உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/தேவை தொழிலமைதி

விக்கிமூலம் இலிருந்து


20. தேவை தொழிலமைதி


விவசாயத் தொழிலுக்கு முக்கியமான சாதனை ஒன்றைச் செய்து முடித்த கிர்லோஸ்கர் நிறுவனத்தார், அந்தச் சாதனையைப் பதிய வைத்திட நடத்தும் இவ்விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக, மிகுந்த சகிப்புத் தன்மையோடும் ,அயரா உழைப்புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற்போக்கான தொழிலாக ஆக்கிடப் பாடுபட்டிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் இங்குப் பேசுகையில், அயல்நாடுகளில் தயாரான எந்திரங்களையே நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னார். இதற்குக் காரணம் வழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்து விட்ட மனப்போக்கோ அல்ல. அந்த அந்நிய எந்திரங்கள் நன்றாகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை. நன்றாக வேலை செய்பவை என்று மக்கள் நம்பும்படிச் செய்வதே சிறந்த வழி.

உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க, நிர்வாக, விஞ்ஞான அறிவும், திறனும் எந்நாட்டாருடனும் போட்டியிடக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியான இந்த எந்திரங்களில், 99 சதம் இந்தியப் பொருள்களே என்பதையும் ,அதில் 70 சதம் தென்னகத்துச் சிறு தொழில்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் அறிந்து, நான் மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாதிரி உள்நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பயன்படுத்தினால் நாட்டில் சிறு தொழில்கள் பெருகி, நாட்டின் உருவையே மேம்பாடுறச் செய்திடலாம்.

தமிழ் நாட்டின் இன்றைய விவசாயி, புதிய முறைகளைக் கையாண்டு விவசாயத்தில் வளங் காணத் துடிக்கிறான். எந்த முறையானாலும், முதலில் மற்றவர் செய்து பார்க்கட்டும். அப்புறம் நாம் செய்யலாம் என்னும் அளவில்தான் அவனது பழமைப் போக்கு உள்ளது.

ஜீவ நதிகள் இல்லாத தமிழ் நாட்டில் நாம் பயிர்ப் பாசனத்துக்கு, நிலத்தின் அடியில் உள்ள நீரையே பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில், நாம் நல்ல நிலையில் வளமுடன் இருக்கிறோம். இந்த வளத்தைப் பயன்படுத்த இதற்கு வலுவும், உறுதியும், பாதுகாப்பும், விலை மலிவாகவுமுள்ள இறைவைப் பொறிகள் நிறையத் தேவை.

நாட்டுப் புறங்களிலே நிலவும் வறுமையை உணர்ந்தவன் என்கின்ற முறையில் இறைவைப் பொறிகளை உற்பத்தி செய்வோருக்கு நான் இவ்விழாவில் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளாயினும், இலாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும், விலை குறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உற்பத்தி செய்து விட்டு, விலையைக் கூட்டி விட்டால், அவை வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும். அப்படி இல்லாமல், இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள் தோறும் பரவி, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்திப் பணியில் பயனளித்திட வேண்டும்.

இவ்வாறான நிலைமை உருவாகிடவும், தமிழ் நாட்டில் தொழில் முன்னேற்றம் தங்குதடையின்றி ஏற்படவும் உற்பத்தி அதிகரித்திடவும், தொழில் துறையில் குறைந்தது பத்தாண்டுக் காலத்துக்கேனும் சச்சரவுகள் இல்லாது, தொழில் அமைதி நிலவ வேண்டும். தொழில் சச்சரவுகள் கதவடைப்பு என்னும் பெயரிலோ, எந்த வடிவத்தில் தொழில் சச்சரவு ஏற்பட்டாலும், அது தொழிலுக்குக் குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதால், தொழில் சச்சரவுகள் பத்தாண்டுக்காயினும் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் பெருக்கம்.
(13-12-67 அன்று எண்ணூரில் கிரிலோஸ்கர் நிறுவன விழாவில் ஆற்றிய நலைமை உரை.)