் பேரரசு முகலாயப் பேரரசுகளெல்லாம் அதிகாரக் குவியலின் காரணமாகத்தான் சரிந்து போயின. அந்த நிலை  நம்முடைய நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் - அக்கறையின் விளைவாக இதைச் சொல்லுகிறேன்.

ஏழைகளை
வதைக்கக் கூடாது.

ஏழை மக்கள் மீது மேலும் வரி விதிக்கக் கூடாது என்கிற முறையில்தான் புது டில்லியில் நடைபெற்ற திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்துகொண்ட நான் வற்புறுத்தினேன்.

விவசாயிகளுக்கு உள்ள தண்ணீர்த் தீர்வையை உயர்த்திட வேண்டுமென்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றும் அதன்மூலம் பணத்தைச் சேர்த்துத் திட்டங்களுக்கு உதவ வேண்டுமென்றும் தேசிய அபிவிருத்திக் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதன் முதலாக நான்தான் எழுந்து பேசினேன். இது நடக்கிற காரியமல்ல, நான் இதற்கு ஒப்பவும் மாட்டேன் என்றதோடு இதைப்பற்றி யோசிக்கவும் நான் தயாராக இல்லையென்று இரண்டையும் திட்டவட்டமாக அறிவித்தேன்.

நான் சொன்ன பிறகுதான் அண்ணாதுரை சொன்னது போல் நாங்களும் இதற்கு உடன்பட முடியாதென்று காங்கிரஸ் முதலமைச்சர்களும் தெரிவித்தார்கள்.

ஒரே ஒருவர் அரியானா மாநிலத்திலிருந்து வந்திருந்த முதலமைச்சரல்ல, கவர்னர் - இந்தக் கருத்தை எதிர்த்தார்.அதற்குக் காரணமில்லாமலில்லை. எத்தனை நாளைக்கு நாம் பதவியில் இருக்கப்போகிறோம். மற்றவர்கள் வந்தபிறகு எப்படியாவது போகட்டும் என்கிற முறையில் அவர் தமது கருத்தைச் சொன்னார்.

வரி மூலம் மட்டும் பணத்தைத் திரட்டி மக்களின் குறைகளைத் தீர்த்துவிடமுடியும் என்று கருத முடியாது, வரி ஓரளவு தான் பயன்படும், மக்களின் வசதி வாய்ப்புகளும் பெருகவேண்டும். ஆகவே மத்திய அரசு பல தொழில்களில் போட்டிருக்கின்ற மூலதனத்துக்கான பலன் கிடைத்திட வழி செய்திட வேண்டும்;

மத்திய அரசு இரண்டாயிரம் கோடி ரூபாயில் பிலாய் ரூர்கேலா, சிந்திரி போன்ற தொழில்களில் தனது மூலதனத்தை முடக்கியுள்ளது. இந்த இரண்டாயிரம் கோடி ரூபாயும் எங்கிருந்து கிடைக்கும்? நீங்களும் நானும் வரியாகக் கொடுத்தது, அமெரிக்கா இங்கு கொடுத்தது, இப்படியெல்லாம் திரட்டப்பட்ட பணத்தை மூலதனமாக்கிப் போட்ட தொழில்களில் கிடைத்த லாபமென்ன?

கொடுத்த மக்கள் பலனைப்பெறவில்லை, கடன் கொடுத்த நாடுகளுக்கு வட்டியும் செலுத்தியபாடில்லை.

2000 கோடி ரூபாய் மூலதனம் போட்டு தொழில் பெற வேண்டிய அளவு பலன்களைப் பெற்றோமில்லை.

நீ செய்வதுதானே என்று கேட்பார்களானால் தமிழ் நாட்டிற்கு இருக்கும் தொழில்கள் என்ன? எப்படிப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் ஆவடி டாங்கித் தொழிற்சாலையும் திருச்சி கொதிகலன் தொழிற்சாலையும் துப்பாக்கித் தொழிற்சாலையும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. நம்மிடம் இருப்பதெல்லாம் காஞ்சி சுடர் தீப்பெட்டித் தொழிற்சாலையும் மாலு செருப்புத் தொழிற்சாலையும் விருத்தாசலம் களிமண் பொம்மைத் தயாரிப்புத் தொழிற்சாலையும், தஞ்சயில் பனை ஓலையில் நேர்த்தியான பொம்மை செய்யும் நிலையமும், கோரைப்பாய் உற்பத்தி செய்யும் நிலையமும் இருக்கின்றன.

மிகப் பெரிய தொழிற்சாலைகள் யாவும் மத்திய அரசிடமே உள்ளன. உதகை பிலிம் தொழிற்சாலையும் நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கமும் அவர்களிடமே. ஆகவே இரண்டாயிரம் கோடி ரூபாய் மூலதனம் முடக்கப்பட்டுள்ள இத்தொழில்களில் இருந்து வருவாயைப் பெருக்கினால் ஏழை எளிய மக்களை வாட்டுகிற வரிகளைக் குறைக்கலாம் என்று நான் அங்கு எடுத்துச் சொன்னேன்.

இந்தியப் பேராசு தன் ராணுவச் செலவைக் குறைத்தேயாகவேண்டும் என்று நான் சொன்னபோது என்னை உற்றுப்பார்த்தார்கள்.

இராணுவச் செலவு
குறைக்கப்படல் வேண்டும்

பக்தவத்சலமாக இருந்திருந்தால் நாட்டுப்பற்றற்ற பேச்சு என்று சொல்லியிருப்பார். எப்படியிருப்பினும் இந்திய அரசு ராணுவச் செலவைச் சிக்கனப்படுத்தியே ஆகவேண்டும்,

இந்தியாவுக்கு ஆபத்து வராத அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்திச் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் ரூபாய் 100 கோடி வரை கிடைக்குமென்று நான் எடுத்துக் கூறினேன்.

பெரிய காங்கிரஸ்காரர்களெல்லாம் பதறுவார்கள்; சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் இருக்கும்போது இப்படியா பேசுவது என்று கேட்கக் கூடும் --- சீனாக்காரன் அணுகுண்டு வைத்திருக்கிறானே அதைச் சமாளிக்க வேண்டாமா? என்று கேட்பார்கள். சீனாக்காரன் நம்மை நோக்கி வந்தால் அதே அணுகுண்டை வைத்திருக்கும் மற்ற நாடுகளின் உதவி நமக்குக்கிடைத்தே தீரும்.

அதுமட்டுமல்ல, 18வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு கட்டாய ராணுவப் பயற்சி அளித்து தேவையான போது எல்லைக்கு அனுப்பலாம்.

அந்த:முறையில் பாதுகாப்பைப் பலப்படுத்தலாம். இதற்கு லட்சக்கணக்கான கழகத் தோழர்களைப் பயிற்சிக்கு அனுப்ப நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன்.

1. பாதுகாப்புச் செலவைக் குறைத்து சிக்கனப்படுத்துவது.

2. வருமான வரி செலுத்தாதவரிடமிருந்து அதை மீட்பது.

3. 2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமிடப்பட்டுள்ள தொழில்களிலிருந்து வருவாய்பெறத் திட்டமிட்டுச் செயலாற்றுவது.

இம்மூன்று வழிகளைக் கடைப்பிடித்துச் செயலாற்றினால் கணிசமான அளவு நிதி கிடைக்கும்.

ஏழைகளை வாழவைக்க முடியும் என்று தமிழகத்தின் சார்பில் நான் தெரிவித்தேன்.

முன்னாள் தமிழக அமைச்சரும் தற்போதைய திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வெங்கட்ராமன் கூட்ட முடிவில் என்னை சந்தித்து உங்களது யோசனைகளைச் செயல்படுத்த முயல்வோம். என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஒரு உறுப்பு என்கிற முறையில் இந்தியா முழுமைக்கும் ஆலோசனை கூறி உதவவேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்றும் வெங்கட்ராமன் என்னிடம் கூறினார்.

எழுச்சி நாள் தரும்
மகிழ்ச்சி

தமிழகமெங்கும். ஜுலை 23 ல் எழுச்சி நாள் கொண்டாடப் படுவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மகிழ்ச்சி அடையக் காரணம், இதை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல் காங்கிரசைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் சேலம்-தூத்துக்குடித் திட்டம் தேவைதான் என்று ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டிருக்கின்றன. "இப்போது ஏன் எழுச்சி நாள் ? நாட்டிலே வேறு பிரச்சினை இல்லையா?" என்று சிலர் கேட்கலாம்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மக்கள் வயிற்றுப் பிரச்சினையை மறந்து விட்டு - உணவுப் பிரச்சினையை விட்டு விட்டு இதற்கு வந்து விடவில்லை. ஓரளவு அதைச் சீர்திருத்தி விட்டு ஏழைகள் முகம் மலர்ந்த பிறகுதான் இதற்கு வந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு ஏன் வந்தோம் என்றால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் எழுத்து வடிவில் இருக்கிறது. இரண்டு ஆண்டுகட்கு முன்பே பூர்த்தியாகியிருக்கவேண்டும். ஆனால் இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. அதிலே உள்ளது தான் சேலம் இரும்பாலையும் தூத்துக் குடியும். இந்த எழுச்சி நாள் மூலமாவது அவர்கள் உணர வேண்டும் -- உறுதி தர வேண்டும்.

சேலம் மாவட்டம் கஞ்சமலைப் பகுதியில் கனிவளம் ஏராளம் என்று ஆராய்ச்சியாளர்கள் 200 ஆண்டுகாலமாகச் சொல்லி வருகிறார்கள்.

வெட்ட வெட்டக் குறையாமல், எடுக்க எடுக்கத் தீராமல் ஏராளமாக இரும்பு இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் அதனை வெட்டி எடுத்து - உருக்கி - இரும்பாக்கி இங்கிலாந்துக்கு அனுப்பிப் பாலம் அமைத்துப் பார்த்து இருக்கிறார்கள்.

இதை அப்போதையத் தொழில் அமைச்சர் வெங்கட்ராமனிடம் சொன்னபோது அவர் அப்போதே கேலியாகப் பேசினாா் - “அது இந்தச் சேலத்தின் இரும்பல்ல ; அமெரிக்காவிலுள்ள சேலத்தின் இரும்பு!" என்று.

அவர் அதைக் கேலியாகச் சொல்லியிருக்கலாம். ஒரு வேளை உண்மையாக அப்படிச் சொல்லி இருந்தால், இவ்வளவு அறியாதவரா வெங்கட்ராமன் என்று அல்ல; அவரும் ஆட்சியில் இருந்தாரே என்றுதான் நாம் வருத்தப்படவேண்டும்.

கஞ்சமலைப் பகுதி இரும்பை எடுத்து சீமைக்கு அனுப்பி, வெற்றி கண்டிருக்கிறார்கள், வெள்ளைக்காரன் காலத்தில் இரும்புத் தாதை எடுத்து விறகைப்போட்டு வெப்பம் ஏற்றியிருக்கிறார்கள். இப்போது நெய்வேலி நிலக்கரியை வைத்து உருக்காலை ஏற்படுத்தலாம் என்றால் “ஏ! அப்பா; எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவுதூரம் " என்கிறார்கள். ஆனால், இவர்களே அமைத்திருக்கும் உருக்காலைக்கு வெகுதூரம் சென்று தான் நிலக்கரி கொண்டு வருகிறார்கள்.

நெய்வேலி -- சேலம் இரண்டையும் வைத்து நல்ல தரமான இரும்பை உருவாக்கலாம் என்றால். யோசிப்போம் என்கிறார்கள். ஜம்ஷட்பூரில் உள்ள இரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி அதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டுமென்றார்கள் -- தமிழக மக்களும் காத்திருந்தார்கள். இது நல்ல தரமானது என்றும்-அதில் நல்ல இலாபம் கிடைக்குமென்றும் ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

இந்த ஆராய்ச்சி போதாது என்று நார்வேயிலுள்ள ஆராய்ச்சிச்சாலைக்கு அனுப்பி இரும்பையும் நிலக்கரியையும் ஆராயவேண்டுமென்றார்கள். அனுப்பப்பட்டது. தமிழகத்து மக்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். இது உலகத்தில் இருக்கின்ற எல்லா நல்ல இரும்புகளையும் போலவே இலாபம் தரக்கூடியது என்றார்கள்.

அதற்குப் பிறகும் மௌனமாக இருந்தார்கள். "ஏன் இல்லை?" என்று தமிழக மக்கள் கேட்டபோது "ஜெர்மனிக்கு அனுப்பவேண்டும்!; என்றார்கள். அவர்களும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

தமிழகத்து மக்கள் மறுபடியும் காத்திருந்தார்கள்.

இதுமேற்கு ஜெர்மனியில் ஆராய்ச்சி செய்தது போதாது; கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள்.

இரும்பின்
திக் விஜயம்

நம்முடைய இரும்பு போகாத இடமில்லை- அந்தக் காலத்தில் மன்னர்கள் திக்விஜயம் செய்வார்கள் என்பார்களே— அதுபோல் நமது இரும்பு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தது.

பிறகு வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு எடுத்துக் கொண்டுபோய் வந்தாா். அவர்களும் இது நல்ல லாபம் தரக் கூடியது என்றார்கள். கட்டை போடாமல் நிலக்கரியைப் போட்டு எரித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்கள்.

எந்த மாநிலத்திலும் தயாரிப்பதைவிட இதைமலிவாகத் தயாரிக்க முடியும் -- நாங்களே தயாரிக்க முடியும் என்றார் வெங்கட்ராமன்.

இவையெல்லாம் 1957 வரை உள்ள கதையை வேகவேகமாக நடைபோட்டுக் கூறி வந்தேன். இக்காலத்தில் காங்கிரசார் தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இதுவரை கிடைக்கவில்லை என்பதால் தான் நாம் எழுச்சி நாள் கொண்டுடாடுகிறோம்.

"இந்த விவரங்களை எல்லாம் இவர்கள் மக்களிடம் சொல்வார்களே - இதனால் நம் பிரச்சினை வெட்ட வெளிச்சமாகி விடுமே" என்பதால் தான் காங்கிரசார் இதை எதிர்க்கிறார்கள்.

கஞ்சமலைப்பகுதியில் 25000 ஏக்கர் நிலத்தை சர்க்கார் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அதிகாரிகளைப் போட்டு ஆராய்ச்சி செய்து ஏராளமான பணத்தைச் செலவு செய்து விட்டு இப்போது இல்லை என்றால் என்ன பொருள்?

4-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேலம் இரும்பாலை உண்டா இல்லையா என்பதைத் திட்டவட்டமாக மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும். இப்போது எங்களால் முடியாது என்று சொல்லி விட்டால் -- தமிழக அரசு அதனை நிறைவேற்றத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அன்னியச் செலாவணி-வெளிநாட்டுக் கடன், ரூபாய் மதிப்புக் குறைப்பு இவைகளை மத்திய அரசு கண்டிப்பாக காரணமாகக் காட்டக்கூடாது.

சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜப்பானிலிருந்து வந்த நிபுணர்கள் என்னை ஒரு மாதத்திலேயே நான்கு ஐந்து, முறை சந்தித்துவிட்டார்கள் - இதற்குத் தேவைப்படுவது எழுபது கோடி ரூபாய் உள்நாட்டுப் பணம்.

இதை நான் ஐந்தாறு தொழில் நிறுவனங்கள் - பாங்குகளிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை.

வற்புறுத்தத் தவறியவர்
வருத்தம் அடைதல் நியாயமா ?

நேற்றைய தினம் ஆளுங்கட்சியாக இருந்து - இன்றைய தினம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் எழுச்சி நாளுக்காக வருத்தப்படுகிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த காலத்தில் இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் மனுப்போட்டுக் கொண்டிருந்தார்களே தவிர வற்புறுத்தத் தவறி விட்டார்கள். வற்புறுத்தியிருந்தால் மத்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும். (இன்றைக்கு அந்த வேலையை நமக்குத் தந்திருக்கிறார்கள்,

எல்லாக்கட்சிகளும் பங்கேற்பதைப் பார்த்த பிறகும் "ஒரு ஆட்சியை நடத்துகிறவர்கள் இப்படி எழுச்சி நாள் நடத்தலாமா?" எனக் காங்கிரசார் கேட்கிறார்கள்.

பல்லக்கிலே போகின்றான் ஒருவன்-பாதையிலே குழந்தை ஒன்றை ஓநாய் கடித்துக் கொண்டிருக்கிறது. உடனே அவன் பல்லக்கை விட்டு இறங்கி குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தால் "ஐயோ பல்லக்கில் செல்லும் உனக்கு ஏன் இந்த வேலை" எனக் கேட்பதில் அர்த்தமில்லை. அவன் குழந்தையைக் காப்பாற்றாவிட்டால் அவனுக்குப் பல்லக்குக் கொடுப்பதே பாதகமாகிவிடும். குழந்தையை ஓநாயிடமிருந்து காப்பது மூலம் - பல்லக்கில் சென்றாலும் பாதையை மறக்கவில்லை என்று பொருள்.

அரசை ஏற்றுக்கொண்டு விட்டோம்-பதவி கிடைத்து விட்டது - "இனி என்ன? சேலம் தூத்துக்குடித் திட்டம் கிடைத்த போது கிடைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்னைப் போல அற்பன் யாருமே இருக்க முடியாது.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஏராளமான சொத்துக்களைப் பர்மாவில் விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்கள்.

அதற்கான நட்ட ஈட்டுத் தொகை பர்மா அரசாங்கத்திடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக மத்திய அரசை வற்புறுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

இப்படி வசூலிக்கப்பட வேண்டிய நட்ட ஈட்டுத்தொகை சுமார் 50 கோடி ரூபாய் இருக்குமென்று கருதப் படுகிறது.

இந்த 50 கோடி ரூபாயும் கிடைத்தால் அதை இந்த நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

தூத்துக்குடித் துறைமுகத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நெல்லை, ராமநாதபுரம் மதுரைமாவட்டங்கள் வளர்ச்சி அடையும். வேலை இல்லாத் திண்டாட்டம் போகும்.

தூத்துக்குடி துறைமுகம்-அதையடுத்து சேதுக்கால்வாய் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படுமானால் தென் பாண்டிய நாடு வளம்பெறும். தூத்துக்குடி இன்றும் மீன்பிடி துறைமுகமாக இருக்கிறது. ஆழ்கடல் துறைமுகமாக. இல்லை. தமிழக அரசு இனியும் சகித்துக் கொண்டிருக்காது.

தூத்துக்குடி உப்பு, தொழில் துறைக்குப் பயன்படும். ஜப்பான் நாட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

20 கோடி ரூபாய்க்குத் துறைமுகத் திட்டம் முடியும் என்றார்களே தவிர, அக்கறைகாட்டாமல், "இதோ வருகிறது அதோ வருகிறது" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேலம் இரும்பு ஆலை 1967-ல் வரும் என்றார்கள்; அதுவும் வரவில்லை!

சேலம் இரும்பாலை, தூத்துக்குடித் துறைமுகம் ஆகிய "திட்டங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து எல்லா அமைச்சர்களும் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம். இதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் வீட்டுக் கதவைத்
தட்டுதல் நியாயம்

எதற்கெடுத்தாலும் டெல்லியைக் கேட்கிறார்களே என்று சொல்கிறார்கள். டெல்லியைக் கேட்காமல் வேறு யாரைக் கேட்பது? தன் வீட்டுக் கதவைத் தட்டுவானே தவிர எதிர் வீட்டுக் கதவையா தட்டுவான்?

மாமியார் பீரோவைப் பூட்டி, சாவியை முந்தானையில் முடிந்து இருக்கும் போது, விருந்தாளிக்கு காபி கொடுக்க வெள்ளித் தம்ளரை எப்படி எடுக்கமுடியும்? மருமகள் மாமியாரைக் கேட்காமல் எதிர்வீட்டு அலமேலுவையா சாவிக்கு கேட்பாள்? பெட்டிச்சாவியை கீழே போட்டு விட்டு தேவையானதை எடுத்துக் கொள்ளட்டும்.

ஜனநாயகம்
உயிர் வாழ......

மேற்கு வங்க அரசு டில்லியிலுள்ள மத்திய அரசினால் கலைக்கப்பட்டது பற்றி என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

நான் அதற்குப் பதில்தரும் வகையில் "அந்தச் செயல் அரசியல்சட்டப்படியும் தவறானது; அரசியல் சிந்தாந்தப்படியும் தவறானது; நெறிமுறைகளின் படியும் தவறானது என்பேன்!

மேற்கு வங்க அரசு கலைக்கப்பட்டது என்ற செய்தியைக்கேட்க நான் ஏமாற்றமடையவுமில்லை; அதிருப்தி. அடையவும் இல்லை, ஏனெனில் டில்லியின் போக்கை நான் உணர்ந்திருக்கிறேன்,

இந்தச் செயல் உலகுக்கு எதைக் காட்டுகிறது? இந்தியாவில் ஜனநாயகம் உயிர் வாழ்வதற்காக போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதைத்தான் மக்கள் ஆதரவைப் பெற்ற- மேற்கு வங்க அரசு கவிழ்க்கப்பட்டது நமக்கு உணர்த்துகிறது!

பொறுத்துப்
பார்ப்போம்

மேற்கு வங்கத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அங்கு அந்த அமைச்சரவையும் கவிழ்ந்தால் --குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படலாம்! அந்த ஆட்சிதான் எவ்வளவு காலத்திற்கு நிலைத்துவிட முடியும்? ஆறு மாதங்கள்- அல்லது ஒரு வருடம் இருக்கலாம்! அதற்குப் பிறகு...?

மக்களிடம் வந்துதானே ஆகவேண்டும்? உன் கொள்கைகளுக்கு - நடவடிக்கைகளுக்குத் தீர்ப்புத் தர வேண்டி சந்தைச் சதுக்கத்திற்கு நீ வந்துதானே ஆகவேண்டும்!

நான் வங்கத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? சரி; வரட்டும் மற்றொரு அமைச்சரவை! - என்று வதோடு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அந்த அரசு தரவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பேன்,

அதற்கு உன் ஒத்துழைப்பு வேண்டும் - என்று அவர்கள் கூறுவார்கள்;

"என் ஒத்துழைப்பு உனக்கு ஏன்? மக்களுக்குச் சரிவர உணவு முதலிய தேவைகளைத் தர முடியாத நீ - மக்களின் ஆதரவு பெற்ற அஜாய் முகர்ஜி அமைச்சரவையைத் தூக்கி எறிந்து விட்டு கோஷ் அமைச்சரவையை கொண்டு வந்தது ஏன்? இதுதான் ஜனநாயகமா? என்று டில்லி அரசு வெட்கித் தலை குனியும்படியாகக் கேட்பேன்!

இப்போது ஜனநாயகம் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அரசு கலைக்கப்பட்டதைப் பற்றி அரசியல் தலைவர்கள் 'ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு விட்டது" என்று கூறுகிறார்கள். ஆனால் கலைப்பதற்கு உத்தர விட்டவர்கள் "ஜனநாயகத்தைக் காப்பாற்ற உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது" என்று கூறுகிறார்கள்.

ஆகவே இதில் எது உண்மை? எது ஜனநாயகச் செயல் என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும்!

மேற்கு வங்கத்திலும் அரியானாவிலும் நடத்தப்பட்ட செயல்களுக்கு யார் பொறுப்பானவர்கள்; யார் தவறு செய்தவர்கள் என்று என்னிடம் கேட்கப்பட்டது.

நான் கூறினேன் - இருதரப்பிலும் சரியான செயல்களும் இருக்கின்றன; இரு தரப்பிலும் தவறுகளும் இருக்கின்றன;

இது வேடிக்கையான கருத்தாக இருக்கலாம். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள கருத்து புரியும் !

டில்லிப் பேரரசு காங்கிரசல்லாத அரசுகளை கவிழ்க்க முயற்சி எடுத்தது தவறுதான். அதுபோலவே பதவி. மிட்டாய்களுக்காக கட்சி மாறுபவர்களை கூட்டணியில் வைத்துக் கொண்டதும் தவறுதான்! 24 மணி நேரத்தில் அமைச்சராக இருந்து - பிறகு எதிர்க்கட்சிக்குப்போய் - அதன் பிறகு"திரும்புபவர்களை வைத்துக்கொண்டிருந்ததும் தவறுதான்!

கவர்னருக்கு அமைச்சரவையைக் கலைக்கும் அதிகாரம் இப்போது இருப்பதாகக் கூறலாம். ஆனால் அது தேவைதானா; சரிதானா - என்பதை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தைக் கேட்க வேண்டும்!

பொதுவாக இந்த அரசியல் நிகழ்ச்சிகள் காட்டும் பாடம் -இந்தியாவில் ஜனநாயகம் ஆட்சியாளரால் கீழ்நிலைக்கு தள்ளப்படுகிறது என்பதுதான்!

மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி நிலத் தகராறு நடைபெற்ற போது டில்லி தலையிடவில்லை; கேரோக்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றபோது டில்லி தலையிடவில்லை!

ஆனால், நக்சல்பாரி இல்லாதபோது - கேரோக்களை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் அஜாய் முகர்ஜி கூறிய பிறகு இந்தக் கலைப்பு உத்திரவு வரக் காரணம் என்ன?

இந்தச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்: இந்தக் குழப்பம் தெளிவுபட வேண்டும்; இந்த அறைகூவலுக்கு பதில் கிடைத்தாக வேண்டும்!

டில்லியின் செய்கை
தெரிவிக்கும் கொள்கை

வெளிப்படையாக டில்லிப் பேரரசின் செயல் நமக்கு அறிவுறுத்துவது இதுதான்

எந்த ஒரு காங்கிரசல்லாத அரசாங்கமும் நெடுங்காலம் இயங்குவதை டில்லி அரசு பார்த்துக் கொண்டிருக்க சகிக்காது? மேற்கு வங்கத்திலும் ஹரியானாவிலும் நடந்த அரசைப் பற்றி மக்களுக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை, ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே அரசுகள் கலைக்கப்பட்டன. இன்றுள்ள அரசியல் சட்டம் எந்த மாநில மக்கள் அரசையும் கலைக்கும் அதிகாரத்தை டில்லிக்குத் தந்துள்ளது.