உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/தமிழின் உலகளாவிய தன்மை

விக்கிமூலம் இலிருந்து


21 தமிழின் உலகளாவிய தன்மை


நாளை முதல், உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.

மிகுந்த பண்பாளரும், சமநிலை நோக்குள்ளவரும், வித்தகரும், கல்வித் துறையில் புதுமை கண்டவருமான குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் இந்த மாநாட்டைத் துவக்கி வைக்க வந்துள்ளார்கள். நல்ல வேளையாக, நமது குடியரசுத் தலைவர்களாகத் தொடர்ந்து கற்றறிவாளர்களும், கலாச்சாரத் துறையில் தொடர்பு கொண்டவர்களும் இருந்து வருகிறார்கள்.

கற்றறிந்த மேதையான டாக்டர் இராதா கிருஷ்ணன் முதலில் குடியரசுத் தலைவராய் இருந்தார். அவரைப் போன்ற கல்விமானான ஜாகீர் உசேன் இப்பொழுது குடியரசுத் தலைவராகியிருக்கிறார். அத்தகையவர், உலகத் தமிழ் மாநாட்டைத் துவக்குவது நமக்குப்பெருமை தரத் தக்கது.

இந்த உலகத் தமிழ் மாநாடு முதலில், மலேசியாவில் நடைபெற்றது. இப்போது சென்னைத் திருநகரில் நடைபெறுகிறது. இங்குப் பேசிய காமராசர், முதல் மாநாட்டையே நாம் நடத்தியிருக்க வேண்டும், ஆனால், என்ன காரணத்தினாலோ, அவர்கள் முந்திக் கொண்டார்கள் என்றார்கள்.

எப்போதுமே அண்ணன் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், தம்பி மிக அக்கறையாயிருந்து காரியமாற்றுவான். அது போல, முதல் மாநாட்டை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இம்மாநாடு அதன் தொடர்ச்சியே தவிரப் புதிது அல்ல.

அந்த மாநாட்டிற்கு 20 நாட்டுப் பேராளர்கள் வந்திருந்தனர். இப்போது நடக்கும் மாநாட்டிற்கு உருசியா போன்ற 30 நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்திருக்கின்றனர். இந்த நாடுகளுக்கெல்லாம் தமிழ் மொழி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் அது சரி வர அறிமுகமாகவில்லை.

தமிழ் மொழியின் அருமையினை, உருசிய நாட்டினரும், செக்கோஸ்லாவிய நாட்டினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், இங்கே அது சரி வர உணரப் படுவதில்லை. இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராயப்படுகிறது என்று அறியும் நேரத்தில், அத்தகைய தமிழுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்கிற போது, நமது நினைவு எங்கோ செல்கிறது. ஆனால், நாம் இன்றுள்ள நிலையை நினைக்கும் போது, இன்றிருக்கும் நிலைக்கு நமது நினைவு வருகிறது.

எங்கோ நம் நினைவு செல்கிறது என்று கூறினேனே, அந்தத் திருவிடத்திற்கு நாம் உறுதியாகச் செல்வோம் எப்போதும் தமிழர்கள் தமது தமிழ் பண்பாட்டைப் போற்றித் தமது வரலாற்றை உணர்ந்து, தமது ஆற்றலை அறிந்து, ஒன்று பட்டுப் பணியாற்றி, அந்த இடத்தைத் திண்ணமாக அடையலாம்.

தமிழ் மொழி பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளையும், முடிவுகளையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பண்பாடு, உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும், தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். தன்னிடம் வருபவர்களை வாழ்த்தி வரவேற்கும். எந்த மொழியையும், உரிய முறையில் மதிக்கும். அறிவுச் செல்வம் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும், தேடிச் சென்று எடுத்து வரும். ஆனால், தமிழர்கள் தமக்கென்று உள்ளதை ஒருக்காலும் இழக்க உடன்பட மாட்டார்கள்.

இங்கிலாந்திலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் வரும் நிபுணர்கள் தமிழ்மொழி இத்தகைய அருமையான மொழி என்று கூறுகிற நேரத்தில், அந்த மொழிக்குச் சொந்தக்காரர் என்று நினைக்கும் பொழுது, அந்த மொழி மீது பற்றும், பாசமும் ஏற்படாமலா இருக்கும்.

அத்தகைய மொழிக்கு எந்தக் காலத்திலாவது, எந்த நோக்குடனாவது, எப்படிப்பட்டவர்களிடமிருந்தாயினும் தனி மரியாதை கிடைக்கவில்லை என்றால், அதைத் தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.

ஆழ்கடல் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பக்குவமாகக் கடக்க வேண்டுமானால், நல்ல நாவாயின் மூலம் கடக்கலாம். அது போலத் தமிழர்களை அணைத்துக் கொண்டு சென்றால், அவர்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் அவையில், ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினாலும், அனைத்து நாட்டுக் கொடிகளும் வெளியே பறக்க, உள்ளே பேசி விட்டு வெளியே வந்தாலும், எந்த நாட்டின் மீது யார் படையெடுப்பார்களோ என்னும் பேச்சு இருக்கும். ஆனால், உண்மையான ஒற்றுமை உணர்வினை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொன்மொழியில் வடித்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்த தமிழரின் பெருந்தன்மையை எண்ணி, எண்ணி நெஞ்சம் விம்முகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய புலவர் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் ,அடுத்த அடியில் பாடி இருக்கிறார். நல்லது வர வேண்டுமா; அது நாம்தான் செய்து கொள்ள வேண்டும். கெட்டது வர வேண்டுமா; நாம்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டும். எனவே, தீது வருமோ என்று ஐயப்பாடு கொள்ள வேண்டாம். அது நாமாகத் தேடிக் கொண்டால்தான் வரும். பிறர் தருவதல்ல தீதும், நன்றும். நாம் வேண்டாம் என்றால், அது வராது.

தமிழர்க்குத் தீது பிறர் தருவதால் அல்ல, நாமே தீது தேடிக்கொண்டாலொழியத் தமிழர்களுக்குத் தீது ஒரு போதும் வராது.

தமிழ் மொழியின் அருமை பெருமையை நாம் உணர்வதோடு, பிறரும் உணர்ந்து தமிழர்களாகிய நம்மை அவர்கள் நோக்கி, “இந்தத் தமிழ் மொழி உங்களுக்கு மட்டும் உரிய மொழி அல்ல. எங்களுக்கும் அதுதான் மொழி. அதுதான் இணைப்பு மொழி. அதுதான் பொது மொழி, அதுதான் ஆட்சி மொழி என்று கூறும் காலம் வரும். அந்தக் காலம் அவசர நடையால் வருவதல்ல. அவசரக் கோலத்தால் கிட்டுவதல்ல.

தூண்டில் போடுபவன், முள் அருகில் மீன் வரும் வரை எப்படிப் பொறுமையுடன் இருப்பானோ, அத்தகைய பொறுமையை நாம் கைக்கொள்ள வேண்டும்; கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மறையிலும், தமிழ் நெறியிலும் காலம், இடம், வகை, பொருள் ஆகியவை அறிந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வழி நடந்து, தமிழ்மொழியை அரியாசனத்தில் அமர்த்தக் கூடிய நன்னாளை நாம் உருவாக்குவோம்

வகைப்பாடு : மொழி—பண்பாடு
(3-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் ஆற்றிய தலைமை உரை.)