உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

101






திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

விமானம் தரையிறங்குகிறது.

வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.

ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.


தந்தை தன் மகனையும் மகளையும் அழைத்தார் (இதில் அழைத்தல் என்னும் வினையைச் செய்பவர் தந்தை. இது ஒருமைச் சொல். எனவே வினைமுற்றில் அழைத்தார் என்று வருகிறது.)

கிராம வளர்ச்சிக்கு ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து பாடுபட்டனர். (பாடுபடுதல் என்னும் வினையைச் செய்பவர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பலர். (பலர் = பன்மை) எனவே வினைமுற்றில் பாடுபட்டனர் எனப் பன்மை முடிபு தரப்படுகிறது.)

விளையாட்டுத் திடல் பணியாளர்களால் தூய்மை செய்யப்பட்டது (இங்கு எழுவாய் பணியாளர்கள் அல்லர். விளையாட்டுத் திடல்தான். அஃது ஒருமை. எனவே வினைமுற்றிலும் ஒருமை வருகிறது).

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளைக் கவனமாகப் பார்க்கும்போது ஒருமை பன்மை பயன்பாட்டின் இன்றியமையாத சில வகைகளை அறிந்துகொள்ள இயலும். அவை;

1. ஒவ்வொரு என்று வந்தால் அதன் பிறகு ஒருமைதான் வரவேண்டும்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு வீட்டிலும்

ஒவ்வொரு மாநிலத்திலும்,

என எழுதுவதே சரி. மாறாக ஒவ்வொரு வீடுகளிலும் / மாநிலங்களும் என எழுதுவது தவறு.

2. எல்லா என்று வந்தால் பன்மை வர வேண்டும்.

எடுத்துக்காட்டு:

எல்லா உறுப்பினர்களும்,

எல்லா வீடுகளுக்கும்,

என எழுத வேண்டும். மாறாக எல்லா உறுப்பினரும் / வீட்டுக்கும் என எழுதுவது தவறு.

3. எந்த என்று வந்தால் அதன் பிறகு ஒருமை வர வேண்டும்

எடுத்துக்காட்டு:

எந்தப் புத்தகமும் (புத்தகங்களும் என்பது தவறு)

எந்த நாட்டிலும் (நாடுகளிலும் என்பது தவறு)