உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு

விக்கிமூலம் இலிருந்து


22. உழைக்கும் தொழிலாளிக்கு
உரிய பங்கு


இத்தகைய மகத்தான தொழிற் பொருட்காட்சியின் திறப்பு விழாவிற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பு மிகுந்த இந்நிகழ்ச்சியினை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தொழில்களை நிறுவி நடத்தும் பெருமக்கள் பலர் ஆயிரக்கணக்கில் குழுமியுள்ள இக்காட்சி போல், இதற்கு முன் நாம் கண்டதில்லை. இனி ஒரு நாள் பார்ப்போமா என்பதும் ஐயமே!

இம்மாதம் சென்னை மாநகரில் அடுத்தடுத்துச் சிறப்புக்குரிய மாநாடுகள் நடந்துள்ளன. உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதை அடுத்துத் தேசிய ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, இம்மகத்தான பொருட்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் பொலிவை முமுமையாக்கிடத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. மனித குலமே இன்னும் முழு நிறைவை நாடித்தான் பாடு பட்டு வருகிறது. உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், இன்னும் அது நிறைவை எட்டாமல்தான் உள்ளது.

இப்பொருட்காட்சியின் அமைப்பாளர்கள் எத்தனை வசதிக் குறைவுகளிடையே இம்மாபெரும் முயற்சியில் செயலாற்ற வேண்டியிருந்தது என்பதை நான் நேரில் அறிவேன். இப் பொருட்காட்சி நம் சாதனைகளின் ஒரு தொகுப்பென்றே சொல்லலாம். நம் ஆவலின் அளவு, சாதனைகளின் அளவை மீறியதாகும்.

நாம் காணுகிற இந்த வளமையும், செழிப்பும் கோடிக்கணக்கான நம் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமேயல்லாமல், இச்செல்வச் செழிப்பெல்லாம் ஒரு சிலரின் தன்னல மேம்பாட்டிற்குத்தானென்றால், அதனால் ஒரு பயனுமேற்படாது.

இந்த வளமை, மக்கள் வாழ்வை உரிமை வாழ்வாகப் புதுமை வாழ்வாக, முழுமை வாழ்வாக, ஆக்கிட வேண்டும்.

செயலாற்றல் மிக்கவர்கள் நம் தொழிலதிபர்கள். இவர்களைச் செங்கற்கள் என்றால், இவர்களைக் கொண்டு கட்டிடம் உருவாக்கப் பயன்படுகிற சிமிண்டாக உலக நாட்டார் விளங்கிடவேண்டும். சிமிண்ட் என்றுதான் சொன்னேன். உதவி, கடன் என்றெல்லாம் அதை நான் அழைக்கவில்லை.

உலகில் எல்லோரும் வளமை பெற உதவிட வேண்டியது மேம்பாடு அடைந்த நாடுகளின் கடமையாகும். நாடுகள் பல வளர்ச்சியடையாத ஒரு நிலையில், பொருள்களை ஏராளமாக மேம்பாடு அடைந்த நாடுகள் உற்பத்தி செய்து குவிக்குமானால், அவற்றை வாங்கிடுவார் யார்?

இந்தியா போன்ற நாடுகள் வளம் பெற கை கொடுத்து உதவ வேண்டும். வெண்டல் வில்கி என்னும் அமெரிக்கப் பெருமகன் ஓருலகம் என்று சிந்தித்துக் கருத்தை எடுத்துரைக்கிறார். இதை மனத்தில் கொள்ள வேண்டும். உலகில் உள்ள இயற்கை வளம் அனைத்தும், மனித இன முழுமையில் பயனளிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.

 செல்வமோ செழிப்போ மக்களால் உணரப்பட வேண்டும். உழைக்குத் தொழிலாளிக்கு உரிய பங்கினை அளித்திட வேண்டும். இவை மறுக்கப்படுகிற எந்த ஓர் அமைப்பையும் முறையையும் உலகம் வரவேற்காது என்பதோடு பொறுத்துக் கொள்ளவும் மாட்டாது. அத்தோடு அம்மாதிரி ஒரு முறையை இன்று நம்மால் தாங்கிடவும் முடியாது. அத்தகைய முறை நிலவுமானால், தொழில் உலகம் துருப்பிடித்து கேட்பாரற்று ஒதுக்கப்படும். உழைக்குத் தொழிலாளிக்கு உரியதை வழங்கிடுங்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக எம்போன்ற எளியாருக்கு ஏற்படுகிற சங்கடத்திலிருந்து விடுதலை கொடுங்கள்.

இந்நாட்டைத் தொழில் வளமுடையதாக ஆக்கும் முயற்சியில் தவறுகளைச் செய்திருக்கிறோம். அவற்றைத் திருத்திக்கொண்டு செயல்படுவோம். "கட்டை வண்டி நிலையிலிருந்து ஜீப் நிலைக்கு நாம் முன்னேற வேண்டும்” என்று ஒரு முறை நேரு சொன்னார் மக்கள் அந்தநிலையை அடைந்தார்களோ இல்லையோ அதிகாரிகள் ஜீப்புகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேளாண்மைத் துறையை வலிவடையச்செய்வதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். தளராது உழைத்து, அதை வலிவுடையதாக ஆக்கி விட்டோமானால், நம் தொழில்களுக்குத் தேவையான மூல தனத்துக்கு எவரிடமும் உதவி நாடி நிற்கத் தேவையில்லை. வேளாண்மை மக்களே உதவிட முன்வருவார்கள். தொழில் முயற்சிகளில் பங்கு தாரர்களாகச் சேர்ந்து ஊக்குவிப்பார்கள். இதற்குத் துணை செய்யும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேளாண்மை மக்கள் மீது வரி எதுவும் விதிக்காது விடவேண்டும். ஏனெனில், கிராமப் புறங்களில் விவசாயிகள் கைகளில் காசு புழங்கத் துவங்கியுள்ளது. பணத்தின் ஒசை கேட்கத்துவங்கியுள்ளது.

இப்பொருட் காட்சியைத் தொடர்ந்து உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்திட வேண்டும். தொழிலும் வேளாண்மையும் கைகோத்து முன்னேறச் செய்வோம். அதற்கு உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்துவது உதவும். ஏனைய நாட்டவரெல்லாம் கையாண்ட முறைகளென்ன ? எப்படி முன்னேறி வேளாண்மைத் துறையில் வெற்றிகளை ஈட்டினார்கள் என்பதை யெல்லாம் நம்மவர்கள் உணர்ந்திடச் செய்வோம்.

இதேபோல நீண்ட கடற்கரையைக் கொண்டது இந்நாடு. டில்லியில் இருப்பவர்கள் ஆயிரம் மைல் பயணஞ் சென்றால்தான் முடியும். இங்கே அப்படியல்ல. எப்பக்கம் சென்றாலும், கடல் அலைகள் உங்கள் கால்களைக் கழுவும். இத்தகைய கடல் வளமுண்டு. எனவே, மீன்பிடிதொழிலும் வளர்ச்சியடைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், உலகில் பல நாடுகளுக்கு மீன் பதப்படுத்தி அனுப்பும் வாய்ப்பு நமக்குண்டு இங்கே முன்னாள் அமைச்சர் ஆர். வேங்கடராமன் இருக்கிறார். சேலம் இரும்பைப் பற்றி அவருஞ் சொல்லுவார். ஆனால், வருத்தத்தோடு சொல்வார். நாங்கள் இந்தச் சேலம் இரும்பைக் குறித்து ஆராய்ந்து அனுப்பினோம். சேலத்துக்கு ஓர் உருக்காலையை வழங்க, அவர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பது பற்றி, உங்கள் கருத்தைக் கூறுமாறு நான் கேட்க மாட்டேன். ஏனெனில் அது, அரசியல், உங்களுக்கானதல்ல. தொழில் உற்பத்தியில் ஈடுபாடுடைய நீங்கள் சேலம் இரும்பைப் பற்றிய எங்களது அறிக்கையை ஆராய்ந்து நல்லது, கெட்டதை அதன் தொழில் -அறிவியல் பலன்களைத் தயங்காது விருப்பு, வெறுப்புக்கிடமளிக்காது சொல்லுங்கள். இதுவே என் வேண்டுகோள்.

வகைப்பாடு : கல்வி—தொழிற் கண்காட்சி.
(21-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலவத் தொழில் வணிகக் கண்காட்சித் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.