அண்ணாவின் தலைமை உரைகள்/சமுதாயம் ஆசிரியர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது
4. சமுதாயம் ஆசிரியர்களுக்குப்
பட்டிருக்கும் கடமை
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இங்கு விருது வழங்கப்பட்டது, ‘அவர்களுக்குச் சமுதாயம் கடமைப் பட்டிருக்கிறது’ என்பதையே காட்டுகிறது. இங்கு 70 பேர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன்
கல்விச் செல்வத்தை அளித்தவர்களை, நாட்டின் எதிர்கால மக்களை உருவாக்கித் தருபவர்களை, ஆசிரியப் பெருமக்களைத் தமிழகம் பாராட்டுகிறது என்பதை இவ்விழா காட்டுகிறது, ஏழ்மையை ஏற்றாலும், நாட்டுக்குக் கல்விச் செல்வத்தை வழங்கி, அறிவுள்ள மக்களை உருவாக்கித் தரும் ஆசிரியர்களைத் தமிழக அரசு பாராட்டுகிறது. எத்தனையோ தொல்லைகள், சலிப்புகள், ஏக்கங்களுடன் வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்களின் பணி தூய்மையானது.
“நமக்குப் போதுமான ஊதியம் அளிக்கா விட்டாலும், வீடுகளைக் கட்டிக் கொடுக்கா விட்டாலும், நம்முடைய பண்பாட்டைப் போற்றி மதிக்கின்ற அரசு” என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இப்படிச் சொல்வதால், ஆசிரியர்களின் ஏழ்மை நிலை நீடிக்க வேண்டுமென்று தமிழக அரசு நினைக்கவில்லை. ஆசிரியர்களின் வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்றே தமிழக அரசு எண்ணுகிறது.
ஆசிரியர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பு, தமிழ்ச் சமுதாயம் சீரிய பண்பாட்டுடன் வளர வழி வகுப்பதாகும். இலட்சியச் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
தொடக்கம் தூய்மையாக இருந்தால்தான் தொடுப்பும் முடிப்பும் சரியாக அமையும். கல்விகளுக் கெல்லாம் அடிப்படையானது தொடக்கக் கல்வி. எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாக அகரம் இருப்பதுபோல், கல்வித் துறைக்கு அடிப்படையானது தொடக்கக் கல்வி! சமுதாயத்தை மகிழ்ச்சி உள்ளதாக ஆக்கும் பொறுப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு.
நம்முடைய மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்களைப் பாராட்டினார்கள். ஆளுநரின் வாழ்த்துக்களுடன் விருதுகளைப்பெற்றிருக்கும் ஆசிரியர்கள், அழிவிலாச் செல்வத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
மூன்றடுக்கு மாடியில் வாழ்பவன் மேல்மாடியில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வழியில் செல்பவன், 'இவன் எப்படிப் பணம் சேர்த்தான்?' என்று எனக்குத் தெரியும் என்று சொல்லுவான். ஆனல், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வங்களை யாராவது குறைகூற முடியுமா?
ஆளுநரின் திருக்கரத்தால் ஆசிரியர்கள் பெற்றிருக்கும் விருதுகளைப் பார்க்குந்தோறும், எண்ணுந் தோறும் மகிழ்ச்சிதரத்தக்க கடமையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கும். ஏனெனில், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வம் இழிவும், பழியுமில்லாதது! எங்கள் தகப்பனர், பாட்டனர், தமையன், மாமா, உறவினர், விருது பெற்றோர் என்று பாராட்டப்பப்படும் அளவில் ‘விருது பெற்ற குடும்பம்’ என வழி வழியாக உங்களுக்குப் போற்றுதல் கிடைக்கும். அப்படிப்பட்ட போற்றுதலுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு, அந்தத் தூய பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(27-8-67 அன்று சென்னையில் தொடக்கப் பள்ளி ஆசிரிகளுக்கான ஏழாவது விருதளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)
சமூக மேம்பாடு
செலவிடுவேன் என்று உறுதி கொண்ட, சில ஆயிரவர்
தமது உழைப்பினைத் தந்திடின் சமூக மேம்பாடு வளரும்.
— பேரறிஞர் அண்ணா