உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தம்/அத்தியாயம் 8

விக்கிமூலம் இலிருந்து

8

காலம் ஓடிக் கொண்டிருந்தது.

பத்மா ரகுராமன் இருவரிடையிலும் வளர்ந்த அன்பு முற்றி வந்தது. ஆணும், ஆணும் நல்ல நண்பர்களாக வாழ முடிவது போலவே, ஆணும், பெண்ணும் விகார நினைவுகளுக்கு இடம் கொடாமல், நட்பு முறையிலே பழகலாம் என்பதற்கு தாங்களே உதாரணம். நாங்கள் இவ்வித நட்பை—மருவிலா அன்பை… வளர்த்து புனித வாழ்வு வாழ்வோம் என்று பத்மாவும், ரகுராமனும் நினைத்தார்கள்.

அவர்களின் உறவு நெருக்கம் கனத்து வருவதைக் கண்டு, கிழவர் சிரித்தார். அவருக்கு எல்லையிலா மகிழ்வு. அதன் காரணம், பத்மாவுக்குப் புரியவில்லை. தான் உல்லாசமாக இருப்பதனால், அவர் உற்சாகம் அதிகரித்திருக்கிறது என்று நம்பினாள்.

பத்மாவுக்கு, அவளது உணர்ச்சிகளையே புரிந்து கொள்ள முடியவில்லை என்றே கூற வேண்டும். ரகுராமன் எப்போ வருவான், எப்போ வருவான் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதை அவள் தடுக்க முடியவில்லை. அவன் தூரத்தில் வருகிறான் எனத் தெரிந்ததும், எழும் உணர்ச்சிக் கிளுகிளுப்பை ஒடுக்க இயலவில்லை. அவன் வரும் முன், கண்ணாடி முன் நின்று சிரத்தையோடு அழகு செய்வதை அவள் குறைக்கத் தயாராகயில்லை. அவன் வர நேரமாகிவிட்டால், ‘ஏன் இன்னும் வரக் காணோம்?’ என்று கவலைப்பட்டு அமைதியற்றுத் திரிவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கில்லை. ஒருநாள் அவன் வராமல் போனால், அவளுக்கு ஏற்படும் ஏமாற்றமும், அதனால் பிறக்கும் சிடுசிடுப்பும், பிறரிடம் சீறி விழும் பண்பும், எதிர் குணங்கள் என அவளால் அறிய முடியவில்லை. ஒரு நாள் வராமல், மறு நாள் வந்து சேர்ந்தால் அவளுக்கு உண்டாகும் உணர்ச்சிப் புளகிதத்துக்கு, பேரானந்தத்துக்கு, என்ன பொருள் என்று விளங்கிக் கொள்ளும் சக்தியில்லை. பகலிலும், இரவிலும், கனவிலும், நனவிலும், தான் ரகுராமனின் நினைவாகவே மாறி வருவதன் வயணமென்ன என்பதும் அவளுக்குத் தெரியாது.

மொத்தத்தில் தான் அதிசயப் பிறவியல்ல, அதீதமான குணங்கள் பெற்ற லட்சியப் பெண் அல்ல; சாதாரணமான பெண்தான் என்பதை உணர்த்த எல்லாச் சம்பவங்களும் பயன் பட்டாலும், பத்மா அவற்றினால் உண்மையை உணரவில்லை.

பத்மாவின் தாத்தா அவர்களை நன்றாகக் கவனித்து வந்தார். எல்லாரையும் பற்றுகிற ‘வியாதி’ அவளையும் சரியாகப் பிடித்துக் கொண்டது என்பதில் அவருக்கு வெற்றி, மகிழ்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_8&oldid=1663359" இலிருந்து மீள்விக்கப்பட்டது