நற்றிணை நாடகங்கள்/அணிந்துரை
தெ. பொ. மீ.
வெள்ளிவிழாக் குழுவினர்
அணிந்துரை
ஆறு கிளைகளாகப் படர்ந்து, மூவாயிரம் மாணவர்களுக்குக் கல்விப்பயிற்சியாம் தண்ணிழல்தரும் கற்பகத் தருவான சென்னைச் சிந்தாதிரிப்பேட்டைக் கல்விநிலையக்குழுவின் செயலாளராகச் சென்ற இருபத்தைந்தாண்டுகள் தந்நலம் சிறிதும் கருதாது அதனைத் தழைத்து வளரச்செய்துவந்த பேராசிரியர், பல்கலைச்செல்வர். பன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருடைய வெள்ளிவிழா இரண்டாம் மலராக "நற்றிணை நாடகங்கள்" என்ற இந்நூல் தமிழுலகை அணிசெய்ய வெளிவருகிறது. இமயம் முதல் குமரிவரையில் இப்பேராசிரியர் ஆற்றிய சொற்பொழிவுகள் கணக்கிலடங்கா. ஆனால், அவையெல்லாம் காற்றில் கலந்துவானில் ஒன்றாயின. அவ்வப்போது இவர் தமிழ் வெளியீடுகளிலும், ஆங்கில வெளியீடுகளிலும் எழுதிவந்த கட்டுரைகளும் எண்ணிலடங்கா. ஆனால், அவை யெல்லாம் தொகுக்கப்பெறாமல் சிதறுண்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்துப் பல வெளியீடுகளாகத் தமிழுலகிற்கு வழங்கவேண்டும் என்பது எங்கள் பேரவா. இவ்வவாவினை நிறைவேற்றுவதற்குப் பொருள் மிகுதியும் தேவை என்பது சொல்லத் தேவையில்லை. எனினும், எவ்வாறேனும் எங்கள் விருப்பத்தை இவ் வெள்ளிவிழாவில் நிறைவேற்றவேண்டும் என்ற துணிவு கொண்டு, பேராசிரியர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றைத் திரட்டிப் பத்து வெளியீடுகள் வரையில் தொகுத்துள்ளோம். ஆனால், பொருள் முட்டுப்பாடு எங்களைத் திகைக்கவே செய்தது. அப்போது சமய சஞ்சீவியாய்த் தமிழ்வள்ளல், சைவசமயப் புரவலர், உயர்திருவாளர் உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்பச் செட்டியாரவர்கள், எங்களுக்கு ஊக்கம் அளித்துத் தமிழ் நூல்களை அழகாக அச்சிட்டு வெளியிடுவதையே தமிழன்னையின் வழிபாடாகக் கொண்டிலகும் உயர்திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். தம்முடைய இயல்பான இனிமைப் பண்பில் உயர் திருவாளர் பழனியப்பச் செட்டியாரவர்கள் எங்கள் செயலைப் பாராட்டிப் பேராசியர் எழுத்துக்கள் அனைத்தையும் வெளியிட இசைந்து. முதலில் வள்ளுவர் கண்ட நாடும் காமமும் என்ற நூலை அச்சிட்டு, அடுத்து இரண்டாவதாக இந்நூலை விரைவில் அழகாக அச்சிட்டுத்தந்தார்கள். இவ்விரு பெருஞ்செல்வர்களுக்கும் நாங்கள் ஆற்றும் கைம்மாறு ஏதும் அறியோம். எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்கட்கு எல்லா நலங்களும் அளித்தல் வேண்டுமென அவ் வாண்டவனை வேண்டி அமைகின்றோம்.
இந்நூலின் சிறப்பினை வரையறை செய்து கூறுவது எம்மனோர்க்கு இயலாததொன்று. ஒப்புயர்வற்ற நூல் இஃதாகும் என்று கூறி அமைகிறோம்.
சங்க நூல்கள், பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் எனப்பகுக்கப்பட்டிருப்பதைத் தமிழர் அனைவரும் அறிவர். எட்டுத் தொகை எனப்படும் நூல்களுள் நற்றிணையே தலைசிறந்தது. எட்டுத் தொகை நூல்கள் இவை என்பதை ஒரு பழம் பாடல்,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்று இயம்புகிறது. இப் பாடலில் முதற்கண் வைத்து எண்ணப்பெறும் பெருமை நற்றிணைக்கே அமைந்துள்ளது. மேலும் குறுந்தொகை என்பதும் "நல்ல குறுந்தொகை" என்று சிறப்பிக்கப் பெற்றிருந்தாலும், 'நல்' என்ற அடைமொழி, பிரிக்க முடியாதபடி நற்றிணைக்கே பொருந்தியுள்ளது. இவ்விரண்டே சாலும் நற்றிணை எட்டுத் தொகையுள் தலைசிறந்தது என்பதற்கு. இந்நூலுள் நானூறு பாடல்கள் நன்மணிகளெனத் திகழ்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சிறு நாடகமாக விரிக்கலாம். இம் முறையில் ஒன்பது பாடல்களைச் சிறு நாடகங்களாக அமைத்து அப் பாடல்களை நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் உயர் திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் சிறந்ததொரு தமிழ்த்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இந் நவமணியுள் ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித் தனி எழுதிக்காட்டுதல் வேண்டா. ஒளியும் சுவைமிகுதியும் ஒவ்வொன்றிலும் உண்டு. படித்துச் சுவைக்க முற்பட்டுவிட்டால் தங்கு தடையின்றி முழுதும் சுவைத்து விட்டே நூலைக் கீழே வைக்கத்தோன்றும் என்ற அளவு நூலின் சிறப்பைப்பற்றிக் கூறினால் போதும் என்று கருதுகிறோம்.
இந்நூலைத் தமிழ்மக்கள் அனைவரும் விரும்பி ஏற்பார்கள் என்பது திண்ணம்; ஏற்பின், இதனால் பெரும் பயன் அடைவர் என்பதும் திண்ணம்.
தொடுமிடந்தொறும் சுவைநயம் தோன்ற ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சிறு நாடகமாக அமைத்துத் தந்த திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் நீடு வாழ்க! இவற்றொடு நின்றுவிடாது. நற்றிணையில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் இங்ஙனமே திரு. தெ. பொ. மீ. அவர்கள் சிறு நாடகங்கள் எழுதித் தமிழ்மக்கள் அனைவரையும் நூலில் திளைக்கும்படி செய்வார்களாக! வாழ்க நற்றிணை ! வாழ்க தமிழ்மொழி !
சென்னை, | இங்ஙனம், | ||||
4-12-1945. |