கலித்தொகை - பாலைக் கலி
47
தன்னைத் தேடிவந்தடைவோர்க்கும் நிழலைத் தாராமல், எத்தகைய பெரியோர்களாயினும் அவர்களை மதியாமையாலும் உலக நீதியைக் கைவிட்டு நடந்து கொண்டமையாலும் தனக்கு இயல்பாக இருந்த புகழையும் கெடுத்துக்கொண்ட ஒருவன் அடியோடு அழிந்துவிடுவதுபோல் மரங்கள் வேரோடும் அழிந்து போகுமாறு, ஞாயிற்றின் கதிர்கள் நின்று காய்வதால், கொலைக்கு அஞ்சாக் கொடியோரை அமைச்சராகவும், அரசியல் பணியாளராகவும் கொண்டு, குடிகள் வருந்திக் கூக்குரல் எழுப்ப வரிமேல் வரி வாங்கிக் கொடுங்கோலனாய் மாறிய மன்னவன் ஆட்சியின் கீழ் வாழும் குடிகள் போல், பட்டுப் போன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய காட்டு வழியை, பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து வாழும் வாழ்வை, சிலநாள் மேற்கொண்டு கடந்து போகக் கருதியுள்ளதை, மலராலும் மெல்லிய தளிராலும் பதம் செய்யப் பெற்ற படுக்கையில், துயில் கொண்டிருக்கும்போது நீ உன்னை அறியாமலே அவளை விட்டுச் சிறிது அகன்று விடுவாய் ஆயினும், தனிமையுணர்வு கொண்டு துயர் உறும் அவ்வளவு மெல்லியளாகிய உன் மனைவி அறிவாள் ஆயின், உள்ளம் உடைந்து போக, உறுப்புக்கள் ஒளி இழந்து போக, இறந்து போவாள். அந்தோ! யான் என் செய்வேன்!
ஊடல் இன்பத்தை விரும்பி, நீ அவளை விட்டுப் பிரிந்து அவள் காணாவாறு சிறிது நாழிகை விளையாட்டாக மறைந்திருப்பினும், அச்சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்கும் அவ்வளவு மெல்லியளாகிய அவள். 'இவளைப் பிரிய நேருகிறதே' என்ற வேதனை உள்ளம் கொள்ளாமல், முயன்று தேடும் பொருள் காரணமாகப் பிரியப் போகின்றாய் என்பதைக் கேட்டால், நீர் கலங்கும் அவள் கண்களும் சிறிதும் உறங்கா; அவளும் உன் நினைவாகவே இருந்து வருந்துவாள்; அந்தோ! யான் என் செய்வேன்?
அகத்தில் அன்புடைமையால் தோன்றிய உன் அருட்பார்வை, இடையே அருள் அற்றுப்போன நிலைமையில்லாமல், வேண்டுமென்றே விளையாட்டுக்காகவே சிறிது அழிந்து போயினும், வருந்து நெஞ்சு அழியும் அவள், பொருளே சிறந்தது என எண்ணி, நீ அப்பொருள் தேடப்போகின்றாய் என்பதைக் கேட்பாளானால், மகிழ்ச்சி மிகுதியால் மான்போல் மருண்டு மருண்டு நோக்குவதை மறந்து, செயல் இழந்து கிடந்து மயக்கம் கொண்டுவிடுவாள்; அந்தோ! யான் என் செய்வேன்?